புதன், 16 டிசம்பர், 2009

திருப்பாவை 1

1. விருப்பம் உள்ளவர் அனைவரும் நீராட வரலாம்.

ஆய்ப்பாடி ஆகிறது ஸ்ரீவில்லிபுத்தூர். ஆண்டாளுடைய மனோபாவத்தால், கால வெள்ளத்தில் எதிர்த்துச் செல்லும் ஓர் இன்பப் படகுபோல் சென்றது ஆண்டாளின் உள்ளம். கண்ணன் வாழ்ந்த அந்தக் காலத்திற்கே போய்ச் சேர்ந்துவிட்டாள் கோதை என்ற ஆண்டாள். ஆய்க்குலச் சிறுமியருடன் அபேதமாய்க் கலந்து கொண்டாள். கண்ணனைத் தலைவனாக அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டு நோன்பு நோற்றுக் கொண்டிருக்கும் கோபியரோடு தானும் ஒரு கோபியாகச் சேர்ந்து விட்டாள்.

வடபெருங்கோயில் – அதாவது ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசாயி என்ற பெருமாளுடைய சந்நிதி – நந்த கோபர் மாளிகை ஆகிவிட்டது. கோயிலில் உள்ள பெருமாள் கண்ணனாகக் காட்சி வழங்கினான். கோபியர்கள் பாவை நோன்பு நோற்றுக் கண்ணனை அடையவேண்டும் என்று தீர்மானித்து, 'மார்கழி நீராட்டத்திற்கு வாருங்கள்' என்று , உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் கூவி அழைத்துக் கொண்டு, இறைவனது திருவடிகளையும் பெயர்களையும் பாடிக்கொண்டே வீதி வழியாகப் போகிறார்கள். ஆண்டாளும் இந்தக் கூட்டத்தில் 'இடைநடையும் இடைமுடியும் இடைப்பேச்சும் முடைநாற்றமுமாய்'க் கலந்துகொண்டு கிருஷ்ணாநு பாவம் செய்வதைக் காண்கிறோம்.

மார்கழி மாதம். 'வரப் போகுது, வரப்போகுது' என்று எதிர்பார்த்திருந்த சுக்கிலபட்ச பௌர்ணமியும் வந்துவிட்டது. காலத்தைக் கொண்டாடுகிறார்கள்: ஆம், 'மார்கழித் திங்கள்' என்று மாதத்தைக் கொண்டாடுகிறார் கள். 'மதி நிறைந்த நன்னாள்' என்று பௌர்ணமி தினத்தையும் கொண்டாடுகிறார்கள். 'மார்கழி நீராட்டம்' என்ற பனி நீராட்டத்தில் விருப்பம் உள்ள பெண்களையெல்லாம், 'வாருங்கள்,வந்து சேருங்கள், களிகூர்ந்து அன்பையும் அருளையும் பெற்று வாழுங்கள்' என்று பொருள்பட அழைக்கிறார்கள்.

ஒருவரை ஒருவர் முகம் கண்டு மகிழ்வதற்கும் இந்த முழு மதி நாள் பொருத்தமானது: எல்லாரும் கூடிக் கண்ணனைத் துயிலெழுப்பி அந்த அழகனைக் கண்ணாரக் காண்பதற்கும் பொருத்தமான நன்னாள்தான் இது. எனவே இருளை வெறுத்து நிலவைக் கொண்டாடுகிறார்கள். 'நீராட வாருங்கள்' என்ற அழைப்பின் உட்பொருள் 'கண்ணனைக் கண்டு அன்பு நன்னீராடி ஆறுதலும் ஆனந்தமும் பெறுவீர்!' என்பதுதான்.

'வருகிறவர்கள் எல்லாரும் வரலாம்' என்று முழக்கிக் கொண்டு சிலர் புறப்படுகிறார்கள். இவர்கள் ஆபரணங்கள் அணிந்திருக்கிறார்கள். ஆபரணங்களுக்கும் ஆபரணமாகிய அழகன் கண்ணன். அவனைக் காணலாம் என்ற உவப்பே மேனியெல்லாம் ஆபரணம் பூண்டது போன்ற அழகை இவர்களுக்கு அளித்து விடுகிறதாம்.

ஆய்ப்பாடியின் செல்வச் சிறுமியர்கள் இவர்கள். ஆய்ப்பாடியோ 'சீர்மல்கும் ஆய்ப்பாடி'. – அதாவது, பால்வளம் முதலான செல்வங்கள் நிறைந்திருக்கும் கோகுலம். இந்த ஆய்ப்பாடியின் செல்வத்துள் செல்வமாக வளர்கிறார்கள் இந்தச் சிறுமியர்கள். கிருஷ்ணபக்தி இவர்கள் போற்றும் செல்வம்.

நந்தகோபன் குமரனும் யசோதை இளஞ் சிங்கமுமாகிய கண்ணனை அகக்கண்ணால் பார்த்தாலும் இவர்களுக்கு அழகு பொங்குகிறது. கண்ணனைப் பார்த்துப் பார்த்துத்தான் யசோதையும் கண்ணழகு வாய்ந்த வளானாள் என்பது இவர்கள் கருத்து. எனவே, "ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்" என்று சொல்கிறார்கள்.

கண்ணனது மேனியைக் காணும்போது, மழைமுகம் கண்ட பயிர்போல் தழைக்கிறது இவர்கள் முகம். நினைத்தாலும் தாபம் போகிறது – கார்முகிலைக் கண்ட பயிர்பச்சை போல. கண்ணன் திருமேனியையும், திருமுகத்தையும் நினைத்து நினைத்து, " கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்" என்று அந்த அழகில் ஈடுபட்டுப் பேசுகிறார்கள். ஒளிக்குக் கதிரவன் குளிர்ச்சிக்கு முழுமதி என்கிறார்கள்.

பாவை நோன்பிற்கு ஓர் உறுப்பாகிய பறை என்ற வாத்தியத்தைக் கண்ணனிடம் பெற்றுக் கொண்டு நோன்பு நோற்போம் என்று புறப்பட்டிருக்கிறார்கள். 'பறை, பறை' என்று சொல்லிக் கொண்டு இப்படிப் போவது வியாஜம்தான். உள்ளுக்குள்ளே கிருஷ்ண பக்தியும் கைங்கரிய விருப்பமும்தான்.

நோன்பு நோற்றால் மழை பெய்யும், நாடு செழிக்கும் என்பது ஆய்ப்பாடித் தலைவர்களின் நம்பிக்கை. 'ஆ! பெண்கள் நோற்று மழை பெய்தது' என்று அவர்கள் புகழ்வார்கள். அப்படி அவர்கள் புகழும்போது, உலக மெல்லாம் புகழுவதாக இவர்கள் மகிழ்ந்து போவார்களாம். எனவே, 'பாரோர் புகழப்படிந்து' (நோன்பிலே ஊன்றி) நீராடுவோம் என்கிறார்கள்.

உலகத்தின் ஒரு சிறு பகுதியாகிய ஆய்ப்பாடிதான் இவர்கள் உலகம்! ஆனால் உலகத்தை எல்லாம் தனக்குள் அடக்கிக் கொண்டிருக்கும் கண்ணபிரானின் தோழமை அல்லவா இவர்கள் குறிக்கோள் ?

நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

என்று பாடிக்கொண்டே போகிறார்கள்.

வாருங்கள், தாபம் தீர அன்பு நீராடுவோம் !

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீர்ஆடப் போதுவீர்! போதுமினோ, நேர்இழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏர்ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

ஆய்ப்பாடிச் சிறுமியர்களே! நாராயணனாகிய கண்ணனே நமது நோன்பிற்கு வேண்டியவற்றைத் தந்து நமது விருப்பத்தை நிறைவேற்ற சித்தமாய் இருக்கிறான். மார்கழித் திங்களில் மதி நிறைந்த இந்நாள் நன்னாள். விருப்பம் உள்ளவர்கள் எல்லாரும் நீராட வந்து சேரலாம் என்று ஆய்ப்பாடிக் கன்னியர்களில் சிலர் மற்றைக் கன்னிமார்களை அழைக்கிறார்கள். ஒருவரை ஒருவர் முகம் கண்டு களிக்கவும், எல்லாரும் சேர்ந்து போய்க் கண்ணனைத் துயில் எழுப்பிக் கண்டு களிக்கவும், இம்முழுமதி நிறை நாள் நன்னாளாக வாய்த்திருக்கிறது.

நீராட வாருங்கள் என்ற அழைப்பிலே, கண்ணனைப் பிரிந்திருந்த தாபம் ர அவனுடைய அன்பையும் அருளையும் பெற்று மகிழ்வோம் என்ற குறிப்பையும் காண்கிறோம்.

பார் உலகத்தின் ஒரு சிறு பகுதியாகிய ஆய்ப்பாடியைக் குறிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக