இன்றுடன் ஸ்ரீபாதுகா சஹஸ்ரத்தின் 32 பத்ததிகளும் நிறைவு பெறுகின்றன.
ஆனாலும் “திருப்பாதுகமாலை” நூல் இன்னும் நிறைவு பெறவில்லை ! வளரும்.
32. பேற்றுப்பத்ததி
971. சான்றுய ராரிட மாமறை சால
ஊன்றய னந்தன னாதிய ரோதத்
தோன்றய னப்பய னொன்றவ திச்சீர்
சான்றவி ராகவன் பாதுகை சார்வன். 1
972. கோதெனக் கண்ணுறா தும்பர்சீர் மாதவன்
தாதுகக் கேளியம் போருகத் தாளதே
ஆதரத் தேந்துபூம் பாதுகா தேவி! யெப்
போதுநின் பக்கமே போற்றிநா னிற்பனே. 2
973. ஆமெனக் கன்னைநீ தானரங் கத்துறை
மாமணிச் செல்வமா மாநிதிச் செம்மலோ
யாமலீந் தின்புறப் புல்லரில் வாயில்செல்
தோமெனக் கேதுசொல் தூமனப் பாதுகாய்!. 3
974. பூவளப் பாது!நீ புல்லுமா லங்கிரிக்
கூவுளத் துய்யவர் கூருமெய்த் தொய்யலில்
தேவுமா வீடுதான் பேணுமவ் வேணவா
மேவிடா மாமனச் செல்வர்சீர் மல்குவர் 4
975. தாயெனக் காயநின் தண்ணளிக் கண்ணலத்
தாயபின் தோன்றலுக் காயபுன் கண்மிகுந்
தாயொணா வன்னெடென் னோயெலாம் மாயவே
பாயருள் மாலையென் பாலருள் பெய்தியால் 5
976. ஆயுநின் மூரியெண் ணாரியர் வாழறத்
தூயகை கேயிசே யோம்புதொன் னோன்புநன்
றேயவை யாமிநிச் செந்தவச் சிந்தையில்
தாயுனைப் பாது!கண் டார்பவந் தாண்டுவார் 6
977. துன்றலிற் றோன்றுநீ தாங்குமால் பூங்கழல்
ஓன்றியே யென்றினுக் கொன்றுகை செய்யுமா
நன்றிதொன் றென்றுசெய் நன்றியின் வென்றிகள்
கின்றதென சிந்தையைச் சீதரன் பாதுகாய்!. 7
978. ஆக்குமவ் வேறுபூ ணங்கமா ரங்கமாற்
கார்க்குமா காவணத் தாவணங் காக்குமே
பூக்குநீ பூணெனக் காக்குமப் பூவடி
யார்க்குமே யாம்பொதுப் பான்மையாம் பாதுகாய்! 8
979. செந்தவப் பாதுனிற் சிந்தைவை குந்தமர்
உந்துமுன் முந்தன்வை குந்தமுஞ் சிந்தியார்
நந்துமவ் விந்திரத் தந்திரர்க் காயுடன்
சிந்துமவ் வப்பதஞ் செப்பவும் வேண்டுமே. 9
980. நாதனின் தாதர்தன் னாச்சிமார்க் கோச்சுநாள்
நீதமாய் பாகிடும் வீதமாற் றாதுமண்
மாதுநற் றூலவிம் மேனியிற் றாங்கியெப்
போதுமே தீண்டுபொற் பாதுனைப் போற்றுவள். 10
981. பாவனீ நாளுமூ வாநிதிச் சீரெனத்
தாவியே பூவளந் தானிருந் தாளினை
மேவியே நோக்குனை நோக்கியச் சேவடிப்
பூவவாம் பூதர்தம் பூமடிப் பூட்டுவார் 11
982. அண்டர்கோன் பாதமா போலமா மண்டலக்
கண்டகச் சோதனச் சோதி!நேர் காண்டலில்
ஒண்டிருப் பாது!நின் தொண்டர்கண் காணவர்
கண்டகம் பூக்குமெய் கண்டதோ ரற்புதம். 12
983. அங்கமன் கன்மமுங் காட்சியுங் காதலுஞ்
சிங்குமிவ் வேழையன் சென்னிநீ மன்னலே
பங்குவின் னுவ்வியில் மங்கலம் பொங்கலைக்
கங்கைதான் பாயுமா காதையாம் பாதுகாய்!. 13
984. காக்குநன் னோன்பினிற் காணவே மாணெடு
நோக்குபல் லாண்டுகண் பூக்குமா யோகியர்
நோக்குமா னாடுதா ளுன்னுடன் பாதுகாய்!
வார்க்குமக் காரமார் கீரமாய் மாந்துமே. 14
985. நற்பதம் பாது!நீ நல்குநற் பாளரே
கற்புநின் கண்ணிலைத் தாடிநின் சேடராய்
நற்பதின் மூவகைக் கன்மநின் னன்மைசேர்
தற்பரன் தாளிணைக் கற்பணஞ் செய்வரே 15
986. முந்தைநால் வேதமா மூர்த்தமும் புங்கவர்
பந்திதாங் குவ்வியும் பாவுநின் பாணியிற்
சுந்தரன் பாவலெம் போலியர் சென்னிமீ
துந்தருள் முந்துசீ ரொன்றுசீர் முந்துமே. 16
987. சொன்னபா துன்னையே துஞ்சிலும் விஞ்சியென்
சென்னிதாங் குன்வணச் சீர்க்கனாக் காணலென்
அன்னையே! சாலுமீ தவ்வணந் தாபதர்
மன்னுநல் யோகிலென் னப்பனைக் காண்பரால். 17
988. மெய்தருஞ் சீரிலுன் சீதரச் சோதியா
மெய்தரும் மாநிதிச் செல்வமே நல்குனக்
கெய்துகை கூப்புமெய் யென்னிதே பாதுகாய்!
பொய்தரும் புல்லர்பாற் போயவிழ் வெய்துமோ? 18
989. நன்னெறிக் கண்ணடக் கையடைத் துன்னிடைத்
துன்னலத் தண்ணலார் சொன்னலத் தாணிலாய்!
நன்னருள் பொன்னரங் காட்டுமெய்ப் பாட்டினில்
மன்னனொத் தாடுமன் மாடுகூத் தாடுவார். 19
990. பாதெனா துவ்வமீ திவ்வணத் தந்தநா
ளோதுசீ தேவிதாட் கொஞ்சுசெம் பஞ்செழிற்
சோதியென் னப்பனென் கண்முனே தோன்றுமா
றாதரித் தென்னைநீ நன்னையாட் கொண்டருள். 20
991. என்னுளந் தானே யென்னை யெள்குமா றேழை யேன்மா
மன்னனல் லன்பர் போல நானுமே நடிக்கு மீதுன்
மன்னுளங் கொண்ட வள்ளன் மையிலிது சாலு மென்றுன்
னன்னரிற் பரதன் கோட்டி நல்லர்நோக் கருள்செய் பாதூ. 21
992. எளிமையின் வரைப்பி னின்ற விவ்வுயிர்க் கெனவி ரங்கித்
தளிமமன் னமலன் பாதூ! தவறென தறக்க ழித்துக்
கொளவருள் புரிந்து நீ தான் குழையெனப் பொழுத ரங்கன்
அளிசுரந் தணுகு மந்நல் லழகெனக் குதவு வாயே. 22
993. எடுத்தவஞ் சலியின் வெற்றி யியம்பிறை யரங்க வள்ளல்
தொடுத்ததன் மறையின் வேள்வி தொடரவ பிரதங் காறும்
நடத்தரித் தவத்த ரேற்றும் நயத்தெனை நடத்த வீடே
வடித்துமுன் னடித்தி ரங்கா ளும்மிடத் தூட்டு வானே. 23
994. யாகுமா லடிய ரிந்த யாக்கையைக் கழற்று மக்காற்
பாங்குதா ழவர்மு டிக்குப் பாது!நீ மகுட மாவாய்
வீங்குதீக் கருப்பை வீழும் வினையின்வே ரறுக்கு மச்சொல்
ஓங்குகா விரிம ணற்கண் ணொளிபெறு மளவும் வாழ்வன். 24
995. பெறவலரும் பேற்றி னெல்லை தேறரு ளரங்கன் செந்தாள்
செறிவினின் னிடைநி லைத்த பெருந்திரு விரிந்த பாதுன்
நறுமைகள் கின்ற வுள்ளம் நாறநற் பரத னோதுன்
நிறைவுசொல் லாண்டு நூறும் நிறைவனின் னடிய னேனே. 25
996. மேவுமென் தாழ்மு டிக்கு மேலுநன் மோலி பூத்தாய்
பாவுமென் சிந்த னைக்குப் பாவனைப் பண்பு கொண்டாய்
கூவுமென் னாவி னுக்குக் கூடுமிக் கவிவி ரிந்தாய்
யாவுமுன் னருள்ப யந்த பாக்கியம் பாது! கண்டாய். 26
997. என்னையான் முன்னை யிந்தப் பிண்டமாம் பண்ட மென்றும்
பின்னையா னதிப னென்றும் பிணங்கினேன் பரமன் பாதூ!
என்னையா ளுடைய வள்ள லெம்பிராற் காக்க வன்னா
னென்னைநிற் காக்க நீகாத் தீன்றநின் மெய்ய னானேன். 27
998. மெல்லியர் பால ரோடு மேதினி மகிழ்ந்து போற்றக்
கல்லினை யணங்கு மந்தக் கரியினை முளையும் வாழ
ஒல்லையி லுமிழ்ந்த நற்றா ளுடைமைகொண் ணறுமை யெம்மோய்
நல்லொரு சுகிர்த மன்னென் னவிரநீ நிலைகொண் டாயே. 28
999. தொடவுமத் திரும லர்க்கை துவளுமால் திருவ டிப்பூ
கடுவலென் னுளத்த மன்னக் கருதிநீ யிடையி லேந்தித்
தொடுமதன் பகழிக் கூர்மை பொடிபடுத் துனத ருட்கோ
ணடையினின் படியி லம்மா! நலமிகக் கொண்டு புக்காய். 29
1000. கலைமக ளரங்க மென்று களிநடம் புரிய ரங்கத்
தலமிதிற் கணமு னாடல் தவிர்ந்தகா லந்த ரங்க
மலர்மகி மங்கை மார்க்கெம் மான்மலர்ப் பதம்பி டிக்கும்
நலமரு ணயத்தெ னக்கும் நல்குவாய் பதநி லாயே!. 30
1001. இவ்வணத் திசைய நீயே யிசையுனா யிரமி தாக
அவ்வணம் பரவு நின்னை யடியனே னெடிது னார்வச்
செவ்வையிற் பாடிப் பாதுன் சேவகச் செல்வம் பெற்றேன்
செவ்விதுன் சிறப்ப விவ்வா றென்னினிப் பெறுவ தம்மா!. 31
1002. அருணிதி யரங்க நாத னணிதிருக் குணங்க ளொக்க
அருமறை முடியுந் தேறா வளப்பரு நிறைமை சாலுன்
பெருமையை யளியி லென்புன் மேதையி லளந்த சோர்வொன்
றருமையி லரங்க வள்ள லடிநிலாய்! பொறுத்த ருள்வாய். 32
1003. உணர்வினின் தலைமை பாடும் புலவரார் பிறரு மப்பன்
பணைவணப் பாது காயிப் பனுவனின் பால தென்றே
குணமிதிற் சிறிது காணக் குணித்தது சுவைக்கும் வள்ளற்
குணமனத் தென்னை யன்னார் வெகுமதிக் குரிமை கொள்வார்
1004. கோதெனக் குறைம னத்தர் குணத்தையு மறுத்துக் காண்பார்
கோதையும் நிறைம னத்தர் குறையெனக் கூற கில்லார்
ஆதலி லரங்க மன்ன னணிதிரு வடிநி லாயுன்
காதையின் குறைநி றைக்கோ ரான்றநற் சான்று நீயே. 34
1005. இறைநிலைச் சிலையு ராம னிருபதத் தகல கில்லே
னிறையுமென் றுறைய வன்தா ணிலை!யுனோ ரையிலி தென்னால்
நிறைநலப் பெரிய நின்மாண் சரிதநல் லுடன்பி றந்த
செறிகவித் தலைவ னாலோர் சீதைபோற் புரிந்து கந்தாய் 35
1006. மதலையின் வதன மாயன் வளையுரன் தடவு மாறொன்
றிதுவுமென் முடியிற் பாவா லிணையுமுன் பணைநி மிர்ந்த
கதியிலென் வதன வாயிற் கதவநீக் குனது பண்பின்
உதயமுன் னூலி தென்றே கோதிலா ரோது வாரே. 36
1007. கொண்டனல் வண்ணன் பாதங் கொண்டடெழுங் காத லுண்டேல்
அண்டமுற் றுய்ய வேதங் கண்டநுண் பொருள்வ ழங்கிப்
பண்டொடைச் சுதையி னீத்தம் பருகுமின் பகவர் கட்கு
விண்டுதா ணிலைகொ ளிந்நூல் விளங்குநன் றினிய வாறே. 37
1008. பொலிக மாணெதிப் பொருநர் வாசகம்
பொலிக மாதவன் புனித பாதுகம்
மலிய வவ்விரு திருவளர் மறைத்
தலைபு ரந்தமா தவர்கள் பொலிகவே. 38
திருப்பாதுகையாயிரம்
முற்றுப் பெற்றது.
ஸ்ரீபாதுகா சஹஸ்ரத்தின் தமிழாக்கம் தான் முற்றுப் பெற்றுள்ளது. “திருப்பாதுகமாலை” நூல் இன்னும் வளரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக