Wednesday, November 4, 2009

பாண்டிய நாடு பழம்பெரும் நாடு.

தலைப்பு தப்போன்னு நினைக்காமல் கொஞ்சம் மேலே படித்து விட்டு முடிவெடுக்க வேண்டும்.

அடியேன் பிறந்து வளர்ந்து வேறு எங்கும் செல்ல மனமில்லாமல் வாழ்ந்து வரும் எங்கள் பாண்டிய நாடு சிறப்புகளைக் கொஞ்சம் பார்ப்போம்.

தென்றமிழ் நாட்டினைக் குறித்துக் கல்வியிற் பெரிய கம்ப நாடர்

அத்திருத்தகு நாட்டினை யண்டர்நா
  டொத்திருக்கு மென்றாலுரை யொக்குமோ
  எத்திறத்தினு மேழுலகும் புகழ்
  முத்துமுத்த மிழுந்தந் துமுற்றமோ
               --- (கிட்கிந்தா, ஆறுசெல்படலம் 53)

எனப் புகழ்கிறார்.”பூழியர்கோன் தென்னாடுமுத்துடைத்து”

பாண்டிநாட்டுச் சிறப்பு
நல்லம்பர் நல்ல குடியுடைச் சித்தன்வாழ்
வில்லந் தொறுமூன் றெரியுடைத்து – நல்லரவப்
பாட்டு டைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின்
நாட்டுடைத்து நல்ல தமிழ்
(பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, நச்சினார்க்கினியருரை)

சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியுஞ்
சவுந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனும்
சங்கப் புலவருந் தழைத்தினி திருந்த(து)
மங்கலப் பாண்டி வளநா டென்ப.
    (நன்னூல், சங்கர நமச்சிவாயப் புலவர் விருத்தி)
என்ற அறிஞர் பாடலால் நன்கு அறியலாம்.

வழங்குவது உள் வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
  பண்பிற் றலைப்பிரிதல் இன்று.
        -- (பொருட்பால், ஒழிபியல், குடிமை 5)
என்னும் திருக்குறளுரையில் ஆசிரியர் பரிமேலழகியார், “ பழங்குடி” என்பதற்குத் “தொன்று தொட்டு வருகின்ற குடியின்கட் பிறந்தார்” என்று உரை கூறித் “தொன்று தொட்டு வருதல் – சேர சோழ பாண்டிய ரென்றாற் போலப் படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வருதல்” என விளக்கியுள்ளார். இதனாலும், வான்மீகி பகவான் ஸ்ரீராமாயணத்து,சுக்ரீவன் வானர சேனையை நாடவிட்ட தருணத்துப் பாண்டியர் செல்வச் சிறப்பையும் அவரது கபாடபுரத்தையும், எடுத்தோதுதலாலும் பாண்டியரின் பழமை நன்குணரலாம்.

  சரணாகதி தர்மம் விளைந்த பெருநிலமாகவும், கருணாகரப் பெருமாள் ஸர்வ ஜீவர்க்கும் அபயப் பிரதானம் அருளிய திருப்பதியாகவும் தருப்ப சயனனாய்த் திருக்கோயில் கொண்டெழுந் தருளியிருக்கும் திருப்புல்லாணியும், “கோவையின் றமிழ் பாடுவார் தொழுந்தேவதேவன் திருக்கோட்டியூர்” என்று சிறப்பித்தருளப் பெற்றதும், ஸ்ரீவைஷ்ணவ பரமாசாரியராகிய ஸ்ரீபெரும்பூதூர் வள்ளலின் ஆசாரியர்களுள் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பிக்கும், “அல்வழக் கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமான துங்கன்” என்று கொண்டாடப் பெற்ற செல்வ நம்பிக்கும், அவதாரத் தலமான திருக்கோட்டியூரும், பொன்னும், முத்தும், இட்டுச் செய்த ஆபரணம் போலே சூடிக் கொடுத்த நாச்சியாரும், சீரணிந்த பாண்டியன்றன் நெஞ்சு தன்னில் துயக்கறமால் பரத்துவத்தைத் திறமாய்ச் செப்பி வாரணமேல் மதுரை வலம் வரவே வானின் மால் கருட வாகனனாய்த் தோன்றத் திருப்பல்லாண்டு பாடி வாழ்த்திய பெரியாழ்வாரும், அவதரித்த தலமாயும், வட பெருங்கோயிலுடையான் நித்ய வாஸம் செய்யும் ஸ்ரீவில்லிபுத்தூரும், மாலுகந்தவாசிரியரான நம்மாழ்வார் அவதரிக்குமேற்றம் பெற்ற திருக்குருகூர்ப்புரியும், திருவாத வூரடிகளால் “பத்த ரெல்லாம் பார்மேற் சிவபுரம் போற் கொண்டாடு முத்தரகோச மங்கையூர்'” என்று போற்றிய திருவுத்தரகோச மங்கைத் தலத்தையும், அன்பர்க்கே யவதரிக்கு மாய னிற்க அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு துன்பற்ற மதுர கவியாரைப் பெறும் பேறும் பெற்ற திருக்கோளூர் முதலான ஈரொன்பது திருமால் திருப்பதிகளையும் தன்னுட் கொண்டதும், அபிநவ கவிநாதனாகிய கம்ப நாட்டடிகள் வந்து துதிக்கின்ற நாடாயும் விளங்கி வருவது தென்பாண்டி நன்னாடு.

     அமிசசந்தேசம் என்னும் அரிய அழகிய தம் நூலில் திருவேங்கடநாதன் எனும் கவிவாதி சிங்கத் தேவன் பின்வருமாறு கூறுகிறார்.

தவத்தினால் விளங்கும் திருவாலவாயுடையரான பரமசிவனிடத் தினின்றும் தெய்வப் படைகளை யடைந்த பாண்டிய தேசத் தரசர்களுடைய பிரபாவத்தினால் தாங்கள் சிறையிலிருந்ததை நினைத்து பயமடைந்த மேகங்கள் காலத்தில் வருஷிப்பதால் நிறைந்த பயிர்களையுடையதும், குபேர பட்டணத்தைக் காட்டிலும் அதிகமான செல்வச் சிறப்புடையதும், யாகம், தானம், தவம் முதலிய புண்ணியங்களுக்கிருப்பிடமான பட்டணங்களினாலும், கிராமங்களாலும் அலங்கரிக்கப் பெற்றது பாண்டிய தேசம். பவழக்காடுகளுடன் கூடிய அந்நாட்டு எல்லையிலுள்ள ஆழி காட்டுத் தீயினாற் சூழ்ந்த காடு போலவும், ஸந்த்யா ராகத்தோடு கூடிய ஆகாசம் போலவும், சிந்தூரத்துடன் கூடிய யானை போலவும், பீதாம்பரத்தினால் ஸேவிக்கப்பட்ட நாராயணன் போலவும், மின்னலோடு கூடிய மேகம் போலவும், ஒரு சரீரத்துடன் கூடிய ஆண் பெண் உருவமான மிதுநம் போலவும் தோன்றும். பாண்டிய தேசத்துப் பெண்கள் முத்துக்களின் சூர்ணங்களினால் விளங்குகிற திலகத்தையுடையவர்களாகக் காணப் பெறுவர்.”

படித்தாயிற்றா? படிக்கும்போதே ஒரு நியாயமான சந்தேகம் வந்திருக்க வேண்டுமே? இந்த நடை இவனுக்கு வராததாயிற்றே, இம் மாதிரி கோர்வையாக நல்ல தமிழில் எழுத இவனுக்குத் தெரியாதே, யாராவது எழுதியதை நகல் எடுப்பதுதானே இவன் வழக்கம், இது யார் எழுதியதாக இருக்கும் என்றெல்லாம் சிந்தனை ஓடியிருக்குமே! இவன் என்றாவது சற்று ஸ்வாரஸ்யமாக எழுதிவிட மாட்டானா என்று விடாமல் வலைக்குள் வரும் சிலரில் ஓரிருவராவது “ஆஹா! இது பந்தல்குடியாரின் நடையல்லவா!” என சரியாக யூகித்திருப்பீர்களே! ஆம்! அவர் ஒரு நூலுக்கு எழுதிய முன்னுரையின் ஒரு பகுதிதான் இதுவரை படித்தது. அது என்ன நூல்? அதற்கு முன்….

    இந்தப் பாண்டிய நாட்டின் சிறப்பைப் பலபடி எடுத்துரைத்த ப.ரெ. திருமலை ஐயங்கார் ஸ்வாமி விரிவுக்கஞ்சியோ என்னவோ சொல்ல மறந்தவைகளில் ஐப்பசி மூலத்துக்கு ஏற்றம் தந்தவர் அவதரித்ததால் இந்தப் பாண்டிய நாடு அடைந்த சிறப்பு, உன்னதத் துறவி விவேகாநந்தரை உலகெலாம் அறிய வைத்த மேன்மை, தமிழ்ச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமை என்பவற்றோடு, எந்த நூலுக்கு முன்னுரை எழுதினாரோ, அந்த நூலின் ஆசிரியர், எவர் இந்த நூல் என்றில்லாமல் வைணவ சம்ப்ரதாய வடமொழி நூல்களிலே அனேகமாக ஒன்று விடாமல் தமிழ்ப் படுத்தி, திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கம் சிறந்தோங்கிடப் பணிபல செய்தாரோ அவர் பிறந்த மண்ணும் இந்தப் பாண்டிய நாட்டின் பகுதியாம் சேது நாட்டு சக்கரம் வாழும் நல்லூர் (இன்று அது சக்கரவாளநல்லூர்) என்பதையும் சொல்ல மறந்தாரே !

சரி! என்ன நூல்! யார் எழுதியது!

மதியருண் மகிழ்ம ணங்கொண் மங்கலச் சங்க நாதம்
   பதியெனும் பரமர் தூப்புற் புனிதனா மொருவ னூதும்
   கதியினீ ருதவு நீரின் கதகநற் சதக முன்னூல்
   ததியர்செந் தமிழி சைக்கண் கேசவன் தெரியத் தந்தான்.”

“வேய்ங்குழ லோசை யென்கோ விடைமணிக் குரலி தென்கோ
    தீங்கவி யிரத மென்கோ திப்பியர்க் கமுத மென்கோ
    வேங்கட விமல னூட்டும் யாழ்நரம் பின்ப மென்கோ
    ஓங்களி யமல னீந்த வொலியருட் சதக நூலே.

  ஆமாம்! ஸ்ரீ ஆர். கேசவ ஐயங்கார் தமிழ்ப் படுத்திய தயா சதகமாம் “ திருவருட்சதகமாலை”(27-1-1952ல் வெளியிடப் பட்டது) இங்கே இனி தொடரப் போவதற்கான கட்டியம்தான் இதுவரை படித்ததெல்லாம். ஏற்கனவே இங்கு ஒரு சில பாடல்களைப் பதிவு செய்திருந்தது சிலருக்கு நினைவிருக்கலாம். அடியேனுடைய கவனக் குறைவால் எங்கோ வைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருந்த அந்த நூல் நேற்று கையில் கிடைத்தது. மீண்டும் ஆரம்பிக்கும் போது படிக்குந் தோறும் பரவசமூட்டும் பந்தல்குடியாரின் முகவுரையுடனே நாளை முதல் துவங்குவேன். திருவருட்சதகமாலை உண்மையிலேயே “பெருக்கென வரப்பெறு கருப்பிர தவெள்ளம்”