புதன், 23 டிசம்பர், 2009

வேதாந்த தேசிகர் ஊசல்

அடியேனது அபிமான ஸ்ரீ கேசவ அய்யங்கார் இயற்றி 1-6-1939ல் வெளியிடப்பட்ட “வேதாந்த தேசிகர் ஊசல்”  என்னும் ஒரு அருமையான, ஸ்வாமி தேசிகன் புகழ் பாடும் 20 பாக்கள் இங்கு உள்ளன. இதை மிக பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கும் திரு நாராயண அய்யங்கார் அவர்களுக்கும், அவரிடம் இருந்து பெற்று அடியேனுக்கு ஒரு நகல் அளித்த ஸ்ரீஹயக்ரீவ ஸேவக ஆசிரியர் ஸ்ரீ T.C.ஸ்ரீநிவாஸன் ஸ்வாமிக்கும் என்ன சொல்லி அடியேனது நன்றியைத் தெரிவிப்பேன்! பாடவல்லார் யாராவது இதற்கு மெட்டமைத்து எல்லா தேசிக உத்ஸவங்களிலும் இதைப் பாட வழி செய்தார்களென்றால் அவர்கள் திருவடிகளெல்லாம் அடியேன் சென்னி மீதே! இன்று “ஊசல்” ! நாளைமுதல் ஸ்ரீ கேசவய்யங்கார் இந்நூலுக்கு எழுதியுள்ள குறிப்புரைகள் தினமும் ஒன்றாக இங்கு தொடரும்.!

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

“வகுளமாலை“ப் பத்திராசிரியர்

ஸ்ரீ ஆர். கேசவய்யங்கார், அட்வொகேட்

பாடிய

வேதாந்த தேசிகரூசல்

திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்க வெளியீடு

(6)

இது

பிரமாதி வருஷம் வைகாசித் திருவிழாவில் கருட ஸேவையன்று

முத்திதரு நகரேழில் முக்கியமாங்கச்சிக்குத் திலதமாய்

விளங்கும் அம்பூந்தேனிளஞ் சோலையிலமர்ந்

துள்ளதூப்புல் வள்ளலார்திருவடிவாரத்தில்

இடப்பெற்ற காணிக்கை

பதிப்பாசிரியன்

பந்தல்குடி பாரத்வாஜ மாடபூசி

ரெ. திருமலை அய்யங்கார்

1-6-1939

-----------------------------------------------------------------------------------------

ஸ்ரீ:

முகவுரை.

மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்துறை மார்பினன்றாள்

தூமலர் சூடிய தொல்லருள் மாறன் துணையடிக்கீழ்

வாழ்வை யுகக்கு மிராமாநுச முநிவண்மை போற்றும்

சீர்மைய னெங்கள் தூப்புற் பிள்ளைபாதமென் சென்னியதே

                                                 --- பிள்ளையந்தாதி

பூவில் மன்னு மங்கைதாள் பொருந்துமார்பனாழ் புகழ்

பாவியங்கு வேதநான்கு பாடு மாறனாகமும்

மேனியோங்கு பாடியம் விதித்த யோகி நாமமே

நாவிலங்கு தூப்புலய்யர் பாதம் நண்ணு நெஞ்சமே

                                      --- தேசிகர் சந்தவிருத்தம்

வேதமுடித் தேசிகனே வேதியர்குலத்தரசே

சாதுசனங்களுக்குத் தாவளமே -- போதமரும்

நின்னடியை யென்றும் நினைந்திருப்பார் பாதமென்றன்

சென்னிதனிற் சூடுமலர்.

                                       --- தேசிகர் நூற்றந்தாதி

வேதாந்த விழுப்பொருளின் மேலிருக்கும் விளக்கே வேதாந்தவாரியன். திருமகட்குயில் திருமாற்பயோததித்திருமந்திரவமுதினைமுகந்து,சேனைமுதலிக்கோப்பெய, அதுகாரிசேய்ச்சுனைத் தங்கி, நாதமுனியாகும் அருமாற் கடம்வார்ந்து, உய்யக்கொண்டவள்ளல் மடுவார்ந்து, சீராமரென்வாயால்வழீஇ, யாமுனாரியவுந்தியூர்ந்து, பூர்ணாரியக்காலினொழுகிக், கருமாற்றிராமாநுசக் குளங் கழுமி,எழுபானான்கு மதகுகள் வழியாகப் புறப்பட்டு, சம்சாரிகளாகிற நிலங்களிற் பாய்ந்து உய்வித்தது. இக்காசினிப் பணையுயிர்க் கூழை மதக்காராக்கள் மேய்ந்தடாது பெருமாற்கு வினையுள் வீடடையப்புறந்தரும் பெருவேலியா மெம்பிரான் பேசுபயவேதாந்த தேசிகன். இவரது நற்றாள் தொழுதெழலே கற்றதனாலாயபயன். மன்னுமறையனைத்தும் மாகுருவின்பாற்கேட்டு ஆங்குன்னியதனுட் பொருள்களத்தனையுந் துன்னுபுகழ் பெற்றாலுந் தூப்புற் பெருமானை நண்ணாதார் கற்றாரே காசினியில் வம்பு. தேசுடைய வாழியுஞ் சங்கமுங்கையேந்தி வாசமலர்த்துழாய் வாழ்மார்பன் காசினியிற் காண நின்றாலும் கவிவாதி சிங்கனையே காணக்கருதும் கற்றுணர்ந்தார் கண்கள். மறப்பின்றி மன்னிய சீர்தூப்புல் வருமாமறையோன் பாதத்தைச் சென்னிதனிற் சேர்ப்பதுவே செவ்வி.

“பெரியவிரிதிரைநீர்வையத்துள்ளே வேதாந்தவாரியனென்றியம்ப நின்றோம்“ என்ற நந்தூப்புல் வள்ளலார் தூமொழியின் உண்மை உணரற்பாற்று. "மாசில் மனந்தெளி முனிவர் வகுத்தவெல்லா மாலுகந்த வாசிரியர் வார்த்தைக் கொவ்வா" என வாசியறிந்துரைக்கவல்லார் இவர் ஒருவரே. "தந்தையெனநின்றதனித்திருமால் தாளிற்றலை வைத்தோஞ் சடகோபனருளினாலே"என்றும், ".....மங்கையர்கோனென்றிவர்கள் மகிழ்ந்து பாடும், செய்ய தமிழ்மாலைகள் நாம்தெளிய வோதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே" என்றும், "அன்பர்க்கேயவதரிக்கு மாயனிற் கவருமறைகள் தமிழ் செய்தான் தாளேகொண்டு, துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டுந்தொல்வழியே நல்வழிகள் துணிவோர்கட்கே" என்றும்,"பண்ணமருந்தமிழ் வேதமறிந்த பகவர்களே" என்றும், "பாவளருந் தமிழ்ப்பல்லாண்டிசையுடன் பாடுவமே" என்றும், "விண்ணவர்தங்குழாங்களுடன் வேதம்பாடிப், பண்ணுலகிற் படியாத விசையாற்பாடும் பல்லாண்டே பல்லாண்டும் பாடுவமே" என்றும், "கேளாத பழமறையின் கீதம்" என்றும் "வேதியர் தாம் விரித்துரைக்கும் விளைவுக்கெல்லாம் விதையாகுமிது" என்றும், "பாண் பெருமாளருள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருள்" என்றும் தேசிகமாலையில் சந்தமிகு தமிழ்மறையோன் சங்கநாதம் செய்வதால் இச்சீரார் தூப்புல் திருவேங்கடமுடையானை தென் சொற் கடந்தான் வடசொற்கலைக் கெல்லை தேர்ந்தான் எனக் கூறுவது மிகையாகாது. அகில ஸ்ரீவைஷ்ணவர்கட்கும் ஆசாரிய சிகாமணியாய் விளங்குபவர் நந்தூப்புற்கோன். "வெள்ளைப்பரிமுகர் தேசிகராய் விரகாலடியோம், உள்ளத்தெழுதிய தோலையிலிட்டனம்" என்றும், "பொங்கு புகழாகமங்கள் தெரியச் சொன்ன பொருளிவை நாம் புண்ணியர் பாற் கேட்டுச் சொன்னோம்" என்றும், "மறையோர் சொன்னார், ஆதலினாலோதியுணர்ந்தவர் பாலெல்லா மடிக்கடியுங் கேட்டயர்வு தீர்மினீரே" என்றும் அத்தேசிகமாலையிற் கூறியுள்ளமையால் நானில மடங்கக் கொண்டாடிய நாவலராய்த் திகழ்ந்த காலையும் இவரது அடக்கமும் அமைதியும் பொலிவுற்றிருப்பது கையிலங்குகனி. "செந்தமிழ் மும்மணிக்கோவை செறியச்சேர்த்துப், பந்துகழலம்மானை யூசலேசல் பரவு நவமணி மாலையிவையுஞ் சொன்னேன், முந்தைமறை மொய்யவழி மொழி நீ யென்று முகுந்தனருள் தந்த பயன் பெற்றேனானே" என்பனவற்றால் இப்பரமாசாரியன் ஆரியமார்க்கமான நல்வழித் தொல்வழியில் நின்று நம்மை உய்யக் கொள்பவர் என்பது கூறாமலே விளங்கும். இவரது அருமை பெருமைகளை ஆயிர நாப்படைத்த ஆதிசேடனும் முற்ற உரைக்க வல்லனாகானெனின் எம்போலியர் விளக்க முயல்வது என்னே!

      இத்தகைய சிறப்பெய்தி நிற்கும் தூப்புல் வள்ளலார் விஷயமாக இத் திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்கத் தலைவரும், முத்தமிழ்த் துறையின் முறை போகிய உத்தமக்கவியாய் விளங்குபவரும், திருப்பாடியம் முதலான ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய கிரந்தங்களை நல்லோரிடம் முறைப்படி காலட்சேபம் செய்து அவ்விரதத்தை வழங்கி வரும் நல்லன்பரும், இச்சங்க வெளியீடான வகுளமாலைப் பத்திராசிரியருமான ஸ்ரீமான் ஆர். கேசவய்யங்காரவர்கள் எம்.ஏ.,பி.எல்., அட்வொகேட், வேதாந்த தேசிகரூசல் என மகுடமிட்ட ஒரு நன்னூலை வகுளமாலை (தொகுதி 1, பகுதி 6, பக்கங்கள் 100 - 105)யில் வெளியிட்டுதவினார்கள்.

       ஸ்ரீரங்கம் தசாவதார ஸந்நிதியில் ஸ்ரீ அஹோபில மடம் ஸ்ரீ ஸந்நிதி ஆஸ்தானத்தில் நாற்பத்தொன்றாவது பட்டத்தில் மூர்த்தாபிஷிக்தராய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீ அழகிய சிங்கர் ஸ்ரீவண்சடகோப ஸ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ சடகோப யதீந்த்ர மஹாதேசிகரது எண்பத்து நாலாவது திருநக்ஷத்திரம் (சதாபிஷேகம்), ஈசுவர வருடம் மார்கழித் திங்கள் இருபத்து நான்காந்தேதி (7-1-1938) வெள்ளிக்கிழமை திருப்பூரட்டாதி நக்ஷத்திரத்தில் வெகு விமரிசையாய் நடந்து விளங்க, அன்றிரவில் ஸ்ரீகண்ணபிரானுக்கு டோலோத்ஸவம் அதி அற்புதமாய் நடைபெற, டோலையில் மாமாயன் அதிகம்பீரமாய் ஊஞ்சலாட ஸ்ரீ அழகியசிங்கர் துய்யதோர் தமது ஆசனத்தில் எழுந்தருளியிருக்க, சிஷ்யவருக்கங்கள் புடை சூழ்ந்து அமர்ந்து நிற்க இவ்வேதாந்த தேசிகரூசற்றீங்கவிகள் முழுமையும் செவிகளார அனைவரும் பருகச்செய்த பாக்கியம் அடியேனுக்குற்றது. இவ்வைபவத்தை,

மார்கழித் திங்களின்றா யிரத்தான்மதிச்

சீர் நிரைந்தோங்கு நம் சேமமாய்ச்செவ்வியார்

கார்முகில் கண்ணனுக்காசை யாலூசலே

பார்புகழ் நாநலப் புண்ணியர் பாடுவார்                       (15)

கேட்பவர் கேசவன் கீர்த்தியே கேட்டவர்க்

காட்படத் தேசிகர்க் காக்கியே யெம்மிறைத்

தாட்பெருஞ் சீர்த்தியே யாட்டு நம் மூசலே

கேட்ப நின்றெம்மை யாட்கொள்ளுமோர் வள்ளலார்.  (16)

----ஸ்ரீஅழகியசிங்கர் சதாபிஷேகமலர் (குருமலர்க்கலம்பகம்)

என்பனவற்றிலும் கண்டுகளிக்க. இத்திருநாளன்றுதான்ஸ்ரீஅழகியசிங்கரால் ஸ்ரீமத் பாஷ்யார்த்த மணிப் பிரவாள தீபிகையும், தமிழ் வித்துவான் என்ற பட்டமும் அடியேற்கு அருளப் பெற்றன.

           தமிழன்பரிற் பலர் இந்நூல் தனியாக வெளியிட வேண்டுமென்று வேண்டியதற்கிணங்க இஃது இச்சங்க வெளியீடாக நூலாசிரியரின் ஒரு சில விசேடக் குறிப்புகளுடன் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழாவில் கருடசேவையன்று தூப்புல் நகருக்கு வரும் நல்லன்பர்கட்கு வழங்கும் நோக்கத்தோடு வெளியிடலாயிற்று. இதனை அறிஞர் அன்புடன் ஏற்று அத்திகிரி அருளாளன், சந்தமிகு தமிழ்மறையோன், இவர்களுடைய அநுக்ரஹத்தைப் பெற்று மகிழ்வாராக. பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

விளக்காகி வேங்கட வெற்பினில்வாழும் விரைமலராள்

வளக்காதல் கொண்டுறை மார்பன்திறத்துமுன தடியார்

துளக்காத லில்லவர்தங்கள் திறத்திலுந் தூய்மை யெண்ணிக்

களக்காதல் செய்யும்நிலை கடியாய் தூப்புற்காவலனே.

                                                    --- பிள்ளையந்தாதி.

தேவர் முனிவர்களுஞ் சித்தர்களும் பக்தர்களும்

பூவின் மழைபொழிந்துபோற்றியே --- தாவி

யுலகளந்த மாலை யுணர்ந்துகக்குந் தூப்புற்

குலகுருவே யெங்கள் குரு

                                               --- தேசிகர் நூற்றந்தாதி

பூவளருந் திருமாது புணர்ந்த நம் புண்ணியனார்

தாவளமான தனித்திவஞ் சேர்ந்து தமருடனே

நாவளரும் பெரு நான்மறையோதிய கீதமெல்லாம்

பாவளருந் தமிழ்ப் பல்லாண்டிசை யுடன்பாடுவமே.

                                               ---- தேசிக மாலை

ஸ்ரீரங்கவிலாசம்                           ப.ரெ.திருமலை அய்யங்கார்

திருவல்லிக்கேணி                                    காரியதரிசி

1 - 6 - 1939.

----------------------------------------------------------------------------------

ஸ்ரீ:

வேதாந்ததேசிகரூசல்

காப்பு

விண்ணாகி இறையாகி விரசையாகி

            இசையாகி இருக்காகி இதயமாகி

மண்ணாகி மானாகி மனந்தானாகி

          மற்றாகி மனுவாகி மறந்தாராகி

எண்கடந்து கடைப்பட்ட யானுமாகிப்

பின்னாக விரகிலியாகிப் போந்தேஎன்கண்

கண்ணோக்கக் கடவதிருக் கடவுளாயே

காப்புயர்த்த கேசவனார்கழலே காப்பு.

நூல்

திருவாழத் திருவாழு மார்பர்வாழத்

திருமார்பர் திருவடியே வாழவன்னார்

திருவடிப்பூப் போத சடகோபர்வாழத்

தெள்ளியசீ ரெதிராசர் செங்கோல்வாழ

வருணநெறிச் செவ்விவளம் செழித்துவாழ

வைணவர்கள் குடிகுடியாய் வாழவாழச்

சுருதிமுடிக் குருப்புனித ராடிரூசல்

சீர்தூப்புல் வேங்கடவ ராடிரூசல்.                       .1.

பாங்கிலகு பாணிநியம் பொற்காலாக

வாங்கரிய யாக்கியமோர் விட்டமாக

ஓங்குபல பூங்கலைகள் பந்தலாக

ஆணிமறைச் சங்கிலிகள் நான்குமாக

ஆங்கு திருப்பாடியமே ஆட்டமாகப்

பாதுகை யாயிரமறையே போகமாக

ஓங்கர நாவொலிக் கோலராடிரூசல்

வேதசிரத் தேசிகனாராடி ரூசல்.                        .2.

மாற்றருசந்தருக் கணமே மராடியாக

மன்னுநெறிச் சைமிநியம் மணையுமாக

வீற்றுயர்ந்து வித்தகராய் ஒவ்வோராட்டால்

வழுத்தவழும் வாதவழி யொழியச்சாடிச்

சாற்றுமறை யாடுகொடி நாட்டிநல்லார்

காக்குமறை முடிமிளிர்ந்த குருவாயோங்கி

நாற்றிசைக் கோர்துளக்கறுதேசாடிரூசல்

நற்றவர்க் கோருற்றதுணையாடி ரூசல்.              .3.

காடெஞ்சிப் பொய்யர் புறங் காட்டியோடக்

கவடர் குழுகிடுகிடென நடுங்கியாட

நாடெங்கும் நான்மறையர் நாக்கொண்டாட

நல்லுலகு நலந்திகழ்ந்து குடக்கூத்தாட

ஏடெங்கும் நற்பொருளே நேயர்நாடக்

கேசவனார் வண்புகழே தேசம்பாட

ஆடெய்து மடியழகராடி ரூசல்

ஆரியர்கட் காசிரியராடி ரூசல்.                         .4.

நெற்றிமிசைத் திருநாமத் தேசுவீச

நூலெனமும் மறைநலமே உரம்குலாவ

ஒற்றிலகு முயர்சாற்றுப்படி துலங்கத்

தோள்மிசைச் சங்காழிதிருச் சின்னமின்ன

நற்றவர்கொள் நீள்கரத்துத் தூப்புல்துன்ன

நாமிசையே வழுவாதுநாத னோதச்

சுற்றிவரச் சூரியர்க ளாடிரூசல்

சோதியதா யோதுகுரு வாடிரூசல்.                  .5.

சரணொன்றே அரணாகு மன்பராடச்

சுருதியுறை நாவர்கநஞ்சடைதொடுக்க

வரகவியோர் வாழிதிகழ் மொழிவழங்க

ஓசையுயரிரு கலைஞரூசலேத்தச்

சுரமிசை நற்பதமிசையும் சுத்தர்பாடச்

சிட்டர்கரம் கிட்டுதவக் கவரிவீச

வரமருளும் திருவுருவே ஆடிரூசல்

வாழுதிரு மறைத்திருவே ஆடிரூசல்.              .6.

மும்மதமீமாஞ்சை பொழி வேழமாக

மிடற்றழுத்து மெழுத்துமறைக் கரடியாக

வம்பர்விழுந் தருக்கணவாய் வேங்கையாக

மறைமுடியாய்க் கவிமுழங்கு சிங்கமாகத்

துன்பமெலாந் துடைத்துத்தங் கேளிர்தாங்கும்

தூணெனவே தூயவராய்த் தோன்றியூன்றி

அன்பர்குலங் காக்குமிறை யாடிரூசல்

இன்ப மருளெம் பெருமானாடிரூசல்.              .7.

கழிபெருமா தேவரிடை கழியடைந்து

கார்மேனிக் கடவுளராய்க் கனத்துத்தொண்டர்

வழிதழைக்கும் தமிழ்ப்பகவர் விழியேயாகி

ஒளிவிடுமோர் முச்சுடராய் உடன்மிளிர்ந்து

செழுமறையே செந்தமிழாய்ச் சங்கநாதம்

செய்துதிருக் கண்டஒலி கொண்டகண்டம்

முழங்குமுதுத் தமிழ்மறைய ராடிரூசல்

முத்தமிழ் சேர்முது மறைய ராடிரூசல்.                    .8.

ஆசை மிசைத்தழையு மரித்தாளேபோல

ஆண்மைமிசை அறமன்னர் கோலேபோல

ஓசைமிசை உயர்செய்யுட் குணமேபோல

ஓமிசையோங் காரண நூலொலியேபோல

நேசமிசைக்கனிமாறன் பணியேபோல

நாதமிசை யூதுகுழல் சுரமேபோலத்

தேசுதிகழ் மங்கலமே ஆடிரூசல்

ஏவுமறை மாதவமே ஆடிரூசல்.                                .9.

பொய்கைமுனி பூதத்தார் பேயாழ்வார்தண்

பொருநல்வரும் குருகேசன் விட்டுசித்தன்

துய்யகுலசேகரனம் பாணநாதன்

தொண்டரடிப்பொடி மழிசை வந்தசோதி

செய்ய தமிழ் மங்கையர்கோன் செல்வக்கோதை

சீர்மதுரரோ ரமுதர் சேர்ந்துவந்து

பெய்யுமருள் மாரி வடிவாடிரூசல்

பொய்யாத மொழிப் பகவராடிரூசல்.                     .10.

முடிபொலிந்து துன்னுதிரு மறைகள்யாவும்

மறையாறா யங்கமென மிளிர்ந்தவாறும்

குடியேறு கோயிலென வந்தவெந்தை

உபநிடதக் கடல்கடைந்த அமுதேயான

படியோங்கி அவனோங்கு மதியாயோங்கிப்

பாடியமா யோங்குபுக ழுடையவர்க்கே

படிகிடக்கும் படைவீர ராடிரூசல்

மறைதாங்கு மதிப்பரம ராடிரூசல்.                         .11.

அந்தணரும் அந்தியரும் அரியடிக்கீழ்ச்

சந்தி செயச்சரண நெறித்திருவிளக்கை

நந்தாது நான்மறைநீண் முடிநிறுத்தி

நாதனடிச் சோதிமலர் நலம்துலங்கத்

தந்தருளித் திருவளர்க்கும் தகவேகொண்ட

கொண்டலென வந்துலகு கொள்ளும்வள்ளல்

சந்தமிகு தமிழ்மறைய ராடிரூசல்

சீர்கவிதார்க்கிக சிங்க ராடிரூசல்.                         .12.

தண்ணியரைத் தன்னவராய் நண்ணித்தன்னில்

திருவுடை யாரென்று திருவுள்ளத்துள்ளும்

புண்ணியனார் மன்னுபுகழ்ப் பதங்கணங்கள்

புந்தியிடை முளைத்தரும்பிப் பூத்தபான்மை

எண்ணியிது வென்னையென எண்ணவொண்ணா

தென்றுமொரு வள்ளலிவ ரென்றேகொள்ளப்

பன்னுமறைக் கண்ணழக ராடிரூசல்

பார்புகழு மோரொரு வராடிரூசல்.                           .13.

செய்தவரே யெய்துபயன் யாவும்சேர்க்கும்

சீரியரே யாரியரா யீண்டுத்தோன்றி

எய்தரிய பொறையொன்றே பூண்டுயாண்டும்

எம்மடி களென்றறிஞ ரேத்தநின்று

வைதவர்தம் வைவையெலாம் வாழ்த்தாயெண்ணும்

வைணவர்கோ னெனப்பெரியோர் பணிந்துபேணும்

கைதவ மானிடரெம்மா னாடிரூசல்

கண்ணொக்கும் கருணை முகிலாடிரூசல்.                  .14.

கண்ணாகிக் கருத்தாகிக் கருணையாகிச்

சொல்லாகிப் பொருளாகித் தொடர்ச்சியாகி

நுண்ணிய பல்லுயிராகி உடலுமாகி

நல்லுருவ உலகாகி நலமேயாகி

எண்ணரிய தனதாகித் தானேயாகி

எல்லாம் தன்னுடலென்ன விரிந்தநாதன்

கண்ணோட்டம் கனத்தகுரு ஆடிரூசல்

கண்ணாகு மெய்யடிய ராடிரூசல்.                             .15.

மண்மிசை மாமறை மணமேகமழுமாறு

மாதவனாரரு ளொன்றே பொருளாமாறு

விண்ணவரு மிங்குவர விரும்புமாறு

வேதியர்கள் வேள்வி விருந்தேற்குமாறு

கண்ணனருளுறுதி மறை கண்ணாமாறு

கதியெல்லாம் சடகோப னடியாமாறு

நண்ணு மறைத்தேசிகரே ஆடிரூசல்

நடையாடு மறைமுடியே ஆடிரூசல்.                         .16.

விண்மேவு பத்திநெறி விளங்குபத்தர்

வித்தகராயத்திகிரிச் சிரத்துறைந்த

வண்புகழோன் திருவுருவே யன்னானாமோ

அன்றி யருள்மாரி யெழிலவனதாமோ

திண்ணமெமக் கெவ்வாறென் றூசலாடும்

திருவுள்ள முள்ளுநலர் திண்ணம்தேறக்

கண்ணொளியாய் வந்த குருவாடிரூசல்

காவலரெம் தரும குருவாடிரூசல்.                            .17.

விளக்கொளி அத்திகிரிபதி வேங்கடக்கோன்

விண்ணாகு சிங்கமலை யோங்குசிங்கன்

துளக்கற்ற வருளமுதத் தென்னரங்கன்

துய்யதிருச் சோலைமலைச் சுந்தரத்தோள்

அளப்பரிய ஆரமுதப் பௌவமெங்கள்

குலக்கடவுள் கேசவனும் கடைக்கணித்தே

களித்துயர்த்தும் குருமூர்த்தி யாடிரூசல்

கலிதவிர்க்கு மாசிரியராடிரூசல்.                             .18.

உலகமெலா மன்புயர ஆடிரூசல்

ஊழியமே ஊதிய மென்றாடிரூசல்

கலகமெலாம் கலக்கழிய ஆடிரூசல்

ஞாலமெலாம் ஞானமெழ ஆடிரூசல்

குலநெறிகள் குணமுறவே ஆடிரூசல்

குரவர்குணக் கடலாட ஆடிரூசல்

நலமிங்கு தேசிகரே ஆடிரூசல்

நிலத்தேவர் குலத்தேவே ஆடிரூசல்.                       .19.

இருகலையு மொருகலை யென்றாடிரூசல்

ஈரடியு மோரடி யென்றாடிரூசல்

இருவிழியு மொருவிழி யென்றாடிரூசல்

ஈரொளியு மோரொளி யென்றாடிரூசல்

இருவழியு மொருவழி யென்றாடிரூசல்

ஈருலகு மோருலகென் றாடிரூசல்

பருமறையாம் திருமலையே ஆடிரூசல்

பொறைபுனையும் பரமகுரு ஆடிரூசல்.                    .20.

செந்தமிழும் வடகலையும் சென்னிசேர்ந்து

செழுமறையின் செம்பொருளே சொரியவானோர்

புந்திமலர் மாதவனார் பதமலர்க்கே

பற்பணியும் சொற்பணியும் பரப்பிச்செய்து

சந்தமிகு சடகோபனடியே சூடிச்

சதுமறைக் கோர்முடிச் செல்வக்குருவாய்த்தூப்புல்

வந்தவிரு வேதகலைத் தலைவரூசல்

கேசவனோர் நாலைந்து கனிந்திசைத்தான்.

 

சுபம்.

---

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக