Tuesday, December 22, 2009

தாலாட்டு அல்ல, பள்ளியெழுச்சி!

7. தாலாட்டு அல்ல, பள்ளியெழுச்சி!

கிருஷ்ண பக்தியின் மயக்கத்தினால் ஒருத்தி மெய்ம்மறந்நு கிடக்கிறாள். பொழுது விடிந்தது என்று தெரியவில்லை. இவளும் ‘விடிந்ததற்கு அடையாளம் என்ன?’ என்று உள்ளே இருந்து கேள்வி போடுகிறாள். அதற்குக் பிரதிநிதியாக ஒரு பெண், ‘அந்த அடையாளத்தைத்தான் கீச்சாங்குருவி கீச்சுக் கீச்சு என்று பேசிக் கொண்டிருக்கிறதே!’ என்று பதில் சொல்கிறாள். கீச்சாங்குருவி பேடையுடன் சேர்ந்து பேசும் கீச்சுப் பேச்சு கேட்டும் கேளாதவள்போல் பதில் சொல்லாமல் கிடக்கிறாள் உள்ளே இருப்பவள்.

‘விழித்திருந்தும் பதில் சொல்லாமல் இருக்கிறாளே!’ என்று கோபம் வருகிறது வெளியே இருப்பவர்களுக்கு. இந்தக் கோபத்தைக் காட்ட விரும்பி, ‘பேய்ப் பெண்ணே!’ என்று கூப்பிடுகிறாள் கூட்டத்தில் ஒருத்தி. “ வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ” என்று கேட்கிறாள்.

அந்தக் காலை வேளையின் மோனத்தைக் கடைந்துகொண்டு எழுகிறதாம் தயிர் கடையும் ஓசை. ‘மலையிட்டுக் கடலைக் கலக்கினாற்போல’க் காதில் விழுகிறதே, உனக்குக் கேட்கவில்லையா என்று கேட்கிறார்கள். ‘செல்வச் செருக்கே இந்தச் செவிட்டுத்தனத்திற்குக் காரணமாயிருக்கலாமோ?’ என்று நினைக்கிறார்கள்.

‘பேய்ப் பெண்ணே!’ என்று அழைத்தவர்கள் இப்போது ‘நாயகப் பெண்பிள்ளாய்’ என்று கூப்பிடுகிறார்கள்.

“நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்நீ கேட்டோ கிடத்தியோ?” என்கிறாள் கூட்டத்தின் பிரதிநிதியாகப் பேசும் ஒருத்தி.

எப்படியாவது இவளை எழுப்பிக் கொண்டுதானே போகவேண்டும்? இவளுடைய பக்தி பரவசத்தை அறியாதவர்களா இவர்கள்? இவள் தங்கள் கூட்டத்தில் இல்லாததால்,பொழுது விடிந்தும் ‘இன்னும் இருண்டு கிடக்கிறதே!’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறதாம் இவர்களுக்கு. ‘எங்கள் இருள் தீர நீ வந்து கதவைத் திற’ என்று கடைசியாக கொஞ்சுகிறார்கள்.

‘தேசம் உடையாய்’ என்று கடைசியாக அழைக்கிறார்கள். ‘தேஜஸ் அல்லது ஒளி உள்ளவளே!’ என்பது பொருள். இவள் வந்து சேர்ந்தால் இருட்டுக்கிடையே ஒரு மங்கள தீபம் நடையாடி வருவதுபோல் தோன்றுமாம். ‘அப்படி வந்து சேரவேணும் அம்மா! எங்களுக்கிடையே’ என்று கொஞ்சுகிறார்கள், கெஞ்சுகிறார்கள். “தேசம் உடையாய்! திற ஏலோர் எம்பாவாய்” என்று முடிகிறது இப் பள்ளியெழுச்சிப் பாட்டு.

இந்தப் பாட்டிலும் மூவகைக் காலை ஒலிகள் பிரஸ்தாபிக்கப் படுகின்றன. புள்ளின் சிலம்பல், பெருமாள் கோயிற் சங்கின் பேரரவம், ‘ஹரி: ஹரி:’ என்று பெரியோர் துயில் எழும்போது உச்சரிக்கும் ஓசை ஆகிய மூன்று ஒலிகளை முந்திய பாட்டில் கேட்டோம். இப்பாட்டிலோ, கீச்சாங்குருவியின் கீச்சொலி, ஆய்ச்சியர் காசு மாலையும் ஆமைத் தாலியும் கலகலக்கத் தயிர் கடையும் ஓசை, எல்லாவற்றுக்கும் மேலாகக் கண்ணனை இவர்கள் பாடிவரும் இசை ஒலி ஆகிய மூவகை ஒலிகளையும் கேட்கிறோம்.

இந்த வீட்டுக்காரியை இவர்கள் மூன்று வகையாக அழைப்பதையும் கேட்கிறோம். ‘ பேய்பெண்ணே” என்று முதல் முதல் சினந்து கூப்பிட்டார்கள். ‘உனக்குத்தான் என்ன செருக்கு? பெண்ணே!’ என்ற குறிப்புடன், “நாயகப் பெண்பிள்ளாய்” என்று அடுத்தபடியாகக் கூப்பிட்டார்கள்.

கோபம் தணிகிறது. ‘இவள் செருக்கு உடையவள் இல்லை’ என்பதும் உள்ளத்தில் புலனாகிறது. இவளுடைய அருமை பெருமைகள் நினைவுக்கு வருகின்றன. ‘உள்ளும் புறமும் வீசுமே இவள் வரும்போது!’ என்று அன்புடன் நினைத்துப் பார்க்கிறார்கள். “ தேசம் உடையாய்!” என்று நேசமாய் அழைக்கிறார்கள்.

முதலாவது அழைப்பு சினக் குறிப்பை வெளியிட்டது. இரண்டாவது அழைப்பு இகழ்ச்சிக் குறிப்பை புலப்படுத்தியது. மூன்றாவது அழைப்பு உண்மையான புகழ்ச்சிக் குறிப்பு -- அன்பு சூட்டும் பட்டம்.

நெடுநாளாகக் கிருஷ்ண பக்தியில் ஆழ்ந்திருக்கும் இவளை மற்றைப் பெண்கள் நன்றாக அறிவார்கள். இவளுடைய மனப்பான்மையையும் ஈடுபாட்டையும் நன்கு அறிவார்கள். எனினும் ‘இன்று புதிதாக அறிந்துகொண்டோம்!’ என்று உணர்கிறார்கள். உண்மையான நட்பும் காதலும் – உண்மையான அறிவும்கூட – என்றும் புதுமை வாய்ந்தவை!

அறிய அறிய முற்பட்ட அறிவை எல்லாம் அறியாமையாகத் தானே உணர்ந்து கொள்கிறான்? அப்படியேதான் இந்தத் தோழிமார்களும் இந்தப் பெண்மணியை ‘இதுவரை இப்படி அறிந்துகொண்டோ மில்லையே!’ என்ற உணர்ச்சியுடன், இவளைப் புதுமையாகவே கண்டுபிடித்துவிட்டதுபோல், இன்புற்று இவளுடன் அப்பால் போகிறார்கள்.

மூவகை ஒலி, மூவகை அழைப்பு

‘கீசுகீசு’என் றுஎங்கும் ஆனைச்சாத் தம்கலந்து

பேசின பேச்சுஅரவம் கேட்டிலையோ? பேய்பெண்ணே!

காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசைபடுத்த தயிர்அரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய்! நாரா யணன்மூர்த்தி

கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?

தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

விளக்கம்.

பெண்களின் நாயகமணி என்று பேர் பெற்றிருக்கும் ஒருத்தியை எழுப்புகிறார்கள். பேரொளி வாய்ந்த நாயகமணி இவள். நீண்ட நாளாகக் கண்ணனிடம் பக்தி கொண்டிருப்பவள். எனினும் மறந்து கிடப்பதுபோல் மெய்ம்மறந்து கிடக்கிறாள். சிறிது ஆத்திரமாக மற்றப் பெண்கள் இவளைப் ‘பேய்ப் பெண்ணே!’ அழைக்கிறார்கள். அழைப்பில் அன்பும் தொனிக்கத்தான் செய்கிறது.

இந்தப் பாட்டிலும் காலையின் சிறப்பொலிகளாக மூவகை ஒலிகள் குறிக்கப் படுகின்றன. முதலாவது கீச்சாங்குருவிகளின் ‘கீச்சுக் கீச்சு’ ஒலி. இரண்டாவது ஆய்ச்சியர் தயிர் கடையும் ஓசை. ‘இந்த இரண்டு ஒலிகளையும் கேட்டு விழித்துக் கொள்ளாவிட்டாலும், எங்கள் பாட்டொலியைக் கேட்டாவது எழுந்து வரவேண்டுமே; எங்கள் பக்திப் பாட்டைக் கேட்டும் உறங்குகிறாயோ?’ என்கிறார்கள். உண்மையில் இப்பெண், பக்தியில் ஈடுபட்டு மெய்ம்மறந்து கிடப்பவள்தான்.