9. வசீகரமான சூழலில் வசீகரமான நித்திரை
சாளரத்தின் வழியாகப் பார்க்கும்போது, உள்ளே விளக்குகள் எரிவது தெரிகிறது. சுத்தமான இரத்தினங்கள் அழுத்திச் செய்த வீடு. இதை ஒரு மாளிகை என்று சொல்லலாம். இந்த மணிமாடத்தில் படுக்கை அறையில் நாற்புறமும் படுக்கையைச் சுற்றி விளக்குகள் தகதக என்று எரிந்துகொண்டிருப்பதை வெளியே இருப்பவர்கள் பார்த்துவிடுகிறார்கள். அகில் முதலியவற்றின் புகை கமகமவென்று வாசனை வீசுவதையும் உணர்ந்து கொள்கிறார்கள். ஜம்மென்று மென்மையான படுக்கைமீது படுத்துச் சுகமாகக் கண்வளரும் பெண்ணையும் பார்த்து விடுகிறார்கள்.
இந்தப் பெண்ணுடன் எல்லாரும் உறவு கொண்டாடி உரையாடுவது வழக்கம். ‘மாமன் மகளே!’ என்று கூப்பிட்டுப் பேசுவார்கள். இப்போது, ‘மாமான் மகளே!’ என்று நீட்டி, முழக்கி அழைக்கிறார்கள்.இவளுடைய செல்வச் செழிப்பைச் சுட்டிக்காட்டி,’ மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்’ என்று வேண்டிக் கொள்கிறார்கள்.
இவளுடைய போக வாழ்க்கையையும் சுட்டிக் காட்டித்தான் இவளை அழைக்கிறார்கள். கதவு திறக்கும்படி வேண்டிக் கொள்கிறார்கள். ‘மணிமாடத்தில் வசிப்பவளே! உன் மணிக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வா’ என்கிறார்கள். ‘தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய தூபம் கமழ துயில்அணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!’ என்று அழைப்பது எவ்வளவு வசீகரமாயிருக்கிறது!
இந்தப்பெண்ணோ கண்ணன் வருகிறபோது வரட்டும் என்று ஆறி இருக்கிறாளாம். போகமயமான சூழ்நிலையில் படுத்திருப்பவளுக்கு, பனியில் நனைந்து வெளியில் நிற்பவர்கள் குரல் காட்டி அழைப்பது எப்படி வசீகரமாய்த் தோன்றக் கூடும்? மறுமொழி ஒன்றும் கூறாதவளாய்க் கிடக்கிறாள்.
இந்த நிலையில் இவள் தாய், ‘இத்தனை பெண்பிள்ளைகள் தலைவாசலில் தலையில் பனிவிழ வருந்தி நின்று கொண்டு உன்னைக் கூவி அழைக்கிறார்களே? நீ ஒரு பேச்சும் பேசாமல் உறங்கிக்கொண்டிருப்பது நியாயமா?’ என்கிறாள். இப்படித் தாய் பேசுவது வெளியில் நிற்பவர்கள் காதில் விழுகிறது. சாளரத்தின் வழியாக உள்ளே எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளின் ஒளியில் இந்தத் தாயின் முகத்தையும் பார்த்து விடுகிறார்கள்.
தங்களுக்காக அவள் நெஞ்சிலே கொண்ட இரக்கம் முகத்தில் பிரதிபலிப்பதையும் கண்டு கொள்கிறார்கள். ‘மாமீர்! அவளை எழுப்பீரோ!’ என்று கேட்கிறார்கள்.
‘எங்கள் கூட்டத்திலே அவள் ஒருத்தி இல்லாததால் நாங்கள் படுகிற பாட்டை நீர் உணர்ந்துகொண்டீரே மாமீர்! உம்முடைய மகளை எப்படியாவது எழுப்பலாகாதா?’ என்கிறார்கள். மாமி எழுப்பியும் மகள் எழுந்த பாடில்லை. பதிலும் சொல்லவில்லை. கொஞ்சம் ஆத்திரத்துடன் பெண்கள் ‘உம் மகள்தான் ஊமையோ அன்றிச் செவிடோ?’ என்று கேட்கிறார்கள். ‘அவ்வளவு சோர்வா அவளுக்கு?’ என்றும் கேட்கிறார்கள். ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ? என்றெல்லாம் கேட்டபின்பும் ஆத்திரம் ஆடங்கவில்லை.
‘ஒரே வசீகரமான சூழ்நிலையில் ஏதோ ஒருவகை வசிய நித்திரைக்கு உட்பட்டுக் கிடக்கிறாளோ அவள்? என்றும் தோன்றுகிறது, தலையில் பனி விழ வாசலில் நின்றுகொண்டிருப்பவர்களுக்கு. ஏம்பஃ பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? என்று மாமியைக் கேட்கிறார்கள்.
‘எழுந்திருக்க முடியாதபடி காவலைச் செய்கின்ற பெருந் துயிலில் சிக்கிக் கொண்டாளோ? எப்படிச் சிக்கிக் கொண்டாள்?’ என்று அதிசயிக்கிறார்கள். ‘மந்திரத்தில் கட்டுப்பட்டாளோ’ என்று சந்தேகப் படுகிறார்கள். இப்படித் துயில் மந்திரம் போட்டவர் யார்? பெருந்துயில் மந்திரமாக இருக்கிறதே! இவர்கள் உரக்கப் பேசுவதும், தாய் அருகிலிருந்து கூப்பிடுவதும் காதில் விழாதபடி காவலைச் செய்கின்ற மந்திரம் சாதாரண மந்திரமாக இருக்க முடியுமா? என்ன வசீகர மந்திரமோ?
இப்படியெல்லாம் இவர்கள் கூறுவதைக் கேட்ட தாய், ‘நீங்கள் அப்படி ஒன்றும் கவலைப்பட வேண்டாம்; இவள் உகக்கும் பகவந் நாமங்களைப் பாடத் தொடங்கினீர்களானால் இவள் தானே உணர்ந்து எழுந்து வருவாள்!’என்று சொல்லுகிறாள். உடனே பெண்களும் அவளைத் தடை செய்திருக்கும் மந்திரத்திற்கு எதிர் மந்திரம் போடுவதுபோல், ‘மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றுஎன்று’ நாமம் பலவும் சொல்லத் தொடங்குகிறார்கள். தங்கள் இசைக்குரலில் பகவானின் நாமங்களை இசைத்துப் பாடத் தொடங்குகிறார்கள்.
இப்படிச் செய்தும் இன்னும் எழுந்திருக்கவில்லையே! என் செய்வோம்?’ என்று எய்த்துப் பேசும்போதே எழுந்து வருகிறாள் தோழி.
துயில் மந்திரப் பட்டாளோ!
தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம்கமழ துயில்அணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உம்மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றுஎன்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.
விளக்கம்
கண்ணன் வருகிறபோது வரட்டும் என்று சிறிதும் ஆத்திரம் இல்லாமல் ஆறியிருக்கும் ஒரு பெண்ணை எழுப்பும் பாசுரம் இது. ‘மாமான் மகளே! என்று உறவு கொண்டாடி அழைப்பவர்கள் மறுமொழி ஒன்றும் முதல் முதல் பெற்றுக் கொள்ளாததால் இந்தப் பெண்ணின் தாயாரை அழைத்து எழுப்பச் சொல்லுகிறார்கள். மாமி எழுப்பியும் எழுந்திருக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் ஊமையா செவிடா என்றெல்லாம் கேட்கிறார்கள். ‘எழுந்திருக்க முடியாதபடி யாராவது இவளை மந்திரவாதத்துக்கு உட்படுத்தியிருக்கிறார்களா?’ என்றும் கேட்கிறார்கள்.
‘ஏமப் பெருந்துயில் மந்திரம்’ என்று கூறுவது இக்காலத்து ஹிப்னாடிஸ-மெஸ்மெரிஸ வசிய நித்திரையை நமக்கு நினைப்பூட்டுவதாகும். இத்தகைய ஒரு துயில் மந்திரத்தை அனுமனும் உபயோகப்படுத்தி சீதையைக் காவல் செய்துகொண்டிருந்த அரக்கிமாரை உறங்கச் செய்ததாகக் கம்பனும் பாடுகிறான். துர்மந்திரத்திற்கு எதிர் மந்திரமாகப் பகவானுடைய திருநாமங்களை இப் பாசுரம் குறிப்பிடுகிறது என்று கருதலாம்.
how to attach files here to your postings
பதிலளிநீக்குI am unable to understand Can you kindly send a mail to rajamragu@gmail.com?
பதிலளிநீக்குவந்துட்டேன், நிதானமா படிக்கிறேன்!
பதிலளிநீக்குஆஹா! அடியேனின் பாக்யம்!
பதிலளிநீக்குஅடியேன் தொடர்ந்து படித்து வருகிறேன் ஐயா. அருமையான விளக்கங்கள். மிக்க நன்றி.
பதிலளிநீக்குநன்றி திரு குமரன். ஆனால் எழுதியவருக்குத் தானே நன்றி சொல்லவேண்டும்? எழுதியவர் யார் என்று எத்தனை பேருக்குத் தெரிகிறது என்று பார்ப்போம் என்று அவர் பெயரைச் சொல்லாமல் இருக்கிறேன். வங்கக் கடல் கடையும்போது சொல்லுவேன். அடியேன் வழக்கம்போல் ஒரு பழைய நூலைத்தான் (மறு) மின் பதிப்பு செய்து வருகிறேன் என்பது தெரியும்தானே!
பதிலளிநீக்கு