Monday, December 21, 2009

பிள்ளாய் ! எழுந்திராய் !

6. பிள்ளாய் ! எழுந்திராய் !

இனி இந்த ஆறாம் பாட்டுமுதல் பத்துப் பாசுரங்களால்- அதாவது பதினைந்தாம் பாசுரம் வரை –முற்பட எழுந்திராதவர்களை எழுப்புவதைக் காணப்போகிறோம். இந்தப் பாடல்கள் ஒருவகையில் திருப்பள்ளி யெழுச்சிப் பாடல்களே. அரசர்கள் முதலானவர்களைப் பாடித் துயில் உணர்த்துவதுண்டு. ராஜாதி ராஜனாகிய கடவுளையும் திருப்பள்ளியெழுச்சி பாடித் துயில் உணர்த்துவதுண்டு. தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடியிருக்கிறார். மாணிக்கவாசக சுவாமிகள் சிவபெருமானுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடி இருக்கிறார். இங்கே ஏற்கனவே துயில் உணர்ந்து எழுந்தவர்கள் எழுந்திராதவர்களுக்குப் பள்ளியெழுச்சி பாடுவதுபோல் பாடித் துயில் எழுப்புகிறார்கள்.

முற்படத் துயில் உணர்ந்து வீதிவழியே வருகிறவர்களில் ஒருத்தி எழுந்திராத ஒருத்தியை எழுப்பும்போது, "புள்ளும் சிலம்பின காண்" என்று பள்ளியெழுச்சி பாடத் தொடங்குகிறாள். 'பொழுது விடிவதற்கு முன்னே என்னை எழுப்ப வந்துவிட்டீர்களே!' என்று இப்புதியவள் கேட்டதாக வைத்துக்கொண்டு, பொழுது விடிந்ததற்கு முதல் சாட்சியாகப் பறவைகள் கூவுதலைச் சுட்டிக் காட்டுகிறாள்.

பிறகு, 'சங்கு ஊதுகிறார்களே' என்று சொல்லி , 'அந்தப் பேரோசையும் உன் காதில் விழவில்லையா?' என்று கேட்கிறாள்: 'வெள்ளை விளிசங்கின் பேர்அரவம் கேட்டிலையோ?' பறவை கூவுதலாவது சற்றுக் கூர்ந்து கவனித்தால் காதில் விழும். 'அந்த வெள்ளைச் சங்கு போடுகிற கூச்சலோ காதைத் துளைக்கிறதே, உனக்கு மாத்திரம் கேட்கவில்லையா?' என்கிறாள் கூட்டத்தின் பிரதிநிதியாகப் பேசுகிறவள்.

சங்கு 'வாருங்கள், கோவிலுக்கு வாருங்கள்' என்று கூவி அழைக்கிறதாம். எனவே, அழைக்கின்ற சங்கு என்ற பொருளில் 'விளிசங்கு' என்கிறாள். பறவை கூவுதலையும் சங்கு கூவி அழைப்பதையும் ஆகிய இரண்டு காலை ஒலிகளையும் குறிப்பிட்டபின், 'பிள்ளாய்! எழுந்திராய்!' என்கிறாள்.

பிறகு, மூன்றாவது சாட்சியாக, 'ஹரி:ஹரி:' என்று முனிவர்களும் யோகிகளும் (பெரியோர்கள்) சொல்லிக் கொண்டே துயிலுணர்ந்து எழுந்திருக்கும் அந்த ஓசையை அடையாளமாகக் கூறுகிறாள். இப்படி மூவகைக் காலை ஒலிகளையும் சான்றாகக் கூட்டத்தின் பிரதிநிதி காட்டியதும், இப்புதியவள் எழுந்துவந்து கூட்டத்தில் கலந்து கொள்ளுகிறாள் என்பது குறிப்பு.

பக்தி அனுபவத்தில் இறங்கும்போது தனி அனுபவத்தைத்தானே பிரதானமாகக் கொள்ள வேண்டும் என்று சிலர் கேட்கலாம். முற்படத் துயில் உணர்ந்தவர்கள் தாங்களே கிருஷ்ணபக்தியிலும் கிருஷ்ண குணாநுபவத்திலும் ஈடுபட வேண்டியிருக்க, அவர்கள் ஏன் மற்றவரை எழுப்பவேண்டும்? இது ஒரு முக்கியமான கேள்விதான். இதற்கு விடை: அமிர்தத்தையும் பிறருடன் பங்கிட்டுக் கொள்வதே நலம், இந்த விதிக்குப் பக்தி அனுபவமும் விலக்கன்று. ருசி உடையவர்கள் எல்லாரும் சேர்ந்து இறைவன் என்ற அமிர்தத்தை அனுபவிக்க வேண்டியதுதான் என்பது உத்தம பக்தர்களின் உறுதியான மன நிலை.

வேறொரு கேள்வி: இத்தகைய பக்த மணிகளான பெண்கள் சிலர் முன்கூட்டி எழுந்துவர, வேறு சிலர் உறங்கிக் கிடப்பதற்குக் காரணம் என்ன? அவர்கள் தாமே எழுந்து வர, இவர்களை எழுப்ப வேண்டியிருக்கிறதே, ஏன்? இதற்கு விடை: பக்தி சிலரை மயக்கித் தள்ளி விடுகிறது. சிலரை இருந்த இடத்தில் இருக்க முடியாதபடி துள்ளியெழச் செய்கிறது என்பதுதான்.

நீராடப் போகும்போது பெண்கள் துணைதேடிப் பேசிக் கொண்டு போவது இயல்பு. புதுவெள்ளத்தில் நீந்தி நீராடுவார் பெரும்பாலும் துணையின்றி அந்தப் பெருவெள்ளத்தில் இறங்கத் துணிவதில்லை. அப்படியே 'கால் ஆழும், நெஞ்சு அழியும், கண் சுழலும்' என்று வருணிக்கப்படுகிற ஆழ்ந்த பக்தி அனுபவத்திற்குத் துணை அவசியம்தான் என்பர். தெரிந்த வாழ்க்கை இன்பத்திற்கு மேலானதும், என்றும் புதுமையாக உள்ளதுமான பேரின்ப உணர்ச்சி அச்சம் தருவதுதான் தொடக்கத்திலே! எனவே துணை தேடிக் கொண்டு இவர்கள் ஒரு கூட்டமாகப் போகிறார்கள்.

'நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பது உத்தம பக்தரின் உண்மை மனநிலை.

காலையின் மூவகை ஒலிகள்

புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேர்அரவம் கேட்டிலையோ?

பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுஉண்டு

கள்ளச்சகடம் கலக்குஅழியக் கால்ஓச்சி

வெள்ளத்து அரவில் துயில்அமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ளஎழுந்து அரிஎன்ற பேர்அரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

விளக்கம்

பொழுது விடிந்துவிட்டது என்பதற்கு மூன்று சான்றுகள் காட்டுகிறார்கள் துயில் எழுப்பும் சிறுமியர். அதிகாலையில் கூவத் தொடங்கும் பறவைகளும், கோயிலில் காலை வேளையில் ஊதும் சங்குகளும், ஹரிநாமத்தைச் சொல்லிக்கொண்டே மெள்ள எழுந்திருக்கும் பெரியோர்களும் ஆகிய மூன்று சாட்சிகளைக் குறிப்பிட்டு ‘இனியாவது எழுந்திரு’ என்று ஒருத்தியைத் துயில் எழுப்புகிறார்கள்.

திருப்பாவையின் முதலாவது பள்ளியெழுச்சிப் பாட்டு இது. ‘ஹரி: ஹரி: என்று மனனசீலர்களான முனிவர்களும், கைங்கரிய சிஷ்டர்களான யோகிகளும் செய்கிற முழக்கம் உள்ளத்திலே புகுந்து குளிர்விக்க எழுந்து வா பிள்ளாய்!’ என்கிறார்கள்.