Thursday, June 16, 2011

ப்ரபந்தானுஸந்தான க்ரமம் 3


ஒரு ஸமயத்தில் எம்பெருமானார் விஷயமாக திருவரங்கத்தமுதனார் விண்ப்பம் செய்தருளிய நூற்றந்தாதியை  இயற்பாவுடன் சேர்த்துப் பாட்டுக்களினாலும் நாலாயிரமாக்கி, அதையும் திவ்ய ப்ரபந்தத்துடன் அனுஸந்திக்கும்படி ஸ்ரீரங்கநாதன் நியமித்தருளி, எம்பெருமானாருக்கு  அருளுப்பாடிட்டருள, இச்செல்வம் நித்யமாகச் செல்ல வேணுமென்று

ஸர்வ தேஶ தஶா காலேஷ்வவ்யாஹத பராக்ரமா
   ராமாநுஜார்ய திவ்யாஜ்ஞா வர்த்த்தாம் அபிவர்த்ததாம்”

என்கிற ஶ்லோகத்தை பிள்ளான்  விண்ணப்பம் செய்ய, அதைக் கேட்டு முதலியாண்டானும்,

ராமாநுஜார்ய திவ்யாஜ்ஞா ப்ரதிவாஸர முஜ்வலா
திகந்தவ்யாபிநீ பூயாத் ஸாஹி லோக ஹிதைஷிணீ

என்கிற ஶ்லோகத்தை விண்ணப்பம் செய்ய, அவ்விரண்டையும்  கேட்டுகந்து,

ஸ்ரீமந்! ஸ்ரீரங்க ஶ்ரியமனுபத்ரவா மனுதினம் ஸம்வர்த்தய!

என்கிற வாக்யத்தை எம்பெருமானார் பெருமாளிடத்தில் விண்ணப்பம் செய்ய, அங்குள்ள பெரியோர்கள் இஶ்லோக வாக்யங்களை ப்ரபந்தானுஸந்தான முடிவிலே அனுஸந்திக்கும்படி ப்ரார்த்திக்க, எம்பெருமானாரும் அப்படியே நியமித்தருளினார்.

         இப்படியே மற்ற எல்லா திவ்ய தேஶங்களிலும் ஆழ்வார்களின் அர்ச்சா விக்ரஹங்களைத் திருப்ரதிஷ்டை செய்து, திருவத்யயனோத்ஸவத்தை ஒவ்வொரு வருஷமும் நடத்த வேண்டுமென்றும், ப்ரபந்தானுஸந்தான  காலங்களில் ,

லக்ஷ்மீ நாத ஸமாரம்பாம்

யோ நித்யமச்யுத

என்கிற கூரத்தாழ்வான் அருளிச்செய்த தனியன்களையும்,

மாதா பிதா

இத்யாதி பெரிய முதலியார் அருளிச்செய்த தனியன்களையும்,

பூதம் ஸரஶ்ச

இத்யாதி பிள்ளான் அருளிச்செய்த தனியனையும் எல்லாவற்றிற்கும் முதலிலே அனுஸந்திக்க வேண்டும் என்றும், இப்படியே ஆழ்வார் ஆசார்யர்களுடைய திருநக்ஷத்திர தினங்களில் ப்ரபந்தானுஸந்தானம் செய்ய வேண்டும் என்றும், ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய அபர க்ரியை முடிந்ததும் அதாவது பனிரண்டாவது நாள் மாலையில் ப்ரபந்தானுஸந்தானத்தை உபக்ரமித்து, மறு நாள் காலையிலும் ஸேவித்து, நூற்றந்தாதியைக் கொண்டு இயல் நடத்தும்படிக்கும், திவ்ய ப்ரபந்தங்களில் எந்த ப்ரபந்தத்தை அனுஸந்தித்தாலும் திருப்பல்லாண்டான முதல் திருமொழியை முதலிலும், அதின் முதல் இரண்டு பாட்டுக்களை முடிவிலும், திருவாய்மொழி அனுஸந்தானத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் , கண்ணி நுண் சிறுத்தாம்பையும் அனுஸந்திக்க வேண்டும் என்றும் நியமித்தருளினார்.

      பிறகு அவரால் பகவத் விஷய ஸிம்மாஸனத்தில் நியமிக்கப் பெற்றவரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் அந்தந்த ப்ரபந்த விஷயமான தனியன்களை அந்தந்த ப்ரபந்தானுஸந்தான காலங்களில் கீழ் நிரூபித்த பொது தனியன்களுக்குப் பிறகு அனுஸந்திக்க வேண்டும் என்று நியமித்தார்.

      பிறகு கோயிலிலே துலுஷ்காதிகளால் வந்த விபத்துத் தீர்ந்தவாறே திருநாராயணபுரத்தில் நின்றும்  பெரிய பெருமாள் ஸ்வப்ந நியமனப்படிக்குக் கோயிலேற எழுந்தருளி, எம்பெருமானார்  காலத்தில் போலே நின்றிருந்த திருவத்ய யனோத்ஸவத்தை நம் ஸ்வாமி தேஶிகன் நடப்பிவிக்கும்போது துர்வாதிகள் ப்ரபந்தானுஸந்தானத்தையும் ஆழ்வார்கள் வரிசையையும் தடுத்து, வாதத்தில் ஜயித்தாலல்லது உத்ஸவத்தை நடப்பிவிக்கக் கூடாது என்று அதிகாரி முன்பாக நம் தேஶிகன் ஸந்நிதியில் விவாதப்பட, நம் தேஶிகனும் அவர்களை ஶாஸ்திரங்களினால் ஜயித்து முன்பு போலே குறைவறத் திருவத்யயனோத்ஸவத்தை நடத்தியருளினவாறே. அப்போதுள்ள பெரியோர்களின் ப்ரார்த்தனைப் படிக்கு அழகிய மணவாளனும்

ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷணம்
 ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேஶிகம்

என்கிற ஶ்லோகத்தை அனுஸந்தித்து, ப்ரபந்தானுஸந்தானம் பண்ணும்படி அர்ச்சக முகேந அரையருக்கு நியமித்தருளி, நம் தேஶிகனுக்கு ”இராமாநுசன் பொன்னடி” என்று அருளுப்பாடிட்டருள, அரையரும் ஶ்லோகத்தை அனுஸந்தித்து, ப்ரபந்தத்தை முடித்து,

“ஸர்வ தேஶ” ********* “ஸம்வர்த்தய”

என்னுமளவாக அனுஸந்திக்க, நம் தேஶிகனும்,

ஸ்ரீமந் ஸ்ரீரங்க” ******* ஸம்வர்த்தய”

என்கிற வாக்யத்தை ஆதரத்தால்  ஆவ்ருத்தி செய்து, இது அப்புள்ளார் கடாக்ஷ விஶேஷம் என்று அவர் விஷயமாய் முன்பு தாம் ஆஶ்ரயித்த தஶையில் செய்தருளிய

நமோ ராமாநுஜார்யாய வேதாந்தார்த்த ப்ரதாயிநே
 ஆத்ரேய பத்மநாபார்யஸுதாய குணஶாலிநே!

என்கிற ஶ்லோகத்தை அனுஸந்திக்க, அதைக் கேட்ட முதலிகளும் முடிவில் ஆசார்யாபிவந்தனம் பண்ணினதாய்,

ராமாநுஜ தயாபாத்ரம்

என்கிற ஶ்லோகத்தை அனுஸந்திக்க, அதை அழகிய மணவாளனும் உகந்தருளி, அப்படியே எப்பொழுதும் அனுஸந்திக்க வேண்டும் என்று நியமித்தருளினான். பின்பு ஸ்ரீரங்க நாச்சியார் நியமனப்படிக்கு அவர் ஸந்நிதி முன்பே காலக்ஷேபம் செய்து கொண்டிருக்க, அத்தலைக்கு மங்களா ஶாஸனமாய்

வாழி யிராமானுசப் பிள்ளான் மாதகவால்
வாழு மணி நிகமாந்த குரு – வாழியவன்
மாறன் மறையும் இராமானுசன் பாஷியமும்
தேறும்படி உரைக்கும் சீர். 

வஞ்சப் பல சமயம் மாற்ற வந்தோன் வாழியே
    மன்னு புகழ்ப் பூதூரான் மனமுகப்போன் வாழியே
கஞ்சத் திருமங்கை உகக்க வந்தோன் வாழியே
     கலியனுரை குடி கொண்ட கருத்துடையோன் வாழியே
செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்துரைப்போன் வாழியே
      திருமலை மால் திருமணியாய்ச் சிறக்க வந்தோன் வாழியே
தஞ்சப்  பரகதியைத் தந்தருள்வோன் வாழியே
     செந்தமிழ் செய் தூப்புல் திருவேங்கடவன் வாழியே”

 என்கிற பாட்டுக்களை நைனாராசார்யர் விண்ணப்பம் செய்ய, அத்தைக் கேட்ட ப்ரும்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயரும்,

நானிலமும் தான் வாழ நான் மறைகள் தாம் வாழ
  மா நகரில் மாறன் மறை வாழ --- ஞானியர்கள்
 சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே
 இன்னமொரு நூற்றாண்டிரும்”
 என்கிற பாட்டை விண்ணப்பம் செய்ய, அங்குள்ள பெரியோர்கள் ப்ரார்த்தனைப்படி நாச்சியாரும் ப்ரபந்தானுஸந்தானத்தின் முடிவில் இம்மூன்று பாட்டுக்களையும் அனுஸந்திக்கும்படி  நியமித்தருளினார். நைனாராசார்யரும்  ஸர்வ தேஶ” இத்யாதியாய் வேதாந்த தேசிகனே இன்னமொரு நூற்றாண்டிரும்” என்னுமளவாக உள்ள ஶ்லோக வாக்ய காதைகளை பெருமாள் நாச்சியார் நியமனப்படிக்கு திவ்ய தேஶங்கள் தோறும் அனுஸந்திக்கும்படிக்கும், இதை  வாழித் திருநாமம்  என்று சொல்லக்கடவது என்றும் நியமித்தருள, பெரியோர்களும் அப்படியே செய்ய அடுக்கும் என்று உகந்தருளினார்கள்.