Thursday, November 5, 2009

திருவருட்சதகமாலை

திருவருட்சதகமாலை

ஸ்ரீ;

முகவுரை

எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை
வழுவா வகைநினைந்து வைகல் – தொழுவார்
வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச்சுடரைத் தூண்டும் மலை.
             --- [ பொய்கையார், முதல் திருவந்தாதி 25 ]
துணிந்த சிந்தை துழாயலங்கல் அங்கம்
அணிந்தவன்பேர் உள்ளத்துப் பல்கால் – பணிந்ததுவும்
வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே
வாய்திறங்கள் சொல்லும் வகை.
                 --[ பூதத்தார், இரண்டாந் திருவந்தாதி 33]
தாழ்சடையும் நீள்முடியும் ஒள்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் – சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமே லெந்தைக்கு
இரண்டுருவு மொன்றா இசைந்து.
                   ---[ பேயாழ்வார், மூன்றாந் திருவந்தாதி 63]
கடைந்து பாற்கடல் கிடந்து காலநேமி யைக்கடிந்து
உடைந்த வாலிதன் தனக்கு உதவவந்து இராமனாய்
மிடைந்த ஏழ்மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்த மாலபாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ
                  ---[ திருமழிசையாழ்வார், திருச்சந்த விருத்தம் 81]
குன்றமேந்திக் குளிர்மழைகாத்தவன்
அன்றுஞாலம் அளந்தபிரான் பரன்
சென்றுசேர் திருவேங்கடமாமலை
ஒன்றுமேதொழ நம்வினைஓயுமே.
                     ---[ நம்மாழ்வார், திருவாய்மொழி 3-3-8]
கம்பமதயானைக் கழுத்தகத்தின்மேலிருந்து
இன்பமரும்செல்வமும் இவ்வரசும்யான்வேண்டேன்
எம்பெருமான் எழில்வேங்கடமலைமேல்
தம்பகமாய்நிற்கும் தவமுடையேனாவேனே.
                  --[ குலசேகராழ்வார், பெருமாள் திருமொழி 4-5 ]
மச்சொடுமாளிகையேறி மாதர்கள்தம்மிடம்புக்கு
கச்சொடுபட்டைக்கிழித்துக் காம்புதுகிலவைகீறி
நிச்சலும்தீமைகள்செய்வாய்! நீள்திருவேங்கடத்து எந்தாய்!
பச்சைமனகத்தோடு  பாதிரிப்பூச்சூட்டவாராய்.
                     --[ பெரியாழ்வார், திருமொழி 2-7-3]
தையொரு திங்களும் தரைவிளக்கித்
          தண்மண் டலமிட்டு  மாசிமுன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
           அழகினுக் கலங்கரித்து அனங்கதேவா!
உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி
             உன்னையும் உம்பியை யுந்தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
             வேங்கட வற்குஎன்னை விதிக்கிற்றியே.
                    [ஆண்டாள் தையொருதிங்கட்பாமாலை 1-1]
அமல னாதிபிரான் அடியார்க்கு என்னை யாட்படுத்த
விமலன் விண்ணவர்கோன் விரை யார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிளரங்கத் தம்மான்திருக்
கமல பாதம்வந்து என் கண்ணி னுள்ளன வொக்கின்றதே.
                        [ திருப்பாணாழ்வார்  அமலனாதிபிரான் 1 ]
தெரியேன்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துவிட்டேன்
பெரியேனாயினபின் பிறர்க்கேயுழைத்துஏழையானேன்
கரிசேர்பூம்பொழில்சூழ் கனமாமலை வேங்கடவா!
அரியே! வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.
                         --- [ திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி 1-9-7]
நோவினையு நோயினையு நோய்செய் வினையினையும்
வீவினையுந் தீர்த்தருளும் வேங்கடமே – மூவினைசெய்
மூவடிவாய்ப் பச்சென்றான் முன்னா ளகலிகைக்குச்
சேவடிவாய்ப் பச்சென்றான் சேர்பு.
             --- [திவ்யகவிபிள்ளைப் பெருமாளையங்கார்,
                                  திருவேங்கடமாலை 14]

                                   முகவுரை  தொடரும்