திங்கள், 13 பிப்ரவரி, 2017

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி

சுலோகம் 15

ஆமோதவத்யபி ஸதா ஹ்ருதயங்கமாபி
ராகாந்விதாபி லளிதாபி குணோத்தராபி |
மௌளிஸ்ரஜா தவ முகுந்தா கிரீடபாஜா
கோதே பவத்யதரிதா கலு வைஜயந்தீ || (15)

மல்லிநா டாளு மயிலே வனமாலை
மெல்லியலு நன்மணமு மேவுகினும் -- அல்லனையான்
வேலைநிகர் மார்பமுற வேய்ந்தளக நீதரும்பொன்
மாலைமுடி மன்னியதம் மா.         (15)

பதவுரை

கோதே -- கோதாய்! வைஜயந்தீ -- வனமாலை; ஸதா -- எப்பொழுதும்; ஆமோதவத்யபி -- பரிமளம் நிறைந்து சிரிப்பு விகாஸத்தோடு கூடியிருந்தும்; ஹ்ருதயங்கமாபி -- திருமார்பில் இருந்துகொண்டு மனதை ஹரிப்பதாயிருந்தும்; ராகந்விதாபி -- செவ்வி மாறாமலும் பெருமாள் திருமார்பில் மிக்க ராகத்தோடும்; லளிதாபி -- மிகவும் ஸுகுமாரமாயும்; குணோத்தராபி -- உயர்ந்த குணங்களை (நாறுகளை) உடையது; முகுந்த கிரீட பாஜா -- மோக்ஷஸுகத்தை அளிக்கும் பெருமாள் கிரீடத்தை அடைந்த; தவ மௌளிஸ்ரஜ -- உன்னுடைய கூந்தலை அலங்கரித்த மாலையால்; அதரிதா பவ கலு -- கீழே போனதாக ஆகிவிட்டதல்லவா?

அம்மா கோதாய்! பெருமாள் திருமார்பில் ஸர்வகாலத்திலுமுள்ள வைஜயந்தீ என்னும் வனமாலையானது, எப்பொழுதும் பரிமளத்தோடும், ஸந்தோஷ மலர்ச்சியோடும், செவ்வியோடும் பெருமாள் திருமார்பை அலங்கரிப்பதில் ராகத்தோடும், ச்ரேஷ்ட குணங்களோடும், ஸௌகுமார்யம் என்னும் மார்த்தவத்தோடும் கூடி பெருமாள் திருமார்பிலேயே வசித்துக்கொண்டு மனத்துக்கினியதாயிருந்தாலும், அது அவர் திருமுடியிலுள்ள கிரீடத்தை அடைந்த உன் சிரோமாலையால் கீழாக்கப்பட்டதே!

அவதாரிகை

(1) என்னை ஈச்வரீயென்னலாமோ? எனது உயிரும் அம்சியுமான பெரிய பிராட்டியாரல்லவோ ஈச்வரீ? அம்மா! உன்னை ஈச்வரீ என்று அழைக்க என்ன தடை? மோக்ஷத்தை அளிக்கும் முகுந்தனான ஸர்வேச்வரரின் கிரீடத்தை உன் சிரோமாலை அடைந்ததே? உன் சிரஸுக்கு ஈச்வர கிரீடம் கிடைத்தாலென்ன? உன் சிரோலங்காரமான மாலைக்கு அது கிடைத்தாலென்ன?

(2) ஆண்டாள் சரித்திரத்திலும் திருக்கல்யாணத்திலும் மாலைக்குத்தான் ப்ரதான்யம். அநேகம் ச்லோகங்களில் இங்கே கோதைமாலையின் ஸ்துதிமாலை. இது சூடிக்கொடுத்த மாலையின் துதியென்ன வேணும். அந்த மாலைதானே இம்மிதுனத்தைச் சேர்த்துவைத்த க4டகவஸ்து! புருஷகாரத்திற்கும் புருஷகாரமாயிற்று. க4டகர் சிறப்பினும் மிக்கதுண்டோ? பரமான ப்ரஹ்மவித்யையை ப்ரதிஜ்ஞையுடன் பேச ஆரம்பித்த முண்டகோபநிஷத்து மேலே "ஆகையால் க்ஷேமத்தை விரும்புகிறவன் ஆத்மக்ஞனான ஆசிரியனையல்லவோ அர்ச்சிக்க வேண்டும்" என்றது. 'தஸ்மாத்' என்று ஹேதுபுரஸ்ஸரமாய்ப் பேசுவதோடு த்ருப்தியில்லாமல் 'ஹி' என்று ப்ரஸித்தியையும் ஹேதுவையும் காட்டும் பதத்தையும் சேர்த்துக் கொண்டது. "தஸ்மாத் ஆத்மக்ஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம:" மதுரகவி காட்டும் மதுரமார்க்கம் நல்வழியான தொல்வழி

(3) முன் ச்லோகத்தில் 'நீ சூடிய மாலை வந்து திருமுடியில் ஏறி கிரீடம் பெற்றதும், வைஜயந்தியில் மொய்த்துக் கொண்டிருந்ததை விட்டு, உன் மாலையின் பரிமளாதிகளால் மேலே இழுக்கப்பட்டு அங்கே சூழ்ந்து சுழன்று ஆடிப் பாடுகின்றன' என்றார். புதிதாக கிரீட மாலைக்கு வந்தால் வரட்டும்; கையில் கிடைத்து ஸித்தமான உத்தமமாலையாகிய வைஜயந்தியை அலக்ஷ்யம் செய்து தாழ்வாக்குமோ? இது என்ன பக்ஷபாதப் பேச்சு? பொய்த்துதி? இதற்கும் பதில் கூறுகிறார்.

கோதே! -- நீ பாமாலை பாடிக்கொண்டே பூமாலை தொடுத்துக் கட்டிச் சூடிக்கொடுத்தாய். உன் தோழிகளும் ப்ரஜைகளுமான உன் தோட்ட வண்டுகள் உன் பூமாலையைச் சுற்றி ஆடிப்பாடி வந்தன; உன்னை அநுகரித்தன.

வைஜயந்தீ -- வனமாலையானது பஞ்சபூதங்களையும் அபிமானிக்கும் நித்யஸூரியான சேதன தத்துவம். இப்படிக்கு உத்க்ருஷ்டமான சேதனமாலை உன் பூமாலையால் ஜயிக்கப் பட்டது. ப்ருந்தாவனத்து கோபாலனுக்கு இதுவே திருமார்புக்கு அலங்காரம். ஒருகால் குந்துமணியும் சேரலாம்.

ஸதா -- எப்பொழுதும். ஆமோதவத்யபி -- பரிமளம், ஸந்தோஷவிகாஸம். சேதனமான அபிமானி தேவதையானதால் ஸந்தோஷமும் உண்மையாகும்.

ஹ்ருதயங்கமாபி -- ஹ்ருதய தேசத்திலிருப்பது. ஹ்ருதயத்துக்கு இனிதே.

ராகாந்வி தாபி -- வாடாத மாலை புஷ்பராகம் . மாறுவதேயில்லை. திருமார்பில் ராகம் குறைவதே இல்லை திருமார்பில் ராகமில்லாவிட்டால் இளப்பம் செய்யக் காரணமேற்படலாம்.

லளிதாபி -- மார்த்தவ ஸௌகுமார்யங்கள் குறைவதேயில்லை.

குணோந்ததாபி -- புஷ்பங்களின் உயர்த்தி குறையாவிடினும் மாலையின் நார்கள் (குணங்கள்) கெடுகின்றனவோயென்றால், நார்கள் ஸர்வோத்தரமாகவேயுள.

மௌளிஸ்ரஜா -- ஓர் குறைவுமில்லையென்றால், கீழாவதற்குக் காரணம்தான் என்ன? வைஜயந்தீ பெருமாள் திருமுடியிலும் ஏறவில்லை, உன் மௌளியிலும் ஏறப்பெறவில்லை. இந்த மாலை உன் மௌளியில் சூடப்பட்டுப் பெருமாள் முடியையும் சூடுகிறது. இந்த மாலை ஈச்வரீ ஈச்வரர் இருவர் முடியிலும் சம்பந்தம் பெற்றது. ஸ்தானத்தால் உயர்த்தி பெற்றதல்லவோ! மற்ற தாரதம்யத்தை நாம் நினைக்க வேண்டாம். பேசவேண்டாம். மௌளி உத்தம அங்கமல்லவோ, மார்புக்கு உயர்ந்ததன்றோ?

தவ -- ஈச்வரீயான உன் மௌளி சூடியது, அங்கிருந்து.

முகுந்த கிரீட பாஜா -- பெருமாள் திருமேனியிலேயே யல்லவோ ஸ்தானங்களின் உத்தமத்வமும் அதரத்வமும் காட்டவேணும்! முகுந்தன் மோக்ஷப்ரதன். ஸர்வேச்வரன்தான் மோக்ஷப்ரதன். அவன் கிரீடத்தில் சூடப்பட்டது இம்மாலை. கிரீட ஸம்பந்தம் உத்தமமல்லவோ? மாலைகளுக்குள் ஆதிராஜ்ய ஸூசனம் அந்த ஸம்பந்தம்.

அதரிதா -- கீழாய்ச் செய்யப்பட்டது. திருமுடியில் கிரீடத்திலுள்ள மாலைக்குக் கீழேயுள்ளதுதானே திருமார்பு மாலை?

பவதி கலு -- ஆகிறது அல்லவா? இது எல்லோரும் அறியும்படி ஸ்பஷ்டம்தானே! இங்கே ஓர் ரஸமுண்டு. பகவத் கைங்கர்ய ரஸிகர் மற்றெல்லோருக்கும் தாழ்மையையே ஆசைப்படுவர். தாழ்மை கிடைத்ததும் 'இன்றுதான் பிறந்தோம்' என்கிற நினைப்பு வருவதை 'அதரிதா பவதி' என்று சேர்த்துப் பணிப்பால் விளக்குகிறார். கோதை சூடிய மாலை சேதனமல்லாததால் அதற்கு அந்தத் தாழ்மை ஆசையில்லை. மேலும் பெருமாளாக அதைத் தலையில் சூடிவிட்டார். நித்யஸூரியான வைஜயந்தி தேவதை தாழ்மையையே ஸத்தையாக மதித்தார். (15)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக