ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

வைத்தமாநிதி 8

Smileஇன்றைய பதிவில்  முதல் பத்தியில் இருப்பதுபோல் நூலில் இல்லை. நண்பர் ஒருவர் பெரிய பத்திகளில் வரிகளைத் தொடர்ந்து படிப்பது கண்களுக்குச் சற்று கஷ்டமாக உள்ளது. அதையே வரிக்கு 5 அல்லது 6 வார்த்தைகளில் மடக்கி மடக்கி எழுதினால் படிக்க எளிதாக இருக்கிறது என்றார். அவர் கூறுவது சரிதானா என்று உங்கள் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள முதல் பத்தியை மட்டும் அவர் விருப்பப்படி தட்டச்சிட்டிருக்கிறேன். கருத்துத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

 

 

15. நாரணன் விளையாட்டு எல்லாம்  

( அலகிலா விளையாட்டுடையர்)

யோகத்து உறக்கம் தலைக்கொண்ட பின்னை,
தன் நாபி வலயத்துப் பேர் ஒளிசேர்
மன்னிய தாமரை மாமலர் பூத்து
அம்மலர்மேல் முன்னம் திசைமுகனைப் படைக்க
மற்று அவனும் முன்னம் படைத்தனன் நான்மறைகள்.
உந்தி எழுந்த உருவமலர்தன்னில்
சந்தச்சதுமுகன் தன்னைப் படைத்தவன்.
உய்ய உலகு படைக்கவேண்டி
உந்தியிற் தோற்றினாய் நான்முகனை;
வையமனிசரைப்பொய் என்று எண்ணிக்
காலனையும் உடன் படைத்தாய்,


அயனுக்குதம் மனை ஆனவனே
பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெருவேள்வி குறைமுடிப்பான் மறையானான்
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகிநின்று
அவற்றுள்ளே தங்குகின்ற தன்மையாய்
வேதத்தை, வேதத்தின் சுவைப்பயனை,
விழுமிய முனிவர் விழுங்கும் கோதுஇல் இன்கனியை,
குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை,
பண்டுஆய வேதங்கள் நான்கும் ஐந்து வேள்விகளும்
அங்கம் ஆறும் கண்டனை,
இந்துவார் சடை ஈசனைப் பயந்த நான்முகனை
நாட்டைப்படை என்று அயனைத்தன்
உந்திமா மலர்மிசைப் படைத்தவன்,
திடவிசும்புநீர் எரிதிங்களும் சுடரும்
செழுநிலத்து உயிர்களும் மற்றும் படர்
பொருள்களும் ஆய் நின்றவன்
அண்டமும் சுடரும் சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும்
இத்தரணி ஓம்பும் பொங்கிய முகிலும்
அல்லாப் பொருள்களும் ஆயஎந்தை
பாவமும் அறமும், வீடும் இன்பமும்,
துன்பமும் தானும்; கோவம் அருளும்
அல்லாக்குணங்களும் ஆயதெந்தை
சந்தம் ஆய் சமயம் ஆகி சமய ஐம்பூதம் ஆகி
அந்தம் ஆய் ஆதி ஆய் அருமறை அவையும் ஆனாய்
ஊழி ஆய் ஓமத்து உச்சியாய்
ஒருகால் உடைய தேர் ஒருவன் ஆய்
மால் ஆய் வானவர்தமக்கு சேயன் ஆய்
அடியோர்க்கு அணியன் ஆய்,
கிருத, திரேத, துவாபர, கலியுகம்
இவை நான்கும் முன் ஆனாய்;
மின் உருவாய் முன் உருவில் வேதம் நான்காய்,
விளக்கு ஒளியாய், முளைத்து எழுந்த திங்கள் தானாய்,
பின் உரு ஆய், முன் உருவில்
பிணிமூப்பு இல்லாப் பிறப்பிலி ஆய்,
இறப்பதற்கே எண்ணாது எண்ணும் பொன்உருஆய்,
மணிஉருவில் பூதம்ஐந்து ஆய்,
புனல் உரு ஆய், அனல் உருவில் திகழும் சோதி,
தன் உரு ஆய் பார் உருவிநீர்எரி கால் விசும்பும் ஆகி,
பல்வேறு சமயமும் ஆய், பரந்து நின்ற ஓர் உருவில்
மூவருமே என்ன நின்ற இமையவர்தம்திருவுருவு
வேறு எண்ணும்போது ஓர் உருவம் பொன்உருவம்,
ஒன்று செந்தீ, ஒன்று மாகடல் உருவம்
ஒத்துநின்ற மூவுருவும் கண்டபோது
ஒன்றாம் சோதி முகில் உருவம்
எம் அடிகள் உருவம்தானே;
வலம்புரியும் நேமியும் கைய!
கார்வண்ணத்து ஐய!
மலர்மகள் நின் ஆகத்தாள் செய்ய மறையான் நின் உந்தியான்;
மாமதிள் மூன்று எய்த இறையான் நின் ஆகத்து இறை;
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே!
தமர் உகந்தது எப்பேர் மற்று அப்பேர்;
தமர் உகந்தது எவ்வண்ணம்
சிந்தித்து இமையாது இருப்பரேல்!
அவ்வண்ணம் ஆழியானாம் நான்முகற்கு
பூமேல் பகர மறைபயந்த பண்பன்;
குன்று அனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும்
பொன் ஆழிக்கையான் திறன் உரையே!
சிந்தித்திரு என்றும் என் நெஞ்சே!
கடிக்கமலத்துள் இருந்து காண்கிலான்
அடிக்கமலம்தன்னை அயன்;
ஆலநிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலையுலகத்து உரைத்தான் மெய்த்தவத்தோன்
ஞாலம் அளந்தானை, ஆழிக்கிடந்தானை,
ஆல்மேல் வளர்ந்தானைத் தான்
வணங்குமாறு “நமக்கு என்றும் மாதவனே” என்றும்
மனம் படைத்து மற்று அவன்பேர் ஓதுவதே நாவினால் ஒத்து,
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு.

            மொய்த்த வல்வினையுள் நின்று மூன்று எழுத்து உடையபேரால் (கோவிந்த நாமத்தால்) கத்திரபந்துவும் பராங்கதி கண்டுகொள்ள அருளிய அமலனாதிப்பிரான்; நமனும் முற்கலனும் பேச நரகிற் நின்றார்கள் கேட்க, நரகமே சொர்க்கமாகும் நாமங்கள் உடைய நம்பி; பனிசேர் விசும்பில், பால்மதிக்கு தேம்புகின்ற இடர்தீர்த்து, சிறை விடுத்த அமரர்கோன்; நான்முகன் நான்மிகைத்தடுக்கை இருக்கு வாய்மை நலம்மிகு சீர் உரோமசனால் நவிற்று, நீர்ஏறுசெஞ்சடை நீலகண்டனும், நான்முகனும் முறையாய் சீர்ஏறுவாசகஞ் செய்யநின்ற திருமால்; பழித்திட்ட இன்பப்பயன், பற்று அறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் ஒழித்திட்டு அவரைத் தனக்கு ஆக்க வல்லப் பெருமாள்.

           முன் உலகங்கள் ஏழும் பேர்இருள் மண்டி உண்ண முதலோடு வீடும் அறியாது என் இது வந்தது; என்ன இமையோர் திகைப்ப,, எழில்வேதம் இன்றி மறைய எழுந்தன மலர் பள்ளிகொள் அன்னம் ஈன்பனி நனைந்ததம் இருஞ்சிறகு உதறி, பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்ந்து வையம் மகிழ புள்ஆகி அங்கு அறநூல் உரைத்தவன்.

             மன்னும் நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவர் உலகும் துன்னு மாஇருள் ஆய், துலங்கு ஒளி சுருங்கி, தொல்லை நான்மறைகளும் மறைய, பிறங்கு இருள்கெட வசைஇல் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி முன் பரிமுகமாய் இசைகொள் வேதநூல் என்று இவை பயந்தவன், உம்பர்கள் தொழுது ஏத்த அருமறை விரித்த அண்ணல்; முன் இவ்உலகம் ஏழும்  இருள் மண்டி உண்ண முனிவரோடு தானவர்கள் திசைப்ப வந்து பன்னுகலை நால்வேதம் பொருளை எல்லாம் பரிமுகமாய் அருளிய எம்பரன்; நஞ்சு சோர்வது ஓர் வெம்சினை அரவம் வெகுவியந்து நின் சரண் என,சரண்ஆய், நெஞ்சில் கொண்டுநின் அம்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தான் விளம்பும் ஆறு சமயமும் அவை ஆகியும் மற்றும் தன்பால் அளந்து காண்டற்கு அரியன்; பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும், பிறர்க்கும் நாயகன் அவனே! கபாலநல் மோக்கத்துக் கண்டுகொண்மின்!

        தவம்புரிந்து உயர்மாமுனி கொணர்ந்த வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல் பதரி ஆச்சிரமத்து நரநாரணன் ஆய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன்.

        கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப்புக பொன்மிடறு அத்தனைபோது அங்காந்தவன்,

          “ஏறு ஆளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும் கூறு ஆளும் தனி உடம்பன்”

           ஆமையாய், கங்கையாய் ஆழ்கடலாய் அவனிஆய் அருவரைகளாய், நான்முகனாய், நான்மறையாய், வேள்வியாய் தக்கணையாய், தானும் ஆனான். நின்ஈர்அடி ஒன்றிய மனதால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலர் அன அங்கையில் முப்பொழுதும் வருட, அறிதுயில் அமர்ந்தனை.

தொழுது மலர்கொண்டு தூபம் கைஏந்தி
எழுதும் எழ வாழி நெஞ்சே
பழுது இன்றி மந்திரங்கள் கற்பனவும்
மால் அடியே,கைதொழுவான் அந்தரம் ஒன்றில்லை அடை

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்அருவுகள்
உளன் என இலன் என இவைகுணம் உடைமையில்
உளன் இருதகைமையோடு ஒழிவுஇலன் பரந்தே

யாவையும் எவரும்தானாய் அவரவர் சமயம்தோறும்
தோய்வு இலன் புலன் ஐந்துக்கும் சொலப்படான்
உணர்வின் மூர்த்தி பரந்த அந்நலன் உடை ஒருவனே
நணுகினம் நாமே.

   


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக