நல்தோகை மயில்அனைய ஆயர் இளங்கொடி
நப்பின்னை திருமணம்
பேணி நம் இல்லத்துள்ளே இருத்துவான் எண்ணி தந்நை இருக்க;
காம்புஅணை தோள் பின்னையும் வேறு எண்ணி;
”மன்னன் சரிதைக்கே மாலாகி”
கொத்து அலர் பூங்கணை காமதேவனை அடி வணங்கி, அருள் பெற்று,
மாமுத்த நிதி சொரியும் மாமுகில்களைக் கூவி
”விண் நீலமேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்;
காமத்தீ உள்புகுந்து கதுவப்பட்டு,
உலங்கு உண்ட விளங்கனிபோல் உள் மெலிய,
நீர்காலத்து எருக்கின் அம்பழ இலைபோல், வீழ்வேனை,
நெஞ்சங்கவர்ந்த செங்கண் கருமுகிலை,
செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை,
மாசுஅறு நீலச்சுடர்முடி வானவர்கோனை
எங்கு சென்றாகிலும் கண்டு மெய்அமர் காதல் சொல்லுமினே!
கைத்தலத்து உள்ள மாடுஅழிய, தெளிவிசும்பு கடிது ஓடி,
தீவளைத்து, மின் இலகும் ஒளி முகில்காள்!
என் தூது உரைத்தல் செப்புமினே,
ஏசுஅறும் நும்மை அல்லால் மறுநோக்கு இலள்”
என்று நன்னுதலாள் நயந்து உரை செய்,
மேகத்தைவிடு தூதில் விண்ணப்பம் கேட்டு,
ஆயர்கோனும் மகிழ்ந்து,
அம்பொன்ஆர் உலகம் ஏழும் அறிய
கொம்புஅனார்பின்னை கோவை வாயாள் கோலம் கூடுதற்கு,
பெண்நசையின் பின்போய், துப்புஉடை ஆயர்கள்தம் சொல் வழுவாது,
வதுவை வார்த்தையுள், ஒரு
”மறத்தொழில் புரிந்து, இடிகொள் வெம்குரல்,
வளைமருப்பின் கடுஞ்சினத்து, வன்தாள் ஆர்ந்த,
கார்ஆர் திண்பாய், பார் அணங்கு இமில்ஏறு ஏழும்கோடு ஒசிய,
பட அடர்த்து, வலி அழித்து வதுவை ஆண்டு,
மின்னின் அன்ன நுண்மருங்குல் வேய் ஏய்தோள்
ஆயர்பாவை ஆகத்து இளங்கொங்கை விரும்பிச்
செவ்வி தோள்புணர்ந்து, உகந்து இருப்ப,
தந்நையும்,
”ஒரு மகள் தன்னை யுடையேன்,
உலகம் நிறைந்த புகழால் திருமகள்போல் வளர்த்தேன்,
செங்கண்மால்தான் கொண்டு போனான்;
பெருமகளாய்க் குடிவாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை,
மருமகளைக் கண்டுஉகந்து மணாட்டுப் புறம் செய்யுங்கொல்லோ?
தன் மாமன் நந்தகோபாலன், தழீஇக்கொண்டு
என்மகள்தன்னைச் செம்மாந்திரே என்று சொல்லுங்கொல்லோ?
வெண்ணிறத்தோய் தயிர்தன்னை
வெள்வரைப்பின் முன் எழுந்து,
கண் உறங்காதே இருந்து கடையவும்,
இளைத்து என் மகள் ஏங்கி கடைகயிறே பற்றிவாங்கி,
கைதழும்பு ஏறிடுங்கொல்லோ?”
என்று இறங்கி ஏங்க,
ஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகளந்நான்,
மௌவல்குழல் பஞ்சிய மெல்லடி
பொன்செய் பூண் மென்முலை பின்னையை,
பண்அறையாப் பணி கொண்டு,
”நந்தன் பெற்ற ஆன்ஆயன் என்மகளை செய்தனகள் அறிகிலேனே”
என்றபடி ஆண்டான் பங்கயக் கண்ணன்,
செம்பவளத் திரள்வாயன் சிரீதரன்,
மின் செய்பூண் மார்பினன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக