ஞாயிறு, 1 நவம்பர், 2009

திருப்பாதுகமாலை

 

திருப்பாதுகமாலை

இறைமையே தொண்ட வாவித் தொண்டினல் லிறைமை சால
  நிறையுமா ணடிநி லைப்பா நிகழுமா யிரந லப்பண்
ணிறைவனா ரிதய மன்னு மிரதமேந் தினிய சந்தஞ்
செறியவோர் தொண்டி தென்றே கேசவன் தமிழ்செய் தானே

சோதித்திரு வேதத்தலை யோதித்தரு நாதன்
   பாதத்திரு வீதென்றடி பாடித்தரு மாதி
   போதக்கவி கொள்ளுந்திரு வுள்ளந்தெரி வள்ளல்
   கீதத்திரு பாதாவனி நாதாமுத மீதாம்.

சொற்கற் பகமுற் கவிபோற் றுமறை 
விற்கற் பகதற் பரனங் கிரிமாண்
பொற்கற் பகவற் புதபா துகையெம்
நற்கற் பகமிக் கவிநல் கியதே.

வடவாரிய மறைமங்கல நடைநாடிறை நிறைதென்
னிடவாரிய மறைதேறிய திடநாவிறை யறைதென்
வடவாரிய னடிமாமண வணமாயிரு மறைமா
முடியாரிய னடியாயிர மொழியாயிர மிதுவாம்.

நகர்காட்டு துறையெந்தை மறைகாட்டு மதியம்
பகர்காட்டு மலர்மாது பதிகாட்டு மணிபா
துகைகாட்டு கவியேறு துறைகாட்டு நலமா
தகைகாட்டு மெழி லூட்டு தமிழ்காட்டு மிது நூல்.

உம்பர் நிரம்பிய கோட்டி யரங்க
மிம்ப ரிதண்ண னிரம்பிய நூலென்
றன்ப ருளக்களி கூர்ந்தரு ளாடு
மன்புக ழொட்டொளி  வட்டிது வென்றே.

கண்டிது நாதன ரங்கனு வக்க
மண்டில ரேகையு மத்தியு மொத்தே
பண்டரு சித்திர வண்புகழ் மாறன்
தெண்டிது கேசவ னொண்டமிழ் நூற்றான்

விண்ணப்பம்

இறைச்சீர் பிறங்கெண் ணிறைச்சீ ரரங்கா!
  மறைச்சீர் வழங்குன் மனச்சீரி னிந்நூல்
  முறைச்சீரி னின்னேர் முகச்சீர் விரிப்பா
  னறச்சீரி லிட்டுன் னடிச்சீர் பிடித்தேன்.

எனக்காக வென்றொன் றிரக்காத நின்கண்
  மனக்காத லொன்றுன் மதிக்கா லருள்வாய்
  உனக்காக வென்றா லுனக்கென்று தானுன்
  கனக்காத லூன்றுன் கழற்காவல் கொள்வன்.

முற்பெருங் கவிஞர் சுத்த முத்தமிழ்த் துறைக டாங்கி
  நற்பெருங் கதிகண் மேவு நடைநலம் பொலியக் கண்டு
  கற்பவர் திறத்துக் காத்துச் சொற்றிறம் பாது கற்ற
  நற்பினன் னடையி லாய வாயிர முனது நன்றே.

கோனடத் தென்றி ளங்கோ வேண்டவன் றண்டர் கோனைக்
  கானடத் தென்று நாதன் காவலா யுலகுக் கெல்லாந்
  தானடத் தரசின் வண்ணந் தானிதென் றருண்மி குத்தே
  கானிடைத் தந்த வள்ளற் பாது! நின் தலைமை காண்பாம்.

குலமென நலந்து றந்து குடிகெடுங் குரிசி லீட்டத்
  தலைமுளை களைந்து முன்னந் தலையுன துலகி லோங்க
  நிலையென வவன டிக்கீழ் நிறுத்தியே நிலைத்த நின்னை
அலைதுயி லகில நாத னடிமுடி சூட்டி னானே.

முனிவர னிவந்தி ளங்கோ முடியிறைக் குவந்து சூட்ட
வனைமுறை மணங்க மழ்ந்த நலனிறை கலசந் தன்னைத்
தனிமுடி யுனக்குச் சூட்டுந் தகுதன துளத்து நாதத்
தினிதுரை துலங்கு தாளன் திருவலஞ் செய்து வந்தான்.

என்று தெட் டிறைமை சான்ற மெய்யனிவ் வைய முய்ய
நன்றுதொட் டன்பி னற்பா லகிலநல் லரசு பூக்க
ஒன்றுதொட் டுலகி னாட்சிக் குறுதியென் றருளி யாண்ட
வன்றுதொட் டென்று மாட்சி யடிநிலாய்! நின்ற துன்கண்.

தாதையோர் முன்னு மாகத் தானுமுன் பின்னு மாக
நாதனே யாதி நீதி நானிலத் தரசு நாறப்
பாதுகா! முடிநி னக்குப் பருணிதர் பரவச் சூட்டி
ஓதுமா மனுகு லத்தோர்க் குனதிறை பூரித் தானே.

சிறுமனஞ் சிதற வில்லித் தீமனங் குமைக்க மூட்டிப்
பொறைமிசைப் பிரசை வாட்டி யுண்ணவே குழுமியெண்ணிக்
கறைமிசைத் தரைப றிக்குங் கரவரிங் கிறைவ ராகும் 
மறலறச் சகத லத்துப் பாதுகாய்! நடைகொள் வாயே.

ஆதியா யருளா யாளு மாழியான் பாத மல்லா
லாதுமோர் பற்றிலாத பாவனைப் புனித வண்ணப்
பாதுகாய்! வாழ்தி யாளா யாள்திநீ யரசாய்ப் பாரிற்
பேதியா நீதி நின்ற நின்னிறை மாட்சி வாழ்க

ஆண்டவன் தொண்டி தென்றே யருமையிற் புரியா யாவும்
  மாண்டவர் முடிமீ திட்ட மகுடமா மாளு மாந்தர்க்
  காண்டவ னென்று மாந்தர் கடைப்படப் புரியும் பூசை
  தீண்டவர் பொருளுக் கெல்லாந் தீங்கினை விளைக்கு மாதோ.

அளவிலிவ் வுலக மாக்கி யளவுதான் கடந்து தன்ன
லுளநலத் தோங்கி நின்ற வுத்தமன் பதந யத்தே
அளிநலத் துயிர ளித்தோன் வயின்வரை யறுத்த நீதித்
தெளிவினிற் றரும வண்ணம் பாதுகாய்! தெரிக்கின் றாயே

உலகினிற் பகைவர் பல்லா ருயிர்களுக் குள்ளா ரேனுந்
தலைவரப் பகைவர் கட்குத் தகைமுனி யழுக்கா றென்பார்
மலியவர் வலியை மாந்தர் மனமல மறுக்கும் பாவால்!
நலியநின் பொலிவு பூக்கும் நன்றிநீ யொன்று செய்வாய்.

பொல்லரை நல்ல ராக்கும் புனிதநின் னிறைம னத்துச்
செல்லொரு செங்கோற் செவ்வி செறியநற் றுறவி லோச்சும்
நல்லற வள்ள னீதா னல்லர சாட்சி கொள்ளச்
சொல்லொரு வேலை தானுங் காத்ததுன் சொல்லின் வேலை.

நன்றுடன் செடுமி டத்துக் கலியுமே கண்டு கொண்மி
னென்றுட னுலகி லாட்சி கிதநலந் திகழச் செய்யும்
நன்றது புரிய நின்று நல்லறம் நிறுவு நின்கண்
நின்றது கால வட்டம் நிகழுமா றுணர்வர் நல்லார்.

காலமே லோடு மோடுங் காலத்தோ டோடக் கற்குங்
கோலமே நாடி யோடிக் கோமிசைக் கோக்களாவீர்
காலமோ டோடாக் காலக் காலமே யோட மாள்வீர்
வாலர்பா லீத றைந்தே வாடுவா ரரசு கொள்ள.

காலமோ டாது போகுங் காலமே தென்று முண்டோ
காலமோ டோடா ராரோ காட்டவோர் காலு மாட்டார்
வாலினோர் நீட்ட மேதாங் காட்டியே வைய மாட்டுங்
காலமீ தென்று தானோ டாதுபோ னின்ற தின்றே.

அரசுதான் கால மாக்கு மரசினைக் கால மாக்கா
  வரசினைக் கால மாக்கி லரசொழி கால மஃதே
  பரசுமிவ் வரசி னுண்மை பாதுகாய்! காணு மெய்யர்
  துரிசரைத் துதித்து வையத் துயரர சுயர வெண்ணார்.

பூதியர் கோலி லாடிப் புலைவளக் கானி லோடி
  யூதிய மலைக ளேறி யுயர்பதக் கிளைக டாவிப் 
  பேதுறு சலம னத்தர் பெறுமிறைப் பொறையி னாட்சி
  மாதிர மந்தி கையின் மாலையாய் முடியு மந்தோ!

ஊதியஞ் சுருங்க நீதி யுலகினிற் சுருங்கு மென்று
  பூதியர் பறையு மேதம் புவியினிற் சிதைத்து நீதா
  னேதுவொன் றின்றி நாதன் சேவடிக் கடிமை செய்தே
  பாதகக் கடுக ளைந்து பாதுகாய்! பார்ப ரித்தாய்

பதமதிற் பிறந்த வாற்றாற் பாதுகப் பேர்ப டைத்துக்
கதியதென் றுணர்ந்த தன்கண் தனையறத் துறந்து தொண்டின்
வதியெனச் சதிந டந்தே வழுவிலா வாழ்வு மன்னும்
பதியறன் வலியு றுத்தும் பாதுகா! பொலிக நின்சீர்.

நாயகன் பாது காயுன் னாயிர நாம மோதுந்
தூயவர் விரித்த முன்னூற் றுணிபொருள் தொடுத்து மெய்ய
வாயவர் வழங்கி வையம் வாழவே வாழு நன்மைக்
காயவர் கனவு நானுங் கண்டுளங் களித்திட்டேனே.

இருமையும் வழுவா திங்கே யிருந்துவாழ் நாள்க ளெல்லாந் 
தருமமுந் துறவு மன்புந் தழையுமா றிறைவ னற்றாள்
விரிநெறிப் பலவாய் மல்கு மிருநிலத் தொழுகி யொன்றும்
பெருநலத் தினிது வாழ்வாம் பெருமனச் செல்வ ராயே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக