திங்கள், 20 பிப்ரவரி, 2012

வைத்தமாநிதி 4

வாமன, திருவிக்கிரம அவதாரம்

(தனி ஒரு மாணியாய் வந்து, உத்தர வேதியில் ஓங்கி உலகளந்த உத்தமன்)

      மாவலி வலிதொலைப்பான் விண்ணவர் வேண்ட, வாட்டம் இலா வண்கை மாவலிவாதிக்க வாதிப்புண்டு ஈட்டம்கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு இடர்நீக்க, வானவர் துயர்தீர வந்துதோன்றி, குறியமாண் உருவாகி, தாயைக் குடல்விளக்கம் செய்து சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமனனாகி, “வருக! வருக! இங்கே வாமன நம்பி வருக இங்கே தளர்நடை இட்டு இளம்பிள்ளையாய்” “மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில், பேணி உனக்கு பிரமன் விடுதந்தான், மாணிக்குறளனே தாலேலோ” அழேல்! இந்திரன் தானும் எழில்உடை கிண்கிணிதந்து உவனாய் நின்றான் தாலேலோ” “தாமரைக்கண்ணா தாலேலோ” என்று தாயர் தாலாட்ட பின்பு.
 

         செந்தொழில் வேதநாவின் முனிஆகி பொங்கு இலங்கு புரிநூலும் தோலும் தாழ, கண்டார் இரங்கக்கழிய குறள் உருவாகி, சத்திரம் ஏந்தி மான்கொண்டதோல் மார்பின் மாணிஆய் பொருந்த, மாவலி மங்கலம்சேர் மறை வேள்வி --- உருக்குஉரு நறுநெய் கொண்டு ஆர் அழலில் இருக்கு உறும் அந்தணர் சந்தியின் வாய் பெருக்கமொடு இருக்கினில் இன்இசை வேள்வி --- நிரைநிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு கரை புரை வேள்வியினுள் புக்கு கண்டவர்தம் மனம் மகிழ, குறள் பிரம்மசாரியாய் மாவலியை குறும்பு அதக்கி அவுணர்க்கு நாயகன் அவனை வஞ்சித்து மண் இரந்தான், தன் உருவம் ஆரும் அறியாமல் தான் காணிபேணும் ஓர் இருபிறப்புமாண் உருவாகி அங்கு “என்னுடைய பாதத்தால்  யான் அளப்ப மூவடி மண் மன்னா தருக, இன்றே தா” என்று இரப்ப வாய் திறப்ப, சுக்கிரன் “இரத்தி நீ! இது என்ன பொய்! உன் கருத்தை யாவர்காணவல்லர்” என்று மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில் தக்கது இது அன்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணைத் துரும்பாற்கிளறிய சக்கரக்கையன் மற்று வண்கையால் அவுணனும் என்னால் தரப்பட்டது என்றலுமே, சலனத்தினால் நீர் ஏற்று, உலகு எல்லாம் நின்று அளந்தான். அத்துணைக்கண் மின்ஆர் மணிமுடிபோய் விண்தடவ மேல்எடுத்த பொன்ஆர் கனைகழல்காய் ஏழ்உலகும் போய் கடந்து ஈரடியால் அளந்தான்.
திரிவிக்கிரம அவதாரம்
      திரிவிக்கிரமனாய் ஓங்கியவுடன், ஆழிஎழ சங்கும் வில்லுமெழ திசைவாழிஎழ தண்டும்எழ அண்டம் மோழைஎழ முடிபாதம் எழ, ஊழிஎழ, உலகங்கொண்டவாறே, வான் என்னும் கேடு இலா வான் குடைக்குத்தான் ஓர் மணிக்காம்பு எனத்திகழ்ந்தான், மண் அளந்த அந்நாள் முறை முறையால் வான் நாடர் கூடி முறை முறையின் தாது இலகு பூத்தெளித்தார்.
      “இதுஎன்ன மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்னு” மன்னு நமுசியை வானிற் சுழற்றிய மின்னு முடியன், உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி “ஒன்று தருக” என மாவலியை பொன்விலங்கு திண்விலங்கில் வைத்து, ஓர்அடிக்கு மேல் எய்த்தாது மண் என்று கைத்தாமரைக் குவிக்கும் கண்ணன், இறைப்பொழுதில் மாவலியைக் குறும்பு அதக்கி, அரசுவாங்கி, பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த எம்மான், மாவலியை சிறையில் வைத்த தாடாளன்.வெம்திறல் களிறும் வேலைவாய் அமுதும் விண்ணொடு விண்ணவற்கு அரசும் இந்திரற்கு அருளிய வான் இளவரசு பற்பநாதன்.
      அண்டமும் இவ்அலைகடலும் அவனிகளும் எல்லாம் அளந்தபிரான் அயன் அலர் கொடி தொழுது ஏத்த கங்கை போதரக்கால் நிமிர்த்தருளிய கண்ணன் அடிமேல் தொண்டரும் அமரரும் பணிய, மலரோன் வணங்க வளர்சேர் அந்தரம் ஏழினூடு செலஉய்த்த பாதம் மேலைத்தண்மதியும் கதிரவனும் தவிர ஓடி தாரகையின் புறந்தடவி, அப்பால் புக்கு மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை, மலர்புரையும் திருவடியை செங்கண்மால் நல்த்தாமரை மலர்ச்சேவடியை வானவர் கைகூப்பி நிறைமலர் கொண்டு ஏத்துவராய் நின்று, உலகில் பேரிருள் நீங்க சுடர்த்தோள்கள் பலதழைத்து எண்திசையும் சூழ இருநிலனும் பெரு விசும்பும் தாரகையின் உலகும் தடவி அதன்புறமும் விம்ம வளர்ந்தான்,
          புனல்கங்கை என்னும் பேர்ப்பொன் உன்தன் அடிசேர்ந்து அருள் பெற்று, பொடிசேர், அனற்கு அங்கை ஏற்றான் அவிர்சடைமேல் பாய்ந்தாள். நின்றது ஓர் பாதம் நிலமும் புதைப்ப,நீண்டதோள் சென்று அளந்தது என்பர்திசை எல்லாம், அறிகிலேன் நீ அளவு கண்டநெறி, அடியும் படிகடப்ப தோள் திசைமேல் செல்ல, முடியும் விசும்பு அளந்தது என்பர். இடங்கை வலம்புரிநின்று ஆர்ப்ப, எரிகான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழிவிடம் காலும் தீவாய் அரவுஅணைமேல் தோன்றல் திசைஅளப்பான் பூ ஆர் அடி நிமிர்த்தபோது, தரணி நிவந்து அளப்ப நீட்டிய பொற்பாதம் தவம் செய்து நான்முகனே பெற்று சிவந்த தன்கை அனைத்தும் ஆரக்கழுவினான் கங்கையின் நீர்பெய்து, அவன் பேர் ஈரஐந்நூறு அனைத்துப்பேர் மொழிந்து.
பிரமன் துதிப்பது
         “தாவிய நின் எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி அஞ்சாது இருக்க அருள்” என போற்றினான் பவ்வநீர்உடை ஆடைஆகச்சுற்றி பார் அகலம் திருவடியால் பவனமெய்யா செவ்விய மாதிரம் எட்டும் தோளா, அண்டம் திருமுடியா,நின்றான். மாணிக்குறள் உருஆய் மாயனை என்மனத்துள்ளே பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக் கொண்டேன் பிறிதுஇன்றி, மாணிக்கப்பண்டாரம் கண்டீர் அன்று பார்அளந்த பாதபோதை உன்னி அறிந்து அறிந்து வாமனன் அடியினை வணங்கினால் செறிந்து எழுந்த ஞானமொடு செல்வமும் சிறந்திடும், வானின்மேல் சென்று தேவராய் இருக்கலாம்.
          பரந்தசிந்தை ஒன்றிநின்று நின்னபாத பங்கயம் நிரந்தரம் தினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே; பெறற்கு அரிய நின்னபாத பத்திஆன பாசனம் பெறற்கு அரிய மாயனே! எனக்கு நல்க வேண்டுமே!”
தேவர்கள் துதிப்பது
          “நீள் வான் குறள் உருவாய் நின்று இரந்து மாவலி மண் தாளால் அளவிட்டதக்கணைக்கு மிக்கானை, தோளாதமாமணியை தொண்டர்க்கு இனியானை – கேளாச்செவிகள் செவி அல்ல கேட்டாமே; காணாதார் கண் என்றும் கண்ணல்ல கண்டாமே; அவன் பெருமை பேசாதார் பேச்சு என்றும் பேச்சு அல்ல; ஆர்வத்தால் பாடாதார் பாட்டு என்றும் பாட்டு அல்ல சங்கேந்தும் கையானை கைதொழா கைகள் கைஅல்ல கண்டாமே. உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமே. தொண்டராய் நின்று தினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சல்ல. சிந்தித்து அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமே. மலர்புரை திருவடியை வணங்கினோமே.
முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ
   அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
  படிச்சோதிஆடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்
   கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே”
  “ மறைஆய நால்வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே
    முறையால் இவ்உலகு எல்லாம் படைத்து,
               இடந்து உண்டு, உமிழ்ந்து அளந்தாய்
    பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
    இறைஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இதுவியப்பே”
     “நீர் நுமது என்று இவை
      வேர்முதல் மாய்த்து இறை
      சேர்மின் உயிர்க்கு அதன்
      நேர் நிறை இல்லே”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக