Monday, February 27, 2017

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி

சுலோகங்கள் 22 & 23

சுலோகம் 22

துர்வாதளப்ரதிமயா தவ தேஹகாந்த்யா:
கோரோசனாருசிரயா ச ருசேந்திராயா: |
ஆஸீதநுஜ்ஜித சிகாவனகண்டசோபம்
மாங்கள்யதம் ப்ரணமதாம் மதுவைரிகாத்ரம் || .22.

புட்பந் தனிலுறையும் பொன்னொளிசேர் பூமாது
நிட்களங்கப் பச்சையொளி நீயுமாய் -- நட்பின்
இருபாலும் வைகுதலா லெம்மோய்மான் மஞ்ஞைத்
திருவா ரெருத்துழறுஞ் சேர்ந்து. .22.

பதவுரை

மதுவைரிகாத்ரம் -- வேதத்தைத் திருடிய மதுவென்னும் அஸுரனுக்குச் சத்ருவான மதுஸூதனனுடைய திருமேனியானது; துர்வாதளப்ரதிமயா -- அருகம்புல்லைப்போல் பசுமையான; தவ தேஹகாந்த்யா -- உன் திருமேனியொளியாலும்; கோரோசனாருசிரயா -- கோரோசனையைப்போல் பொன்னிறமான; இந்த்ராயா -- லக்ஷ்மியின்; ருவா ச -- காந்தியாலும்; அநுஜ்ஜிதசிகாவள கண்டசோபம் --மயில் கழுத்தின் சோபையை விடாததாகி; ப்ரணமதாம் -- அடிபணிபவர்க்கு; மாங்கள்யதம் ஆஸீத் -- மங்களத்தை அளிப்பதாயிற்று.

மதுஸூதனனுடைய திருமேனியானது அருகம்புல்லைப் போலப் பசுமையான உன் திருமேனியின் பச்சைக் காந்தியாலும், கோரோசனையைப்போன்ற லக்ஷ்மீதேவியின் பொன்னிறத்தாலும், மயிலின் கழுத்தின் சோபையை விடாமல் வஹித்துக்கொண்டு அடிபணிபவருக்கெல்லாம் மங்களத்தை அளிக்கிறது.

அவதாரிகை

மாலைமாற்றி விவாஹம் நடந்து, கோதையும் பெரியபிராட்டியாரோடு விஷ்ணுபத்நியானாள். பிராட்டிமாரிருவரும் உபயநாச்சிமாராய் இருபக்கமுமிருக்கிறார்கள். அவர்கள் காந்திகள் பெருமாள் கரிய திருமேனியில் பரவுகின்றன. கோதையின் நிறம் அருகம்புல்லைப் போன்றது. பெரியபிராட்டியார் நிறம் பொன்நிறம், கோரோசனையைப் போன்றது. இருபக்கமும் இருவித காந்திகளும் பெருமாள் நீலத்திருமேனியில் இடைவிடாமல் பரவுகின்றன. நீலகண்டமென்னும் மயிலின் கழுத்தைப்போல பெருமாள் திருமேனி முழுவதும் ஆகின்றது. விவாஹத்தில் தம்பதிகளைப் பார்வதீபரமேச்வர மிதுனத்திற்கு ஒப்பிடுவார். அவர்களுடம்புமொன்றாயுளது. காடோவகூடமாகில் பிரிவுக்கே ப்ரஸக்தியில்லாமல் இருக்கும். உபய நாச்சிமார் திருமேனிக்காந்திகளும் பெருமாள் திருமேனியும் ஒன்றாகச் சேர்ந்து பிரியாச் சேர்த்தியாகின்றன. நீலகண்டரை மூன்றாவது அடியிலும், கௌரியை இரண்டாமடியிலும் ஒருவாறு ஸூசிக்கிறார். 'மஹேச்வரம் பர்வதராஜ புத்ரீ' என்று பாஞ்சாலீஸ்வயம்வரத்தில் த்ரௌபதீ அர்ஜுனனை மாலையிட்டதை வ்யாஸர் வர்ணித்தார். 'அநுஜ்ஜித' என்று நீங்காச் சேர்த்தியை ஸூசிக்கிறார். நீலகண்டருக்குக் க.ழுத்து மட்டும் நீலம்; மயிலுக்குக் கழுத்து இப்படி விசித்ர வர்ணமாயிருக்கும். பெருமாள் திருமேனி முழுதும் தேவிமார் காந்திகளால் மயில் கழுத்துக்கொப்பாகிறது. சிவசப்தம் மங்களத்தைச் சொல்லும். நீலகண்டசோபையை உடைய திருமேனி மங்களமாகிறது என்று ஓர்வித வேடிக்கை. ஈச்வரர் இத்தம்பதிகளுக்குப் பௌத்திரர். அவர் புத்ரர்களான அருகம்புல்லை விரும்பும் பிள்ளையாரும், மயில்வாஹனரான கார்த்திகேயரும் ப்ரபௌத்திரர்கள். 'சதுர்முகர் ஈச்வரர் முதலியவராகிய புத்திரபௌத்திரர்களோடு கூடிய ஸீதாஸமேதரான ராமனென்னும் க்ருஹமேதிக்கு நமஸ்காரம்' என்று ரகுவீரமங்களகத்யம் ஸாதித்ததை இங்கும் நினைக்கவேணும். 'சிவனொடு பிரமன் வண்திருமடந்தை சேர் திருவாக மெவ்வாவியீரும்'

தூர்வாதளப்ரதிமயா -- அருகம்புல்லைப் போலொத்த பசுமையான. இது மங்களத்ரவ்யம். விக்நேச்வரப்ரியம், விஷ்வக்ஸேநாராதன ஸூசகம்.

தவ தேஹகாந்த்யா -- உன் திருமேனி காந்தியால்;

கோரோசனாருசிரயா -- கோரோசனை வர்ணமான

இந்திராயா:ருசாச -- லக்ஷ்மீதேவியின் காந்தியாலும்; கோதையும் ஓர் பக்கத்தில் பத்நியாகக்கூட நிற்பதில் லக்ஷ்மீதேவியின் ருசியையும் ஸூசிக்கிறார். இந்த ஸந்தோஷத்திற்கு இத்தனை காலமாய்க் கோடித்துக் கொண்டிருந்ததால் விவாஹ க்ஷணத்திலேயே தன்னோடு ஜோடியாக மற்றோர் பக்கத்தில் நிறுத்தி வைத்து சந்தோஷித்தான். ரோசனா, ருசோரா, ருசா என்று மூன்றுதரம் ருசியைக் காட்டும் சப்தங்கள். ருசிம் -- ராதி, ருசியைக் கொடுக்கிறது, ருசிரம்.

ஆஸீத் -- ஆயிற்று.

அநுஜ்ஜித சிகாவளகண்டசோபம் -- 'சிகாவள' என்பது மயில், நீலகண்டம். அதன் கழுத்தின் சோபையை விடாமல்.

மாங்கள்யதம் -- திருமேனியே மங்களத்தையளிக்கிறது. பெருமாள் திருமேனியே ஆச்ரிதருக்கு மாங்கல்யத்தைக் கொடுக்கும். பார்வதீச்வரர்கள் மாங்கல்யத்தை, தாம்பத்யத்தை, மங்களத்தைக் கொடுப்பதென்பதும் பெருமாள் அவர்களுக்குள்ளிருந்து கொடுப்பதால்தான். பெருமாள் திருமேனியுடன் உபயநாச்சிமார் திருமேனிக்காந்திகள் பிரியாமல் சேர்ந்ததும், அவர்கள் திருமேனிகள் கூடிய சுபாச்ரயம் ஸகல மங்களங்களையும் அளிக்க யோக்யமாயிற்று. இத்தம்பதிகள் பிரியாமல் சேர்ந்தே ஸகல ச்ரேயஸ்ஸுகளையும் அளிப்பவர். 'மாங்கல்யம் தந்துநாநேந' என்ற ச்லோகத்தையும் ஸூசிக்கிறார். மாங்கல்யத்தைக் கொடுக்கும் நூலென்று பொருளையும் ஸூசிக்கிறார்.

மதுவைரிகாத்ரம் -- இதனால் சில அழகிய பொருள்களின் வ்யஞ்ஜனம். (1) வேதங்களாகிய கண்களையிழந்த ப்ரஹ்மாவுக்கு வேதங்களைத் திருப்பிக் கொணர்ந்து அவருக்கு ஞானப்ரதானம் பண்ணி மயர்வை நீக்கிய அவதாரம். புத்ரனுக்கும் லோகத்திற்கும் வேதமளித்த அவதாரம். இதனால் ப்ரஹ்மாவின் நினைப்பையும் இங்கே சேர்த்து பௌத்திர ப்ரபௌத்திரர்களோடு (பேரர், கொள்ளுப்பேரரோடு) புத்திரரையும் சேர்த்துத் தம்பதிகளை க்ருஹமேதிகளாக அநுஸந்திப்பது. 'புத்திரரைப் பெற்று' என்று ஆஸீர்வதிப்பர். ப்ரபௌத்திரர் பர்யந்தம் இங்கே காட்சி.

(2) சரணாகதி ச்லோகமடங்கிய கீதை பாடினதும் மதுசூதனன் திருவாக்கு. கண்ணில்லாத புத்திரர்களான நமக்கு கீதோபநிஷத்தை அருளிய திருமேனி. வெகுகாலமாக நஷ்டமான யோகத்தைத் திருப்பிக்கொண்டுவந்து உபதேசித்தது. கீதாசார்யன் திருமேனி சரணாகதியை உபதேசித்தது போதுமோ? அநுஷ்டானமில்லையாயின் அப்ரமாணமென்பரே! பிராட்டிமார் சேர்த்தியில் காடோபகூடமான தசையில் விசிஷ்டத்திலன்றோ பரத்தை சமர்ப்பிக்கவேணும்! கோதையாகிய பக்கபலமும் சேரவே பெருமாள் தப்பியோட வழியில்லை. பெரியபிராட்டியாருக்கு ப்ரஜாரக்ஷணத்தில் பார்ச்வபலம் (பக்கபலம்) சேர்ந்துவிட்டதும் அவனுடைய ருசிக்கு ஸந்தோஷத்திற்கு அளவில்லை.

(3) நாம் ஜ்ஞானவிரோதிகள், அஜ்ஞானக் களஞ்சியங்கள். மதுவென்னும் அஸுரனைச் சீறியதுபோல, நம்மையும் சீறுவது உசிதம். இது 'வைரி' என்பதால் ஸூசிக்கப் படுகிறது. பிராட்டிமார் இருபக்கமும் இருக்கவே அவர்கள் காருண்யப்ரபை படியவே அச்சீற்றம் பரந்துபோகிறது.

(4) இம்மூவர் சேர்த்தியில் வணங்கி ஆதிராஜ்யத்தை அநுபவித்தார்களென்று அடுத்த 23ம் சுலோகத்திலும், ஆத்மபரம் ஸமர்ப்பிப்பதற்காகப் புருஷகாரத்தை 24லிலும், பெருமாள் ஸ்வாதந்த்ரியத்தைக் குறைத்து அநந்தாபராதங்களைப் போக்குவதை 25லிலும், 'ப்ரபத்ய' என்று ப்ரபத்தியை 26லிலும் பேசிப்போவதையும் கவனிக்க.

(5) ப்ரஹ்மருத்திராதிகளைத் தம் புத்திர பௌத்திரர்களாகத் தம் திருமேனியிலே சேர்த்துக்கொண்டிருப்பதாக, விசிஷ்டமாகப் பெருமாளை அனுபவிப்பார் மயர்வற மதிநலமருளப் பெற்றவர். 'புரமொரு மூன்றெறித்தமரர்க்கு மறிவியந்தரனயனென வுலகழித்தமைத்தனனே' என்று துடக்கத்திலும், கடைப்பத்தில் 'சடையானைப்பாகத்து வைத்தான் தன்பாதம் பணிந்தேனே' என்றும் பாடி, கடைத்திருவாய்மொழியிலும் 'முனியே நான்முகனே முக்கண்ணப்பா' என்று பாடியுள்ளது. 'உலகுக்கோர் தனியப்பனை' என்பதை 'ஸமஸ்த ஜகதாம் பிது:' என்று பாடி அதே பாசுரத்தில் 'பிரமனப்பனை யுருத்திரனப்பனை முனிவர்க்குரியவப்பனை யமரரப்பனை' என்று முன்னுள்ளதை இங்கே அனுஸரிக்கிறார். எல்லோர்க்கும் அப்பன் என்றதால் 'தமியனேன் பெரியவப்பனே' என்றபடி எனக்கும் பிதாவென்று கருத்து.. என் தகப்பன் விவாஹம், என் தாய் விவாஹம். என் தந்தை விவாஹத்தில் நான் மங்களம் பாடுகிறேன். இதென்ன பாக்யம்! என்ன ஆச்சர்யம்! 'ஸர்வான் தேவாந் நமஸ்யந்தி ராமஸ்யார்த்தே யசஸ்விந:' என்றபடி இந்தத் தம்பதிகளின் சேர்த்தியின் மங்களத்திற்காக எல்லாத் தேவரையும் நினைக்கலாம். கால் கட்டலாம், பிராட்டி அலங்கரிக்கும் திருமேனியில் புத்ரபௌத்ராதிகளான அவர்கட்கும் பாகமுண்டு.

(6) 'மதுவைரி' என்றதால் மறையை அனுக்ரஹித்த உபகாரத்தைக் காட்டுகிறது. விஷ்வக்ஸேநரான ஆழ்வார் மூலமாகவும் இப்பொழுது பத்நியாகச் சேர்ந்த கோதை மூலமாகவும் தமிழ்மறைகளை அநுக்ரஹிக்கும் உபகாரமும் இங்கே ஸூசிக்கப்படுகிறது. ஸம்ஸ்க்ருத வேதங்களைக் கொணர்ந்தது, வேதம் தமிழ் செய்த, தெளியாத மறைநிலங்கள் தெளியச்செய்த இத்தமிழ்மறைகளால் ஸபலமாயிற்று.

சுலோகம் 23

அர்ச்யம் ஸமர்ச்ய நியமைர் நிகமப்ரஸூனை:
நாதம் த்வயா கமலயா ச ஸமேயிவாம்ஸம் |
மாதச்சிரம் நிரவிசந் நிஜமாதிராஜ்யம்
மாந்யா மநுப்ரப்ருதயோபி மஹீக்ஷிதஸ்தே || .23.

அன்ன வயல்சூ ழயோத்தி நகராளு
மன்னரிக்கு வாகுமுதன் மாந்தாதா -- பொன்னை
யரிந்தமனைக் கோதையுனை யன்பாகப் பூசை
புரிந்தன்றோ பெற்றார் புகழ். .23.

பதவுரை

மாத: -- தாயே!; மாந்யா -- பூஜ்யர்களான; தே -- அந்த; மஹீக்ஷித: -- அரசர்களான; மநுப்ரப்ருதயோபி -- மநு முதலியவரும்; த்வயா -- உன்னோடும்; கமலயாச -- தாமரையாளோடும்; ஸமேயிவாம்ஸம் -- (ஸமேதரான) கூடிய; தாநம் -- நாதனை; அர்ச்யம் -- அர்ச்சிக்க யோக்யரை; நியமை: -- நியம நிஷ்டைகளோடு; நிகமப்ரஸூனை: -- மறைகளான புஷ்பங்களைக் கொண்டு; ஸமர்ச்ய -- நன்றாக அர்ச்சித்து; சேர்த்தியில் சேர்த்து அர்ச்சித்து; நிஜம் -- தங்கள் ஸ்வந்தமான; ஆதிராஜ்யம் -- உலகுக்கு ஆதிபத்யத்தை; சிரம் -- நீடூழி காலம்; நிரசிஶந் -- அநுபவித்தார்கள்.

அம்மா! பூஜ்யர்களான அந்த மஹாமஹிமையையுடைய மநுமாந்தாதா முதலியவர்களும் உன்னோடும் தாமரையாளோடும் கூடிய அர்ச்சிக்க யோக்யமான நாதனை நியமங்களில் நிஷ்டராய், வேதமந்த்ர புஷ்பங்களால் நன்றாகச் சேர்த்து அர்ச்சித்துத் தங்கள் ஆதிராஜ்யத்தை நீடூழிகாலம் அநுபவித்தார்கள்.

அவதாரிகை

தமிழ்மறை பாடிய கோதையோடும் லக்ஷ்மீதந்த்ரம் பாடிய லக்ஷ்மீயோடும் கூடிய (வேதங்களை மீட்டு உபதேசித்து கீதை பாடிய) மதுஸூதனன் திருமேனியைப் பாதம் பணிபவருக்கு மங்களங்கள் கிடைக்குமென்றார். இச்சேர்த்தியைப் பூஜித்து மநு முதலிய ரவிகுலத்தரசர் தங்கள் ராஜ்யத்தை இவர்களுக்கு சேஷமாக அநுபவித்தார்கள். மதுஸூதனன் அக்குல கூடஸ்தரான விஸ்வானென்னும் ஸூர்யனுக்கு மோக்ஷோபாயத்தை உபதேசித்து, இப்படி உபதேச பரம்பரை வந்ததையும் 'மநு முதலியவர்கள் அர்ச்சித்தார்கள்' என்பதால் காட்டுகிறார். ஸூர்யகுல பரம்பரை, நம் குரு பரம்பரை, இச்சேர்த்தியின் சிஷ்ய பரம்பரை. திவ்ய மிதுனச் சேர்த்தியை மங்களகாமர்கள் ஆத்மஜ்ஞானரான ஆசார்யராக அர்ச்சிப்பது உசிதம். மநு முதலியவரும் அப்பரம்பரையில் சேர்ந்தவர்கள். மநுகுலமஹீபாலர் உபயநாச்சிமாரோடு கூடிய இப்பெருமாளை அர்ச்சித்தவர். மைதிலீரமண காத்ரத்தால் பெருமாளும் பிராட்டியும் தாமாகிய இச்சேர்த்தியை அர்ச்சித்து ராஜ்யமாண்டார்கள். ஈச்வரமிதுனத்திற்கும் அர்ச்யமும் மங்களமளிப்பதுமான சேர்த்தி இது. 'அங்கம்சேரும் பூமகள் மண்மகளாய்மகள்.'

அர்ச்யம் -- முன் ச்லோகத்தில் சொன்ன விசிஷ்டம் அர்ச்சிக்கத் தக்கது. அச்சேர்த்தியில் செய்யும் அர்ச்சனை பலத்தையளிக்கும். சேர்த்தியை முன் ச்லோகத்தில் ஸேவித்ததும் உடனே அர்ச்சனை செய்வது உசிதம். அர்ச்சனை செய்வதை உடனே பேசுகிறார். முதலில் பேசுகிறார்.

ஸமர்ச்யம் -- நன்றாயர்ச்சித்து. 'ஸம்' என்பதற்கு 'ஒன்று சேர்த்து' என்றும் பொருள். ஒன்று சேர்த்து அர்ச்சிப்பதே சீர். தம்பதி பூஜை.

நியமை: -- பக்தியோகத்திற்குச் சக்தர்களாதலால் ஸகல வைதிக நியமங்களோடுகூட பக்தியை அனுஷ்டிக்கிறார்கள்., தயை, க்ஷமை, சாந்தி முதலிய ஆத்மகுண நியமங்களான புஷ்பங்களாலும்.

நிகமப்ரஸூனை: -- வேதமந்த்ர புஷ்பங்களால். நிகம கல்ப வ்ருக்ஷத்தின் மந்த்ரங்களான புஷ்பங்களால். வேதங்களிலிருந்து பிறந்த (வேதங்கள் சொல்லும்)எல்லா நியமங்களோடும் என்றும் கொள்ளலாம். லகுவான சரணாகதியைக் காட்டிலும் வேற்றுமை. 'நிகமம்' என்னும் கடைவீதி புஷ்பங்களிலும் வைஜாத்யம். நிகமமென்னும் வேதபுஷ்பங்களோடு மற்ற உயர்ந்த புஷ்பங்களும் சேரட்டும்.

நாதம் -- திருநாமத்தில் ஏகதேசத்தைச் சொன்னாலும் முழுப் பெயராகும். 'ரங்கநாதன்' என்பதை 'நாதன்' என்கிறார். தேவிமாருக்கு நாதனென்பதையும் காட்டவேணும். 'யாரை அர்ச்சித்து சுபத்தை, மங்களத்தை மானவர்கள் அடையக்கூடும்' என்று தர்ம்புத்திரர் பீஷ்மரைக் கேட்டதற்கு 'புண்டரீகாக்ஷனை ஸ்தவங்களால் பக்தியோடு ஸதாகாலமும் அர்ச்சிப்பதிலும்மிக்க தர்மமில்லை. மங்களங்களுக்கெல்லாம் மங்களமும், தைவதங்களுக்கெல்லாம் தைவதமுமான எல்லா உலகத் தாதையான ஜகந்நாதனை ஸஹஸ்ரநாமார்ச்சனை செய்வது நலம்' என்று உபதேசித்தார். அந்த ஜகந்நாதனை 'நாதன்' என்கிறார். அவர் மங்களமங்களர், தேவதேவனென்றார் முன் ச்லோகத்தில். அர்ச்யம்' என்று பீஷ்மர் உபதேசித்த ஸஹஸ்ரநாமார்ச்சனையை இங்கே முதலிலேயே பேசுகிறார். 'ஸ்ரீச: ஸ்ரீத: ஸ்ரீநிவாஸ:' என்று அக்கிழவரும், 'தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்குமுணர்வு' என்ற உறுதியையே கொண்டவர். 'ஸ்ரீசன் -- ஸ்ரீயை அளிப்பவன்', ஸ்ரீத: என்பதற்கு 'மாங்கள்யத:' என்பது பொருள். இத்தனையும் ஸ்வாமி நெஞ்சிலோடுகிறது. ரஸிகர் மனதின் ஸம்வாதமே ப்ரமாணம். 'மானவர்கள்' என்றார் தர்மர். மானவர்க்கும் தாதையான மநு முதலியவர் இப்படி அர்ச்சித்து மங்களமடைந்ததை இங்கே பேசுகிறார். 'மனோர்ஜாதா: மானவா' நாதம் -- ரங்கநாதனை , ஜகந்நாதனை, உங்கள் ப்ராணநாதனை.

த்வயா கமலயா ச -- உங்களிருவரோடு. 'உங்களிருவராலும் நாதன் ஜகந்நாதனாகிறான்' என்னும் ஓர் அந்வயம் சேர்க்கவேணும். 'ச்ரத்தயா தேவோ தேவத்வமச்னுதே', 'ஹ்ரீஶ்ச தே லக்ஷ்மீஶ்ச பத்ந்யௌ'. வேதம் ஓதிய க்ரமத்தை அனுஸரித்து பூமியாகிய கோதையை முன்னே வைத்தார். 'கமலயா' என்று 'தாமரையாள் கேள்வன் ஒருவனையே' என்னும் ஆழ்வார் ஸம்ப்ரதாயத்தைக் காட்டுகிறார்.

ஸமேதிவாம்ஸம் -- 'ஸம்' என்பது ஏகீகாரம் செய்யும் (ஒன்றாக்கும்) பொருளுடையது. தேவிமாரோடு கூடி ஒன்றேயாகி. விசிஷ்டம் ஒன்றே. இந்த ப்ரயோகம் வைதிகமானது. மந்த்ர புஷ்பங்களைக்கொண்டு அர்ச்சிக்கும் சேர்த்தியைச் சாந்தஸ ப்ரயோகத்தாலேயே பேசுவதும் அழகு. ப்ரகரணத்திற்கேற்றது. பாலகாண்டம் முடிவில் விவாஹமானதும், ஸீதை கூடிய ராமனை 'தயா ஸமேயிவாந்' என்று ருஷி வர்ணித்ததை இங்கே 'த்வயா ஸமேயிவாந்' என்று பேசுகிறார். இன்னுமொரு ரஸம் உண்டு. 'கதா ஸீமேஷ்யாமி பரதேந த்வயா ச' என்று லக்ஷ்மணனைப் பார்த்துப் பேசினவிடத்திற்போல பிரியாமல் கூடவேயிருக்கும் லக்ஷ்மியும் கோதையோடுகூடச் சேருங்கால் ஓர் புதுச் சேர்த்தி போலாகின்றாள் என்பது ரஸம். கோதை கல்யாணம் லக்ஷ்மீ கல்யாணமுமாகின்றது.

மாத: -- எல்லா ப்ராணிகளுக்கும் அவ்ய்யமான பிதா. ; நாம் மாறி மாறிப் பலபிறப்பும் பிறந்தாலும் அவன் மாறாத பிதா'. அப்பிதாவுக்குப் பத்நியான நீ எல்லோருக்கும் தாய் என்பதில் என்ன தடை?

சிரம் -- தீர்க்க காலம். உங்கள் சேர்த்தியை அர்ச்சித்துக் கொண்டேயிருந்தால் இம்மண்ணுலகும் பொன்னுலகே. அயோத்திமாநகரும் திருவிண்ணகரான அயோத்தியே.

நிரசிஶந் -- ஸம்பூர்ணமாய் அநுபவித்தார்கள்.

நிஜம் ஆதிராஜ்யம் -- அவர்கள் ராஜ்யம் ஸர்வாதிகமான அகண்ட பூமண்டலாதி ராஜ்யம். அது அவர்களுக்கு ஸொந்தமாயினும், "ஸகலம் தத்தி தவைவ மாதவ", 'உன் சேஷித்வ விபவத்திற்கு வெளிப்பட்டதைக் கண்ணெடுத்தும் பாரேன்' என்றபடி உங்களுக்கு சேஷமாக அனுபவித்து இன்புற்றார்கள்.

மாந்யா மநு ப்ரப்ருதயோபி மஹீக்ஷிதஸ்தே -- பூஜ்யர்களான மனு, இக்ஷ்வாகு முதலியவர்கள் பூஜித்தார்கள். மநு ப்ரப்ருதிபிரமாந்யை:' வைவஸ்வதோ மநுர்நாம மாநநீயோ மநீஷிணாம்! ஆஸீத் மஹீக்ஷிதாமாத்ய:' ப்ரணவஶ்சந்தஸாமிவ' என்ற காளிதாஸ ச்லோகங்கள் இங்கே ஸ்வாமி நெஞ்சிலோடுவது திண்ணம். அதே பதங்களை அமைத்துள்ளது. செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோயில் என்னுமதும் காளிதாஸர் த்ருஷ்டாந்தப் பணிப்புக்குச் சேரும். ரங்கம் ப்ரணவம். 'மனு சொன்னதெல்லாம் ஔஷதம்' என்றது வேதம். மனு ஆசிரியர் இச்சேர்த்தியைத் தாம் அர்ச்சித்து அவ்வாசாரத்தில் நம்மை நிலைநாட்டுகிறார். 'ஆசாரே ஸ்தாபயதி ஸ்வயம் ஆசரதே' .23.