Saturday, February 18, 2017

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

பாதுகா பட்டாபிஷேகம்
அங்கம் 1 களம் 10ன் தொடர்ச்சி

 

(கைகேயி மரவுரிகளை எடுத்துவந்து, இராமர் கையில் இரண்டும், சீதை கையில் இரண்டும், இலக்ஷ்மணர் கையில் இரண்டுமாகக் கொடுக்கிறாள். இராமர் மரவுரிகளைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு, பிறகு உடுத்திக் கொள்கிறார். இலக்ஷ்மணரும் அங்ஙனமே செய்கிறார். சீதை மரவுரிகளை உடுத்திக்கொள்ள அறியாது வெட்கப்பட்டவளாய், இராமனைப் பார்க்கிறாள்.)

கோசலை: (கண்ணீர் விட்டு அழுதுகொண்டு, இராமரைப் பார்த்து) என் கண்ணே இராமா! உன்னோடு சீதையையும் காட்டுக்கு அழைத்துப் போகவேண்டுமென்று தந்தை கட்டளை இடவில்லையே! அவ்வாறாக நீ ஏன் அவளை அழைத்துச் செல்கின்றாய்? வேண்டாம், என் கண்மணி ஜானகியை அழைத்துச் செல்லாதே.

இராமர்: அம்மா! சீதையும், இலக்ஷ்மணனும் என்னுடன் வருவதாகப் பிடிவாதம் செய்கிறார்கள். அவர்களை விட்டுச் செல்ல இயலாது. தாங்கள் வருந்தாதீர்கள்.

வசிஷ்டர்: (கைகேயியைப் பார்த்து) மரியாதையற்ற மடந்தையே! குலத்தைக் கெடுக்க வந்த கொடியவளே! கைகேயி! சிறிதேனும் நாணம், இரக்கம் இன்றி பூவினும் மெல்லிய சீதையிடம் நீ மரவுரியைக் கொடுக்க எவ்வாறு துணிந்தாய்? சீதையும் காட்டுக்குப் போவாள் என்று எண்ணினையோ? அவள் போகாள். அவள் உன்னைப்போல் இராஜ பத்தினிக்குரிய ஒழுக்கங்களை ஒழித்தவளல்லள். புருஷனையே தெய்வமாகக் கொண்டொழுகும் சீதை கற்புக்கு அரசி. இரானுடைய ஆத்மா போன்றவள். நீ பெற்ற வரத்தின்படி இராமன் காட்டுக்குச் செல்வான். ஆனால் அவனுக்குரிய அரசுரிமை அதனால் நீங்கி விடாது. அவனதுயிராகிய இந்தச் சீதை அவனுக்குப் பிரதிநிதியாக இங்கிருந்து இவ்விராச்சியத்தை ஆளுவாள்.

கைகேயி: இராச்சியம் முன்னமேயே பரதனுக்கு உரிமையாய் விட்டதே.

வசிஷ்டர்: (கோபத்தோடு) பாப சொரூபமே! தனது தந்தை மனமொப்பிக் கொடுக்காத இராச்சியம் பரதனுக்கு உரிமையாக மாட்டாது. பரதன் குலாசாரத்தை அறிந்தவன். அவன் ஒரு நாளும் இவ்வரசுரிமையை ஏற்கப் போகிறதில்லை. கள்ளி வயிற்றில் அகில் பிறப்பது போலவும், சிப்பியிலிருந்து முத்து பிறப்பது போலவும் ஏதோ விதிவசத்தால் அவன் உன் வயிற்றிற் பிறந்து விட்டான்.

கைகேயி: தானாகச் செல்லும் சீதையைத் தாங்கள் தடுப்பானேன்?

வசிஷ்டர்: ஆ! கைகேயி! உன் நெஞ்சம் கல்லா, இரும்பா, மரமா! கல்லென்றால் கரையுமே! இரும்பென்றால் தீயில் இளகுமே! மரமென்றால் வளையுமே! கொண்ட கணவர் படும் துன்பத்தைக் கண்டும் கரையாமல், மக்கள் மரவுரி யுடுத்தி நிற்பதறிந்தும் இளகாமல், மந்திரி முதலிய பெரியோர் என்ன கூறியும் வளையாமல் இருக்கும் உனது மனத்தை என்னென்பது! பாவீ! சீதை காட்டுக்குச் செல்வாளானால், இந்நகரம் முழுவதும் அவளைப் பின் தொடர்ந்து போய்விடும்.

கைகேயி: போகட்டும். பிறகு அரசர் பரதனுக்கு எந்த இராச்சியத்தைக் கொடுத்து வரத்தை பரிபாலிக்கிறார் பார்ப்போம்.

இராமர்: (வசிஷ்டரை நோக்கி) சுவாமீ! சீதை தனது விருப்பத்தின்படியே என்னைப் பின்தொடருகிறாள். அவளைத் தாங்கள் தடுக்க வேண்டாம். (தசரதர் இருக்கும் திசையை நோக்கி) பிதா! போய் வருகின்றோம். நமஸ்காரம். (இராமர் இலக்ஷ்மணர் சீதை மூவரும் சிறிது தூரம் போகின்றனர். கைகேயியைத் தவிர மற்றெல்லோரும் கண்ணீர் வடிக்கின்றனர். சிலர் ‘இராமா! இராமா!’ எனவும், சிலர் ‘சீதா! சீதா!’ எனவும் அழைக்கின்றனர். இராமர் முதலிய மூவரும், அவர்கள் அழைப்பதைச் செவி ஏற்காது செல்கின்றனர். தசரதர் உரத்த குரலில் ‘இராமா!’ என்கின்றார். அதுகேட்டு இராமர் நிற்கிறார். அவர் நிற்பதைப் பார்த்துச் சீதையும் இலக்ஷ்மணரும் நிற்கின்றனர்.)

தசரதர்: அடா, என் கண்மணி! இராமச்சந்திரா! இங்கு வாடா! என் செல்லமே!

வாபோகு வாயின்னம் வந்தொருகால்
                             கண்டுபோ மலராள் கூந்தல்
வேய்போலு மெழில்தோளி தன்பொருட்டா
                             விடையோன்றன் வில்லைச் செற்றாய்
மாபோகு நெடுங்கானம் வல்வினையேன்
                               மனமுருக்கும் மகனே நின்று
நீபோக வென்னெஞ்ச மிருபிளவாய்ப்
                               போகாதே நிற்கு மாறே

காட்டிற்குப் போவதிலும் அவசரமாடா கண்மணீ! வா, மெதுவாய்ப் போகலாம். இன்றே செல்லவேண்டுமென்று நியதியா? இல்லை, நாளைக்குச் செல்லலாம். இந்தப் பாவி முகத்தை ஏறெடுத்துப் பார். ஐயோ! குழந்தை ஜானகியையும் உடனழைத்தா செல்கின்றாய்? என்ன காலக்கொடுமை! என்ன காலக்கொடுமை! தோழியர் பலரிருந்து மலரணிந்து முடித்த அவள் கருங்கூந்தலை, இனி அருங்கானில் யாரிருந்து வாரி வகிர்ந்து முடிப்பார்கள்? காட்டில் அவள் செல்லும்பொழுது மூங்கிலைப் பழித்த அவளது அழகிய தோள்களில் புதராய் வளர்ந்த மூங்கில்கள் உராயுமே! அப்பொழுது அவள் என்ன பாடுபடுவாள்! இராமா! அன்று அவளைப் பெறும் பொருட்டு அரனது பெருவில்லை ஒரு பொருள் செய்யாது முரித்தனையே! இன்று அவளைக் கொடுங்கானத்திற் கழைத்துச் செல்ல, உன் மனம் எவ்வாறு நடுங்குகிறதோ! என் கண்ணிற் கருமணியே! கல்லினை மிதித்துப் பெண்ணாக்கக் கற்றாய்! வில்லினை வளைத்துப் பெண்கொள்ளக் கற்றாய்! கல்லினும் வலிய என் நெஞ்சுருக்கும் வகையும் கற்றாயே! உன்னைப் பிரிந்து நான் எவ்வாறடா ஆற்றியிருப்பேன்! கொடிய மிருகங்கள் வசிக்கும் கடுமையான காட்டிற்கு நீ போக எத்தனித்தும், என் நெஞ்சம் இரு பிளவாய்ப் பிளந்து போகாமல் இருக்கின்றதே!

பொருந்தார்கை வேல்நுதிபோல் பரல்பாய
                                            மெல்லடிகள் குருதி சோர
விரும்பாத கான்விரும்பி வெயிலுறைப்ப
                                           வெம்பசிநோய் கூர இன்று
பெரும்பாவி யேன்மகனே போகின்றாய்
                                           கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற
அரும்பாவி சொற்கேட்ட அருவினையேன்
                                           என்செய்கேன் அந்தோ யானே

மகனே! காட்டிற் கிடக்கும் கூழாங்கற்கள், பகைவர் எய்யும் அம்பின் நுனியைப்போல, உன் கால்களிற் குற்றுமே! அதனால் மெல்லிய திருவடிகளிலிருந்து இரத்தம் பெருகி ஒழுகுமே! ஒருவரும் விரும்பாத அந்தக் கொடிய காட்டை நீ விரும்பி, வெயிலுக்கும் பசிக்கும், மற்ற வருத்தங்களுக்கும் அஞ்சாது செல்லத் துணிந்தனையே! அது பெரும்பாவியாகிய என்து சொல்லினாலல்லவா? ஐயோ! கேகய மன்னனுக்கு மகளென வந்த ஒரு பழிகாரி பேச்சைக்கேட்டு உன்னைக் காடனுப்பத் துணிந்த மாபாவி இனி என் செய்வேன்? என் மகன் இராமன் யாருக்கு என்ன அபகாரம் செய்தான்? அவன் ஏன் காட்டிற்குச் செல்லவேண்டும்? இராமா! நீ செய்த பாவம், எனக்குப் புத்திரனாய்ப் பிறந்ததோ? வேள்வித்தீயினிற் பெற்ற மகனைக் காட்டுக் கனுப்புகின்றேனே! எனக்குக் கேள்வி முறையில்லையா? இராமா! என் கண்ணே! என் மணியே! என் செல்லமே! நீ வனஞ் செல்லாதே! இங்கு வா. என் அருகில் வந்து உட்கார். நான் வானகஞ் செல்கிறேன். என்னை அனுப்பிவிட்டு நீ கானகஞ் செல். (சோர்ந்து விழுந்து விடுகிறார். இராமர் நின்ற விடத்திலிருந்து கரங்கூப்பி அவரை நமஸ்கரித்து) சென்று வருகின்றேன். (செல்கிறார். தசரதர் தலை நிமிர்ந்து இராமரைப் பார்த்துவிட்டு மூர்ச்சையாய் விழுகிறார். கைகேயியைத்தவிர மற்ற யாவரும் இராமரைச் சூழ்ந்து கொள்ளுகிறார்கள்.)

வசிஷ்டர்: (இராமரைப் பார்த்து) இராமச்சந்திரா! வினையின் வலிமை இனைத்தென்று யாவருரைக்க வல்லார்?

வாழ்வினை நுதலிய மங்க லத்துநாள்
தாழ்வினை யதுவரசீரை சாத்தினாய்
சூழ்வினை நான் முகத் தொருவர்ச் சூழினும்
ஊழ்வினை யொருவரா லொழிக்கற் பாலதோ

இன்றைய தினம், உனது மகுடாபிஷேகத்துக்கு உகந்த நாள் என்று குறிப்பிடப் பட்டது. அவ்வளவு சுபமுகூர்த்தமுடைய இத்தினத்தில், நீ பட்டணிந்து, மணிமுடி தரித்துக் காவலனாகிப் பாராள்வது போக, மரப்பட்டை புனைந்து, சடைமுடி தரித்து, மாதவனாகிக் காடேக நேரிட்டதே! என்ன ஆச்சரியம்! எல்லாம் விதிப் பயன். இன்னாருக் கின்னபடி என்று எழுதுபவன் பிரமன். அவ்வாறு நமக்கெல்லாம் விதியை விதிக்கும அவனை அவ்விதி விட்டதா? அவன் ஐந்து தலைகளுள் ஒரு தலையைக் கொண்டுபோய் ஐம்முகனான அவனை நான்முகனாக்கி விட்டதே! மதியில் வல்லாரும் விதியை வெல்லல் அரிது.

வறியவர் செவ்வராவர் செல்வர்பின் வறியராவர்
சிறியவர் உயர்ந்தோராவர் உயர்ந்துளோர் சிறியராவர்
முறைமுறை நிகழுமீது முன்னையூழ் வினையே கண்டாய்
எறிகதிர் வழங்கும் ஞாலத்தியற்கையு மினைய தன்றோ?

உண்ண இனிய உணவும், உடுத்த நல்ல உடையும் இன்றி இரந்துண்ணும் தரித்திரரும், திடீரென்று தனவந்தராகிறதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோமில்லையா? அது மட்டுமல்ல, யாதொரு வகையான புகழு மின்றி மிகவும் சிறுமை யுடையவர்கள், காலகதியால் பேரும் புகழும் படைத்து மிகவும் பெருமை உடையவ ராகிறார்கள். பல்லோர் புகழும் பெருமை வாய்ந்தோர் பலர் கால வேறுபாட்டால் எல்லோராலும் இகழப்பட்டு மிக்க சிறுமையை அடைகின்றனர். இவைகளுக்கெல்லாம் காரணம் விதியேயாகும். இந்த விதியின் செயல்களை நாம் நாடோறும் உலகில் இயற்கையாகக் காண்கிறோமல்லவா? ஆதலால் இன்பத்தில் களிப்புறுதலும் துன்பத்தில் இன்னல் உழத்தலுமின்றி எந்நாளும் ஒருபடித்தாய், ‘எல்லாம் எமையாளும் ஈசன் செயல்’ என்றெண்ணி நிர்ச்சிந்தையா யிருப்பதன்றி நம்மால் செய்யத்தக்கது வேறொன்றுமில்லை. கானகத்தில் ஞானமுற்றிய மாதவர் பலர் வசிப்பார்கள். நீ அவர்களை வழிபட்டு ஞானாபிவிருத்தி செய்துகொள். இலக்ஷ்மணனைத் துணையாகச் சதா உன்னுடன் வைத்துக்கொள். குழந்தை ஜானகியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள். பதினான்கு வருஷங்களையும் இன்பமாகக் கழித்து, க்ஷேமமாய் நீங்கள் மூவரும் திரும்பி வரக் கடவீர்கள். போய் வாருங்கள். (இராமர் முதலிய மூவரும் வசிஷ்டரை நமஸ்கரிக்கின்றனர். பிறகு கோசலை இராமரை நெருங்கி, அவரையும் ஜானகியையும் கட்டி முத்தமிட்டு)

கோசலை: என் கண்மணிகளே! பாவி நான் உங்களைப் பிரிந்து எவ்வாறு சகித்திருப்பேன்! குழந்தாய் இராமச்சந்திரா! உன்னைப் பெற்றேன்; வளர்த்தேன். வளர்த்து நான் பெற்ற பலன் இதுதானோ? என் வீர சிங்கமே! மாற்றுயர்ந்த தங்கமே! உன்னை நொந்து சுமந்து நோவாமலேந்தி வளர்த்ததும் இதற்கோ? முகத்தோடு முகம் வைத்து முத்தாடி ‘எந்தன் மகனே’ என அழைத்த வாயால், ‘காட்டிற்குப் போய்வா’ என்று நான் எங்ஙனம் சொல்வேன்? ஆ! தெய்வமே! என் செயலாவதினி ஒன்றும் இல்லை. எல்லாம் உன் செயலே! வல்லான் வகுத்ததே வாய்க்கால். எல்லாம் வல்ல நீ எது செய்தாலும் உன்னைத் தடுப்பார் யார்? உனது திருவுளமிதுவானால், அங்ஙனமே ஆகட்டும். புதல்வா! தருமஸ்தாபனனாகிய உன்னைத் தடுக்க என்னாலாகாது. நீ கானகஞ் சென்று க்ஷேமமாய்த் திரும்பி வருவாயாக. உனது மனோ தைரியத்தாலும் நியமத்தாலும் எந்த தருமத்தைப் பாதுகாக்கின்றாயோ அந்த தருமமே உன்னைக் காக்கட்டும். நீ உன் பிதாவுக்குச் செய்த பணிவிடையும், உன் தாய்க்குச் செய்த சிஷ்ருஷையும், நீ கைக்கொண்டிருக்கும் சத்தியமும் உனக்கு நீண்ட ஆயுளை அளித்து இரக்ஷிக்கட்டும். உலகம் புகழும் உத்தமனே! காட்டிலுள்ள மலைகளும் மடுக்களும், பறவைகளும் பாம்புகளும், புலிகளும் கரடிகளும், மற்றுமுள்ள காட்டு மிருகங்களும் உன்னைப் பாதுகாக்கட்டும். சாத்தியர்கள், விசுவதேவர்கள், மருத்துக்கள், மகரிஷிகள், தாதா, விதாதா இவர்கள் உனக்கு க்ஷேமத்தைக் கொடுக்கட்டும். துவாத சாதித்தியர், இந்திரன் முதலான லோக பாலகர்கள் உன்னைப் பாலனம் பண்ணட்டும்.

திருமா லரனே திசைமுகன் கரிமுகன்
பொருவேல் முருகன் பரிதி வடுகன்
எழுவகை மங்கைய ரிந்திரன் சாத்தன்
விதியவன் நீலி நிலமகள் மலைமகள்
திருமகள் நாமகள் திகழ்மதி யென்று

வருந் தெய்வங்களே! நீங்கள் அனைவரும் எனது குமாரனுக்குத் துணையாக இருந்து அவனுக்கு யாதொரு விக்கினமும் வராமற் காத்திடுங்கள். வன தேவதைகளே! எனதருமைத் திருமகனுக் கொருகுறையும் வராது பாதுகாத்தருளுங்கள். ஸ்ரீராமா! எல்லாத் தேவர்களாலும் நமஸ்கரிக்கப் பெற்ற இந்திர பகவானுக்கு விருத்திராசுரனைக் கொல்வதற்காக எந்த மங்களம் உண்டாயிற்றோ, அந்த மங்களம் உனக்கு முண்டாகட்டும். முற்காலத்தில் அமிர்தத்தைக் கொண்டு வருதற்குக் கருட பகவான் சென்றபொழுது, அவர் தாயாகிய விநதை அவர்க்கு எந்த மங்களத்தைச் செய்தாளோ, அந்த மங்களம் உனக்கும் உண்டாகட்டும். திருப்பாற் கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுக்கச் சென்ற காலத்தில் அசுரரை வதைப்பவனான இந்திர பகவானுக்கு அதிதி தேவி எந்த மங்களத்தை வேண்டினாளோ, அந்த மங்களம் உனக்கும் உண்டாகட்டும். மூவுலகங்களையும் மூன்றடியில் அளந்த வெற்றி பொருந்திய விஷ்ணு பகவானுக்கு உண்டான மங்களம் உனக்கும் உண்டாவதாக. ருதுக்களும், சமுத்திரங்களும், தீவுகளும், வேதங்களும், உலகங்களும், திசைகளும், மங்களத்திற்கு அதிசயத்தை விளைக்கும் மங்களங்களை உனக்கு அளிக்கட்டும். (இராமன் சிரசின்மீது அக்ஷதைகளைத் தூவி) இராமா! சர்வாபீஷ்டங்களும் கைகூடப் பெற்றவனாய் நீ காட்டிற்கு க்ஷேமமாய்ப் போய்வா. பிதுர்வாக்கிய பரிபாலனம் பண்ணி, நீ திரும்பி வந்து அரசர்க்குரிய ஆடையாபரணங்களை அணிந்து, அணி மணி அரியாசனத்தின்மீது அமர்ந்து அரசு செலுத்துவதை என் இரு கண்களும் குளிரக் கண்டு களிப்படைவேன். என்னால் பூஜிக்கப்பட்ட கடவுளர் உன்னைக் காப்பார்கள். போய்வா. (இராமர் தலை தாழ்த்தித் தாயை நமஸ்கரிக்கிறார். அப்பால் சுமித்திரை, இலக்ஷ்மணனைப் பார்த்து)

சுமித்திரை: புதல்வனே! உன்னைப் பெற்றதாலடையக் கூடிய பலனை நான் இன்று பெற்றேன். நீயும் பிறந்ததால் அடையத்தக்க பலனை இன்று அடைந்தாய். தர்மத்தின் தவப் பயனாய்த் தாரணியில் வந்துள்ள ஸ்ரீராமச்சந்திரனது திருவடிகளை அரை க்ஷணமும் விட்டுப் பிரியாது, தொண்டு செய்திருத்தலைக் காட்டிலும் நீ பெறத்தக்க பேறு வேறு இல்லை. உனது புண்ணிய வசமே இராமன் காடு செல்லவும், நீ அவனைப் பின் தொடர்ந்து செல்லவும் நேரிட்டதென்று நினை. எல்லோரிடத்துமே நீ அன்புள்ளவன். இராமனிடத்தோ அளவிறந்த அன்பும், பூரண பக்தியு முடையவனா யிருக்கின்றாய். உனக்கு நான் அதிகம் சொல்ல வேண்டுவதில்லை. மாசற்ற மணியே! இன்பத்திலும் துன்பத்திலும் இராமனை விட்டுப் பிரியாதே. மூத்தோர்க்குக் கீழ்ப்படிந்து நடத்தலே சிறந்த ஒழுக்கம். ஆதலால் உனக்கு மூத்தவனாகிய இராமன் காலாலிட்ட வேலையைச் சிரசால் செய்வது உனது கடமையாகும். இராமன் உனது தமையனாயினும் அவனை உனது யஜமானனாகவும், நீ அவர்க்கு அடிமையாகவும் கருதித் தொண்டு செய். இராமனுடைய க்ஷேமத்துக்காக உன் உயிரையே கொடுக்க நேரிட்டாலும் சற்றும் பின்வாங்காது கொடு. இராமன் வாக்கிலிருந்து என்ன வருகின்றதென்று ஜாக்கிரதையாகக் கேட்டு அதை நிறைவேற்று. இன்று முதல் பதினான்கு வருஷங்கள் வரையில் அரணியத்தை அயோத்தியாகவும், இராமனை உனது தந்தையாகவும், சீதையை நானாகவும் பாவித்துக் கொள். பதினான்கு வருஷங்களும் முடிந்து இராமன் க்ஷேமமாய்த் திரும்பி வந்தால் நீயும் அவனுடன் வா. இல்லாவிட்டால் இந்நகரில் அடியெடுத்தும் வையாதே! போய்வா! (இலக்ஷ்மணர் நமஸ்கரிக்கின்றார்)

சுமந்திரர்: (இராமரைப் பார்த்து) இளவரசே! இரதம் வந்து வாசலில் நிற்கின்றது.

இராமர்: அப்படியா! இதோ வருகின்றேன்.

(தொடரும்)