Wednesday, March 1, 2017

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

இராம நாடகம்
பாதுகா பட்டாபிஷேகம்


பதினோராங் களம்

காலம்:                   முன்னிரவு
இடம்:                    கங்கைக்கரை
பாத்திரங்கள்:        சுமந்திரர், இராமர், சீதை, இலக்ஷ்மணர், நகரமாந்தர்

               {நகரமாந்தர் கங்கைக்கரையை அடுத்த பசும்புற்றரையில் இங்குமங்குமாய்ப் படுத்து நித்திரை செய்கின்றனர். இரதம் நிற்கிறது. இரதத்தருகில் சுமந்திரர் நிற்கிறார். இராமர் அவருக்கு எதிராக நிற்கிறார். இராமருக்குப் பின்னாக, சீதையும் இலக்ஷ்மணரும் நிற்கின்றனர்.}

இராமர்:-- (சுமந்திரரை நோக்கி), சுமந்திரரே! நம்மைத் தொடர்ந்து வந்த நகர மாந்தர் அனைவரும் படுத்து உறங்கி விட்டனர். நீர் அயோத்திக்குத் திரும்பிப் போவதற்கு இதுவே ஏற்ற சமயம். அவர்கள் விழித்து நான் காடு செல்வதறிந்தால் என்னைப் பின் தொடருவார்கள். பிறகு அவர்களை அயோத்திக்குப் போகச் செய்வது கஷ்டமாகும். நீர் இப்பொழுது இரதத்தைத் திருப்பிக் கொண்டு அயோத்தி போய்விட்டால் அவர்கள் கண்விழித்து எழுந்தபோது இரதம் திரும்பிச் சென்ற சுவட்டைப் பார்த்து, நான் அயோத்திக்குப் போய்விட்டதாக எண்ணித் தாமும் அயோத்திக்குச் சென்று விடுவார்கள். ஆதலால் நீர் எனக்கு இந்த ஒரு உபகாரம் செய்ய வேண்டும்.

சுமந்திரர்:-- இளவரசரே! என்ன கொடிய கட்டளை இடுகிறீர்கள்! தங்கள் பிரிவை ஆற்றாது வருந்தும் சக்கர வர்த்தியின் முன்னம் சென்று 'தங்கள் திருக்குமாரரைக் காட்டில் விட்டு வந்து விட்டேன்' என்ற கர்ண கடூரமான சொற்களைச் சொல்வேனானால், நான் தங்களைக் காட்டுக்கனுப்பிய கைகேயியிலும் கொடியவனாவேனே! என் வரவை எதிர்பார்த்துத் தயங்கியிருக்கும் அரசர் ஆவி நான் சென்று கொடிய உண்மையைக் கூறியவுடன் பிரிந்து போய்விடுமே! அந்தோ! தங்களை விட்டு நான் அயோத்திக்குச் செல்வேனாகில் அரசர்க்கு மந்திரியாகேன். அவர் உயிருண்ணச் செல்லும் எமனாவேன். ஐயோ! இராமச்சந்திர மூர்த்தி! அடியேனுக்கு இந்தக் கொடிய கட்டளை இடவேண்டாம். நானும் தங்களோடு காட்டிற்கு வருவதற்கு உத்தரவு கொடுங்கள். ஆவி அயர்ந்திருக்கும் அரசரையும், அழுதரற்றும் அந்தப்புர மாதரையும், கன்மனக் கைகேயியையும் உடையதாய், கோல் நோக்கி வாழும் குடிகளை இழந்து அலங்கோலம் அடைந்திருக்கும் அயோத்தி மாநகருக்கு நான் செல்லேன், செல்லேன்! சக்கரவர்த்தியின் உயிரைக் காக்க என்னால் ஏலாதேனும் அவர் உயிரைப் போக்க நான் ஆளாகேன். தங்களோடு நானும் வனத்திற்கு வருகிறேன். தயை கூர்ந்து என்னைத் தடுக்காதிருங்கள்.

இராமர்:-- சுமந்திரரே! எல்லாம் அறிந்த நீர் இவ்வாறு கூறினால் சிறுவனாகிய நான் உமக்கு என்ன சொல்ல மாட்டுவேன்? சக்கரவர்த்தி மீதும் என்மீதும் உமக்குள்ள அபிமானம் எப்படிப் பட்டதென்பதை நான் அறியாத வனல்லன். அறிந்தும் உம்மை அயோத்திக்கு அனுப்புவது எதனாலென்றால் கூறுகின்றேன் கேளும். நீர் அயோத்திக்குப் போகாவிட்டால் நகர மாந்தரும் போகார். அவர்கள் போகாவிட்டால் நகரம் பாழடையும். அதைக் காணக் காண அரசர்க்குத் துயரம் மிகும். மேலும் குடிகளில்லா நகரத்தை பரதன் எப்படி ஆள்வான்? பரதன் அரசாளாவிட்டால் எனது பிரிவாகிய துயரத்துக்குட்பட்டும் அரசர் தாம் கொடுத்த வரத்தை நிறைவேற்றியவராகார். பழிக்கே ஆளாவார். நீர் அயோத்திக்குச் செல்வீரானால் இவைகளொன்றும் சம்பவியா. ஆவி சோர்ந்திருக்கும் அரசரும் பரதனைக் காணுவதாலும், பிரஜைகள் அரண்மனைப் பெரியோர் முதலியவர்களது தேறுதலுரையாலும் நாளடைவில் துக்கம் நீங்கிவிடுவார். ஆதலால், என் சொல்லைத் தட்டாது, நீர் அவசியம் அயோத்திக்குத் திரும்பிச் செல்ல வேண்டுகிறேன்.

சுமந்திரர்:-- (தலை குனிந்து கண்ணீர் வடித்து) என் துர்ப்பாக்கியம் அதுவானால் யான் யாது செய்வேன்! தர்ம சொரூபி! தங்கள் தந்தையார்க்கு இருப்பு நெஞ்சினனாகிய யான் சொல்ல வேண்டிய செய்தி ஏதேனு முளதோ?

இராமர்:-- (சுமந்திரர் ஆகத்தைத் தடவிக் கண்ணீரைக் கையால் துடைத்து) மதிவல்ல மந்திரத் தலைவ!

               முன்புநின் றிசைநிறீஇ முடிவுமுற்றிய
               பின்புநின் றுறுதியைப் பயக்கும் பேரறம்
               இன்பம்வந் துறுமெனின் இனிய தாயிடைத்
               துன்பம்வந் துறுமெனிற் றுறக்க லாகுமோ?

தர்ம நெறியானது முன்னதாக இப்பிறப்பிலேயே புகழைக் கொடுக்கும். இறந்த பிறகோ இவ்வுலகத்தில் அப்புகழை நிலை நிறுத்துவதோடு, உடலைப் பிரிந்த ஆன்மாவை அழியாத சொர்க்க பதவியில் சேர்க்கும். அப்படிப்பட்ட அற நெறியை அனுசரிப்பதால் இன்பம் வந்துறுமாயின் நன்று. அவ்வாறின்றி துன்பம் வந்தடையுமானால், அதற்காக அந்த தர்ம நெறியை விட்டு விடுவது சரியாகுமா? இன்பம் வந்தாலும், துன்பம் வந்தாலும் அறநெறி கடைப் பிடித்து ஒழுகுவதே வீரத் தன்மையாகும்.

               நிறப்பெரும் படைக்கல நிறத்தி னேருற
               மறப்பயன் விளைக்குறும் வன்மை யன்றரோ
               இறப்பினுந் திருவெலா மிழப்ப வெய்தினும்
               துறப்பில ரறமெனல் சூர ராவதே.

யுத்த களத்தில் நின்று அனேக உயிர்களை வெய்ய படைக்கருவிகளால் துன்பப் படுத்திக் கொல்லும் கொடிய செயலைச் செய்வது வீரத் தன்மையாகாது. அந்தப் போர்வீரர் வீரராகார். தமது உயிருக்கே இறுதி உறுமாயினும், தம் செல்வமனைத்தும் சென்றொழிவதாயிருந்தாலும், தர்மம் தவறாது நடப்பவரே வீரராவார். ஆதலால்,நான் பலருடைய துன்பத்தை நோக்காது தர்மத்தைக் காப்பாற்ற வனஞ் செல்வது பற்றி நீர் வருந்துதல் ஒழியக் கடவீர்.

               நீர் அரண்மனையை அடைந்ததும் முன்னதாகக் குலகுரு வசிஷ்ட முனிவரைக் கண்டு அவருக்கு என் வந்தனை கூறி அவரோடு என் தந்தையைச் சென்று காணும். வசிஷ்ட முனிவர் மூலமாகவே எனது கருத்துக்களை எந்தைக்குச் சொல்லும். பரதன் கேகய நாட்டிலிருந்து வந்ததும் அவனுக்கு என் ஆசீர்வாதங்களைக் கூறிப் பட்டந் தரித்துக் கொள்ளச் சொல்லும். அரச நீதி வழுவாது குடிகளைப் பக்ஷமாய்ப் பாதுகாத்து வரும்படியும், தந்தையின் துயரத்தை ஆற்றி அவர்க்கு வந்தனை வழிபாடுகள் செய்வதில் என்னைப் பிரிந்துறையும் துக்கத்தை ஒழிக்கும்படியும் அவனுக்குச் சொல்லும். அரசர், பரதனது தாயால்தானே என்னை வனத்துக் கனுப்ப நேர்ந்ததென்று எண்ணி அவனை வெறுத்தாலும் வெறுப்பார். அச்சமயம் அவர்க்கு நியாயங்களை எடுத்துக் காட்டி, அவனை வெறுக்காதிருக்கச் செய்வதோடு, என்னைப் போலவே அவனையும் அன்பாய்ப் போற்ற வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டதாக அவர்க்குக் கூறும். அரசர்க்குள்ள சோகத்தை மாற்றும். நான் பதினான்கு வருஷங்கள் முடிந்தவுடன் அவர் பாத சேவைக்கு வந்துவிடுவேன் என்று சொல்லும். என் அன்னையர் மூவருக்கும் என்னுடைய வந்தனை வழிபாடுகளைச் செலுத்தி என் பிரிவால் வருந்தாதிருக்கும்படி கூறும். இவ்வளவே நான் உமக்குக் கூற விரும்பியது. (சீதை, இலக்ஷ்மணர் இருவரையும் நோக்கி,) சீதா! இலக்ஷ்மணா! சுமந்திரர் அயோத்தி செல்லுகிறார். அவரிடம் சொல்லி யனுப்பவேண்டிய செய்திகள் எவையேனும் இருந்தால் சொல்லியனுப்புங்கள்.

சீதை:-- (சுமந்திரரை நோக்கி) அமைச்சரே! அரசர்க்கும், என் அத்தையர்க்கும் என்னுடைய நமஸ்காரத்தைத் தெரிவியுங்கள். நான் வளர்த்துவந்த நாகணவாய்ப் பறவைகளையும் கிளிகளையும் பத்திரமாய்ப் பாதுகாத்து வரும்படி என் தங்கைமாருக்குக் கூறுங்கள்.

சுமந்திரர்:- (முகத்தைக் கையால் மறைத்துக்கொண்டு பொருமி அழுது விம்மி) ஆ! கொடுமை! கொடுமை!

இராமர்:-- (சுமந்திரரை நோக்கி) சுமந்திரரே! என்ன இது! பேதையர்போல் நீர் இப்படி வருந்தலாமா? வேண்டாம். கண்ணீரைத் துடையும்.

சுமந்திரர்:-- (கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, இலக்ஷ்மணரை நோக்கி) இளையவரே! நீர் அரசர்க்குச் சொல்ல வேண்டுவது ஏதேனும் உண்டோ?

இலக்ஷ்மணர்:-- யார்க்குச் செய்தி சொல்லி அனுப்புவது? அரசர்க்கா?

      உரைசெய்தெங் கோமகற் குறுதி யாக்கிய
      தரைசெழு செல்வத்தைத் தவிர மற்றொரு
     விரைசெறி குழலிமாட் டளித்த மெய்யனை
     அரைசனென் றின்னமொன் றறையற் பாலரோ?

ஆளும் உரிமையுள்ள என் அண்ணற்கு அரசை ஆளத் தருவதாக அம்பலமறிய உரைத்துவிட்டுப் பின், அவ்வரசை ஒரு ஸ்திரீக்குக் கொடுத்தானே, உரைத்த உரைதவறா உத்தமன்! அவனையா அரசனென்று சொல்கிறீர்!

இராமர்:-- இலக்ஷ்மணா! துஷ்ட வார்த்தைகள் வேண்டாம்.

இலக்ஷ்மணர்:-- (சுமந்திரரை நோக்கி) சுமந்திரரே! நீர் கூறும் அரசர்க்கு நான் சொல்லி அனுப்பும் செய்தியைக் கேளும்.
               கானகம் பற்றிநற் புதல்வன் காயுணப்
               போனகம் பற்றிய பொய்யின் மன்னர்க்கிங்
               கூனகம் பற்றிய வுயிர்கொ டின்னும்போய்
               வானகம் பற்றிலா வலிமை கூறுவீர்.

தன் அருமந்த மைந்தன் ஆரணியஞ் சென்று காய்கனி அருந்தியிருக்க, தான் உயிர் துறவாமல் அரண்மனை யிலிருந்து, அறுசுவை உணவுண்ணும் தந்தையின் மனவலிமையே வலிமை என்று சொல்லும்.

               பரதன் கேகய நாட்டிலிருந்து வந்தால் அவனுக்குச் சொல்லவேண்டிய செய்தியையும் கேளும். அநியாயமாய் அரசை அடைந்த அந்த பரதனுக்கு நான் உடன்பிறந்தவன் அல்லேன். இராமச்சந்திரரோடு நான் பிறந்திருந்தால் அவர் ஆரணியஞ் செல்வதற்கு நான் உடன் பட்டிரேன். ஆதலால் அவருடனும் பிறக்கவில்லை. ஒருக்கால் சத்துருக்கன் எனக்கு உடன்பிறந்தவனாவான் என்று எண்ணலாம். அவன் பாதகனாகிய பரதனுடனேயே இருப்பதால் அவனுடனும் நான் பிறந்தவன் அல்லன் என்று சொல்லும். வேறு என்னுடன் பிறந்தவர் யார் என்றால் நானே. நான் இவ்வாறு தன்னந் தனியனா யிருந்தாலும் அவனிலும் வலியனே யென்பதைத் தெரிவியும். இதுவே நான் கூற விரும்பியது. வேறொன்றுமில்லை.

இராமர்:-- (சுமந்திரரைப் பார்த்து) சுமந்திரரே! இலக்ஷ்மணன் சிறுபிள்ளைத் தனமாகக் கூறிய மொழிகளை மறந்து விடும். நேரமாகிறது. நீர் தேரை நடத்திக்கொண்டு சீக்கிரம் அயோத்தி போய்ச்சேரும்.

சுமந்திரர்:-- இராமச்சந்திர மூர்த்தி! எவ்வாறு நான் தங்களைப் பிரிந்து செல்வேன்? எமதூதன் போலச் சென்று அரசர் முகத்தை எங்ஙனம் பார்ப்பேன்? பார்த்து, 'இராமரை வனத்தில் விட்டு வந்தேன்' என்ற கொடிய மொழிகளை எப்படி வாய்வந்து கூறுவேன்? கைகேயி அரசர் வருந்தத்தக்க சொற்களைக் கூறினாளேயொழிய வேறொன்றுமில்லை. நானோ அவர் உயிரைப் போக்கத்தக்க மொழிகளைக் கூறப் போகின்றேன். நான் கைகேயியினும் கொடியவனாகின்றேனே! ! (பெருமூச்சு விடுகிறார்)

இராமர்:-- சுமந்திரரே! நான் உமக்கு இன்னும் என்ன சொல்கிறது? நகர மாந்தர் கண் விழிப்பதற்கு முன் நீர் சீக்கிரம் செல்லும்.

(சுமந்திரர் தேரை நடத்திக்கொண்டு அயோத்திக்குப் போகிறார்)

......தொடரும்...