Tuesday, February 21, 2012

வைத்தமாநிதி 5

7.பரசுராமாவதாரம்
(முன்னும் இராமனாய் முனிந்த முனிஆய் வந்து மழுவின் படை ஆண்ட தார்ஆர் தோளன்)

      வையகம் முழுதும் முறைகெடச் செய்த குலமன்னர் அங்கம் மழுவினில் துணிய, கோமங்க, வங்கக்கடல் வையம் உய்ய, இருநில மன்னர் தம்மை இருநாலும் எட்டும் ஒருநாலும் ஒன்றும் உடனே செருது, மண்மிசை மன்னரை மூவெழுகால் கொன்ற தேவன்.

     ஆழி அம் திண்தோள் அரசர் வந்து இறைஞ்ச அலைகடல் உலகம் முன்ஆண்ட பாழி அம்தோள் ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய அடல்புரை எழில்திகழ் திரள்தோள் ஆயிரம் துணித்த மைந்தன்.

    மன்னர்முடி பொடிப்படுத்து, அரசுகளை கட்டு, அவர்தம் குருதிப் புனல் குளித்து, திருக்குலத்தில் இறந்தோர்க்குத் திருத்தி செய்து, வையம் உய்வித்த திறலோன்.

     என் வில்வலி கண்டு போ என்று எதிர்ந்தான் மழுவாளி, தன் வில்லினோடும் அவன் தவத்தை முற்றும் செற்று வென்றி கொண்டு தனதாக்கினான் தசரதன் பெற்ற மரகத மணித்தடம் தாசரதி.

      கோல்தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே மால்தேடி ஓடும் மனம். 

அமரர்க்கு அரியானை
தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு
அமரா வினைகளே
.

8. பலராமாவதாரம்  (பின்னும் இராமனாய்)

             வெற்றித்தொழிலார் வேல்வேந்தர் விண்பால் செல்ல வெம்சமத்துச் செற்றக் கொற்றத்தொழிலான் பலதேவன், பிலம்பன் தன்னைப் பண் அழிய பாண்டி வடத்தே வென்றான் வெண்சங்கின் மாமேனியான்; உழுவது ஓர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுடர் ஆழியும் சங்கும் மழலோடுவாளும் படைக்கலம் உடைய மால் புருடோத்தமன்.

        சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனம் ஆம் நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும் புணைஆம் மணிவிளக்காம் பூம்பட்டுஆம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு.

       கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு அருளு நின் தாள்களை எனக்கே.

9. புத்தாவதாரம்

        கள்ள வேடத்தைக்கொண்டு போய்புரம் புக்கவாறும் கலந்து அசுரரை உள்ளபேதம் செய்திட்டு, உயிர் உண்ட உபாயங்களும், பிணக்கி யாவையும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர் கணக்கு இல் கீர்த்தி வெள்ளக்கதிர் ஞானமூர்த்தியாய் நின்ற தனி உடம்பன். 

அவரவர் தமதமது அறிவுஅறி வகைவகை
அவரவர் இறையவர் எனஅடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவுஇலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே.

10. கற்கி அவதாரம்

           தவநெறிக்கு ஓர் பெருநெறி ஆய் வையம் காக்கும் கரும்பரிமேல் கற்கியும் ஆனான்,

சொல்லும் தனையும் தொழுமின் விழும் உடம்பு
செல்லும் தனையும் திருமாலை நல்இதழ் தாமத்தால்
வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால் நாமத்தால்
ஏத்துதி ரேல் நன்று.

எந்தையேஎன்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே.