3. வளம் சுரக்கும், நலம் பெருகும்
முதல் முதல் 'நாராயணனே நமக்கே பறை தருவான்' என்று பாடி வந்தவர்கள் பிறகு, 'பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடி பாடி'னார்கள். 'ஆதிப் பரம்பொருள் நாரணன் தெளிவாகிய பாற்கடல்மீதினில், நல்ல ஜோதிப்பணாமுடி ஆயிரம் கொண்ட தொல் அறிவு என்னும் ஓர் பாம்பின்மேல் ஒரு போதத்துயில்' கொண்டிருக் கிறான் என்றும், அந்தப் பரம்பொருளே உலகத்தில் அவதரிக்கிறார் என்றும், புதுமைக் கவியாகிய பாரதியாரும் பாடியிருக்கிறார். இப்படி அவதரித்த அவதாரங்களில் வாமனாவதாரத்தைக் குறித்து இப்போது பாடுகிறார்கள் கோபியர்கள்.
குள்ளனைக் குள்ளனாகப் பாடவில்லை; 'ஓங்கி உலகளந்த உத்தமன்' என்று பாடுகிறார்கள். திருநெடுமால் எப்படி வாமனன் என்று விசித்திரக் குள்ளன் ஆகிவிட்டான் தெரியுமா? நூற்றுக்கணக்கான மக்களுக்கோ பிராணிகளுக்கோ தங்க நிழலும் இடமும் தரக்கூடிய பிரம்மாண்டமான ஆலமரம் அதன் விதைக்குள் அடங்கித்தானே கிடந்தது? அப்படி அடங்கிக் கிடந்தானாம் வாமன வடிவத்தில் 'ஓங்கி உலகளந்த உத்தமன்'
இந்த 'உத்தமன் பேர்பாடி' நாம் நம் பாவை நோன்பிற்கு அங்கம் என்று சொல்லிப் பனி நீராடுவோம் என்கிறார்கள். இப்படி நீராடி நோன்பு நோற்றால், அதன்பயனாக, "தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து" செழிப்படையும் என்கிறார்கள்.
நெற்பயிர் வளர்ந்தோங்கும் என்கிறார்கள்.'ஓங்கி உலகளந்த உத்தமன்' கிருபையால் 'ஓங்கு பெருஞ்செந் நெல்' செழித்து வளரும் என்கிறார்கள். வயல்வளமும் நீர்வளமும் பாடுகிறார்கள். "ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயல்உகள" என்று அந்தப் பயிர்களினூடே கயல் மீன்கள் துள்ளுவதையும் குறிப்பிடுகிறார்கள்.
வளத்துடன் அந்த வனப்பையும் குறிப்பிடுகிறார்கள். வயல்களில் களை என்று பறித்து எறியப்படும் குவளை மலர்களின் அழகை வருணிக்கிறார்கள். 'பூங்குவளைப்போது' என்கிறார்கள். வரப்புகளில் காணப்படும் இந்தப் பூங்குவளை மலர்களில் வண்டுகள் தேனுண்டு மயங்கி உறங்குகின்றனவாம். "பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப" என்று தேனூறும் தமிழில் அந்த அழகை வருணிக்கிறார்கள்.'பொறிவண்டு' என்று அந்த வண்டுகளின்மேல் உள்ள புள்ளிகளையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இங்கே இயற்கை நாடகம் ஒன்று நடக்கிறது. குவளைப் பூவில் வண்டு மதுபானம் பண்ண வந்து படிந்த நிலையிலே, கயல் மீன்கள் ஊடே சஞ்சரிக்கின்றனவாம்; துள்ளுகின்றனவாம். அதனால் செந்நெலும் குவளையும் ஒக்க அசைகின்றன. வண்டுக்குத் தன் பூம்படுக்கை இப்போது தூங்குமஞ்சம் போல் அசைந்தாடுகிறது. தூங்கு மஞ்சத்தில் மதுவுண்டு அரசிளங் குமரர் உறங்குவது போல் வண்டுகள் உறங்குகின்றனவாம். இந்த நாடகத்தைச் சொல்லியும் சொல்லாமலும் நமக்குக் காட்டி விடுகிறார்கள் இப்பெண்மணிகள்.
இப்போது வேறொரு காட்சி நமது கண்ணைக் கவர்கின்றது. பசுமாடு கறக்கும் சாதாரண நிகழ்ச்சிதான். ஆனால் என்ன மாடு! எவ்வளவு பால்! கறப்பவர்கள் தாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்! ஒரு நிலையாக இருந்து சலியாமல், ஏங்காமல் பசுக்களின் பருத்த மடிகளைப் பற்றி இழுக்கிறார்கள். பால் பெருகுகிறதா, அல்லது வெள்ளம்தான் பெருகி வருகிறதா? குடம் நிறைந்து விடுகிறது. ஒரு குடமா? குடங்கள் நிறைந்து விடுகின்றன பால் வெள்ளத்தால்! இந்தப் பசுக்களைப் 'பெரும் பசுக்கள்' என்று கூறுவதுடன் திருப்தி அடையாமல் 'வள்ளல் பெரும் பசுக்கள்' என்கிறார்கள். வள்ளல்கள் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் இந்தப் பசுக்களிடம்!
இப்படியெல்லாம் வருணித்து,'நீங்காத செல்வம் நிறைந்து விடும்' என்கிறார்கள். பகவந் நாம ஸங்கீர்த்தனம் செய்துகொண்டே நீராடி நோன்பு நோற்றால் க்ஷேமம் பெருகும். க்ஷாமம் (வறட்சி) நீங்கிவிடும் என்கிறார்கள். நீர்வளம் நில வளம் நெல் வளம் பால் வளம் ஆகிய எல்லா வளங்களும் நிறைந்து தீங்காத செல்வம் பெருகும் என்கிறார்கள்.
'திங்கள் மும்மாரி' என்றால் மூன்று நாள் அல்லும் பகலுமாக மழை அடித்துச் சொரிந்து வெள்ளக் காடாக்கி விடும் என்பது பொருளல்ல. இருபத்தேழு நாள் வெயில் கொளுத்தி ஹிம்ஸித்தபின் மூன்று நாள் மழையும் ஓயாது ஒழியாது பெய்து ஹிம்ஸிப்பதானால், கஷ்டம் ஏற்படத்தானே செய்யும்? எனவே ஒன்பது நாள் வெயிலும் ஒரு நாள் மழையுமாய்த் தீங்கின்றி மும்மாரி பெய்யும் என்கிறார்கள். "தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து" என்று பாடும்போது, 'தீங்கின்றி' என்பதைச் சற்று அழுத்தி உச்சரிக்கிறார்கள்; எதுகையில் அமைந்திருக்கிறதல்லவா?
வள்ளற் பெரும் பசுக்கள் ஞானத்தை வழங்கும் நல்லாசிரியர்களையும் நினைவூட்டுகின்றன. வள்ளல்களுக்குப் பாடம் கற்பிப்பதுபோல் ஆசிரியர்களுக்கும் – ஆம், பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களுக் கும் --- இப்பசுக்கள் ஒரு பாடம் – முக்கியமான பாடம் – கற்பிக்கத்தான் செய்கின்றன.
மடியைக் கறப்பதுபோல் ஆசிரியனின் திருவடியைப் பற்றிக் கொண்டு ஞானப்பால் கறக்க முயல்பவன் தானே சீடனும். வள்ளற்பெரும்பசு குடம் நிறைப்பது போல் ஆசிரியனும் ஞானத்தை நிறைய வழங்கிச் சீடனின் உள்ளத்தை நிறைக்கிறான்; நிறைக்கவேண்டும் – இல்லையா?
இனி இப்பாட்டு முழுமையும் நோக்கி இன்புறுவோம்.
உள்ளபடி நோற்றால் உலகம் செழிக்கும்.
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்
தீங்குஇன்றி நாடுஎல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயல்உகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்குஇருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்
விளக்கம்.
உத்தமன் பேர்பாடி நாங்கள் பாவை நோன்பை வியாஜமாகக் கொண்டு நீராடினால், திங்கள் மும்மாரி பெய்து நாடு செழிக்கும்; நீர்வளம்,நெல் வளம், பால் வளம் ஆகிய வளங்களெல்லாம் கிடைக்கும் என்கிறார்கள்.
கடவுளை உத்தமன் என்று இங்கே குறிப்பிடுவது கூர்ந்து நோக்கத் தக்கது. தன்னை அழியமாறி யாகிலும் பிறர் வாழ வேண்டும் என்று பணிபுரிகிறவனே உத்தமன் என்கிறார் வியாக்கியான சக்கரவர்த்தியான பெரியவாச்சான் பிள்ளை.நெடுமால் தன் வடிவைக் குறுகச் செய்து தேவர்களையும் மனிதர்களையும் வாழ்வித்ததால் ‘உத்தமன்’ என்று குறிப்பிடப்படுகிறான்.
பிறரும் வாழவேணும், நாமும் வாழவேணும் என்று இருப்பவனை ‘மத்தியமன்’ என்கிறார். பிறரை ஹிம்ஸித்துத் தன் வயிற்றை வளர்க்க விரும்புகிறவனை ‘அதமன்’ என்கிறார்.
‘வள்ளல் பெரும்பசுக்கள்’ ஞானத்தை மக்களுக்கு வழங்கும் நல்லாசிரியர்களையும் நினைப்பூட்டுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக