Saturday, April 1, 2017

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

அங்கம் 5 களம் 3ன் தொடர்ச்சி

வசிஷ்டர்:-- (இராமரை நோக்கி விரைந்து வந்து,) இராமச்சந்திரா! இராமச்சந்திரா!

இராமர்:-- (தலைநிமிர்ந்து வசிஷ்டரை நோக்கி நமஸ்கரித்து,) சுவாமீ! என் தந்தைக்கு நான் யமனாக முடிந்தேனே!

வசிஷ்டர்:-- இராமச்சந்திரா! எல்லாம் தெரிந்த நீயே, தந்தை இறந்தாரென்று இவ்வாறு வருந்தினால் மற்றவர் பாடு என்னாகும்? பிறப்பு உண்டானபொழுதே இறப்பு நிச்சயம் என்பதை நீ உணராயா? முன்னம் நீ கற்ற தத்துவ சாஸ்திரங்களெல்லாம் என்னவாயின?

அன்னை யெத்தனை யெத்தனை அன்னையோ,
அப்ப னெத்தனை யெத்தனை யப்பனோ,
பின்னு மெத்தனை யெத்தனை பிறவியோ?

யார் கண்டது? மாறிமாறிச் சுழலும் இப்பிறவிச் சக்கரத்தகப்பட்டு தாறுமாறாயலையும் உயிர்களுக்குத் தனிக்கருணைப் பெருமானாகிய எல்லாம் வல்ல இறைவன் ஒருவனைத் தவிர வேறெவரும் பற்றாகார். இவ்வுண்மையை நீ அறியாயா?

துறத்தலு நல்லறத் துறையு மல்லது
புறத்தொரு துணையிலை பொருந்தி மன்னுயிர்க்
கிறத்தலும் பிறத்தலு மியற்கை யென்பதை
மறத்தியோ மறைகளின் வரம்பு கண்டநீ?

உலகப் பற்றனைத்தையும் துறந்து தர்மநெறி தவறாதிருந்து இறைவன் அடியை அடைவதைத் தவிர நமக்கு வேறு என்ன கதி யுள்ளது? அன்றியும் இறப்பதும் பிறப்பதுமே இவ்வுலகிலுள்ள உயிர்களுக்கு இயற்கையென்பதை சர்வ சாஸ்திரமுணர்ந்த நீ மறந்து விட்டனையோ?

உன் தந்தை இறந்தது பற்றி வருந்துகிறாயே! இன்னும் எத்தனை நாள் அவர் உயிர் தரித்திருப்பாரென்று கருதுகின்றனை? உலக வழக்கம்போல் அறுபது வருஷமல்ல, நூறு வருஷமல்ல, அறுபதினாயிரம் ஆண்டு உயிரோடிருந்தாரே! இது போதாதா? இங்ஙனம் நெடுங்காலம் உயிர் வாழ்ந்து, அனேக அரசர்களை வென்று, அனேக உயிர்களைக் காப்பாற்றி, அனேக வகையான உலக இன்பங்களை அனுபவித்து, அழியாப் புகழ் பெற்று, அப்புகழைப் போற்றப் புண்ணியப் புதல்வர் நால்வரைப் பெற்று, அவர்களுக்கு மணமுடித்துக் கண்களால் கண்டு களித்துவிட்டு, நரைதிரையுற்று மூப்புக் காலத்தில் முடிவுற்றார். அவ்வாறாக, நீ ஏதோ அவர் அதி இளம்பருவத்திலேயே மரணமுற்றது போல மனமடிகிறாயே! இது நியாயமா? உன் தந்தை உனக்கு மிகவும் இனியவர் என்றதால் காலம் அவரை விட்டொழியுமா? பிருதிவி முதலிய பூதங்களும் அடுக்கழிந்தழியு மென்றால் மனிதர் மாள்வது ஒரு அதிசயமா?

புண்ணிய நறுநெயில் பொருவில் காலமாம்
திண்ணிய திரியினில் விதியென் றீயினில்
எண்ணிய விளக்கவை யிரண்டு மெஞ்சினால்
அண்ணலே யவிதற் கைய மாவதோ?

புண்ணியம் என்னும் நெய் பெய்து காலம் என்னும் திரி இட்டு விதி என்னும் தீயால் எரியும் ஒரு விளக்குக்குச் சமானம் நமதுடல். நெய்யும் திரியும் முடிந்தால் விளக்கவிவது போல வினையும் காலமும் முடிந்தால் இவ்வுடல் வீழ்வதற்குக் கேட்க வேண்டுமோ? இவ்வுலகிலும் துன்பமேயடைந்து, அவ்வுலகிலும் நரகத்திலாழ்ந்து அவதியுறும் பலர் போலன்றி, உனது தந்தை இம்மையிலும் இன்ப வாழ்க்கையுற்றிருந்தார், மறுமையிலும் சொர்க்க வாழ்வை யனுவித்துக் கொண்டிருப்பார். இதைவிட அவர் அடையக் கூடியதுதான் என்ன? நீ எதைக் குறித்து வருந்துகிறாய்? கானற்சலம் போன்று நிலையற்ற இவ்வுடலுக்கோ நீ வருந்துவது? இறந்தாரை எண்ணி அழுதழுது புரண்டவர்களெல்லாம் என்ன பயனை அடைந்தார்கள்? வேண்டாம். வருத்தமொழிந்திரு.

[பரதர் சீதையை நோக்கி, அவள் கொண்டுள்ள தவக்கோலத்தைக் காணப்பொறாது கையை முகத்திலறைந்து கொண்டு அழுகிறார். அவள் பாதங்களில் வீழ்கிறார். இராமர் அவரைத் தூக்குகிறார். சீதை தலைநிமிர்ந் தெழுகிறாள்.]

பரதர்:-- (சீதையை நோக்கி,) மதனீ! பூவினும் மெல்லிய பட்டாடை உடுத்த தங்கள் அருமைத் திருமேனி (கைகேயியைச் சுட்டிக்காட்டி) இந்தப் பாவி கொடுத்த மரவுரியுடுத்து வருந்தவோ நேர்ந்தது! (கண்ணீர் விட்டுப் பொருமுகிறார்.)

இராமர்:-- சீதா! என்னைப் பிரிந்திருக்கப் பொறாமல் எனது தந்தை உயிர் விட்டனராம்.

சீதை:-- என் மாமாவோ இறந்தனர்! (அலறி விழுகிறாள். மீட்டும் எழுகிறாள்.) ஆ, என் செய்வேன்! என்னைப் புத்திரிபோற் பாவித்துப் பக்ஷத்தோடு பாராட்டி வந்த என் மாமாவை இனி என்று காண்பேன்! மாமா, தாங்கள் அயோத்தியிற் க்ஷேமமாக இருக்கின்றீர்கள், பதினான்கு வருஷம் பர்த்தாவுடன் வனவாசஞ் செய்து மீண்டு அயோத்தி செல்லுங்கால் தங்களைக் காணலாமென்று எண்ணி ஏக்க மற்றிருந்தேனே! என் எண்ணம் அவலமாயிற்றே! அந்தோ! ஆ, தெய்வமே! பிராணபதியோடிருப்பதால், நான் வனவாசத்திலும் மனமகிழ்ச்சியோடிருப்ப துனக்குப் பொறுக்கவில்லையோ? எனது அருமை மாமாவைத் திரும்பவும் காணுவேன் என்ற ஓர் உறுதி மட்டும் உளதாயின், பதினான்கு வருஷமல்ல, அதனினும் பதின்மடங்கதிக காலம் என் பிராணபதியோடு விசாரமின்றி வனவாசஞ் செய்வேனே! இனி நான் என் செய்வேன்?

[கோசலை, கைகேயி, சுமித்திரை மூவரும் வருகின்றனர். சீதை கோசலையைக் கண்டு, ‘ஆ, மாமி!’ என்று அலறி விழுகிறாள். கோசலை அவளைத் தூக்கி எடுக்கிறாள். நால்வரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கதறுகின்றனர். சீதை கோசலையை நோக்கி,] மாமி! தங்களை இவ்வமங்கலக்கோலத்தோடு பார்க்கவும் காலம் வந்ததோ! என் அருமை மாமி! என் கண்கள் செய்த பாவமோ?

கோசலை;-- என் கண்மணீ! என் செய்வது? எல்லாம் விதிப் பயன்.

சீதை:-- (கைகேயியை நோக்கி,) மாமீ! தாங்களும் இவ்விதிக்காளானீர்களே! தாங்கள் என்ன செய்வீர்கள்? எங்கள் காலகதி!

[கைகேயி மௌனமாயிருக்கிறாள். சீதை சுமித்திரையை நோக்கி, ‘ஆ, என் இளையமாமீ’ என்று அலறுகிறாள்.]

சுமித்திரை:-- (சீதையை நோக்கி,) அம்மா, சீதா! காலத்தின் கூத்தால் நாம் இக்கோலமானோம். இனி நாம் சென்றவற்றை நினைத்து வருந்தி மனம் நைவதால் ஆவதொன்றில்லை. அவ்வருத்தத்தைப் போக்குவதற்கான வழியைத் தேடவேண்டும். உனது மாமனார் இறந்ததால் நாம் அடையும் வருத்தம் மாறுவதாயிருந்தால், நீயும் இராமனும் மீண்டும் அயோத்தி வருவதைத் தவிர வேறு வழியில்லை.

இராமர்:-- (கோசலை முதலிய மூவரையும் நோக்கி,) அன்னைமீர்! உங்களுடைய மங்கல வாழ்க்கை அமங்கலமாக பாவி யானோ காரணனாயிருந்தேன்.

கோசலை:-- கண்மணீ! நீ பாவியல்ல. விதியின் செயல். மைந்தா! எம் துயரம் ஒருபுறமிருக்க, நமது நாட்டிலுள்ளார் படுந்துயரம் பகரும் திறமல்ல. நீ அயோத்தி வந்தாலொழிய அவர்கள் துயரம் ஆறாது.

(சுமந்திரர் இராமரைப் பரிந்து பார்க்கிறார்]

இராமர்:-- (சுமந்திரரை நோக்கி,) மந்திரீ! என் தந்தை இவ்வுலக வாழ்வை ஒழித்துச் சென்றனரோ? (அழுகிறார்.)

சுமந்திரர்:-- இராமமூர்த்தி! தங்கள் தந்தையின் உயிரைப் போக்க நான் யமதூதனாகச் சென்றேன். இப்பொழுது அவர் உயிர் மடிந்ததைத் தங்களுக்கு அறிவிக்க இராஜதூதனாக வந்தேன். நான் எவ்வளவு புண்ணியசாலி பாருங்கள்!

இராமர்:-- (பரதரை நோக்கி,) தம்பி, பரதா! நமது அருமைத் தந்தை இறந்து போயினர். அவர் கட்டளையாவது, நீ முடி புனைந்து நிலமாள வேண்டுமென்பது. அதை நீ கேகய நாட்டிலிருந்து வந்தவுடன் அறிந்திருக்கலாம். அறிந்தும், தந்தை கட்டளையையும் அவர் தரித்திருந்த திருமுடியையும் சிரமேற்கொண்டு அரசு வகிப்பது உனது கடமையாயிருக்க நீ அரசர்க்காகாத இம்மரவுரிக்கோலந் தாங்கிய தெதற்கு?

பரதர்:-- (பெருமூச்சு விட்டு,) அண்ணா! தாங்கள் இங்ஙனம் சொல்வது தர்மமாகுமா? தவக்கோலம் எனக்கன்றித் தங்களுக்குத் தகுதியுள்ளதாகுமா? அரசிற்கு உரிமை மைந்தராகப் பிறந்து, உலகிற்கு நன்மையே புரிந்து, உயிர்களனைத்திற்கும் இனியராய், பழிபாவ மொன்றிற்கும் ஆளாகாத உத்தம புருஷர் தாங்களேயன்றோ? நானோ உற்றாரும் உறவினரும் மற்றாரும் வருந்தப் பெரும்பழி விளைத்த பாதகி வயிற்றிற் பிறந்த பெரும்பாதகன்.

நோவ தாகவிவ் வுலகை நோய்செய்த
பாவ காரியிற் பிறந்த பாவி யேன்
சாவ தோர்கிலேன் தவஞ்செய் வேனலேன்
யாவ னாகியிப் பழிநின் றேறுவேன்?

அங்ஙனம் உலகை வருத்திய பாதகி வயிற்றிற் பிறந்த பாவியேன் இதுவரை உயிர் தரித்திருக்கவும் அருகனல்லேன். ஆயினும் உயிராசை கொண்டு உடல் போற்றி வாழ்கின்றேன். இத்தகைய நான் தவஞ்செய்யவும் பின்வாங்கினால் வேறெவ்வாறு என் பழியைப் போக்குவேன்! தங்கள் அன்னை முதலானோர் நாட்டில் வருந்த, தாங்கள் மதனியோடு இக்காட்டில் வருந்த நேர்ந்தது என்னாலன்றோ? நான் மாதவம் பூண்டாலல்லது என்பழி தீருமோ? சக்கரவர்த்தி மாள, தாங்கள் வனத்திலிருந்து மாதவஞ்செய்ய நான் மண்ணாள்வதோ? நான் மரவுரி தரித்திருப்பது தங்கள் விருப்பமன்றாயின், தாங்கள் திரும்பி அயோத்தி வந்து முடி சூடி இராச்சியம் ஆளுங்கள். அவ்வாறு தாங்கள் செய்யின் தந்தைக்கும் பழி ஏற்படாது. தாயின் வஞ்சகமும் மறையும். நானும் மரவுரி யகற்றித் தங்கள் மலரடிக்குத் தொண்டு செய்துகொண்டு அயோத்தியிற்றானே இருப்பேன்.

இராமர்:-- (பரதரை நோக்கி,) தம்பீ! பரதா, நான் கூறுவதைக் கேள். குலமுறையென்றும், அறத்துறையென்றும் பல நியாயங்களை எடுத்துக் காட்டுகிறாயே யொழிய அவைகளனைத்திற்கும் மேலாவது தந்தை தாயர் மொழி யென்பதை முற்றும் மறந்து விட்டனையே! ‘தந்தை சொன்மிக்க மந்திரமில்லை’ என்னும் ஆன்றோர் உரைகளை நீ அறியாயா? எல்லாக் கேள்வியும், எல்லா ஞானமும், எல்லாச் சீலமும், எல்லா மேன்மையும் இருமுது குரவர்களாகிய தாய் தந்தையரின் வாக்கியத்திற்குப் பிறகுதான். நமது தந்தையின் கட்டளையை விட நமக்கு முக்கியமானது எது? தாயார் வரங்கேட்டனர். தந்தையார் வரப்படி எனக்குக் கட்டளையிட்டனர். அவர்கள் இருவரும்கூடி இட்ட கட்டளையை அவர்கள் புதல்வனாகிய நீயே தவிர்க்கலாமோ? புதல்வர்கள் பெற்றோர்க்குப் புகழை நாடியளிப்பதா, பழியைத் தேடி விளைப்பதா? எனது தந்தையைப் பொய்யராக்கி, அதனால் அவர் நரகமடைந்து துன்பமுற நான் நகரிலிருந்து அரசுசெய்து ஆனந்தமடைவதா? தம்பீ, எல்லாவற்றையும் எண்ணிப்பார். உத்தமநெறியாவ தெதுவென்று உனக்கே விளங்கும். நீ சிறிதுகாலம் எனது பிரிவைப்பற்றி வருந்தாது, தந்தையின் கட்டளைப்படி நிலத்தை யாண்டிரு. குறித்த காலமாகிய பதினான்கு வருஷங்களும் கடந்த பிறகு நான் மீண்டும் அயோத்தி வருவேன். அப்பொழுது உனது விருப்பம் எதுவாயினும் அதை நிறைவேற்றுவேன்.

பரதர்:-- அண்ணா! தங்களுடைய வாக்கை வேதவாக்காகக் கொள்ளுகிறேன். ஆனால் தாங்கள் தயைகூர்ந்து சிறுவனாகிய என்னை இராச்சிய உரிமையில் கட்டுப்படுத்தா திருக்க வேண்டுகிறேன். அரசாள்வதற்குரிய உரிமையும் யோக்யதையும் தங்களுக்கே உள்ள தாகையால் தாங்கள் அதை மறுப்பது அழகோ?

இராமர்:-- பரதா! நீ கூறுமாறு அரசு எனக்கே உரியதாயிருக்கட்டும். அதை நான் உனக்குக் கொடுக்கிறேன். பெற்றுக்கொள். அதற்கும் நீ பின்வாங்கலாமோ?

மன்னவ னிருக்க வேயு மணியணி மகுடஞ் சூடு
கென்னயா னியைந்த தன்னானேயது மறுக்க வஞ்சி
அன்னது நினைந்து நீயென் னாணையை மறுக்கலாமோ
சொன்னது செய்தி யைய துயருழுந் தயர்தல் வேண்டாம்.

எனது செய்கையை எண்ணிப்பார். தந்தையார் என்னை மகுடஞ் சூடிக்கொள்ளுமாறு கூறினரே, அவர் இருக்கும்பொழுது நான் ஏன் அரச பாரத்தை ஏற்கவேண்டும்? ஏற்கவேண்டுவது அவசியமன்றாயினும் தந்தை கட்டளையை மறுத்தல் தகாதென்று ஏற்க இசைந்தேன். அங்ஙனமே, தமையனாகிய எனது கட்டளையை நீ நிறைவேற்றுவதன்றி மறுப்பது தகுமோ?

பரதர்:-- அண்ணா! தாங்கள் அவ்வாறு கூறலாகாது. அடியேன்மீது அருள் கூர்ந்து என்னை இரட்சிக்க வேண்டும். (நமஸ்கரிக்கிறார்) தங்கள் கட்டளைக்கு அடங்கி நான் இராச்சிய பாரத்தை ஏற்றுக் கொண்டாலும், உலகம் அதை ஏற்குமோ?

இராமர்:-- பரதா! தாய் தந்தையர் உரைப்படி நான் பதினான்கு வருஷ காலத்தையும் வனத்திற் போக்கி யல்லது அயோத்தியில் அடிவையேன். நான் உனக்குத் தமையன் என்று நீ கருதி என்மீது பக்தி கொண்டிருப்பது உண்மையானால், என் உரையைத் தட்டாமல் இராச்சிய பாரத்தை ஏற்றுக்கொள்.

வசிஷ்டர்:-- (இராமரை நோக்கி,) இராமச்சந்திரா! என்னுடைய கட்டுரையையும் சற்றே கேள். உனது குலமோ சாமானியமானதன்று. முன்னாள் தொட்டு இந்நாள் வரையும் மறுவற்ற மாண்போடு மனு முதலாய் வந்த அருங்குலம். இக்குலத்தில் இதுவரைத் தோன்றி வந்த மாமன்னரெல்லாம் முறைதவறாது அரசாண்டு மாபெரும் புகழை இம்மண்ணுலகில் நிறுத்தி மறைந்து போயினர். அவர்கள் வழி வந்த நீ முறைப்படி முடி புனைந்து உன் முன்னோர் புகழைப் போற்றி வருவது உனக்குப் பெரும் புகழும் கடமையுமாகும். ஆதலால் இந்த க்ஷணமே அயோத்தி வந்து அரசுரிமையை ஏற்றுக்கொள். உனது தந்தை கட்டளையை மீறவேண்டுமே யென்று யோசியாதே.

இதவிய லியற்றிய குரவர்யாரினும்
மதவியல் களிற்றினாய் மறுவில் விஞ்சைகள்
பதவிய விருமையும் பயக்கப் பண்பினால்
உதவிய வொருவனே யுயரு மென்பரால்.

தந்தை, தாய், அரசன், குரு, தெய்வம் என்னும் ஐங்குரவரின் ஆணை வழியே நடக்கவேண்டுவதே நெறி. ஆயினும் இவ்வைம்பெரும் குரவருள், இம்மை மறுமைப் பயன்களை அளிக்கவல்லதாகிய கல்வியைப் போதிக்கும் ஆசாரியன் ஒருவனே மற்றை நால்வரினும் உயர்ந்தவனென்பது சர்வ சாஸ்திர சம்மதம். ஆதலால் உனக்கு ஆசாரியனாகிய நான் உன் தந்தை தாயரினும் மேலானவன் என்பதை மறவாது என் சொல்லை நிறைவேற்று.

இராமர்:-- (வசிஷ்டரை நோக்கிக் கைகுவித்து) சுவாமீ! தாங்கள் அவ்வாறு சொல்வது எவ்வாறு பொருந்தும்?

சான்றவ ராகதன் குரவ ராகதாய்
போன்றவ ராகமெய்ப் புதல்வ ராகதான்
தேன்றரு மலருளான் சிறுவ செய்வனென்
றேன்றபி னவ்வுரை மறுக்கு மீட்டதோ.

ஆன்றோராயினுமென்ன? ஞானமூட்டும் ஆசாரியராயினுமென்ன? ஈன்ற தாய் போன்றவராயினுமென்ன? பெற்ற புதல்வராயினுமென்ன? ஒரு காரியத்தைச் செய்வதாக ஒப்புக் கொண்டபின் அதைச் செய்யாது விடுவது செம்மை நெறி ஆகுமோ? பிரம புத்திரரே! தாய் விரும்பியது, தந்தை கட்டளையிட்டது. அதை நான் முடிப்பதாக மனமார ஒப்புக்கொண்டேன். அவ்வாறு ஒப்புக் கொண்டதைச் செய்யாவிடின், நாயேன் நாயினும் கடைப்பட்டவனாவேனே!

பரதர்:-- சரி, அயோத்தியின் அரசுரிமையை யாவர் ஏற்கினும் ஏற்கட்டும். எனக்கு அரசு வேண்டாம். தங்களோடு வனத்திலுறைந்து மாதவஞ் செய்வேன்.

(ஆகாயவாணி அந்தரத்தில் மறைந்து நின்று,)

இராமர் தந்தை சொற்படி மாதவம் பூண்டு பதினான்கு வருஷம் வனத்தில் வசிப்பதே சரி. பரதா! நீ அயோத்தியின் அரசுரிமையை ஏற்று பதினான்கு வருஷம் இராச்சிய பரிபாலனம் செய்யக் கடவாய்.

இராமர்:-- (பரதர் கரத்தைப் பற்றி,) தம்பி, பரதா! தருமதேவதையின் ஆணையையும் கேட்டனையா? நமக்கோ, வேறெவர்க்கோ ஒரு பெருநன்மை பயக்கவே இச்சம்பவம் நிகழ்வதாயிற்றென நினைக்கிறேன். அன்றேல் இவ்வாறு ஒரு தெய்வீக வாக்குப் பிறக்கக் காரணம் இல்லை. ஆதலால் நானும் உன்னைக் கேட்டுக் கொள்கிறேன். நீ அயோத்தி சென்று நான் மீண்டு வருமளவும் அரசு பாரத்தை வகித்துச் செங்கோல் செலுத்திப் பிரஜைகளைப் பரிபாலித்திரு. உனக்குச் சர்வ மங்களமும் உண்டாகக் கடவது.

பரதர்:-- (வாடிய முகத்தோடு தலை தாழ்த்து,) தங்கள் ஆணையும் தெய்வ சம்மதமும் அதுவானால் யான் யாது செயற்பாலேன்? தங்கள் திருவாணையைச் சிரமேற்றாங்கி, யான் செல்கிறேன். ஆனால், யான் கூறுவது ஒன்றுண்டு. தங்கள் திருப்பாதுகைகளை அடியேனிடம் தந்தருளுங்கள். அடியேன் அயோத்திக்கு அருகே வசித்துக் கொண்டு, தங்கள் பாதுகைகளிடம் இராச்சியத்தை ஒப்புவித்து, தாங்கள் கூறியவாறு பதினான்கு வருஷமும் பொறுத்திருப்பேன். பதினான்காவது வருஷத்துக் கடைநாளில், தாங்கள் வந்து முடிசூடிக் கொள்ளாவிட்டால், மறுநாள் உதயத்திலேயே நான் அக்கினி வளர்த்து, பழிக்கும் பாவத்துக்கும் இடமாகிய இவ்வுடலை அக்கினி தேவனுக்கு இரையாக்கி விடுவேன். இது சத்தியம், சத்தியம், சத்தியம்! முக்காலும் சத்தியம்! தங்கள்மீது ஆணை! இது சத்தியம்.

இராமர்:-- தம்பி, நல்லது.

(இராமர் தமது பாதுகையை பரதரிடம் கொடுக்கின்றார். பரதர் அவைகளை வணக்கமாய் வாங்கி, முகத்தில் ஒற்றிச் சிரத்தில் வைத்துக் கொள்கிறார். பிறகு இராமரை நமஸ்கரித்துவிட்டுச் செல்கிறார்.)

தொடரும்.

No comments:

Post a Comment