சனி, 20 ஜூன், 2009

ந்யாஸதசகம் 2

ந்யஸயாம்யகிஞ்சந: ஸ்ரீமந்

அநுகூலோந்யவர்ஜித:

விச்வாஸ ப்ரார்த்தநா பூர்வம்

ஆத்ம ரக்ஷா பரம் த்வயி. (2)

[ஸ்ரீமந்: ஸ்ரீமந் நாராயணனே! திருமகளோடு வருந்திருமாலே! அகிஞ்சந: தேவரீரைப் பெறுவதற்கு வேறு உபாயங்களை அறிவதற்கும் அநுஷ்டிப்ப தற்கும் சக்தியற்றவனான அடியேன் ; அநுகூல: அநுகூலனாக ஆக க் கடவேன் என்கிற ஸங்கல்பம் உடையவ னாகவும்; அந்யவர்ஜித: அநுகூலனாயிருப்பதற்கு வேறான ப்ராதிகூல்யத்தை விட்ட வனாகவும் இருந்து; விச்வாஸப்ரார்த்தநாபூர்வம்: நீ என்னை ரக்ஷிப்பாய் என்கிற துணிவும், நீ என்னை ரக்ஷிக்கவேண்டும் என்கிற ப்ரார்த்தனையையும் முன்னிட்டு; ஆத்ம ரக்ஷாபரம்": அடியேனைக் காக்கும் பொறுப்பை த்வயி : தேவரீரிடத்தில் ந்யஸ்யாமி – ஸமர்ப்பிக்கின்றேன்]

முதல் சுலோகத்தில் கூறப்பெற்ற ரக்ஷாபர ஸமர்ப்பண ரூபமான அங்கியைஆநுகூல்ய ஸங்கல்பம் முதலான ஐந்து அங்கங்களுடன் அநுஷ்டிக்க வேண்டும் என்று காட்டா நின்று கொண்டு ஸ்ரீய:பதியான பகவானை விளித்து தாம் அநுஷ்டித்த முறையிலே அருளிச் செய்கிறார் இதில்.

திருகமள் கேள்வனே! தேவரீரை அடைவதற்கு உபாயங்களாகிய கர்மஞான பக்திகள் போன்ற எத்தகைய முதலும் இல்லாதவனும், தேவரீருக்கு என்றுமே அநுகூலனும், பிராதி கூல்யத்தை அடியோடு விட்டவனுமாகியஅடியேன் நன்னம்பிக்கையுடனும்,அடியேனைக்

காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டும், அடியேனை ரக்ஷிக்கும் பரத்தைத் தேவரீரிடத்தில் வைத்து விடுகின்றேன்.

ப்ரபத்திக்கு ஐந்து அங்கங்கள் உண்டு. அவையாவன:—

(1) ஆநுகூல்ய ஸங்கல்பம் (2) ப்ராதிகூல்ய வர்ஜநம்

(3) மஹாவிச்வாஸம் (4)கோப்த்ருத்வ வரணம் (5) கார்ப்பண்யம் என்பன.

(1) ஆநுகூல்ய ஸங்கல்பம் – எம்பெருமான் திருவுள்ளத்திற்கு உகந்தவற்றையே செய் வதாய் உறுதி கொள்ளல்

(2) ப்ராதிகூல்ய வர்ஜநம் – எம்பெருமான் திருவுள்ளத்திற்கு விபரீதமானவற்றைச் செய்யாதிருக்க உறுதி கொள்ளல்; அல்லது அவற்றைப் புரிய எண்ணங் கொள்ளாமை; அல்லது அவற்றைச் செய்யாது விடுதல்.

(3) மஹாவிச்வாஸம் – எம்பெருமான் நம்மைக் காக்க வல்லவன் என்று தேறித் தவறாது நம்மை ரக்ஷிப்பான் என்று திடமாக நம்புதல்.

(4)கோப்த்ருத்வ வரணம் – பக்தியோகம் முதலிய உபாயங்களைஅநுஷ்டிக்கச்சக்தியற்ற தம் விஷயத்தில் அருள் புரிந்து அவ்வுபாயங்களின் ஸ்தாநத்தில் நின்று பலன் கொடுக்கு மாறு அவனை வேண்டுகை.

(5)கார்ப்பண்யம் – பக்தியோகம் முதலிய உபாயங்களில் தமக்கு அதிகாரமின்மையும், எம்பெருமானைத் தவிர வேறு தெய்வத்திடமோ, மோக்ஷத்தைத் தவிர வேறு பலனிலோ பற்றில்லாமையும் அநுஸந்தித்தல்; அல்லது இவ்வநுஸந்தாநத்தால் தமக்கிருந்த கர்வம் ஒழியப் பெறுதல்; அல்லது எம்பெருமானது கருணை தம்மீது வளர்ந்து ஓங்கும்படி தாழ்ந்து நின்று அஞ்ஜலி நமஸ்காரம் முதலியவற்றைச் செய்தல்

இந்தச் சுலோகத்தில் ‘அநுகூல:’ என்றதால் ஆநுகூல்ய ஸங்கல்பமும், ‘அந்யவர்ஜித:’ என்றதால் ப்ராதிகூல்ய வர்ஜநமும், விச்வாஸ ப்ரார்த்தநாரூபம்’ என்றதால் மஹா விச் வாஸம், கோப்த்ருத்வ வரணம் என்பனவும், ‘அகிஞ்சந:’ என்றதால் கார்ப்பண்யமும், ‘ஆத்ம ரக்ஷாபரம் ந்யஸ்யாமி’ என்றதால் ஸாங்க பர ஸமர்ப்பணமும் கூறப்பெற்றன.

“அநாதிகாலம் தேவரீருக்கு அநிஷ்டாசரணம் பண்ணுகையாலே ஸம்ஸரித்துப் போந் தேன். இன்று முதல் அநுகூலனாய் வர்த்திக்க க் கடவேன்; ப்ரதிகூலாசரணம் பண்ணக் கடவேனல்லேன்;தேவரீரைப் பெறுகைக்கு என் கையில் ஒரு கைம்முதல் இல்லை; தேவரீரையே உபாயமாக அறுதியிட்டேன்; தேவரீரே உபாயமாக வேண்டும்; அஷ்ட நிவ்ருத்தியிலாதல், இஷ்ட ப்ராப்தியிலாதல் இனிபரம் உண்டோ'” என்பது இஸ் ஸாங்கா நுஷ்டாநத்துக்கு நடாதூர் அம்மாள் அருளிச் செய்யும் சுருக்கு.

நின்னருளாங் கதியன்றி மற்றொன் றில்லே
னெடுங்காலம் பிழைசெய்த நிலைக ழிந்தே
னுன்னருளுக் கினிதான நிலையு கந்தே
னுன்சரணே சரணென்னுந் துணிவு பூண்டேன்
மன்னிருளாய் நின்றநிலை யெனக்குத் தீர்த்து
வானவர்தம் வாழ்ச்சிதர வரித்தே னுன்னை
யின்னருளா லினியெனக்கோர் பரமேற் றாம
லென்றிருமா லடைக்கலங்கொ ளென்னை நீயே

(தேசிகமாலை, அமிருதசுவாதினி—31)

[எனக்குத் தலைவனான எம்பெருமானே! தேவரீருடைய கிருபையாகிய கதியைத் தவிர அடியேனுக்கு வேறு கதியில்லை;அநாதிகாலமாக தேவரீர் திருவடிகளில் அபராதம் செய்து வந்த நிலை இப்போது நீங்கிவிட்டது. தேவரீர் கிருபையைப் பெறுவதற்கு ஸாதநமாக தேவரீர் திருவடிகளில் ப்ரபத்தியை அநுஷ்டித்தேன் என் அக்ஞாநத்தை ஒழித்து நித்யஸுரி களின் வாழ்வை அடியேனுக்குத் தருமாறு தேவரீரை வேண்டிக் கொண்டேன். இனிமேல் அடியேனுக்கு ஒரு பொறுப்பும் வைக்காமல் அடியேனைக் காக்கவேண்டிய வஸ்துவாக ஏற்றுக் கொள்வாயாக. இதில் ‘நின்னருளாங் ……….இல்லேன்’ என்றதால் கார்ப்பண்ய மும், ‘நெடுங்காலம் … கழிந்தேன்’ என்றதால் ப்ராதிகூல்ய வர்ஜநமும், ‘உன்னருளுக்கு … உகந்தேன்’ என்றதால் ஆநுகூல்ய ஸங்கல்பமும்,’ உன்சரணே … பூண்டேன்’ என்ற தால் ‘மஹாவிச்வாஸமும்’, ‘மன்னிருளாய் … வரித்தேனுன்னை’ என்றதால் ‘கோப்த்ருத்வ வரணமும்’ ‘இன்னருளால் … என்னைநீயே’ என்றதால் ஆத்ம ஸமர்ப் பணமும் கூறப் பெற்றுள்ளன. எனவே, ஐந்து அங்கங்களுடன் கூடிய ப்ரபத்தியை இப்பாசுரம் விளக்குதல் தேற்றம்]

என்ற இவர் பாசுரம் இப்பொருளையே விளக்குதல் காண்க.

உகக்குமவை யுகந்துகவா வனைத்துமொழிந் துறவுகுண
மிகத்துணிவு பெறவுணர்ந்து வியன்காவ லெனவரித்துச்
சகத்திலொரு புகலில்லாத் தவமறியேன் மதிட்கச்சி
நகர்க்கருணை நாதனைநல் லடைக்கலமா யடைந்தேனே.

{தேசிகமாலை, அடைக்கலப்பத்து-5}

[உலகில் வேறோர் உபாயத்தையும் செய்யமுடியாதவனும், மற்றவுபாயத்தைப் பற்றிய அறிவற்றவனுமான அடியேன், பேரருளாளன் உகந்தவற்றைச் செய்வதையே விரும்பி, அவன் உகவாத அனைத்தையும் செய்யாது நீங்கி, பலன் தருவதில் மிக்க உறுதியாகிய மஹாவிச்வாஸத்தை அடைவதற்கு ஸாதகமாக பேரருளாளனுக்கும், ஜீவாத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தையும், அவனுடைய குணங்களையும் அநுஸந்தித்து, அவனையே அதிசயிக்கத் தக்க ரக்ஷகனாகவேண்டும் என்று பிரார்த்தித்து, அழகிய மதிள்கள் சூழ்ந்த காஞ்சியின் கருணையே வடிவாக க் கொண்ட ஸ்வாமியான பேரருளாளனை சிறந்த கதியாகப் பற்றினேன். இதில் ‘உகக்குமவையுகந்து’ என்றதால் ஆநுகூல்ய ஸங்கல்ப மும், ‘உகவாவனைத்துமொழித்து’என்றதால் ப்ராதிகூல்ய வர்ஜநமும், ‘மிகத் துணிவு பெறவுணர்ந்து’ என்றதனால் மஹாவிச்வாஸமும் ‘காவலென வரித்து’ என்றதனால் கோப்த்ருத்வ வரணமும் ‘புகலில்லாத் தவமறியேன்’ என்றதால் கார்ப்பண்யமும் ‘அடைக்கலமாயடைந்தேன்’ என்றதால் அங்கியாகிய ஆத்ம ஸமர்ப்பணமும் கூறப்பெற் றுள்ளன. எனவே பேரருளாளன் திருவடிகளில் ஐந்து அங்கங்களுடன் கூடிய ப்ரபத்தியை அநுஷ்டித்தேன் – என்றபடி]

என்ற பாசுரமும் இவண் அநுஸந்தேயம்.

_____ தொடரும் ------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக