வெள்ளி, 31 மார்ச், 2017

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

இராம நாடகம்
பாதுகா பட்டாபிஷேகம்

அங்கம் 5  களம் 3

 

மூன்றாங் களம்

இடம்:-- சித்திரகூட பர்வதம்
காலம்:-- பகல்
பாத்திரங்கள்:-- இராமர், இலக்ஷ்மணர், சீதை, பரதர், சத்ருக்நர், வசிஷ்டர், சுமந்திரர், குகன், கோசலை, கைகேயி, சுமித்திரை, மற்றும் சிலர்.

(சித்திரகூட பர்வதத்தின் ஒருபுறத்தில் அமைக்கப் பெற்ற பள்ளி ஒன்றில் இராமரும் சீதையும் அமர்ந்திருக்கின்றனர். இலக்ஷ்மணர் ஒரு புறமாக நின்றுகொண்டிருக்கிறார். மணற்புழுதி ஆகாயத்தில் நிறைந்து வருகிறது. யானைகள் குமுரும் ஒலியும், குதிரைகள் கனைக்கும் சப்தமும், சேனைகளின் ஆரவாரமும் கேட்கப் படுகின்றன)

இலக்ஷ்மணர்:-- (கண்ணைக் கையால் மறைத்துக்கொண்டு)ஆ, இதென்ன புழுதிப்படலம் கண்ணை மறைக்கின்றது! யானை குதிரைகளிடும் ஒலியும் ஆவாரமும் காதைத் துளைக்கின்றன! எவரேனும் மன்னர் யானை சேனையுடன் வருகின்றனரோ? இம்மலையிலேறிப் பார்ப்போம். (மலை மீதேறிப் பார்க்கிறார்.) ஆகா! நாம் நினைத்தது போலவேயிருக்கின்றதே! எவரோ அரசர்தாம் அளவற்ற சேனையோடு வருகின்றனர். ஆனால், இவ்வளவு பெருஞ்சேனை அயோத்தி யரசர்க்கன்றி மற்றெவ் வரசர்க்குண்டு? இல்லையே, ஆதலால் வருவது பரதனாய்த்தான் இருக்கவேண்டும். என்ன அநியாயம்! என்ன தைரியம்! வல்லடி வழக்காக இராஜ்யத்தைக் கவர்ந்துகொண்டது மன்றி, நமதண்ணாவின் மீது படையெடுத்துமோ வருகின்றான், பரதன்! முடிபுனைந்து கொள்ள வேண்டுமென்று நெடுநாளாய்த் தன் மனத்தில் வைத்திருந்த கொடுங்கருத்தைப் படுநீலியான தனது தாயால் முடித்துக்கொண்ட முழு வஞ்சகனல்லவா அவன்! நன்று. அயோத்தியில் என் வில்லாண்மையைக் காட்டத் தவறிவிட்டேனேயென்று வருந்தினேன். அந்த வருத்தம் நீங்க இங்கு இவ்வருஞ்சமயம் வாய்த்தது. (மலையிலிருந்து குதிக்கிறார். இராமரிடம் ஓடி வருகிறார். இராமர் அவர் வரும் விரைவைக் கண்டு ஆச்சரியத்தோடு அவரைப் பார்க்கிறார். இலக்ஷ்மணர் இராமரை நோக்கி,) அண்ணா, கேட்டீர்களா, சேனைகளின் ஆரவாரத்தை? நம்மை இங்கடைவித்த பரதன் நம்மீது படையெடுத்து வருகிறான். பாருங்கள். (பரபரப்பாக உடைவாளை இடையில் வைத்துக் கட்டுகிறான். அம்பறாத்துணியை முதுகில் வைத்து வரிகிறான். வில்லைக் கையில் ஏந்துகிறான். மீட்டும் இராமரை நோக்கி,) அண்ணா! தங்களை எதிர்க்கும் கருத்தோடு வரும் அந்தப் பரதனது பெருத்த சேனை வலியும், அவனது பருத்த தோள் வலியும், அவன் வளைத்த வில் வலியும் இத்தகையதென்று நான் ஒருத்தனாய் எதிர்த்து நின்றறிகிறேன். அவனது சேனைத் திரளைச் சிதைத்து, யானைச் சிரங்களை அறுத்து, குதிரைச் சிரங்களைத் துணித்து, யாவற்றையும் குவியல் குவியலாய்க் குவித்து, இரத்த வெள்ளத்தில் மிதக்க விடுகிறேன். அண்ணா! அவனது உடலைப் பிளந்து குடலைப் பிடுங்கி எறிகிறேன். அவன் ஏறி நின்று போர் புரியும் தேர்த்தட்டில் பேய்க்கணங்கள் நின்று அவன் உதிரத்தைக் குடித்துக் கூத்தாடுவதை நீங்கள் கண்ணாற் காண்பீர்கள். காளிகளும், கூளிகளும் இரத்தக் கடலில் நீந்தி தங்களெதிரே வந்து “அயோத்திக்கரசர் எங்கள் இராமமூர்த்தியே” என்று கீதம் பாடச் செய்கிறேன். பரதனது சேனையின் இரத்த வெள்ளத்தால் சப்த சமுத்திரங்களும் ஒன்றாகி ஓவென்றலறிச் சப்திப்பது தங்கள் திருச்செவியில் கேட்கச் செய்கிறேன். அவன் ஏறிய தேர் ஒடியவும், ஏந்திய வில் முறியவும், செலுத்திய குதிரைகள் மடியவும் செய்கிறேன். எனது கூரிய அம்புகளால், பரதன் மார்பையும், சத்ருக்நன் மார்பையுந் துளைத்து, அத்துளைகளின் வழியே காட்டுப் பறவைகள் இரத்த பானம் பண்ணும்படிச் செய்கிறேன். ஒரு ஸ்திரீயின்மீது கொண்ட காதலால், அறிவிழந்து அரசர் கொடுத்த நகரை அவன் ஆளுவதற்கு முன், நான் என் அம்பால் அவன் உயிரிழந்து அருநரகை ஆளுமாறு செய்கிறேன். பெற்ற புத்திரனைப் பிரிந்து உற்ற துயரால் கோசலைத் தாயார் உயிர் பதைக்க, கேகயன் மகள் நாட்டைக் கவர்ந்து எக்களிப்படைவதா பார்க்கிறேன்! பட்டங் கட்டிப் பாராள எண்ணியிருக்கும் அப்பரதன் உடல் படுகளத்திற் கிடந்து பதைத்துருளுவதை அப்படுபாவி கண்டு தலைவிரி கோலமாய்ப் பார்மிசை வாழ்ந்து பாடியழுது பரிதவிக்கச் செய்யாவிட்டால் என் ஆண்மைத் திறம் என்னாகும்! அண்ணா! ஏழுலகமும் அவனுக்குத் துணை வரினும் வரட்டும். நான் ஒருவனே, என் கையம்பும் தங்கள் மெய்யன்பும் துணையாகக் கொண்டு அனைவரையும் அழித்தொழித்து உருத்திர மூர்த்தியைப் போல் ஆனந்தத் தாண்டவம் செய்கிறேன்.

இராமர்:-- தம்பீ! பதறாதே. எக்கருமத்தையும் எண்ணித் துணியவேண்டும்.

இலக்குவ வுலகமோ ரேழு மேழுநீ
கலக்குவ னென்பது கருதி னாலது
விலக்குவ தரிதது விளம்பல் வேண்டுமோ
புலக்குரித் தொருபொருள் புகலக் கேட்டியால்.

இலக்ஷ்மணா! நீ முன்கூறிய வனைத்தையும் செய்ய வல்லவன் என்பதிற் சந்தேகமில்லை. ஏழுலகத்தையும் நீ கலக்கப் புகுந்தால் உன்னை விலக்க ஒருவராலும் ஆகாதென்பதைச் சொல்லவுமா வேண்டும்? ஆனால் உன்னைப்போன்ற நிகரற்ற வீரர்கள் எக்கருமத்தையும் நடுவுநிலையுள்ள மனத்தோடு ஆராய்ந்து பிறகு செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் பராக்கிரமம் பயன் பெறும். நன்றாய் எண்ணிப் பார். நம்முடைய குலத்து முன்னோர்கள் எவரேனும் நியாய நெறி திறம்பி நடந்தவருண்டா? சூரியகுலத்து வந்த தொல்லோர்களில் எவரேனும் ஒருவரைச் சுட்டி, ‘இவர் இன்னபொழுது இன்னவகையில் நெறி தவறினார்’ என்று கூறமுடியுமா? பரதன் யார்? அந்தப் பழுதற்ற குலத்தில் வந்தவனல்லவா? அவன் எங்ஙனம் நீதி முறை தவறி நடப்பான்? ஒருநாளும் நடவான். அது குறித்து உனக்கு அணுத்துணையும் ஐயம் வேண்டா. வேதம் சொல்லும் நெறியெல்லாம் பரதன் செல்லும் நெறியாம் என்பதை அறி. அவனது அரும் பெருங் குணங்களை அவனுக்குமுன் பிறந்த நான் நன்கறிவேன். அவனுக்குப் பின்பிறந்த நீயும் நன்கறிவாய். ஆனால் என்மீதுள்ள அன்பின் மிகுதியால் உனது உணர்வு தடுமாறி உண்மையை உணரவொட்டாமல் உன்னைத் தடுக்கிறது.

பெருமக னென்வயிற் பிறந்த காதலின்
வருமென நினைகையும் மண்ணை யென்வயின்
தருமென நினைகையுந் தவிரத் தானையால்
பொருமென நினைகையும் புலமைப் பாலதோ?

பெருமை பொருந்திய பரதன் என்னிடத்து வைத்துள்ள அன்பின் பெருக்கால் என்னைப் பார்க்க வருவான்; அல்லது குலத்தில் முன் பிறந்தானே நிலத்தை ஆள வேண்டு மென்ற மரபைக் கருதித் தான் பெற்ற பூமியை என்இடமே சேர்க்க வருவான். அவ்வாறன்றி என்னோடு யுத்தம் புரிய வருவானென்று கருதுவதும் அறிவுடையார்க்கடுக்குமா? அயோத்தியில் எனக்கு முடிபுனைய நாள் குறித்த காலத்திலும் அதற்குப்பின் நேர்ந்த சம்பவங்கள் நிகழ்ந்த காலத்திலும் பரதன் அயோத்தியில் இல்லை என்பதை நீ அறிவை. ஆதலால் அவன் கேகய நாட்டினின்றும் திரும்பி அயோத்தி வந்தபிறகே நடந்தத்தனையும் அறிந்திருக்கக் கூடும். அங்ஙனம் அறிந்த பிறகு யான் வனஞ் சென்றது குறித்து வருந்தி என்னை மீட்டும் அயோத்திக் கழைத்துச்சென்று முடி சூட்டுவிக்கலாம் என்று கருதி வரலாகாதா? இன்றேல் வேறு எக்காரணத்தால் அவன் இங்கு வரக்கூடும்? அவன் முடிசூடிக் கொள்வதை நாம் தடுத்திருந்தால் நம்மை எதிர்த்து வருகிறானென் றெண்ணுதல் கூடும். அவ்வாறில்லை. ஆதலால், பலர்கூடி மன்றாடிப் பலவந்தமாய் என்னைஅயோத்திக் கழைத்தால் நான் மனமிரங்கி வந்துவிடுவேனென்று கருதி குடிபடைகளோடு வருகிறான் போலிருக்கிறது. இவைகளை யோசியாமல் நீ அவன் என்னோடு யுத்தம் புரிய வருகிறனென்று கொண்டு மெத்தக் கோபிக்கின்றனையே! இது நியாயமா? சற்றே பொறுத்துப் பார். நான் சொல்வதின் உண்மை விளங்கும். இதோ அவனும் நெருங்கி வந்துவிட்டான் போலிருக்கிறது.

{பரதரும் சத்ருக்நரும் கூப்பிய கரத்தராய், அதிவேகமாய் ஸ்ரீராமரை நோக்கி வருகின்றனர். அவர்களுக்குப் பின்னே குடிபடைகள் கூட்டமிட்டு வருகின்றனர். இராமர் பரதரையும் சத்ருக்நரையும் கூர்ந்து நோக்குகின்றார். அவர்களிருவரும் கண்ணீர் வடித்து முகம் வாடி வருவதைக் காண்கிறார்}

இராமர்:-- (இலக்ஷ்மணரை நோக்கி,) தம்பீ! சேனையைக் கண்டு நீ சீறிச் சினந்தனையே! பரதன் வரும் போர்க்கோலத்தைப் பார்.

(பரதரும், சத்ருக்நரும், இராமரண்டை வந்து அவர் பாதங்களில் வீழ்ந்து பணிகின்றனர். சீதை சற்று தூரத்தில் வேறெதையோ கவனித்துக் கொண்டிருக்கிறாள். இராமர் அவர்களைக் கையாலெடுத் தணைத்து அவர்கள் மேனியைக் கூர்ந்து கனிந்து பார்க்கின்றனர்.)

பரதர்:-- (இராமரை நோக்கி,) அண்ணா! தங்களுக்கு இது தர்மமாகுமா? தாங்கள் கருணையை இங்ஙனம் கைவிடலாகுமோ? குலமுறையைக் குலைக்கலாமோ?

இராமர்:-- தம்பி, பரதா! என்ன கோலம் கொண்டுள்ளனை! இது உனக்கேற்ற கோலமல்ல. கேகய நாட்டிலிருந்து எப்பொழுது வந்தனை? அயோத்தியில் யாவரும் க்ஷேமமா? தந்தையார் சௌக்கியமாயிருக்கின்றனரா? அதை முன்கூறு.

பரதர்:-- அண்ணா! என் சொல்வேன்? தங்கள் பிரிவென்னும் பிணி மிகுந்து, என்னைப் பெற்றவள் கேட்ட வரமென்னும் வெய்ய கால பாசத்தா லிழுப்புண்டு, நமது தந்தையார் விண்ணுலகடைந்துவிட்டார்.

இராமர்:-- ஆ! தந்தை இறந்தோ போயினர்! ஏ, ஜகதீசா!

[சோகித்து வீழ்கிறார். சீதையும் கீழே வீழ்கிறாள். இலக்ஷ்மணர் அவரைத் தூக்கி இருத்துகிறார். இராமர் சற்றுநேரம் தலையைக் கையிற்றாங்கி, நிலத்தை நோக்கி நெடுமூச்செறிகிறார். பிறகு,]

இராமர்:-- தந்தாய்! தமியேமை விட்டு எவ்வாறு சென்றீர்! அந்தோ!

நந்தா விளக்கனைய நாயகனே! நானிலத்தோர்
தந்தாய் தனியறத்தின் தாயே தயாநிலையே
எந்தாய் இகல்வேந்த ரேறே யிறந்தனையே
அந்தோ வினிவாய்மைக் காருளரே மற்றையர்.

தூண்டா விளக்கனையாய்! எம் தலைவா! உலகிற்கெல்லாம் தந்தை போல்வாய்! தர்மத்திற்குத் தாய் போல்வாய். தயைக்கிருப்பிடமே! தரணியாள் வேந்தர்க்கெல்லாம் வேந்தே! தாங்கள் இவ்வுலகை விட்டுச் சென்றீர்களே! இனி சத்தியத்திற்குற்ற துணையாவர் யாருளர்? தங்கள் நான் இனி என்று காண்பேன்? தவத்தாற் சிறந்து தூயோர் உரைப்படி வேள்வி செய்து என்னைப் பெற்றுத் தாங்கள் பெற்ற பலன், தங்கள் ஆருயிரை இழந்ததுதானோ? இந்தப் பூபாரத்தை நான் சுமக்கக் கொடுத்துத் தாங்கள் இளைப்பாறும் வகை இதுவோ? தங்களுக்கு யமனாகவோ நான் தங்கள் முதல் புதல்வனாய் உதித்தேன்!

தேனடைந்த சோலைத் திருநாடு கைவிட்டு
கானடைந்தே னென்னத் தரியாது காவலநீ
வானடைந்தாய் நானின்னு மிருந்தேனிவ் வாழ்வுகந்தே
ஊனடைந்த தெவ்வர் உயிரடைந்த வெள்வேலோய்

அயோத்தியை விட்டு நான் அரணியம் வந்ததற்காற்றாது உயிர் நீத்தீர்களே! யான் இன்னும் இவ்வுலக வாழ்க்கையை விரும்பி உயிர் தரித்திருக்கிறேனே! ஆ! என்ன கொடுமை!

[மயங்கி வீழ்கிறார். பரதர் அவரைத் தூக்கி எடுக்கிறார். வசிஷ்டர் முதலியோர் வருகின்றனர்]

வசிஷ்டர்:-- (இராமரை நோக்கி விரைந்து வந்து,) இராமச்சந்திரா! இராமச்சந்திரா!

இராமர்:-- (தலைநிமிர்ந்து வசிஷ்டரை நோக்கி நமஸ்கரித்து,) சுவாமீ! என் தந்தைக்கு நான் யமனாக முடிந்தேனே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக