Wednesday, March 1, 2017

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி

சுலோகங்கள் 24 , 25

சுலோகம் 24

ஆர்த்ராபராதிநி ஜநேப்யபிரக்ஷணார்த்தம்
ரங்கேச்வரஸ்ய ரமயா விநிவேத்யமானே |
பார்ச்வே பரத்ர பவதீ யதி தஸ்ய நஸ்யாத்
ப்ராயேண தேவி வதனம் பரிவர்த்திதம் ஸ்யாத் ||

சாலத் தவறிழைத்தோர் சார்ந்துசர ணென்றுரைப்ப
மாலுக் கருகு வலப்புறமாய்க் -- கோலப்பொன்
மாற்றுகெனக் கோதாய்நீ வாமபா கத்திலையே
லேற்றமிவர்க் கென்று மிலை. .24.

பதவுரை

தேவி -- கோதாதேவியே!; ஆர்த்ராபராதிநி -- பச்சையான அபராதத்தைச் செய்து ஈரங்காயாத; ஜநே -- ஜனத்தை; அபிரக்ஷணார்த்தம் -- நன்றாய் உஜ்ஜீவிப்பதற்காக; ரமயா -- லக்ஷ்மீதேவியால்; ரங்கேச்வரஸ்ய – ரங்கநாதனுக்கு; விநிவேத்யமாந்யே -- சிபாரிசு செய்யும்போது; தஸ்ய – அவருடைய; பரத்ர பார்ச்வ – மற்றோர் பக்கத்தில்; பவதீ -- நீர்; யதி ந ஸ்யாத் -- இல்லாமற்போனால்; வதனம் -- அவருடைய திருமுகம்; ப்ராயேண – அனேகமாக (மிகவும்); பரிவர்த்திதம் ஸ்யாத் -- திரும்பியேயிருக்கும்.

பிழைப்பதையே ஸ்வபாவமாகவுடைய நாங்கள் குற்றங்கள் இன்னமுலராமல் ஈரமாய்ப் புதியதாயிருக்கையிலேயே, உன்னைப் புருஷகாரமாகப் பணிந்ததும், எங்களை ரங்கேச்வரனுக்குச் சிபாரிசு செய்யும்போது, அவருக்கு மற்றொரு பக்கத்தில் நீ இல்லாமல் போனால், அவர் முகம் (அந்தப் பக்கத்தில்) திரும்பியே இருக்கும்.

அவதாரிகை

(1) மனு முதலியவர்கள் சக்தர்கள். பக்தியோக நிஷ்டர்கள். வேதநியமங்களையெல்லாம் அனுஷ்டித்து உபாஸனத்தை சமதமதிருணபூர்வணராய் அனுஷ்டித்தார்கள். மாந்யரான அவர்களுக்கு இச்சேர்த்தி உபாஸ்யம். அசக்தர்களான பேதை ஜனங்களுக்கு இச்சேர்த்தி ப்ரபத்தவ்யம். பெரியபிராட்டியாரே புருஷகாரமாவதற்காக அத்தாயைச் சரணம் புகுந்ததும், அன்று செய்த புதுக்குற்றங்களையும் கவனியாது பெருமாளுக்குச் சிபாரிசு செய்கிறாள். ‘மாதர் மைதிலி' என்ற ச்லோகத்தில் 'ஆர்த்ராபாரதா:’ என்று ராக்ஷஸிகளைப் பட்டர் வர்ணித்தது நெஞ்சிலோடுகிறது.

(2) தேவிமாரிருவரோடும் ஒன்றாகக் கூடினார் என்றார் முன் ச்லோகத்தில். ஒருவனுமொருத்தியும் ஒன்றுகூடி ஒற்றிருக்கலாம்.. பார்யாத்வயமெப்படி ஸர்வகாலமும் ஒன்றுகூடி ஒன்றாயிருப்பது. அனேக ஸபத்நிகள் வெவ்வேறு திக்குகளில் க்ருஹபதியை இழுத்து ஹிம்ஸிப்பதுபோல' என்றாரே சுகர். பெருமாள் இரண்டு பத்நிகளிடமும் ப்ரியமாக இருக்கட்டும். பத்நிகளொருவருக்கு ஒருவர் கலஹப்படாரோ? பத்நியால் பெரியபிராட்டியாருக்குச் சிறந்த பக்கபலமேற்படுகிறதென்று அழகாக வர்ணிக்கிறார். அற்புதமான ரஸங்களுள்ளதைக் காட்டுவோம்.

ஆர்த்ராபராதிநி அபி -- நெஞ்சில் ஈரமில்லை. ஈரச்சொற்களான ஆழ்வார்கள் தேன்மொழிகளை ரஸிப்பதில்லை. நெஞ்சு சுஷ்கசுஷ்கம். மனோவாக் காயங்களால் புதிதுபுதிதாய்க் குற்றங்களைச் செய்தவண்ணமாயுள்ளோம். அபராதம் செய்த கை ஈரமுலறுவதன் முன்னமே அம்மா காப்பாற்றென்கிறோம். அப்படிக்கொத்த நம்மையும்.

ஜநே -- அசோகவனத்து ராக்ஷஸிகளைப்போன்ற ஜனமாயினும்

அபிரக்ஷணாரத்த்ம் -- நன்றாக அபிமுகமாக்கி ஸர்வோத்கிருஷ்டமான ரக்ஷணத்தைச் செய்யவேண்டுமென்று. ஆபிமுக்யத்தை அளித்து ஸ்வஜனமாக்கிக் கொள்ளவேண்டும் என்று. ‘ஸ்வஜநயஸி' (ஸ்வஜனமாக்குகிறாய்) என்ற பட்டரது அனுபவத்தை நினைக்கிறார். அபராதி ஜனத்தை விரோதி ஜனத்தை ஸ்வஜனமாக்க என்பது கருத்து. இப்படி விரோதி ஜனத்தினிடமும் அபிமுகமாகி ரக்ஷிக்க ப்ரார்த்திப்பதில், தனக்கே பதியின் ஆபிமுக்யத்தை இழக்கக்கூடிய அபாயம் வருவதாயிருக்கிறதென்று இந்த ச்லோகத்தில் அழகாகக் காட்டப்படுகிறது. என் பக்கத்திலிருந்து திருமுகத்தைத் திருப்பி மறுபுறத்தில் அபிமுகமானாலும் ஆகட்டும். எப்படியாவது குழந்தை விஷயத்தில் அபிமுகரானால் போதும். ஸபத்நியிடம் அபிமுகமாகத் திரும்பினாலும் திரும்பட்டும். நான் குழந்தையைக் காப்பாற்றச் சிபாரிசு செய்தே தீருவேன்.

ரங்கேச்வரஸ்ய –ப்ரணவப்ரதிபாத்யமான ஸர்வேச்வரன். ஈச்வரனென்றால் ஸம்ஸாரதந்த்ரத்தை வஹிப்பதில் தண்டதத்வநியமத்தைக் காட்டுகிறது. பத்நீ வல்லபைதான். ஆயினும் ஸாம்யநிலையை விடலாமோ? வைஷம்யத்தையும் பக்ஷபாதத்தையும் ஈச்வரன் பெண்டாட்டி பேச்சிற்காகக் கைப்பற்றலாமோ? இந்த க்ஷணத்திலேயே செய்த ஈரமான (புது) அபராதத்தோடே என்னெதிரிலிருக்கிற விரோதிஜனத்தை ஈச்வரனான நான் தண்டிக்கவேண்டாவோ?

ரமயா -- ஈச்வரனாலென்ன? பத்நியின் போகமயக்குகளில் மயங்குபவன்தான். ரமையின் வால்லப்யத்தை மறுக்க முடியுமோ? இவள் முகத்தைப் பார்த்துக்கொண்டு அங்குள்ள இங்கிதபராதீனனாய் ஜகத் ஸ்ருஷ்டி, மோக்ஷம் முதலியதைச் செய்பவனாயிற்றே!

விநிவேத்யமாநே -- பலமாகச் சிபாரிசு செய்யப்படும் பொழுது. ‘வி' என்பது விசேஷமாக, அனேகமாக, வற்புறுத்தி என்பதைச் சொல்லுகிறது. அபராதம் பச்சை, கொடிய விரோதிஜனம், இவனை அங்கீகரிப்பது கஷ்டமென்று சிபாரிசு மிக்க பலமாகச் செய்யப் படுகிறது. ‘நிவேதயத மாம்' என்று விபீஷணாழ்வார் போலன்று. ‘விநிவேதனம்' வேணும்.

பார்ச்வே பரத்ர – மற்றோர் பக்கத்தில். எதிர்ப்பக்கத்தில். கோதைப்பிராட்டி பெரியபிராட்டியாருக்கு பலமான பக்கபலமாகிறாளென்பதைக் காட்டவேண்டும். தன் பக்கத்தில் இல்லாமல் எதிர்ப்பக்கத்தில், அப்பக்கத்தில். அப்பாலிருந்தும், உயர்ந்த பக்கபலமாகிறாளென்பது அழகு. ‘பார்ச்வ பலம் -- பக்கபலம் ' என்பர். எதிர்ப்பக்கம் தன் பக்கமாயிற்று. ஸபத்நிகள் ஒரு பக்கமாயிருப்பரோ? கிழக்கும் மேற்குமாயிருப்பர், இருக்கிறார்கள். எழுந்தருளியிருக்கிற பக்கம் வேறாயினும், இருவருக்கும் ஒரே பக்ஷமென்பது அழகு. இரண்டு தாய்களுக்கும் இந்த துஷ்டப்பையல் பெற்ற பிள்ளையாகிறான். அவனை மன்னித்து அவனைச் சேர்த்துக்கொள்ளுவது இருவருக்கும் ஒரே பக்ஷமே. கோதை எதிர்ப்பக்கத்தில் இருப்பதும், பெரியபிராட்டியாரிடம் பெருமாள் ஆபிமுக்யம் தவறக்கூடாதென்பதற்கும், தானிருக்கும் பக்கம் திரும்பாமல், லக்ஷ்மீதேவியையே பார்த்துக்கொண்டிருக்கவேண்டுமென்றே எதிர்ப்பக்கத்திலிருப்பது. லக்ஷ்மியோடு ஒரே பார்ச்வத்திலிருந்தால் லக்ஷ்மிக்கு பக்கபலமேற்படாது.

பவதீ -- இப்படி அற்புதமான ஸபத்நீஸ்நேஹத்தையுடைய நீ பூஜ்யை என்பதில் என்ன தடை?

யதி தத்ர நஸ்யாத் -- அந்த இடத்தில், அந்த சந்தர்ப்பத்தில். ‘தத்ர' அவ்விடத்தில் என்றும், ‘பரத்ர' மற்றோர் இடத்தில் என்றும், இருக்குமிடத்தில் சப்தமாத்ரத்தால் விரோதம் காட்டுவது ஓரழகு. இருப்பது அப்புறம், கருத்து இப்புறம்.

ப்ராயேண – அனேகமாய்.

தேவி -- விளையாடும் சீலமுடையவளே! ரங்கமெனும் நாடகசாலையில் ஈச்வரன் முன் அவன் ஸ்வாதந்த்ரியத்தைக் குலைத்து, தேவிமாரிருவரும் என்னமாய் நடிக்கிறீர்களம்மா!

வதனம் -- ‘மோக்ஷநிஸ்யாமி' ‘உன் பரத்தை ஏற்போம்' என்று பேசவேண்டிய முகமாயிற்றே! முகத்தைத் திருப்பிக்கொண்டால் அனுக்ரஹப் பேச்சுக்கிடமேது? ப்ரணவரங்கத்தில் 'ஓம்' என்று பேசவேண்டுமே!

பரிவர்த்திதம் ஸ்யாத் -- அப்புறத்தில், பரத்ர, பார்ச்வத்தில் திரும்பியிருக்கும். அப்புறம் காலியாயிருந்தால், ஸபத்நியாகிய நீ இல்லாவிடில், அப்புறமே திரும்பியிருக்கும். குழந்தைக்கு சிபாரிசு செய்து அவனைக் காப்பாற்ற நீ எதிர்ப்பக்கத்தில் இருந்து இப்படி லக்ஷ்மீதேவிக்குப் பக்கபலமாகிறாய். உன் பக்கம் திரும்பினால் லக்ஷ்மியின் கருணைக்குக் குறையாமலோ மேற்பட்டோ உன் கருணை இருக்கிறது. அங்கீகரிக்க ஏன் இத்தனை தாமதமென்று உன் முகஜாடை. பெருமாள் உன் பக்கம் திரும்பினால், லக்ஷ்மி சொன்னதைக் கேட்காவிடில் உன் முகத்தை அப்புறம் திருப்ப நேரும். நீ லக்ஷ்மீதேவியையே பார்த்துக்கொண்டு அவள் கக்ஷியிலிருக்கிறாய். ... 24...

சுலோகம் 25

கோதே குணைரபநயந் ப்ரணதாபராதாந்
ப்ருக்ஷேப ஏவ தவ போகரஸாநுகூல:|
கர்மாநுபத்தபலதா நரதஸ்ய பர்த்து:
ஸ்வாதந்த்ரிய துர்விஷஹமர்மபிதாநிதாநம் || .25.

சக்கரஞ்சேர் கையான் சரண்புகுந்தோர் தங்கள்வினை
யொக்க வணர்ந்திதுவென் றோர்ந்துதவுந் -- துக்கசுக
மீரப் பனிமலர்க்க ணெம்மோ யிரிந்திடுமுன்
பூருச் சிலைவளைந்த போது. .25.

பதவுரை

கோதே -- கோதாய்! போகரஸாநுகூல: -- இன்பரஸத்திற்கு அனுகூலமான; தவ – உன்னுடைய" ப்ருக்ஷேப ஏவ – புருவத்தின் அசைப்பே; குணை: -- மனோஹரமான உன் விலாஸகுணங்களாலே; ப்ரணதாபராதாந் -- வணங்கினவர்களின் அபராதங்களை; அபநயந் -- போக்கிக்கொண்டு; கர்மாநுபத்த பலதாநரதஸ்ய – செய்த கர்மங்களுக்குத் தக்க பலன்களை அளிப்பதிலே ஆஸக்தியுடைய; பர்த்து: -- நாயகனுடைய; ஸ்வாதந்த்ரியதுர்விஷஹமர்மபிதாநிதாநம் -- ஈச்வரஸ்வாதந்த்ரியமென்னும் பொறுக்கக் கூடாத மர்மஸ்தானப் பிளப்பிற்கு முதற்காரணமாகும்.

கோதாய் இன்பரஸத்திற்கு அனுகூலமான உன் புருவ அசைப்பே அதன் குணங்களால் ஆச்ரிதரின் குற்றங்களைப் போக்கி, செய்த வினைகளுக்குத் தக்க பலனைக் கொடுக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் ஈச்வரனுடைய ஸ்வாதந்த்ரியத்தின் மர்மச் சேதத்திற்கு முதற்காரணமாகும்.

அவதாரிகை

‘இடது பக்கத்திலேயே அவன் முகம் திரும்பி இருந்துவிடும்' என்று முன் ச்லோகத்தில் சாதித்தார். அதனால் கோதை அங்கேயிருப்பதால், அங்கே திரும்புவதில்லையோ? கோதையை அபிமுகமாகப் பார்த்து அவள் அழகிலும் முகவிலாஸங்களிலும் ரஸிப்பதில்லையோ என்கிற சங்கை வரக்கூடும். அந்த சங்கையைப் போக்குகிறார். உங்கள் சேர்த்தியில் வந்து ப்ரணாமம் பண்ணுகிறவர்களுக்கு தம்பதிச்சேர்த்தி அவஸரத்திற்குத் தக்கபடி தம்பதிகள் பலதானம் செய்யவேண்டும். பலதானம் செய்யும்பொழுது தானம் வாங்குகிறவர்களின் குற்றங்களைப் பரிசீலனம் செய்யமாட்டார். சேர்த்தி சந்தோஷத்திற்கேற்றபடி அர்த்திகளுக்கெல்லாம் பலதானம் செய்வர். வதுவைச் சேர்ந்த அவள் அநுபந்திகள் குற்றமுடையாராயினும், வதுவின் குணங்களையும் அவள் அநுபந்திகளென்பதையும் நோக்கி அவர்களுக்கு உயர்ந்த பலன்களைத் தானம் செய்வர்.

கோதே -- கோதாய்! குணை: (தவ) –உன்னுடைய குணங்களால்; ‘செய்த பாபங்களைத் தர்மத்தால் (ஸுக்ருதங்களால், குணங்களால்) போக்கலாம்' என்று வேதமோதுகிறது. உன்னை ஆச்ரயித்தவர்களின் பாபங்களை அவர்கள் தங்கள் குணங்களால் போக்காவிடினும் உன்னுடைய குணங்களால் நீ போக்குகிறாய். பெருமாள் உபேக்ஷிக்கும்படி செய்கிறாய். உன் ஆச்ரிதர் குணங்களானாலென்ன, உன் குணங்களானாலென்ன !

ப்ரணாதாபராதாந் -- வணங்கி ஆச்ரயித்தவர்களின் அபராதங்களை.

அபநயந் -- போக்கிக்கொண்டு; ‘அபநுததி' என்ற ச்ருதிபதத்தில் உபஸர்க்கத்தை அனுஸரிக்கிறார்.

தவ ப்ரூக்ஷேப ஏவ – உன் புருவத்தின் அழகிய அசைப்பே. பெருமாளுடைய துர்விஷஹமான நிக்ரஹாஸ்த்ரத்திற்கு ப்ரணதனுடைய அஞ்ஜலி ஓர் ப்ரத்யஸ்த்ரமாகுமென்பர். அது ப்ரத்யஸ்த்ரமாவதற்கு நிதானம் (மூல காரணம்) மன்மதனுடைய தனுஸின் வடிவான உன்னுடைய புருவத்தின் வளைத்தலே. அந்த வளைத்தல் அஸ்த்ரக்ஷேபம் போன்றது. பெருமாள் நிக்ரஹாஸ்த்ரத்திற்கு ப்ரத்யஸ்த்ரமாக காமன் வில்போன்ற புருவத்திலிருந்து எய்தப்படுவது ஆச்ரிதரின் அஞ்ஜலியென்னும் ப்ரத்யஸ்த்ரம், உன்னுடைய இந்த ப்ரத்யஸ்த்ரம் வலிமை பெற்றது.

போகரஸாநுகூல: -- உன்னுடைய புருவத்தின் அழகிய அசைப்புகளின் விநோதம். போகரஸத்திற்கு அநுகூலம். லீலாரஸம், போகரஸம் என்று இரண்டுவித ரஸங்கள். பரமபதமென்னும் போகவிபூதிக்குப் புதிய ப்ரணதர்கள் சேர்ந்தால், அந்த ரஸம் இன்னும் வ்ருத்தியாகும். புதிதுபுதிதாகக் குழந்தைகள் வீடுவந்து சேரச்சேர அதிசயம் அதிகம். இன்பமதிகம். கர்மத்திற்குத் தக்கபடி தண்டனையளிப்பது லீலாரஸத்திற்கு அநுகூலம். ஒரு வணக்கை வ்யாஜமாகக்கொண்டு முன் செய்த கொடுவினைகளை மன்னித்து வீடு சேர்த்துக்கொள்வது போகரஸத்திற்கு அநுகூலம் என்பதும் இங்கே ரஸம். லீலாரஸத்திற்கு எதிர்த்தட்டு போகரஸம். அவர் தண்டனை பலன்களைக்கொடுத்து லீலாரஸத்தைத் தேடுகிறார். ‘அது வேண்டாம், என் மனதை அநுஸரிப்பது, என் ப்ரூக்ஷேபவிலாஸபோக ரஸத்தை மட்டுமன்று போகவிபூதிரஸத்தையும் பெருக்கும்' என்று நீ ஸூசிப்பிக்கிறாய்.

கர்மாநுபத்தபலதாநரதஸ்ய – எந்த ரதி வேணும். அபராதிகளின் கர்மங்களுக்குத் தக்கபடி தண்டனை பலத்தை அளிப்பதில் ரதி வேணுமா? இந்த உத்தமவதுவின் விலாஸ போகரதி வேணுமா என்ற விகல்பத்தை ஸூசிக்கின்றது 'ரத' என்கிற சப்தம். தம்பதிகள் சேர்த்தியில் வதூவரர்கள் வதுவின் அநுபந்திகளுக்குப் பலதானம் செய்யாரோ? பலதானம் செய்யும் தம்பதிகள் உயர்ந்த பலன்களைத் தானம் செய்வரோ? அல்லது தண்டனைகளை (ப்ரஹாரங்களை)த் தானம் செய்வரோ? ததீயாராதனை தடியாராதனை ஆகலாமோ? கர்மானுபத்தர்கள் எனபது பெருமாள் வாதம். ‘மதனுபத்தர்கள்' என் திறத்தார் என்று கோதை எதிர்வாதம். எந்த அனபந்தம் உயர்த்தி? கர்மானுபந்தமா? உன் அனுபந்தமா? என்று விகல்பம். இங்கே 'அனுபத்த', ‘பலதானம்', ‘ரத' என்கிற பதங்களால் இந்த ரஸங்கள் ஸூசிதமென்பது ரஸிகமனோவேத்யம்.

பர்த்து: -- உன்னுடைய பர்த்தாவினுடைய. உலகத்தின் பர்த்தாவினுடைய உலகத்தை ரக்ஷணத்தால் மரிக்க வேண்டியவனல்லவோ. ஈச்வரனாயினும் பர்த்தாவுமாவான், ரக்ஷகனுமாவான்.

ஸ்வாதந்த்ரிய துர்விஷஹமர்மபிதாநிதாநம் -- ஐச்வர்யம் என்பது ஸ்வாதந்த்ரியம். ஓரிடத்தி லிருந்தும் அதற்கு பங்கம் வ்யாஹதி வரக்கூடாது. ஐச்வர்யம்தானே ஈச்வரனுக்கு உயிர்நிலையானது. அந்த உயிர்நிலையில் அம்பே க்ஷேபம் செய்து சேதித்தால் ஈச்வர தத்வத்திற்கே அழிவு வருமே என்று சங்கை. ‘ஸ்வச்சந்தம் விததாம்யஹம்' என் சந்தப்படிக்கு, என் இஷ்டப்படிக்கு நான் பலன்களை விதிக்கிறேன் என்கிறார் பெருமாள். அது ஈச்வர லக்ஷணமான ஐச்வர்யம். இப்படி 'ஸ்வச்சந்தப்படி' ஸ்வதந்த்ரமாக பலமளிப்பது மேன்மையா? அல்லது உன் சந்தப்படி (பரச்சந்தப்படி) அநுவர்த்திப்பதென்கிற தாக்ஷிண்யம் மேன்மையா? என்று விகல்பம். “நாயகர்களுக்குத் தாக்ஷிண்யம் குலவ்ரதம்" என்பது மாளவிகாக்நிமித்ரத்தில் அக்நிமித்ரர் பேச்சு. கோதையின் சந்தத்தை அநுவர்த்திக்காமற்போனால் நாயகர்களென்னும் பர்த்தாக்களுக்கு உயிர்நிலையான தாக்ஷிண்யம் குலையும். ப்ரணதர்களான அடியாரை பரிக்கவேண்டியது பர்த்தாவென்னும் யஜமானனுடைய கடமை. “சரணாகதரக்ஷணம்" ஓர் உயிர்நிலை. மன்னித்து ரக்ஷிப்பதில் இந்த உயிர்நிலைகள் ரக்ஷிக்கப்படுகின்றன.