தொண்டுப் பெயர் – (ஸேவாஹ்வாநம்)
ஸ்ரீமதுபயவே, அகோபிலமடம்,
ஆஸ்தான வித்வான்
வில்லிவலம் கிருஷ்ணமாச்சாரியர் ஸ்வாமி,
வித்வத்மணி, ந்யாயவேதாந்த தமிழ் வித்வான்
உலகில் பலருக்குப் பற்பல காரணங்களால் பல பல பெயர்கள் வழங்கப் படுகின்றன. க்ராமம், குலம், ஜாதி, செல்வம், கல்வி இவைகளையிட்டு அப்பெயர்கள் பிறக்கின்றன. இப்படிப்பட்ட பெயர்கள் யாவற்றையும் விட, ஸேவை (தொண்டு) காரணமாக வழங்கப்படும் பெயரே மிகச் சிறந்ததாகும். நாட்டுக்கும், பொது மக்களுக்கும் செய்யும் ஸேவையினால் சிலர் சிறப்புப் பெயர் பெறுவதும், அதைப் பலர் கொண்டாடுவதும் இன்றைய உலகில் கண்கூடு.
இதைவிட, மிகச் சிறந்தது எம்பெருமான் திறத்தில் ஸேவை செய்து பெறும் பெயரேயாகும். பகவத் விஷயத்தில் தொண்டாற்றி, அதையே தனக்கு நிரூபகமாகப் பெயராகக் கொள்வதே மிகுந்த ச்ரேயஸ்ஸைத் தருவதாகும். அழகைத் தரும் ஆபரணமும்கூட இதுவேயாகும். எம்பெருமானுக்கு ஸேவை செய்யாது இருக்குமவர்களை நிந்திக்குமிடத்தில், தொண்டரடிப் பொடியாழ்வார் “… தண் துழாய் மாலைமார்பன் தமர்களாய்ப் பாடியாடி தொண்டு பூண்டு அமுதமுண்ணாத் தொழும்பர் சோறுகக்கு மாறே” (எம்பெருமானுக்கு பக்தராய் அவன் திருக் கல்யாண குணங்களைப் பாடி ஆடி, அவனுக்கு அடிமை பூண்டு ஆராவமுதமான அவனை அனுபவியாத பாமரர்கள் சோறுகப்பது என்னே!) என்று வியந்து அருளிச் செய்கிறார் திருமாலையில்.
இதில் “ஆபரணம் போல் தொண்டும் பூணத்தக்கது என்ற அர்த்த விசேஷத்தை “தொண்டு பூண்டு” என்ற சொற்களால் அருளிச் செய்கிறார் ஆழ்வார். இந்த அர்த்த விசேஷத்தை இவ்விடத்து உரையாசிரியர் களான நம்பூர்வர்கள் மேலும் சிறப்பித்து விவரிக்கின்றனர்.
நமக்கு ஆபரணங்களுள் சிறந்த ஆபரணம் இது என்கின்றன. ‘நம்பெருமாள் (ஸ்ரீரங்கநாதன் ) உகக்கும் உத்தமாபரணம் போன்றது’ இது என்கின்றனர். “அவன் நெஞ்சில் (மார்பில்) கிடந்து விளங்கும் விலையிலா ஆபரணம்போல, இவன் நெஞ்சில் (உள்ளத்தில்) நின்று பொலியும் பேராபரணம் இது” என்கின்றனர். “நம்பெருமாளுக்குச் சேரசுந்தர பாண்டியன் தம்பிரான் பதக்கம் போல இவனுக்கு தாஸ்யமாகிற ஆபரணம், அவனுக்கும் அது நெஞ்சிலே கிடப்பதொன்று. இவனுக்கும் இது நெஞ்சிலே கிடப்பதொன்றிறே” இதுதான் பூர்வர்களின் அருளுரை. “பல ஆபரணங்கள் இருக்கச் செய்தேயும் சேரசுந்தர பாண்டியன் தம்பிரான் ஸமர்ப்பித்த பதக்கத்தையே, நம்பெருமாள் விரும்பி நாள்தோறும் சாற்றிக் கொண்டு நிற்பர். அதுபோல் ஜீவனுக்கும் கர்மம் அடியாகப் பல பெயர்களிருப்பினும் ஸேவை (தொண்டு) காரணமாக வரும் பெயரே கொள்ளத் தக்கது. “ என்ற சாஸ்த்ரார்த்தத்தை வலியுறுத்தினா
ராகிறார் ஆழ்வார். இவ்வாழ்வாரை அடியொற்றியே ஸ்வாமி ஸ்ரீ தேசிகனும் “தோளாத மாமணிக்குத் தொண்டு பூண்டு” என்று அடிமையைப் பூணத்தக்கதாகவே அருளிச் செய்கிறார்.
துளையிட்ட மாமணி பூணத் தக்கது. தோளாத --- துளையிடப்படாத (மணிவண்ணனின்) மாமணியின் தொண்டே பூணத்தக்கது” என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
ஸேவை காரணமாக வரும் பெயரே சிறந்தது – கொள்ளத் தக்கது என்ற விஷயத்தை ஆதிசேஷன் விஷயத்தைக் கொண்டு விவரித்துக் காட்டுகிறார் கூரத்தாழ்வான். ஆதிசேஷனுக்கு “அனந்தன், நாகராஜன்” என்றிப்படிப் பல பெயர்கள் உள்ளன. ஆனால் அவையனைத்தையும் அவன் விரும்ப வில்லையாம். பின்னை அவன் விரும்பிய பெயர் யாது? “சேஷன்” என்பதே அவன் விரும்பிய பெயராகும். காரணம்? இந்தப் பெயர் ஒன்றே (பகவத் விஷயத்தில் செய்யும்) அடிமை காரணமாக உண்டானமைதான்.
(சேஷ ஏஷ இதி சேஷதாக்ருதே: ப்ரீதிமாந் அஹிபதி: ஸ்வநாமநி) என்று ஸுந்தரபாஹூ ஸ்தவத்தில் அருளிச் செய்துள்ளார் ஆழ்வான்.
இவ்வாறே ஸ்வாமி தேசிகனும் ஸேவை காரணமாக வரும் பெயரை விரும்புகிறார். ஆனால் எம்பெருமான் திறத்திலன்று; அந்த எம்பெருமான் திருவடிகளை இறையும் பிரியகில்லாத ஸ்ரீபாதுகைகளின் திறத்தில்தான் தொண்டு செய்து அதன் காரணமாக வரும் பெரும் பெயரை விரும்புகிறார். ஸ்வாமி ஸ்ரீ தேசிகனுடைய இந்த விருப்பம் ஸ்வாமி ஸ்ரீஸூக்தியினாலேயே அறியக் கிடக்கிறது. ஸ்ரீ பாதுகாஸஹஸ்ரத்தில் தம் திருவுள்ளத்தில் ஓடும் மனோரதத்தை வெளியிடுகிறார் ஸ்வாமி.
பெரும்பாலும் மக்கள் மரிக்கும்போது சுடுஞ்சொலார், கடியார், காலனார்தமர்கள் பெருங்கூச்சலிட்டுக் கொண்டு நலிய வருவர். அத்தகைய கோரமான கோஷத்தை (கூச்சலை) நான் கேளாதொழிய வேண்டும். (ப்ரபந்நாக்ரேஸரான ஸ்வாமி விஷயத்தில் இவ்வாறு ஒருபோதும் நேராது. ஆகையால் எடுத்துக் கழிக்க வேண்டிய தேவையேயில்லை. ஆயினும் உலகில் பெரும்பான்மை பற்றி இங்ஙனம் ஸாதித்தபடி) இதற்கு மாறாக அச்சமயத்தில் ஸர்வேந்திரியங்களையும் மகிழ்விக்க வல்லதொரு வார்த்தையை ஒரு தரமாயினும் கேட்கப் பெறுவேனாக. இப்பொழுதே கேட்கப் பெறாதொழியினும் இறக்கும் பொழுதே கேட்கப் பெறினும் அமையும். தொண்டரல்லாத கண்டார் வாயிலாக அவ்வார்த்தையை நான் கேட்க விரும்பவில்லை. ஸ்ரீரங்கநாதரின் திருத்தொண்டர்கள் வாயிலாகவே கேட்கப் பெறவேண்டும். தொண்டர்களுள்ளும் வெளியே நின்று ஏவல் செய்யும் தொண்டர்கள் வாயிலாகவன்று நான் கேட்க விரும்புவது. உன் திருவடி மலர்களின் கீழே நீக்கமின்றி நின்றுகொண்டு அணுக்கராய் – அந்தரங்கராய் இருக்கும் அடியவர்கள் வாயிலாகவே கேட்க விரும்புகிறேன். அப்பப்ப! எத்தனை நிபந்தனைகள்! தான் கேட்க விரும்புவது எது? என்பதையும் சுட்டியருளுகிறார். “பாதுகாஸேவகேதி” “பாதுகாஸேவகன்” (பாதுகையின் தொண்டன்) என்ற பிருதத்தையே கேட்க வேண்டும் என்று அவாவுறுகிறார், அவாவற்ற நிகமாந்த குரு. ஸ்வாமி ஸ்ரீதேசிகனுக்கு திவ்யதம்பதிகள் அருளிய பிருதங்களோ பல உள. அவையெல்லாம் ஒருபுறமிருக்க ஸ்வாமி விரும்பிய பிருதம் இதுவே.
பகவத்சேஷத்வத்தை (பகவான் திறத்தில் செய்யும் அடிமைத் தொழிலை)விட, பாகவத சேஷத்வமே (அவனடியார் திறத்தில் செய்யும் அடிமைத் தொழிலே) சிறந்தது என்பதைத்தான் இப்படித் திறம்பட அருளிச் செய்தார் ஸ்வாமி தேசிகன். பாகவதர்கள் ஸ்தாநத்தில் பாதுகைகளைக் கொள்ள வேண்டும்.
அன்று காணிக்கைப் பொருள்களின் தொகைகொண்டு ஸ்ரீ பாதுகைகளுக்குத் தொண்டு செய்தான் பரதன். இன்று சொல்லின்தொகை கொண்டு ஸ்ரீ பாதுகையின் விஷயத்தில் தொண்டாற்றினார் ஸ்வாமி ஸ்ரீதேசிகன்.
ஒன்றையும் விரும்பாத வேதாந்தவாசிரியர் விரும்பிய இந்த பிருதத்தையே இவ்வழித் தோன்றிய ஸ்ரீ வைஷ்ணவாசார்ய ச்ரேஷ்டர்களும் பூண்டு பாதுகாஸேவகர்களாகத் திகழ்கின்றனர். ஆயிரம் இன்கவி கள் பாடி ஸ்ரீ பாதுகைகளுக்குத் தொண்டு செய்த ஸ்வாமி தேசிகன் அவதரித்து எழுநூறு ஆண்டுகள் நிறைவுபெறும் இந்நாளில் ஸ்வாமியின் திருவுள்ளம் உள்குளிர (பாதுகாஸேவகோ விஜயதாம்) என்று ஜயகோஷமிட்டு நாமும் நிறம் பெறுவோமாக.
ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரத்தில் கீழே விவரித்த ஸ்வாமியின் திருவுள்ளத்தைத் தெள்ளெனக் காட்டும் ச்லோக ரத்னமிதுவே!
காலே ஜந்தூந் கலுஷகரணே க்ஷிப்ரமாகரயந்த்யா:
கோரம் நாஹம் யமபரிஷதோ கோஷமாகர்ணயேயம் |
ஸ்ரீமத்ரங்கேச்வர சரணயோ: அந்தரங்கை: ப்ரயுக்தம்
ஸேவாஹ்வாநம் ஸபதி ச்ருணுயாம் பாதுகாஸேவகேதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக