Saturday, May 1, 2010

படித்தேன் ரசித்தேன்

ஏற்கனவே மின்தமிழில் "மின்னரங்கத்தந்தாதி" பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இன்று படித்து ரசித்த பகுதி இது. ஸ்ரீரங்கம்  ரங்கன் என்றாலே எல்லாருக்கும் மயக்கம் அவர் மீது தீராத மோகம் என்பது ஆழ்வார்கள் முதல் அடியவர்கள் வரை ஏற்பட்டது. மின்னரங்கத்தந்தாதி எழுதுபவரோ ஸ்ரீரங்கம் மோகனரங்கன். கேட்கவேண்டுமா? வார்த்தைகளால் நம்மை மயக்கி அனுபவிக்க வைக்கின்றார்.  உலகமெலாம் பொய்யிலாத மாமுனிவன் என்று கொண்டாடும் ஸ்ரீமணவாளமாமுனி  பற்றி அவர் எழுதியுள்ள பாடல்கள் இங்கே.

 பாரளந்த நூற்றந்தாதியோடு பயில வேண்டிய ஆசாரியன் வாழ்த்து இஃதாகும். ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிவன் பெருமை அஸாதாரணமானது. பக்தி என்பதை
மிகத்துல்லியமாகக் காட்டிநிற்கும் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை சிறிதேனும் ஐயம்,
மயக்கம், திரிபு என்பவற்றிற்கு இடமின்றிக் கலைவடிவில் நிலைநாட்டியது நம்பிள்ளை
அளித்து, வடக்குத்திருவீதிப்பிள்ளை ஏடுபடுத்திய ஈடு என்னும் பகவத் விஷயம்.
அந்த அரும்பொக்கிஷம் ஆரம்பத்தில் சிலகாலம் பலருக்கும் போய்ச்சேரா
வண்ணம் இருந்தது. அந்நிலையை மாற்றித் திருவரங்கனின் அருளப்பாடு அனைவரும்
கற்பதற்குரிய வாய்ப்பினை ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிவனின் மூலம் நல்கியது.
அரங்கன் தன் பரிசனங்களுடன் அனைத்து உற்சவாதிகளையும் ஒரு வருட காலம்
நிறுத்திவைத்து இந்த ஈடு ஒன்றினையே மாமுனிவன் எடுத்து விளக்கச் செவி மடுத்தனன்
என்னும் செய்தி நம்மவர்க்குப் புரிந்துகொளற்கரிதாம் ஒன்று.
நம்பிள்ளை காலத்திலேயே அவருடைய காலக்ஷேபம் கேட்க அக்கம்
பக்கம் ஊரிலிருந்தெல்லாம் அனேக ஜனங்கள் திரள்வர். காலக்ஷேப கோஷ்டி கலைந்து
மக்கள் செல்கையில் பார்த்த ஸ்ரீவைஷ்ணவனான ஒரு ராஜா, ‘நம்பெருமாள் திருவோலக்கம்
கலைந்ததோ? நம்பிள்ளை கோஷ்டி கலைந்ததோ?’ என்று வியந்தான் என்பது பின்பழகிய
பெருமாள் ஜீயர் தரும் குறிப்பு.
அதுவுமின்றி நம்பிள்ளைக் குறட்டில் நம்பிள்ளையின் காலக்ஷேபத்தைக் கேட்க
அரங்கனும் அர்ச்சா சமாதி கடந்து வந்து கேட்டான்; திருவிளக்குப் பிச்சன் அதட்டி
உள்ளனுப்பினான் என்னும் செய்தியும் ஈட்டின் அருமை பெருமையை விளக்கும்.
அத்தகைய ஈடு என்ற பகவத் விஷயத்தை அனைவர்க்கும் அரங்கன் முன்னிலையில் விநியோகம்
செய்தது எத்தகைய நுட்பமிகு செயல் என்பது வரலாறு, வரவாறு, அருளிச்செயல் என்பதன்
உண்மையான தாத்பர்யம் இவையெல்லாம் நன்குணர்ந்தவர்க்கே நிலமாகும். நம்போல்வார்
இதனை நன்குணர முயல்வதே கடன்.
ஞானம், பக்தி, அனுஷ்டானம், ஆத்மகுணங்கள், பூததயை முதலிய  ஆசார்ய இலக்கணத்திற்கே
இலக்கியமாய்த் திகழ்பவர் மாமுனிகள்.
இவருடைய காலத்தில்தான் ஸம்ப்ரதாய ஏடுகள் பலவற்றைப் புதிதாகப் படியெடுத்து,
ஒப்பு நோக்கி, செவ்வனே பல படிகளை   ஏற்படுத்திவைத்தார். இந்தச் செயலை
சீடர்களிடம் நியமித்ததோடு விட்டுவிடாமல் தாமே  இரவெல்லாம் தீப்பந்தம்
ஏற்றிவைத்துக்கொண்டு தம் கைப்பட படியெடுத்ததைப் பார்த்த ஒரு சீடர், ‘சீயா! தாமே
இவ்வளவும் சிரமப்பட வேண்டுமோ?’ என்று கேட்டதற்கு, ‘எனக்காகச் சிரமப்படவில்லை.
உம்முடைய சந்ததிகளுக்காகச் செய்கின்றேன் காணும்!’ என்றாராம் மாமுனிகள்.
அன்னவர்க்கே இந்த விம்சதியாம் இருபது.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*மாமுனிவன் இருபது*
1)
எந்தக் கருத்தால் திருவரங்கர் தாம்பணித்தார்
எந்தக் கருத்தால் தனியனிட்டார் -- அந்தமிலா
நான்மறையின் நற்பொருளை நற்றமிழின் உட்பொருளைத்
தேன்மறையாய் ஆக்கிடவே தந்து.
2)
தந்ததமிழ் கண்டு  தரணியெலாம் மிக்குயர
நந்தமிழ்த மிவ்வமுதைக் கண்டயர -- முந்துமுகிழ்
மொக்குள் படைப்பாற்றும் முன்னவனும் கேட்டயர்ந்தான்
சிக்கில் கிடாரத்தான் மாண்பு.
3)
மாண்பெரிய வைய மகத்துவ மேதென்பீர்
காண்பெரிய  நம்பெருமாள் கட்டளையே -- சேண்பெரிய
நாட்டோனும் நற்குருவின் நற்திதியைத் தன்செலவால்
கூட்டியிங்குத் தானியற்றும் தீர்வு.
4)
தீராத ஐயமெல்லாம் தீர்த்தான் தெளிபொருளைப்
பேராமல் நெஞ்சினிலே தான்விதைத்தான் -- சோராமல்
வையமெல்லாம் காக்கின்ற வாசுதேவன் பொங்கரவில்
பையத் துயிலும் மகிழ்ந்து.
5)
மகிழ்மாறன் வந்தனனோ மாதவனோ மீண்டான்
முகிழ்த்தநகை  எம்பெருமா னாரோ -- புகழீட்டில்
போந்தபொருள்  தான்விரித்தான் பொன்றுமறம் தான்தடுத்தான்
வேந்தனவன் கொண்டசெங்கோல் தண்டு.
6)
தண்டிரைசூழ் வையம் திருமாலுக் கேயாகி
எண்டிசையும் ஏத்துகின்ற இன்னொலிக்கே -- விண்டே
சுருதியார்க்கும் செந்தமிழ்த்தேன் வண்டயரும் விண்பூ
கருதியார்க்கும் ஓர்தல் அரிது.
7)
அரிதாமால் வையத்தில் நற்பிறவி இன்னும்
அரிதாமால் ஆன்றகலை அத்தனையும் கற்றல்
அரிதாமால் நாரணர்க்கே ஆளாகி நிற்றல்
அரிதாமால் மாமுனியின் சீர்.
8)
சீர்மல்கும் பொன்னித் திருவரங்கச் செல்வர்க்கே
பார்மல்கும் ஈடளித்தான் மாமுனிவன் -- கார்மல்கும்
ஆரருளே ஓருருவாம் ஆன்றயதி ராசன்தான்
பேரருளாய் மீண்டுவந்தா னிங்கு.
9)
இங்கேனும் ஆகவன்றி அங்கேனும் ஆகட்டும்
எங்கேனும் நம்முயிர்க்காம் ஈடுளதேல் -- மங்காத
ஞானத்தில் மாசில்லா பக்தியில் மாதவற்குப்
போனகமாய் ஆகிநிற்கும் பண்டு.
10)
பண்டே உலகும் அறிந்ததுகொல் பாரதர்க்குச்
சண்டை நடத்தி முடித்தபிரான் -- விண்டநெறி
பாருலகு தானறிய வந்தயதி ராசர்தாம்
ஈருருவாய் வந்தவருள் மீண்டு.
11)
மீண்டுமிங்கு வந்ததுகொல் பொன்னூழி மாதவற்கே
ஈண்டு விளைந்ததுகொல் பொற்காதல் -- யாண்டும்
அரங்கேசர் தாமரங்கில் தந்துவந்த  வாழ்த்தே
சிரங்கொள்ளும் பூவுலகம் இன்று.
12)
இன்றோ அவன்மூலம் ஈருலகும் ஒன்றாமோ
சென்றோ அவனும் சுருள்படியும் இட்டதுவும்
வென்றோ கலியெல்லாம் மாமுனிவன் வாழிடத்தைப்
பொன்றாமல் காக்கும் அருள்.
13)
அருள்கொண்டோ ராயிரமாய் ஆன்றமறை ஈந்தான்
பொருள்கொண்டு பாடியமாய்ப் பிள்ளானால் தந்தான்
மருளகற்றி மக்களுய்ய நம்பிள்ளை ஈட்டை
அருளப்பா டந்தணனாய் வந்து.
14)
வந்தணைந்த  செய்யதவம் சீர்வசனத் தாழ்பொருளை
மந்தணமாம் முப்பொருளைப் பேராமல் -- அந்தமிலா
தத்துவ முப்பொருளைத் தண்குருகூர் தீந்தமிழை
நித்தமும்நாம் கற்கச்செய் தான்.
15)
தானுகந்த அந்தாதி பாடும் அமுதனவன்
வானுகந்த போகம் விடுத்தானோ -- தேனுகந்த
தெள்ளுரையால் சீரடியார் காயத்ரி தான்விளக்கும்
அள்ளுசுவை ஆசைக்காட் பட்டு.
16)
பட்ட சிரமம் பெரிதால் பயில்வோர்க்கே
இட்டகலை யேடும் கிடைப்பரிதால் -- நிட்டையாய்
நீள்வயதில் ஆழ்நிசியில் நூல்பெருக்கும் மாமுனிவன்
வேள்வியில்நம் உள்ளம் அவிசு.
17)
அவிசன்னம் நாய்நுகர்தல் ஒத்ததே மாலின்
புவிமக்கள் மற்றவைபின் னேகல் -- கவிக்கோதை
சொல்லில்வாழ் தூயனுக்கே நம்வாழ்வைச் சொத்தாக்கும்
வல்லமையால் வென்றான் முனி.
18)
முனிந்தமுனிப் பின்னேகிக் கற்றான் பெருமாள்
முனிவில்லா அந்தணன்பால் கற்றதுவும் கண்ணன்
கனிந்தநல் லாசிரியன் கிட்டாமல் ஏங்கி
முனிவன்பால் கற்றானோ ஈடு.
19)
ஈடும் எடுப்புமில் ஈசன் உவந்திங்கே
ஈடளித்த பெற்றிக்கே என்னுள்ளம் தானுருகும்
காடுவாழ் சாதியுமாய்க் காகுத்தன் தோன்றலாய்
நீடுபுகழ் பெற்றிமையும் விஞ்சு.
20)
விஞ்சுமிருள் தானகல வீறுடன் ஆன்றவுயிர்
துஞ்சுங்கால் நற்றுணையா தான்வருமே -- மிஞ்சுகுணம்
வான்பொலியும் நம்மின் மணவாள மாமுனிவன்

 தேன்பிலிற்றும் தாளிணையே நந்து.