Wednesday, May 16, 2012

வைத்தமாநிதி 28

கங்கையில் புனிதமாய யமுனையாற்றில் வார்மணற் குன்றில்
ராஸக்ரீடை வைபவம்

வேணுகானம்:-- 
நாவலம் பெரிய தீவினில், கொண்டல்ஆர் குழலின் குளிர்வார் பொழில்,
குலமயில் நடம்ஆட, வண்டுதான் இசைபாடும் விருந்தாவனத்தில்,
எல்லிப்பொழுது, குயிலினம் கூவும் சோலைபுக்கு,
கோவலர் குட்டன் கோவிந்தன்;
இடஅணரை இடத்தோளோடு சாய்த்து,
இருகைகூடப், புருவம் நெறிந்து ஏறக் குடவயிறுபட,
வாய்க்கடைகூட, சிறுவிரல்கள் தடவிப்பரிமாறச்,
செங்கண்கோடச் செய்யவாய் கொப்பளிப்பக்,
குறுவெயர்ப் புருவம் குடிலிப்ப, குழல்கொடு ஊதினபோது,
தூவலம் புரிஉடைய திருமால்,
தூயவாயிற் குழல்ஓசை வழியே
கோவலர் சிறுமியர் இளங்கொங்கை குதுகலிப்ப,
தழுவி நின்ற காதல் தன்னால்,
தாமரைக்கண்ணனை, கேசவனை, சேர்வது கருதி,
உடல் உள் அவிழ்ந்து எங்கும் காவலும் கடந்து,
கயிறு மாலை ஆகிவந்து, மடமயில்களொடு மான்பிணைபோலே,
மங்கைமார்கள் மலர்க்கூந்தல் அவிழ, உடை நெகிழ,
ஓர்கையால் துகில்பற்றி, ஒல்கி,
ஓடு அரிக்கண் ஓடநின்றனர்.
சுருட்டார் மென்குழல் கன்னியர்வந்து சுற்றும் தொழநின்று ஆட,
திருஆர் பண்ணில் மலிகீதமொடு பாடி அவர் ஆடலொடு கூடி,
குழல் இருண்டு சுருண்டு ஏறிய
குஞ்சிக் கோவிந்தனுடை கோமளவாயிற் குழல் முழைஞ்சுகளின்
ஊடுகுமிழ்த்துக் கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னை உண்டு,
”அமுது என்னும் தேன் என்னும் சொல்லார்
ஏத்தித் தொழுது நிற்க,
நந்தன் மதலையும் தொத்தார் பூங்குழற்கன்னி
ஒருத்தியை கடைக்கணித்து,
கண்ணாலிட்டு கைவிளித்துச் சோலைத் தடம் கொண்டுபுக்கு
முத்தார் கொங்கை புணர்ந்து நைவித்து
எழில்கொண்டு அகன்றபின்,
இராநாழிகை மூவேழு சென்றபின்,
ஏர்மலர்ப்பூங்குழல் ஆயர் மாதர்
வாசுதேவன் வரவு பார்த்தே
கூர்மழைபோல் பனிக்கூதல் எய்திக் கூசி நடுங்கி,
யமுனையாற்றில் வார்மணற் குன்றிற்
புலரநின்றனர் அவனைவிட்டு அகன்று,
உயிர் ஆற்றகில்லா அணியிழை ஆய்ச்சியர்
நல்ல துழாய் அலங்கல் நாரணன் போம் இடம் எல்லாம்
சோதித்துத் தேடி உழிதர்கின்றார்,
அழிலும் தொழிலும் உருக்காட்டான்,
அஞ்சேல் என்னான் அச்சுதனும்.

கோபியரின் விரகதாபம் தொடரும்.