10. கும்பகர்ணனை வென்றவள்.
இவள் சாதாரண உறக்கத்திற்கு உட்பட்டிருக்கவில்லை; கிருஷ்ண பக்தியில் மூழ்கி அந்தப் பரவசம் என்ற உறக்கத்தைத்தான் சொர்க்க போகமாய் அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். இதைப் பெண்கள் அறிவார்கள். 'இப்படி இவள் தன்னலம் பாராட்டுவது தகாது' என்ற குறிப்புடன், இவளை எழுப்பித் தங்களுடன் கலந்து கிருஷ்ணாநுபவம் செய்யுமாறு வேண்டிக் கொள்ளத்தான் வந்திருக்கிறார்கள்.
'நீ தவம் செய்தவள்; அந்தத் தவத்தின் பயனாக இப்போது பக்திக் காதல் என்ற சொர்க்கத்தை அநுபவித்துக் கொண்டிருக்கிறாய். இது எங்களுக்குத் தெரியும். ஆனால் நாங்கள் தலைவியாக மதித்திருக்கும் நீயே இப்படித் தன்னலம் கொண்டிருக்கலாமா? வெளியே வந்து எங்களுடன் கலந்துகொண்டு எங்களுக்குத் தலைமை வகித்து, பக்திச் செல்வத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டாமா?' என்ற குறிப்புடன் "நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!" என்று முதல் முதல் கூப்பிடுகிறார்கள். பதில் இல்லை.
வாசலைத்தான் திறக்கவில்லை; வாயைத் திறக்கவும் இல்லையே! இத்தகைய பரவசத்தால், 'எங்கள் கதிதான் என்ன?' என்பதை ஆலோசித்துப் பார்ப்பதற்கும் முடியாதே என்கிறார்கள். 'மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?" என்று கேட்கிறார்கள்.
'இப்போது கதவைத் திறக்க அவகாசமில்லை' என்று ஒரு பேச்சு வாயைத் திறந்துகொண்டு வந்தாலும் போதுமே என்கிறார்கள். அப்படியானால் தங்களைப் பற்றிய நினைவு அவளுக்கு இருக்கத்தான் செய்கிறது என்றாவது தெரிந்து கொள்ளலாமே!
'இது பரவச நித்திரை அல்ல, சாதாரண நித்திரைதான்; அப்படியானால் இவ்வளவு ஆழ்ந்த தூக்கம் இவளுக்கு எப்படித்தான் வந்தது?' என்றும் எண்ணமிடுகிறார்கள். 'இது என்ன, கும்பகர்ண நித்திரையாக இருக்கிறதே!' என்று அதிசயப்படுகிறார்கள்.
'வாலியும் போனான், வாலும் போச்சு!' என்று அனுமன் கூறினான். 'கும்பகர்ணன் போனான், அந்தக் கும்பகர்ண நித்திரையும் போச்சு!' என்று இவர்கள் எண்ணியிருந்தார்கள். பகவான் கும்பகர்ண வதம் செய்த அந்த இராமாயணக் கதையைக் கண்முன் நிகழ்ந்ததுபோல் இவர்கள் தெரிந்துகொண்டிருக்கிறார்களே, அதைச் சொல்லிப் பார்க்கிறார்கள் இப்பொழுது; 'நாற்றத் துழாய்முடி நாரா யணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்"
கும்பகர்ணன் ராமனுக்குத் தோற்றான் என்பது இராமாயணப் பிரசித்தமான நிகழ்ச்சி. ஆனால் அவன் இராம பாணத்திற்குத்தான் தோற்றான்; உறக்கப் போட்டியில் இராமன் முதலான எத்தனை பேர்களையும் வென்றுவிடக் கூடியவன் தானே! போரில் இராமனுக்குத் தோற்ற கும்பகர்ணன் உறக்கத்தில் இவளுக்குத் தோற்றுப் போனான் என்கிறார்கள். தோற்றவர் பொருளை வென்றவர் கைப்பற்றிக் கொள்வதுண்டு. கும்பகர்ணனையும் இராவணனையும் வென்ற இராமன் இலங்கா ராஜ்யத்தைக் கைப்பற்றிக்கொண்டு விபீஷணனுக்குக் கொடுத்தான் என்பது பிரசித்தம். இவளோ உறக்கப் போட்டியில் தோற்றுப்போன கும்பகர்ணனது உறக்கத்தைக் கைப்பற்றிக்கொண்டு வேறொருவருக்கும் கொடுத்துவிடாமல், தனக்கே ஏகபோக உரிமை ஆக்கிக் கொண்டிருக்கிறாளாம்.
இராமனுக்குத் தோற்ற கும்பகர்ணன் மனசோடு ஒன்றையும் இராமனுக்குக் கொடுக்கவில்லை. இவளுக்குத் தோற்றதும், தன் பெருந்துயிலை அப்படியே கொடுத்துவிட்டானாம். ஏற்கனவே கும்பகர்ணனை வென்ற துயிலுடன், அந்தப் பெருந்துயிலும் சேர்ந்து கொண்டது.! வாய்ச்சொல்லாகக் கொடுத்த்தில்லை; மரண சாசனம் பண்ணிக் கொடுத்துவிட்டது போல் சாட்சி சொல்லுகிறார்கள் பெண்கள்; "கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?" என்று கேட்ட போதிலும், அவன் கொடுத்து விட்டது போலவே துணிகிறார்கள் இவர்கள்.
'மிகவும் சோம்பலை உடையவள்' என்றும் இவளை மதிப்பிடுகிறார்கள் கடைசியாக. அதே சமயத்தில் தங்களுக்கெல்லாம் ஆபரணமாக விளங்கும் தகுதி உடைய பக்தமணி இவள் என்பதையும் மறந்துவிட முடியவில்லை. ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! என்று முரண்பட்ட இருவகை உணர்ச்சிகளுடன் இவர்கள் இவளை அழைப்பதைத்தான் பாருங்கள்.
'தேற்றமாய் வந்து திற' என்பது முடிவுரை. 'உறக்க மயக்கம் தெளிந்து, சோம்பல் தெளிந்து, கதவைத் திற' என்கிறார்கள். கிருஷ்ணாநுபவத்தில் மூழ்கிப் பரவசத்தில் தங்களை மறந்திருந்தாலும் அந்த நிலையும் தெளிந்து கதவைத் திறக்கச் சொல்லுகிறார்கள்.
எது சொர்க்கம் ? – உறக்கமா, காதலா?
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாரா யணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
விளக்கம்
இந்தப் பெண் கிருஷ்ண பக்தி என்ற சொர்க்கத்தில் ஆழ்ந்து மூழ்கிக் கிடக்க,'இவள் உறக்கத்தில் மூழ்கிக் கிடக்கிறாளே!' என்று கருதிப் பரிகசித்து மற்றைப் பெண்கள் இவளை எழுப்ப முயல்கிறார்கள். இவளும் எழுந்து வருகிறாள். உறக்கத்திலிருந்து அல்ல; அந்தக் கிருஷ்ண பக்தி என்ற காதலிலிருந்து! தனியாகக் கிருஷ்ணாநுபவம் செய்துகொண்டிருந்தவள் கூட்டத்தில் வந்து கலந்துகொண்டு கிருஷ்ணாநுபவம் செய்யப் புறப்படுகிறாள். பக்தியிலும் தனியாகச் சுகம் அனுபவிப்பதைக் காட்டிலும் பிறருடன் கலந்துகொண்டு சுகத்தைப் பங்கு கொள்வதே பாகவதப் பெருமை என்பது இப்பாட்டின் திரண்ட பொருள்.
இப்பாட்டிலே நகைச்சுவை பொங்கி வழிகிறது. கும்பகர்ணனும் உறக்கப் போட்டியில் இவளிடம் தோற்றுப் போவானாம். இராமனுடைய அம்பிற்குக் கும்பகர்ணன் தோற்றான் என்பது இராமாயணக் கதை. உறக்கப் போட்டியில் தோல்வியுற்றான் என்பது இப்பெண்கள் சொல்லும் புதுமை இராமாயணம். தோற்றவர் பொருளை வென்றவர் கைப்பற்றிக் கொள்ளும் அந்தப் பழைய சட்டத்திற்கு இணங்க, இவளும் கும்பகர்ண நித்திரையை மேற்கொண்டிருக்கிறாளாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக