சனி, 4 டிசம்பர், 2010

வைணவ ஆசாரியர்கள் --- நாதமுனி

Adiyen may be excused. For a few chapters adiyen provided short notes in English. But as that was not totally satisfactory even to adiyen, adiyen refrain from that hereafter. adiyen do not want to make a handful readers of this blog as “Seetthalai chatthanars” but requested one of my well wishers to do the job. As and when he completes, the entire history of Sri Natha Muni will be presented as a single pdf.

5. கலிகெட வருவான் கவினுரு வேற்றல்.

பொலிக வென்னும் பாவதனை
      மாறன் புகல நாதமுனி
கலியுங் காயத் தோன்றுமவன்
      யாவ னென்னக் கவிவரனும்
”மலியுங் கருணை வாரிதியான்
      தோன்று மிராமா நுசனென்பான்
நலியும் நரகும் நைந்திடலால்
    நலனே மலியு” மென்றனனே.                          .42.

திருவாய்மொழியிலே “பொலிக” என்று தொடங்கும் பதிகத்தை எழுதும்போது, அதில் “கலியுங்கெடும்” என வருவதால், இது கெடுமாறு தோன்றுமவன் யாவன் என்று நாத முனி கேட்டதும், இதற்கு விடையும். கருணை வாரிதியான் – கருணைக்கடல். இராமாநுச முனிவன் தோன்றுவான், நரகம் பாழுறும் என்றார், ஆழ்வார். “நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கியாதொன்றுமில்லை” என்பது ஆழ்வார் திருவாக்கு.

பண்ணும் பொருளும் பொலிந் திலகப்
    பயனன் றாகி லெனுங்கவியை
எண்ணி லுறைய நாதமுனி
     இசைத்து மாறன் றன்பாலே
”மண்ணி லுதிக்கு முரவோன் றன்
       வடிவை யடியே னிந்நிலையில்
கண்ணிற் காணும் வகையருளாய்”
       என்ன இருளிற் கனவதனில்,                           .43.

“பயனன்றாகிலும்” என்னும் பாவினை நாதமுனி பண்ணில் இசைத்துத் தேவகானத்தில் பாடி ஆழ்வாரை நோக்கி, “ இவ்வாறு அவதரிக்கும் ஒருவனது வடிவத்தை நான் காண விரும்புகிறேன்” என்றமை. எண்ணில் – ஆழ்வாரது திருவுள்ளத்தில். உரவோன் – அறிஞன். இப்பா நம்மாழ்வாரைப்பற்றி மதுரகவிகள் அருளியது.

அளியே பெருகுந் தடங்கண்ணும்
       அன்பு தவழு மரும்பவளம்
தெளிவார் நுதலுஞ் சானுவரைச்
        சேரும் புயமும் மலரடியும்
பிளிறுங் கலியைப் பிளந்தங்கை
       பிடித்த முக்கோல் தன் னுடனே
ஒளிறு முருவை நாதமுனி
     கண்டா னுவகை மண்டினனே.                               .44.

நாதமுனி கண்ட திருவுருவின் வருணனை. அளியே—கருணையே. அரும்பவளம் ---அன்புரைகள் உரைக்கும் வாய். பிளிறுங்கலி--- ஆரவாரஞ் செய்யும் கலிகாலத்தை. பிளந்து—களிற்றைப் பிளப்பதுபோல் பிளந்து. அங்கை பிடித்த—தனது திருக்கை ஏந்திய. ஒளிரும்—ஒளி பெய்யும்.  மண்டினன் – மிகக் களித்தான்.

பின்னர் வகுளத் தாரான் பால்
     “பெரும! எளியே னிவ்வொளியை
மன்ன உருவிற் பெற்றென்றும்
      வணங்க வருளா” யென்றோத
உன்னுங் கனவில் நற்றபதி
     ஒருவன் றன்னை யிவ்வுருவை
நன்ன ரெழுப்பப் பணித்திதனை
      நாதற் களித்தான் சடகோபன்.                     .45.

இவ்வுருவைத் தாம் பெற விரும்புவதை நாதமுனி ஆழ்வாரிடம் விண்ணப்பம் செய்தமை. எளியேன் இ ஒளியை உருவில் மன்ன, பெற்று வணங்க அருளாய் --- நல்+தபதி – ஆற்றல் வாய்ந்த செங்கொல்லன்.

தனதாம் மரபில் வருமொருவன்
      தரணி யுய்க்கு மிவ்வொளியைக்
கனமே யொக்குந் தண்ணளியைக்
      காணும் பேற்றா னெனவோர்ந்து
தனமே யென்னத் தான்பெற்ற
     உருவை வணங்கி நாதமுனி
மனமே யுருகத் தான்மீட்ட
     தமிழ்மா மறையை உருவோதி                       .46.

நாதமுனி இவ்வடிவை ஏற்றமை. தரணி உய்க்கும் இ ஒளியை –பூமியிலுள்ளவர்களை உய்விக்கும் இப்பெரியோனின் சோதியை. கனமே ஒக்கும் தண்ணளி—மேகம் போன்று அருள் பெய்யும் பண்பினனாகிய இப்பெரியோன். கனம் –மேகம். தனம் – செல்வம்.

குருகூர் தன்னில் மாறற்கும்
      மாலோன் றனக்குங் குற்றேவல்
வருமார் வத்திற் செய்துவரக்
     கனவில் மன்ன னார்பகரும்;
”வருவா யொல்லை நம்பாலே
       மறையி னுயரு மருஞ்சுவையின்
பொருவே யில்லா வின்தமிழை
       இசைப்பாய் நந்தஞ் செவிகுளிர”                    .47.

மன்னனாரது ஆணை. வரும் ஆர்வத்தில் – பெருகும் பக்தியில். தமிழ் மறையை மன்னனார் செவி குளிரக் கேட்க விரும்பி, நாதமுனியை அழைத்தார்.

பின்றைக் காலை நாதமுனி
       ஆதிப் பெருமா னடிபரவி
என்றுங் காணா நாணமுடன்
     காரி நந்த னேந்தல்முன்
நின்று கண்கள் பனிமல்க
      நேர்ந்த கனவை விளம்புதலும்
”நன்று மன்னா ராணையினைச்
        செய்வை” யென்றான் நன்மாறன்.                    .48.

நம்மாழ்வாரிடம் விடை பெற்றமை. பின்றைக் காலை – மறுநாள் காலையில். காரி நந்தன் – காரியின் புதல்வராகிய நம்மாழ்வார். ஏந்தல் – சிறந்தோன்.

“அத்த! நம்பால் நீபெற்ற
     அமுதாந் தமிழ்நா லாயிரமும்
வித்த கராவர் வைணவர்கள்
       விரும்பிப் பயிலப் பயிற்றிடுவாய்
பத்த ருயிராம் பரமனவன்
       மன்னும் பதிக டம்முன்னே
சித்த முருகச் சீரியர்கள்
       இசையி லெழுப்பச் செய்குவையே.”                .49.

நம்மாழ்வாரது ஆணை. வித்தகர் –அறிவால் சிறந்தவர். வைணவர்க்கு நாலாயிரம் பாடல்களைப் பயிற்றுவிப்பதும், இறைவனது கோயில்களிலே இவற்றைப் பெரியோர் இசையில் ஓதுவதும் ஆழ்வார் திருவுள்ளத்திற் கொண்டவை. செய்குவை – செய்வாய்.

புளியின் நீழற் பொலிவானில்
      வாணை புகலப் பூசுரனும்
அளியின் வடிவாய் வருவான்றன்
      அணியா ருருவைக் கைக்கொண்டு
களிகொள் மறையோர் கலந்தேத்தப்
      பதிகள் பரவி யாங்காங்கே
தெளிவார் தமிழைத் தானோதிச்
      சேர்ந்தான் தனதாந் திருப்பதியே.                     .50.

அவதரிக்கும் பெரியோனது திருவுருவைப் பெற்ற நாதமுனி. மறையோர்கள் பின்தொடரப் பல தலங்கள் சென்று, ஆங்காங்கு இந்தப் பாக்களை ஓதி, வீரநாராயணபுரம் சேர்ந்தார். பூசுரன் – அந்தணன், நாதமுனி. அளியின் வடிவாய் வருவான்றன் அணி ஆர் உருவை –கருணையே வடிவாக அவதரிக்கப் போகும் பெரியோனது அழகிய திருவுருவை.

மன்னனார் முன்னர்தான் மாறனா
      ரருளினால் மீட்டு யர்த்த
மன்னுசீர்த் தமிழ்மறை யனைத்துமம்
         மறையவன் வளத்தி னோதப்
பன்னலார் வனைசெயு மவையிலே
        குசலவர் பயின்ற காதை
பொன்னெனப் புகழ்ந்துதான் னேற்றதே
      புரையவே ஆய னேற்றான்.                                    .51.

ஆழ்வார்களது அருளிச் செயல்களை மன்னனார் மகிழ்ந்து செவியேற்றமை. தான் மாறனார் அருளினால் மீட்டு உயர்த்த, மன்னுசீர் தமிழ்மறை அனைத்தும். மறையவன்—நாதமுனி. வளத்தின் ஓத – நன்கு ஓத. பன்னலார் வனைசெயும் அவையிலே – நன்மனம் வாய்ந்தவர் பலர் அமர்ந்துள்ள சபையில். குசலவர் பயின்ற காதை  __ இராமபிரானது குமாரர்களான குசலவர்கள் இசைத்த ஸ்ரீராமாயணத்தை. பொன் என புகழ்ந்து – மிகச் சிறந்தது எனப் பாராட்டி. (முன்பு இராமாவதாரத்தில்) தான் ஏற்றதே புரையவே ஆயன் ஏற்றான். – ஸ்ரீஇராமாயணத்தைக் களிப்புடன் செவியேற்றதுபோல இப்பிரபந்தங்களையும் ஏற்றான், இறைவன்.

6. தமிழ் மறையை வகுத்து இசையில் அமைத்தமை.

நாத முனிவனும் நல்லார் வைணவர் நலனெழவே
ஓத வளித்தனன் நாலா யிரமெனு முயரமுதை
தாத ரிதுதனைத் தாமோ தரனவன் றன்முன்னே
ஓத லுற்றனர் வீர நாரண னுவந்தனனே.                                 .52.

ஆழ்வார்கள் அருளிச்செய்த பாக்கள் நாலாயிரத்தை நாதமுனி வைணவர்க்கு உபதேசித்தார். இவர்கள் இவற்றைப் பெருமாள் முன்னர் ஓதினர்; தாமோதரன்—அத்தலத்து இறையவன், வீரநாராயணன் மன்னனார்.

மன்ன னாரொரு கங்குற் கனவினில் மறையோன்முன்
தன்ன தாமுரு தோற்றிப் புகன்றிடும்,” தகவுடையோய்!
துன்னு நித்தியர் முனிவ ரென்றிவர் துதிசெய்யும்
மன்னு நம்நிலை மண்ணோர் மதர்வினில் நாடவென.               .53.

“படியில் நன்னெறி பரவிப் பத்தித ழைத்திடவே
மடிவில் மறைகளும் பலவாங் கலைகளு மோதினமால்
முடிகொள் மன்னவன் மகனுங் கோவலர் முன்னனுமாய்க்
குடிகள் மேலுறப் பிறந்தேம் குவலயந் திருந்திலதே.               .54.

“குமுறுங் கலிதனின் கோளைக் குலைத்திடப் பத்தியினர்
அமுதி னினித்திடத் தமிழி லருமறை யளித்திடவே
சமையு மதிநல மளித்தேம் இத்தமிழ் சகத்தினிலே
அமைய இசைதனை யமைத்து நல்குவை” என்றிதுவே.

53 – 55.   மன்னனார் நாதமுனியின் கனவினில் தோன்றிப் பகர்ந்தது; துன்னு நித்தியர் …. நிலை – நித்யசூரிகள், முனிவர்கள் சூழ்ந்து துதி செய்யும் வைகுந்த நிலை, இதனைப் பரத்வம் என்ப. முக்தி பெற்றவர் மீளாது வாழும் நாடு இஃது. மக்களை உயர்த்த இறையவன் தான் மறைகளும் கலைகளும் ஓதியதும், தசரதனது மகனாகவும், கண்ணனாகவும் அவதரித்த தும், இவற்றாலும் மக்கள் திருந்தாமையும் உரைத்தனன். மதர்வு—உள்ளக்களிப்பு, மிகுதி. மடிவு இல் – மடியாத. முடிகொள் மன்னவன் – தசரதன். கோவலர் முன்னன்—கண்ணன். ஆழ்வார்கள் மூலமாகத் தான் தமிழ்மறையை வெளியிட்டதை இறைவன் மொழிந்து, இதனை இசையில் அமைக்குமாறு ஆணையிட்டான். சமையும் மதிநலம் அளித்தேம் – பத்தர் சிலர்க்கு ஏற்ற நல்லறிவினை அளித்தோம். குமுறும் – வெற்றியை ஒலிக்கும். கோள்—மிடுக்கு. 

மருகன் கலைவலன் கண்ண மங்கைய னாண்டானும்
இருவ ருற்றவர் தம்மோ டிசைதனை யாராய்ந்தே
தெருள னமைத்தனன் தேவ ரிசையினி லித்தமிழை
மருவ வகுத்தனன் வளமு மியலதுந் தானோர்ந்தே.                       .56.

நாதமுனி செய்தது. மருகன் ……. திருக்கண்ணமங்கையாண்டான் என்ற தன் மருகன். இசைதனை – பாக்களுக்கு ஏற்ற இசையினை. தெருளன் – நாதமுனி. இ தமிழை தேவர் இசையினில் அமைத்தனன் – இப்பாக்களைத் தேவகானத்தில் இசைத்தான். வளமும் இயலும் தான் ஓர்ந்து மருவ இ தமிழை வகுத்தனன்.

விட்டு சித்தனும் வேயர் மங்கையுங் குட்டுவனும்
சிட்டன் மழிசையன் செல்வன் தொண்ட ரடிப்பொடியும்
மட்டில் பத்துடைப் பாணன் மதுர கவியிவர்கள்
இட்ட வன்பினி லியம்பு மின்றமிழ்ப் பனுவறமை.                          .57.

முதல தாயிர மென்ன வடைத்தனன் முதன்மூவர்
அதுல ரருளிய வந்தா திகளொடு மழிசைக்கோன்
மதுர மாமுதற் பாவும் மாறனின் மறைமூன்றும்
அதிப னருங்கவிக் கலியன் மடலெழு கூற்றிருக்கை.                     .58.

தேமியற் பாவெனப் பிணைத்தான் செறிந்தெழு சொற்சுவையால்
தேமகிழ் மாலையன் செந்த மிழ்திரு வாய்மொழியே
யாமென மொழிந்தனன் கலியன் செய்தமி ழாயிரமும்
ஆமிரு தாண்டக மவையோ டொருதனிப் பிரிவெனவே.              .59.

57 – 59.  அருளிச்செயல்களின் பகுதிகள். பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகரப் பெருமாள், திருமழிசைப் பிரான், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், மதுரகவியாழ்வார், இவர்கள் அருளிச் செய்தன முதலாயிரத்தில் வருவன. குட்டுவன் –சேரன், குலசேகரப் பெருமாள். முதலாழ்வார்களது திருவந்தாதிகள் மூன்று, திருமழிசைப் பிரானது திருவந்தாதி, நம்மாழ்வார் அருளிய திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி என்பன மூன்று, திருமங்கையாழ்வார் அருளிய திருவெழு கூற்றிருக்கை, இரண்டு திருமடல்கள் ஆகிய மூன்று – இவை இயற்பா என வகுத்தார், நாதமுனி. தேம் இயற்பா – தேன்போல் இனிக்கும் இயற்பா; பெரும்பாலும் வெண்டளைப் பாக்கள் கொண்டது இப்பகுதி. தேமகிழ் மாலையன் – நம்மாழ்வார். மூன்றாம் பகுதி நம்மாழ்வாரது திருவாய்மொழி; மற்றது திருமங்கையாழ்வாரது பெரிய திருமொழியும் இரண்டு திருத்தாண்டகங்களும் கொண்டது.

மாத வற்கொரு மங்க லம்பகர் பல்லாண்டு
வேத வேலையின் சுருக்காம் பிரணவ மதுபோலத்
தாதர் தமிழ்மறை தொடங்கு போதிலும் முடித்திடுமப்
போது மோதிட ஆணை புகன்றனன் நாதமுனி.                 .60.

பிரபந்தங்களைத் தொடங்கும்போதும் முடிக்கும்போதும் “பல்லாண்டு” என்னும் பாவை ஓதவேண்டும் என்று ஆணையிட்டார் நாதமுனி. வேதவேலையின்……பிரணவம்--- கடல்போல் பரந்த வேதங்களின் சாரமாகிய பிரணவத்தை வேதத்தைத் துவங்கும் போதும் முடிக்கும் போதும் ஓதுவதுபோல் இங்ஙனம் செய்யக் கட்டளையிட்டார்.

விரைவினி லெங்கணும் பரந்தது வியன்றமிழ் விறலரியின்
உறைவினில் மறையவர் வைணவ ரோதின ரிதுதன்னை
மறையொடு மிதுதனை மார்கழி மதிதனி லரங்கநகர்க்
கிறையவன் திருச்செவி யேற்றிட வியம்பினன் நாதமுனி.         .61.

திருவரங்கத்தில் நாதமுனி செய்தது. மார்கழி மாதத்தில் சுக்ல ஏகாதசியன்று தொடங்கிப் பத்து நாட்களில் நம்மாழ்வாரது திருவாய்மொழியைப் பெருமான் திருச்செவியேற்க வேண்டுமென்று திருமங்கையாழ்வார் விருப்புற இங்ஙனமே நடந்து வந்தது. ஏகாதசிக்கு முன் பத்து நாட்களில் முதலாயிரத்தையும் திருமங்கை மன்னன் பிரபந்தம் ஓராயிரத்தையும் திருச்செவி ஏற்கவேண்டும் என்றும், திருவாய்மொழி சாற்றுதல் முடிந்த பிற்றை நாள் இயற்பா திருச்செவி ஏற்க வேண்டும் என்றும் விரும்பினார், நாதமுனி. இவ்வண்ணமே இங்கும் மற்றைத் திருப்பதிகளிலும் இப்போதும் நிகழ்கின்றது. ஏற்றிட இயம்பினன் ---------, விறலரி – திருமால்.

7. சீராமன் சேவடி சேர்ந்தமை

தன்னடிபாற் சார்ந்தவர்கள் தாங்கொள்ள நாதமுனி
பொன்னனைய தமிழ்மறையும் மறைதம்மின் சாரமதாய்
மன்னுதிரு மந்திரமுந் துயமோதும் வளநெறியும்
பன்னரிய பரிவுடனே தோனோதிப் பரப்பினனே.                     .62.

நாதமுனி அருளியன. நாதமுனி தமது சீடர்களுக்குத் திருமந்திரமும் த்வயமும் உபதேசித்து, வைஷ்ணவ நெறியையும் பரப்பினார். துயம் – த்வயம். இரண்டு கூறுகள் கொண்ட மந்திரம். மந்த்ர ரத்னம் எனப் பெறுவது.

அறநெறியி னருமைக்கே யாம்நியாய தத்துவமும்
மறமழிதற் காம்புருட நிருணயமும் வரைந்தருளி
நறவமுகும் வகுளத்தார் மாறன்றான் தனதுள்ளத்
துறவுற்றா னுயோகத்தில் நிகரில்லா நீத்தோனே.                      .63.

ந்யாய தத்வம், புருஷநிர்ணயம் என்ற நூல்களை இயற்றி நாதமுனி யோகத்தில் அமர்ந்தார். நறவம் உகும் வகுளத்தார் – தேன் பெருகும் வகுளமலர் மாலை. மாறன், தனது உள்ளத்து உற, உயோகத்தில் உற்றான் ----------, நீத்தோன் – அருந்தவன், நாதமுனி.

அங்கொளிருந் தவவுருவை வணங்கவென அரசன்றன்
மங்கையர்க டம்மோடும் முன்னிற்ப மறையோனும்
இங்குளனா லிளவாய்ச்சி தம்மோடுங் கண்ணனெனப்
பொங்கிவரும் பத்தியதால் வணங்கியவண் புரண்டழுதான்.      .64.

நாதமுனியின் திருவுள்ளம் இறைவன்பாலே சென்றமை. அரசன், தன் மங்கையர் தம்மோடும் முன் நிற்ப -----, இங்குளனால் …. – அரசன் மண்ணனென்றும், அவனது தேவியர் ஆய்ச்சியர் என்றும் கருதி இவர்களை நாதமுனி வணங்கினார்.

பின்னொருநாள் கோமாளிப் பெற்றியன்முன் சிரஞ்சாய்த்துத்
தன்னரிய சாமந்தன் தலைமீதே தாளூன்றி
முன்னுறையும் மதகரிமே லேறினனே முனைவர்தமுள்
முன்னவனு மிதுகண்டு மோகத்தால் நாகுழற                              .65.

“உலகெல்லாந் தன்னுயிராய்க் காத்தருளு முத்தமனும்
அலகில்லா வருங்கதிவாய் கலுழன்மீ தேறிடலும்
உலகெல்லாம் முதலாக வணங்கமல ருற்றான்றன்
தலையின்பால் தாளூன்றி” என்றரற்றித் தரைசாய்ந்தான்.          .66.

பின்னொரு நிகழ்ச்சி. கோமான் இப்பெற்றியன் முன் சிரம் சாய்த்து – அரசன் இப்பெரியோனை வணங்கி. சாமந்தன் – அமைச்சன், தோழன். அரசன் யானைமேல் ஏறுமுன் சாமந்தன் தலையில் அடியை ஊன்றி ஏற, இதுகண்ட நாதமுனிக்கு உள்ளத்தில் படிந்தது, இறைவன் கருடன்மேல் ஏறுமுன் பிரமனது தலையில் திருவடியை ஊன்றி ஏறுவது, முனைவர்தமுள் முன்னவன் – தவத்தினருட்சிறந்த நாதமுனி, அலகு இல்லா அரும் கதிவாய் கலுழன் – ஒப்பில்லாத கமனம் பெற்ற கருடன், கலுழன் மீது ஏறிடல் …. மலர் உற்றான்தன் தலையின்பால் தான் ஊன்றி என்றியைக்க. உலகு எல்லாம் முதலாக வணங்க மலர் உற்றான் – உலகத்துயிர்களுள் முதல் எனத் தாமரையில் தோன்றிய பிரமன்.

தன்றாளிற் பரிவுடனே பரிந்துவருந் தவமுடைய
தன்சீடன் குருகைக்கா வலப்பற்குக் குரவரனும்
தன்பேறா முயோகுதனின் வகையெல்லாந் தானருளித்
தன்செல்வ னீச்சுரனா முனிக்கிதுவே தானோதும்:                         .67.

தம்முடைய சீடரான குருகைக் காவலப்பற்கு யோகத்தின் வகையை அருளிச் செய்தார், நாதமுனி.

“அலையேறு காளிந்திக் கரைவாயு மச்சுதன்றன்
குலையாத வருளாலோர் குரிசில்நீ பெறலாகும்
மலையேறு தீபம்போல் வளருமிவற் களிப்பாய்நீ
உலகோத யமுனைத்து றைவனெனு மொண்பெயரே.”                   .68.

தம்முடைய குமாரராகிய ஈச்வர முனிக்கு இவர் கூறியது. கண்ணபிரானது அருளினால் ஈச்வரமுனிக்கு ஒரு குமாரன் தோன்றுவான்; இவற்கு யமுனைத்துறைவன் என்ற நாமம் சூட்ட வேண்டும். காளிந்தி --- யமுனை.

புகர்பொங்கத் தான்பெற்ற பொன்னுருவை நாதமுனி
நிகரில்லா வன்புடைய உய்யக்கொண் டாற்களித்து
”மகனொன்று தம்புதல்வன் பெறுவானம் மகனிதுவே
புகலாகப் போற்றிடவே அளிப்புதிநீ” என்றனனே.                              .69.

நம்மாழ்வார் தமக்கு அளித்த திருவுருவை நாதமுனி தமது சீடராகிய உய்யக்கொண்டாரிடம் கொடுத்துத் தமது குமாரருக்குப் பிறக்கும் புதல்வனிடம் இதை அளிக்குமாறு ஏவினார்.

வேடிருவர் வில்லேந்திக் குரங்கோடும் பாவையோடும்
நாடிடுவார் தன்பெயரே நவின்றுவரக் கேட்டிவனும்
ஓடியவர் பின்படர்ந்தான் சீராம னுருக்காண
கூடியதா லிவன்தேசு விண்டோயுங் கோனடியில்.                             .70.

நாதமுனி விண் அணிந்தமை. வேடு இருவர் …. கேட்டு – வேடர் இருவர், ஒரு பெண்ணோடும் ஒரு குரங்கோடும் அவ்விடம் தமது பேரை வினவியதாக நாதமுனி கேட்டு, இவர்கள் இராம பிரான், இளையபெருமாள், பிராட்டி, அனுமன் என உணர்ந்து, இவர்களைத் தேடிச் செல்லுகையில், இவர் உடல் நீத்து விண்ணிற் புக்கார்.

வான்பாய்தரு வரையின்மிசை வளருஞ்சுட ரருளால்
மான்பாய்தரு சோலைவளர் மன்னார்புரந் தோன்றித்
தேன்பாய்தரு தமிழ்மாமறை தனைமீட்டிது செகத்தின்
பான்மீதெழ அளித்தானிவன் பதமேதொழு துய்வாம்.                      .71.

நாதமுனியின் அரிய தொண்டு.  வான் பாய்தரு ….. சுடர் --- வேங்கடவாணன். “சோதியாகி எல்லா உலகுந்தொழும் ஆதிமூர்த்தி” என்றார் ஆழ்வார். தமிழ்மாமறைதனை மீட்டு , இது செகத்தின் பால் மீது எழ எனப் பிரிக்க. பதம் – திருவடிகள். 

இந்நூலை எழுதிய ஸ்ரீ ராஜகோபாலன் ஸ்வாமி  112 பாக்களால் அமைத்துள்ள யமுனைத்துறைவரின் சரித்திரம்  இங்கு தொடரும்.

 

    
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக