வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி

சுலோக‌ம் 14

 

சுலோகம் 14

த்வத்புக்த மால்யஸுரபீக்ருத சாருமௌளே:
த்யக்த்வா புஜாந்தரகதாமபி வைஜயந்தீம்|
பத்யுஸ்தவேஶ்வரி மித:ப்ரதிகாதலோலா:
பர்ஹாதபத்ர ருசிமாரசயந்தி ப்ருங்கா:|| .14.

வண்டினமான் மார்பின் வனமாலை கைவிட்டு
மண்டிநீ சூடியருண் மாலைமுடி -- யண்டி
யடையச் சுழலுதனி னன்புடையோர் பீலிக்
குழைநிழலி லாள்தல்குறிக் கும். .14.

பதவுரை

ஈஶ்வரி -- ஈச்வரியே! ப்ருங்கா -- வண்டுகள்; புஜாந்தரகதாமபி வைஜயந்தீம் -- திருமார்பில் இருக்கும் வஹஜயந்தி என்னும் வனமாலையை; த்யக்த்வா -- விட்டுவிட்டு; மித:ப்ரதிகாதலோலா -- ஒன்னுக்கொன்று மேல்விழுந்து பக்ஷங்களையடித்துக்கொண்டு சஞ்சலமாய் சுற்றிக்கொண்டு; தவ பத்யு: -- உன் பதியினுடைய; த்வத்புக்த மால்யஸுரபீக்ருத சாருமௌளே -- உன்னால் சூடப்பட்ட மாலையின் வாசனை ஏறிய திருமுடிக்கு; பர்ஹாதபத்ர ருசிம் -- மயில்தோகையால் அமைந்த குடை போன்ற சோபையை; ஆரசயந்தி -- உண்டு பண்ணுகின்றன.

அம்மா ஈச்வரியே! ஆண்டாளே! வண்டுகள் உன் நாயகன் திருமார்பிலுள்ள வைஜயந்தி வனமாலையை விட்டுவிட்டு, நீ சூடிய மாலையால் பரிமளமாய்ச் செய்யப்பட்ட உன் நாயகன் திருமிடிக்கு மேல் தாங்கள் ஒன்றின் மேலொன்று இறக்கைகளை அடித்துக்கொண்டு ஒன்றையொன்று மோதிக்கொண்டு சுற்றிச் சுழன்றுகொண்டு மயில்தோகை போன்ற குடையின் ஆகாரமான சோபையைச் செய்கின்றன.

அவதாரிகை

அநந்தரென்னும் சேஷர் குடைக்கைங்கர்யம் என்னதே என்று முன்வருவார். மற்றொருவரும் அப்பணியைச் செய்ய இடம் கொடார். தம் திருமேனியைக் குடையாக ரசனை செய்துகொள்ளுவார் என்று முன் சுலோகத்தில் ஸூசிப்பிக்கப் பட்டது. ஆண்டாள் திருக்கல்யாணத்தில் யார் குடை பிடிக்கிறார்? அல்லது யார் குடையாகிறார்? நாகரா அல்லது வேறு யார்? அநந்தர் குடையாகவில்லை. ஆண்டாள் பூந்தோட்டத்து ஸ்நேகமுள்ள வண்டுகளே ஆசைப்பட்டுக் குடையாகின்றன. குடையே சுற்றும் விசிறியுமாகிறது. இந்த வண்டுக் கூட்டத்தாலமைந்த குடை, பாடும் குடையுமாயிற்று. சுற்றிச் சுழன்றுகொண்டு கல்யாணப் பாட்டுப் பாடுகின்றன. தங்களுக்கும் பூந்தோட்ட ப்ரியஸகியும், ஈச்வரியுமான கோதையின் வதுவையில் மங்கள வாத்யகோஷம் செய்கின்றன. பல்லாயிரம் சேஷர்களாக வண்டுகள் கூடி தங்களையே மயில்தோகைக்குடைபோல மாப்பிள்ளை திருமுடிக்குமேல் சித்ரவர்ணக் குடையாக ரசனை செய்துகொண்டு சுற்றிச் சுழன்று பறந்துகொண்டு ஆனந்த பரவசமாய் நர்த்தனமும்கானமும் செய்கின்றன. மங்களகான கைங்கர்யத்தை இந்த வண்டுகள் மகிழ்ந்து தாமாகவே செய்வதை 16ம் சுலோகத்தில் ஸாதிக்கப் போகிறார்.

(2) ஸகிகள் பரிஹாஸப் பேச்சுகளை இந்த வண்டு ஸகிகள் பொய்யாக்குகின்றன. பூந்தோட்டத்தில் கோதை ப்ரியமாய் வளர்த்த வண்டுகள். ராமாவதாரத்தில் பெருமாள் காடு போகையில் மரங்கள், புஷ்பங்கள், அங்குரங்களெல்லாம் வாடின. பக்ஷிகளும் 'வேண்டாம், வேண்டாம்' என்று கதறி மறித்தன. 'எந்த தண்டகாவனத்தில் வ்ருக்ஷங்களும் ம்ருகங்களும் எனக்கு பந்துக்களோ' என்று உத்தரராம சரிதத்தில் ராமன் வார்த்தை. பூந்தோட்டத்தில் மரங்களொடும் மான்களோடும் பந்துவாய்ப் பழகினாள் சகுந்தலை. ஆனால் வண்டுகளோடு அப்படி ஸ்நேகமாய்ப் பழகத்தெரியவில்லை. ஓர் வண்டு படுத்திய பாட்டை அவள் பொறுக்கமாட்டாமல் ராஜா வந்து காக்க வேண்டியதாயிற்று. கோதை ஈச்வரி, வண்டுகளுக்கும் அவள் ஈச்வரி, வண்டுகளுக்கும் அவளிடம் மிகுந்த ஸ்நேஹம்.

ஈஶ்வரி -- ஈச்வரியே! ஆண்டாள் ஈச்வரி என்பதில் என்ன தடை? பிறவியிலேயே ஆண்டாள் விஷ்ணுபத்நியாகையால் ஜகத்திற்கு ஈசானையென்பதில் என்ன சந்தேகம்? 'அஸ்யேசானா' என்னும் ச்ருதி ஸாக்ஷாத்தாகப் பூமிப்பிராட்டியாகிய உன்னைச் சொல்லும். இந்த ச்லோகத்தில்தான் முதலில் ஈச்வரி என்று அழைப்பது.

ப்ருங்கா: -- வண்டுகள். வண்டுகளுக்கும் நீயே ஈச்வரி. ப்ரியமான ஸகி. வண்டுகளுக்குள் தலைமையானது 'ராணி வண்டு' என்பர் ப்ராணி ஸ்வபாவ சாஸ்த்ரக்ஞர். வண்டுகளின் ஈச்வரியான ராணிவண்டு, எல்லா வண்டுகளையும் கூட்டிக்கொண்டு ஈச்வரியான உனக்கு ஆசையுடன் பணிவிடை செய்கிறது. 'குயில் நின்றார் பொழில்சூழ் குருகூர் நம்பி' வால்மீகி கோகிலம் போன்ற நம் குருகூர்க் கோகிலம் கூவின தாம்ரபர்ணீ நதிச் சோலையில் நாமும் கூவி மணம் பெறுவோம் என்று குருகூர்க் குயில்கள் கூவுவதுபோல், அக்குயில்களோடு குயிலாய் மதுரகவியும் மதுரமாய் மதுராக்ஷரமாய் மாறனைக் கூவினார்.

புஜாந்தரகதாம் அபி -- வைஜயந்தியைக்கூட; லோகோத்தரமான வனமாலையையும் வைஜயந்தியின் ரஸபரிமளத்தை ப்ருந்தாவன ப்ருங்கங்களறியும்.

தவ பத்யு: -- உன் பதியின். உன் பதியினுடைய ஈச்வரீ என்று இருக்கிறபடி சேர்த்து அந்வயிப்பதிலும் திருவுள்ளம். 'தவ பத்யு:ஈச்வரி' உன் பதிக்கும் நீ ஈச்வரியானவளே. 'பும் ப்ரதானேச்வரேச்வரீ' என்பதைக் கவனிக்க. சிதசித்துக்களுக்கும் ஈச்வரனுக்கும் ஈச்வரி, அல்லது சிதசித்பரரான தத்வத்ரயத்திற்கும் ஈச்வரீ. விவாஹ அவஸரத்தில் "மூர்த்தாநம் பத்யுராரோஹ" என்று ஆசீர்வாதத்தைப் பணிப்பர். 'உன் பதியின் தலைமேல் ஏறுவாயாக'. கோதை தன் பாரதந்த்ரியத்தையே நினைந்து நாயகன் வற்புறுத்தியும் அவர் அவளைத் தலையிலேற்றிக் கொள்ள இடம் கொடுக்கவில்லை. அவள் சூடிய மாலை அவர் தலையில் ஆரோஹம் செய்தது. ஆசீர்வாதம் ஏதோ ஒரு ப்ரகாரமாய் ஸத்யமாயிற்று.

த்வத்புக்தமால்ய ஸுரபீக்ருத சாரு மௌளே: -- நீ சூடிக்கொடுத்த உன்னால் புக்தமான மாலையால் அதிக பரிமளமுடையதாகச் செய்யப்பட்ட மைவண்ண நறுங்குஞ்சிக் குழலோடுகூடிய அழகிய திருமுடிமேல் (திருமுடிக்கு). உன்னால் புக்தமானாலும் அந்த மாலை நிர்மால்யமாகவில்லை. நீ சூடியும் பெருமாளுக்கு மால்யமாகவே ஆயிற்று. 'புக்த' என்பதற்கு ரக்ஷிக்கப்பட்ட என்றும் பொருள். அனுபவிக்க ஆசையால் நீ சூடவில்லை. பெருமாளுக்கு ப்ரியமான பரிமளத்தை கந்தம் கமழும் உன் கூந்தலிலிருந்து ஏற்றி அம்மாலையை பரிமளப் பெருக்கால் ரக்ஷிக்கவே சூடினாய். 'ஸுரபீக்ருத' என்பதற்கு 'முன்பு வாசனையற்றதாயிருந்து இப்பொழுதுதான் உயர்ந்த கந்தத்தால் வாஸிதமாயிற்று' என்று பொருள். அனுபவிக்க ஆசையால் நீ சூடவில்லை. பெருமாளுக்கு ப்ரிநமான பரிமளத்தைக் கந்தம் கமழும் உன் கூந்தலிலிருந்து ஏற்றி அம்மாலையை பரிமளப் பெருக்கால் ரக்ஷிக்கவே சூடினாய். 'ஸுரபீக்ருத' என்பதற்கு 'முன்பு வாசனையற்ற தாயிருந்து இப்பொழுதுதான் உயர்ந்த கந்தத்தால் வாஸிதமாயிற்று' என்று பொருள். 'அபூததத்பாவே ச்வி:' ஸர்வகந்தனுடைய குழல் முன்பு அற்புத கந்தமுடையதுதான். ஆயினும் இப்பொழுது ஏறிய புது அதிக வாசனையைக் கவனித்தால், முன்னிருந்த அற்புத வாசனையும் இல்லையென்று சொல்லவேண்டியதாயிற்று. வாசனை மட்டுமல்ல, இம்மாலையால் அழகும் அதிகமாயிற்று.

மித:ப்ரதிகாதலோலா: -- வண்டுகள் ஸ்வபாவத்தால் சஞ்சலம். இப்பொழுது ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு நான் முன்னே நான் முன்னே என்று மேல்விழுந்து கொண்டு ஒன்றின் பக்ஷங்கள் மற்றொன்றின் பக்ஷங்களை நெருக்கிக்கொண்டு ஒன்றோடொன்று அவிச்சின்னமான தொடர்ச்சியாக கனமான சங்கிலிக் கோர்வையாய்ச் சுற்றிச் சுழன்று (ரீங்கார கானம் செய்துகொண்டு) பெருமாள் திருமுடிமேல் இவ் வண்டுமாலை யிருப்பதால் திருமுடிக்குமேலே அதைச் சுற்றிலும் விசித்ரமான மயில்கொடையாயின; மயில்வசிறியுமாயின. 'மதுரமா வண்டு பாட மாமயிலாட ரங்கத்தம்மான்' அல்லவோ மணாளர். அரங்கத்தில் பாடும் வண்டு வேறு, ஆடும் மயில் வேறு'. புதுவை நந்தனத்தோட்ட ஆண்டாள் வதுவையில் வண்டுகள் கூடி மயிலுமாகின. வண்டுகளே ஆடிப்பாடின. 'லோலா:' என்பது சாஞ்சல்யமென்னும் சுழலாட்டத்தையும் சொல்லும், மிக்க ஆசையையும் சொல்லும். அநந்தநாகருக்கு மேல்பட்ட ஆசை. அநந்தர் குடையானார். கருடன் விசிறியுமாவார். வண்டுகள் இருவர் பணியையும் செய்தன. அவர்கள் இருவரும் பாடார். சேஷத்வத்தில் இத்தனை ருசியைப் பார்த்ததும் அநந்தர் கிட்டவராமல் ஒதுங்கி சாக்ஷியாகப் பார்த்து ஆனந்தபரிதராய் ஸ்தப்தராய் இருக்கிறார். இந்தச் சிறு பக்ஷிகளின் கைங்கர்ய ருசியைப் பார்த்து பக்ஷிராஜன் மகிழ்ந்து நிற்கிறார். ஒன்றுக்கொன்று நெருங்கிக் கொள்வதால் வண்டுக்கூட்டங்கள் குடையின் ஒற்றுமையை அடைந்தன. நடுவில் இடைவெளியே இல்லாமல் நெருங்கிக் கோர்த்தன. விஷ்ணுசித்தர் பல்லாண்டு கானத்தைக் கேட்டிருந்த வண்டுகள் பலகோடி நூறாயிரமாகச் சேர்ந்து குடையும் விசிறியுமாகி மாப்பிள்ளையின் முடிக்குமேலே இன்புற்றுப் பல்லாண்டு பாடின. 'பத்ரம் தே' என்று பல்லாண்டு ஆசாஸனம் செய்தார். "பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா" என்று பேசும் பாணிக்ரஹண அவஸரத்தில் சீதைப்பிராட்டியின் பாணிக்ரஹண ச்லோகத்தை நினைத்து 'என்னை முன்னே நிறுத்தி அரிமுகன் அச்சுதன் கைமேல் என் கைவைத்து ' என்று கனாக் கண்டாள். ஸ்வப்னவதுவையில் மூன்று அவதாரங்களைச் சுட்டி அனுபவம்.

பர்ஹாதபத்ர ருவிம் ஆரசயந்தி -- மயில்தோகையாகும் சேஷத்வ ருசியைச் செய்கின்றன. குடையின் சோபையை அடைகின்றன. குடைபோல சோபிக்கின்றன. 'ருசி' என்பதற்கு ஸாத்ருச்யம், சோபை, காந்தி, ஆசை முதலிய பொருள்கள் உண்டு. எல்லாம் இங்கே கவியின் ருசியிலுள்ளன. 'ஆ' என்பதால் குடையின் நீட்டமும் அகலமும், நெடுமையும், ஆசையின் நீட்டமும் ஸூசிக்கப் படுகின்றன. 'உஷ்ணம் தெரியாமல் காப்பத' விசிறிக்கும் பொது. ஸ்வாரஸ்யாதிக்யத்திற்காக குடையென்னும் ரூடிப்பொருளை ஒரு யோஜனையில் விட்டுவிட்டு யோகப்பொருளில் ருசியைக்கொண்டு வ்யஜனமென்றும் பொருள் கொள்ளலாம். சிரஸுக்கு மேலே விசிறி சுற்றவிட்டு சூட்டைப் போக்குவதைக் கண்டுளோம். ஆரண்யகரான ஈச்வரருக்கும் பூந்தோட்டக் கோதைக்கும் திருமண உத்சவத்தில் தங்கள் ஈச்வரிக்கும் ப்ரிய ஸகிக்கும் மணாளனுக்கும் வண்டுகள் தாமே இப்பணிகளை ருசியுடன் செய்கின்றன. எல்லா ப்ராணிகளுக்கும் ஈச்வரரும் ஈச்வரியும் பொதுதானே! தித்திரிபக்ஷிகள் ஆனந்தமாய்ப் பாடுகையில் ஆனந்தமயப் பெருமாளையும் பக்ஷியாகவே பாடின. புச்சப்ரஹ்ம வாதத்தில் இந்த ரஸமில்லை. பாடும் பக்ஷிகள் பெருமாளைப் பக்ஷியன்றென்று பாடுமோ? 'ரஸோ வை ஸ:' என்னும் ரஸப்ரகரணத்தில் ரஸத்தை விடுவரோ? (14)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக