Tuesday, June 14, 2011

ப்ரபந்தானுஸந்தான க்ரமம்


ப்ரபந்தானுஸந்தான க்ரமம்
ஸ்ரீ சேட்லூர் நரஸிம்மாச்சாரியார் எழுதிய தேசிகப்ரபந்த வ்யாக்யானம் தேசிகனடியார் ஒருவரிடமிருந்து கிடைத்தது. அந்த நாள் நடைமுறைப்படி எளிய தமிழ் என்ற பேரிலே மணிப்ரவாளமாக எழுதப் பட்டிருக்கும் அந்நூலை பைண்டிங்கைப் பிரித்து ஸ்கான் செய்து பயன்படுத்திக் கொள்ள அந்த அன்பர் அனுமதி அளித்திருக்கிறார் என்றபோதும் நூலைப் பிரித்தால் பல பக்கங்கள் பொடிப் பொடியாகிவிடக் கூடிய அபாயம் உள்ளது என்பதால் அதற்கு அடியேன் துணியவில்லை. இருந்தாலும் ஆசை விடவில்லை. க்ரந்தாக்ஷரங்களை தமிழில் எழுதி வலைப்படுத்தலாம் என்ற முயற்சியில் அந்நூலின் முதலில் அவர் எழுதியிருக்கும் ப்ரபந்தானுஸந்தான க்ரமம்என்ற அத்யாயத்தை இங்கு சிறிது சிறிதாகத் தருகிறேன். அதிலேயே டிப்பணியாக வருபவற்றை --- அது ஒரே தொடராக இருப்பதால் தனியே எழுதுவேன். நூலில் உள்ளபடியே எழுத இங்கு வகையில்லை.
இந்நூல் 1934ல் சென்னை நிகம பரிமள அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப் பட்டுள்ளது.
ப்ரபந்தானுஸந்தான க்ரமம்
ஸ்ரீ சேட்லூர் நரஸிம்மாச்சாரியார் ஸ்வாமி அனுக்ரஹித்தது
பொய்கைமுனி பூதத்தார் பேயாழ்வார் தண் பொருநல் வரும் குருகேசன் விட்டுசித்தன் துய்ய குலசேகரன் நம் பாணநாதன் தொண்டரடிப்பொடி மழிசைவந்த சோதி வையமெல்லாம் மறை விளங்க வாள் வேல் ஏந்தும் மங்கையர்கோன் என்றிவர்கள் மகிழ்ந்து பாடும் செய்ய தமிழ்மாலைகள் திவ்யப்ரபந்தங்கள் எனப்படும். இவற்றை அனுஸந்திக்கும் க்ரமாதிகள் ப்ரபந்தானுஸந்தான தீபிகை முதலியவைகளில் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அவற்றின் ஸங்க்ரஹம் இங்கு நிரூபிக்கப் படுகிறது.
நல்லடியோர் வானாரின்பம் இங்குறுவதற்காக  ஶ்ரிய:பதியான பகவான் மீனோடாமை கேழல் கோளரியாய் வானார் குறளாய் மழுப்படை முனியாய்ப் பின்னும் இராமர் இருவராய்ப் பாரில் துன்னிய பாரம் தீர்க்கும் அவரை மன்னனுமாய் நானா உருவம் கொண்டு அவதரித்தும் அத்தால் தான் கொண்ட கருத்து நிறைவேறாதது கண்டு, ‘ பூர்வோத்ப1ந்நேஷு பூ3தே1ஷு தே1ஷு தேஷு கலௌ ப்ரபு4: அநுப்ரவிஸ்ய கு1ருதே1 யத்ஸமீஹி த1மச்யுத1:’ என்கிறபடியே பராங்குபரகாலாதி ரூபத்தாலே அபிநவமாக ஒரு தஶாவதாரம் செய்தருளினான். அவர்கள் ஸாக்ஷாத்கரித்து வெளியிட்டருளிய  ப்ரபந்தங்களே திவ்யப்ரபந்தங்கள் எனப்படும். இவற்றின் உத்கர்ஷமும், உட்பிரிவுகளும், ஸங்க்யைகளும் திவ்யப்ரபந்த வைபவம் என்னும் க்ரந்தத்தில் பரக்க நிரூபிக்கப் பட்டிருக்கின்றன.
      இப்படி பகவதவதார பூதர்களான ஆழ்வார்களில் அன்பர்க்கே அவதரிக்கும் ஆயன் நிற்க, அவனை விட்டு, அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு துன்பற்று, தொல்வழியே தோன்றக் காட்டின ஸ்ரீ மதுரகவிகள் நம்மாழ்வாரை ஆஶ்ரயித்து, அவர் விஷயமாகக்  கண்ணி நுண் சிறுத்தாம்பு என்னும் ப்ரபந்தத்தை அனுஸந்தித்துக்கொண்டு, ஆழ்வார் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளின பிறகு அவருடைய அர்ச்சா விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்து உத்ஸவாதிகளை நடத்திக் கொண்டு வந்தார்.
      இவருக்குப் பிறகு அவதரித்த வையமெலாம் மறை விளங்க வாள் வேல் ஏந்தும் மங்கையர்கோன் ஒரு திருக்கார்த்திகை மஹோத்ஸவத்தில் அரங்கத்தரவணையானைத் தம்முடைய திருநெடும் தாண்டகத்தின் அனுஸந்தானத்தினால் மகிழ்விக்க, ப்ரீதனான பெரிய பெருமாளும், “ ஆழ்வீர்! உம்முடைய ப்ரபந்தானுஸந்தானம் மிகவும் ஶ்ராவ்ய மாயிருந்தது, உமக்கு என்ன வரம் வேண்டும், அதைக் கேளும்” என நியமிக்க, கலியனும், “திருக்குருகையிலிருந்து ஆழ்வாரை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து, அவர் ஸாக்ஷாத்கரித்தருளின திருவாய்மொழியை தேவரீர் திருச்செவி சாற்றியருள வேண்டும்” என்று ப்ரார்த்தித்தார். ஸ்ரீரங்கநாதனும் தம்முடைய அநந்த கொத்துப் பரிஜனங்களையும் திருக்குருகை சென்று ஆழ்வாருடைய விக்ரஹத்தை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வரும்படி நியமித்தருள, அவர்களும் உடனே புறப்பட்டுப் போய்விட்டார்கள். பெரிய பெருமாளை ஆஸ்தானத்திற்கு எழுந்தருளப் பண்ணுமவர்கள் இல்லாமையினாலே அர்ச்சகர்களே கைத்தலத்தில் எழுந்தருளப் பண்ணும்படி நேர்ந்தது. இந்த வ்ருத்தாந்த விஶேஷத்தை இப்பொழுதும் ஒரு பெரிய உத்ஸவமாகக் கொண்டாடுகிறார்கள். இது முதல் ஆழ்வார் எழுந்தருளுகிற வரையில் ஒரு புறப்பாட்டு உத்ஸவமும் நடக்கவில்லை. ஆழ்வார் எழுந்தருளினதும் அவருக்கு அருளுப்பாடிட்டருளி, மார்கழி ௴ சுக்ல பக்ஷ ஏகாதஶி முதல் ப்ரதி தினமும் மாலையில் திருவாய்மொழியில் ஒரு பதத்தைத் தாம் கேட்டருளி, கடைசியில் ஆழ்வார் ப்ரார்த்தித்திருக்கிறபடியே அவரைத் தம் திருவடிகளில் சேர்க்கும்படிக்கும் நியமித்தருளினார். கலியனும் லோகோஜ்ஜீவனார்த்தமாக ஆழ்வாரை மறுபடியும் ப்ரஸாதித்தருளும்படி ப்ரார்த்தித்தார். அப்படியே ஸ்ரீரங்கநாதனும் அனுக்ரஹித்தார். இந்த வ்ருத்தாந்தமும் ஆழ்வார் திருவடித் தொழுதல்  என்று ஒரு உத்ஸவமாக நடத்தப் பட்டு வருகிறது. இப்படியே ப்ரதி ஸம்வத்ஸரமும் நடத்தப்பட்டு வந்தது.
      இப்படிப் பல வருஷங்கள் நடந்து வந்து பிறகு கால வைஷம்யத்தினால்  நடைபெறாமல்  நின்று விட்டது. இன்னும் சில காலம் சென்றதும் அந்த ப்ரபந்தத்தின் அனுஸந்தானத்திற்கே முற்றிலும் லோபம் வந்துவிட அந்த ப்ரபந்தமே லுப்தமாய் விட்டது.