Tuesday, November 21, 2017

நம்மாழ்வார் வைபவம்

10. விசேஷாம்சங்கள்

இவருக்கு மற்ற ஆழ்வார்களைப்போலே சந்தமிகு தமிழ்மறைகளில் சில பாகங்களை ப்ரத்யக்ஷீகரித்து வெளியிட்டருளிய ஏற்றத்துடனே அவற்றையும் மற்றைய ஆழ்வார்கள் வெளியிட்டருளிய ப்ரபந்தங்களையும் மறுபடியும் ப்ரவர்த்தனம் செய்தருளினார் என்கிற ஏற்றமுண்டு. இத்தால் இவருக்கு ஆசார்யகோஷ்டியில் அனுஸந்திக்கப்படும் பெருமையுண்டு. மற்ற மூவாயிரம் பாசுரங்களைப்போலே இவருடைய திருவாய்மொழியை வீதிகளில் ஸேவிப்பதில்லை. ஸந்நிதிக்குள்ளோ, திருமாளிகைகளிலோ உட்கார்ந்துகொண்டே ஸேவிக்கும் ஏற்றம் பெற்றதாயிருக்கும்.

இவருடைய அவதாரத்தை ஸ்ரீபாகவதத்தில் 4ம் ஸ்கந்தத்தில் புரஞ்ஜனோபாக்யானம் கூறுகிறது. இவருடைய ப்ரபந்தத்தில் ஒரு விசேஷ மணம் வீசாநிற்கும் என்று ஆசார்யன் பல இடங்களில் நிரூபித்திருக்கிறார்.

திருவாய்மொழி எல்லோராலும் அனுஸந்திக்கப்படும் என்பதை ஆழ்வார் தாமே 'பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும்' என்றனுஸந்தித்திருக்கிறார். இதன் கருத்து :--

ஸ்ரீபாகவதத்தில் பகவானுடைய திருக்கல்யாண குணங்கள்

'निवृत्ततर्षैः उपगीयमानात् भवौषधात् सोत्रमनोभिरामात्

என்கிறபடியே ஸம்ஸார ஸம்பந்தம் இல்லாத நித்யர்களாலும் முக்தர்களினாலும் கானம் செய்யப்படும் என்றும், ஸம்ஸாரத்தைப் போக்கடித்துக் கொள்ளுவதற்கு மருந்தாயிருப்பதினால் முமுக்ஷுக்களினாலே அனுஸந்திக்கப்படும் என்றும், கேட்பவர்களின் மனதிற்கு ஸந்தோஷத்தை உண்டாக்கும் என்றும் இப்படிகளினால் எல்லோராலும் அனுஸந்திக்கப்படுகின்றன எனக் கூறப்பட்டிருக்கிறது. அதைப்போலவே இத்திருவாய்மொழியும் என்பதை இதன் தனியனில்

भक्तामृतं विश्वजनानुमोदनं सर्वार्थदं

என்று கூறப்பட்டது. 'பக்தாம்ருதம்' என்றது ஸூரிகளுக்கும் முக்தர்களுக்கும் ஸ்வயம் போக்யமானது என்றபடி. 'விச்வஜனானுமோதனம்' என்றது ச்ராவ்யமாயிருப்பதினால் ஸம்சாரி சேதனர்களுக்கு ஸந்தோஷத்தை உண்டாக்கும் என்றபடி. 'ஸர்வார்த்ததம்'என்றது கற்பவர்களுக்கு வேதாந்த ஜ்ஞானத்தை உண்டாக்குகிறபடியினால் ஸம்ஸாரத்தைப் போக்குகிற அருமருந்தாய் நிற்கும் என்றபடி. இந்த மூன்று விசேஷணங்களும் ஆழ்வாரிடமிருந்து அவருடைய செவிக்கினிய செஞ்சொறகளான பாட்டுக்களை நேரில் கேட்டு, அப்படியே அவற்றை லோகத்தில் பரவச் செய்தருளிய ஸ்ரீமதுரகவிகளைக் கூறுமென்றும் சொல்லலாம்.

இந்த மூன்று விசேஷணங்களினாலும் ஸ்ரீதேசிகனைத்தான் ஆழ்வார் குறிப்பிட்டார் என்று அஸ்மத் ஸ்வாமி நிர்வஹித்தருளும். 'பாலேய் தமிழர்' என்றது தமிழ் பாஷை ஸம்ஸ்க்ருத பாஷையைப் போலவே ப்ரசஸ்தமானது, நித்யமானது என்றும், எல்லோரும் அதிகரிக்கலான பாஷை என்றும், சித்தரஞ்ஜனத்தோடு வேதாந்தார்த்தங்களைத் தெளிவிப்பதில் இவை ப்ரதானம் என்றும், அனுஸந்திக்கப் பட்டவுடனே எம்பெருமான் திருவுள்ளம் உகக்கும் என்றும் நிரூபித்தது மாத்திரமன்றிக்கே, தம்மை,'சந்தமிகு தமிழ் மறையோன்' என்று த்ரமிட வேதாத்யாயீ என்று அனுஸந்தித்தருளிய ஏற்றம் ஸ்ரீதேசிகனுக்கு மாத்திரமுள்ள பெருமையல்லவா என்றபடி. 'இசைகாரர்' என்றது கீதி பகவத் விஷயமாகில் ப்ரசஸ்தம் என்று நிஷ்கர்ஷித்தது மாத்திரமன்றிக்கே பாடுமவர்கள் கோஷ்டியில் தாம் இடம் பெற்றவர் என்று அனுஸந்திக்கும்படியான பெருமை ஸ்ரீதேசிகனையே சேர்ந்ததல்லவா என்றபடி. 'பத்தர்' என்பதைப் பகவத் பக்தர்கள் என்றாலும் ஆழ்வாருடைய பக்தர் என்றாலும் அந்த இரண்டு அம்சங்களும் ஸ்ரீதேசிகனிடத்தில் பூர்ணமாயிருந்தமை ஸர்வஸம்ப்ரதிபன்னமானது. தெளிய ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிந்தவராகத் தம்மை நிரூபித்துக்கொண்டவர் வேறொருவரு மில்லையே!

நிறைவடைந்தது

No comments:

Post a Comment