Tuesday, June 21, 2016

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

இந்த நாடகத்தைத் தொடர்ந்து படிக்கின்றவர்களுக்கு:--

   இன்று படிக்கப் போகும் பகுதி மந்தரையின் அபார வாக்கு சாதுர்யத்தை மிக அருமையாக விளக்கும் பகுதியாக அமைந்து வியக்க வைக்கும். எதிராளியின் மனதை எப்படி மாற்றித் தன் வழிக்குக் கொண்டு வருவது என்பதற்கு ஒரு பாடமாகக்கூடக் கருதும் அளவு மந்தரையின் வாதம். தொடர்ந்து படியுங்கள்.

அங்கம் 1
களம் 4 (தொடர்ச்சி)

மந்தரை;—தங்களுக்கு  மாத்திரமல்லவம்மா, 'ஆலமரத்தைப் பிடித்த பிசாசு அரசமரத்தையும் சேர்த்துப் பிடித்தது' போலத் தங்கள் மகன் பரதனையுமல்லவா கெடுதல் சூழ்ந்திருக்கிறது. என்ன கெடுதல் என்றால், விவரமாகச் சொல்லுகிறேன், சற்றுப் பொறுமையாகக் கேளுங்கள்.

சிவந்தவாய்ச் சீதையுங் கரிய செம்மலும்
நிவந்தவா சனத்தினி திருப்ப நின்மகன்
அவந்தனாய் வெறுநிலத் திருக்க லானபோ
துவந்தவா றென்னிதற் குறுதியா தம்மா?

சிறிது செல்வமுடையவர் வீட்டுப் பிள்ளைகளும் ஒருவருக்கு அடங்கியிருக்க நாணுவார்கள். அப்படியிருக்க இராஜ குடும்பத்தில் பிறந்த ஒருவன் மற்றொருவனிடம் தலைகுனிந்து நிற்பதென்றால் எவ்வளவு வருத்தமான காரியம்? பரதன் இராஜகுடும்பத்திற் சக்கரவர்த்தியின் காதல் மனைவியின் வயிற்றில் பிறந்தவனன்றோ? பிறந்தும் அவன் கதி என்ன? இராமனும் சீதையும் நாளைய தினம் உயர்ந்த ஆசனத்தில் வெகு கம்பீரமாக உட்கார்ந்திருப்பார்கள். அப்பொழுது உன் மகன் பரதன் தலை தாழ்ந்து நிலத்தில் நிற்பான். அக்காலத்தில் அவன் மனம் என்ன பாடுபடும்? அந்தக்காட்சியைப் பார்க்க தங்களுக்குத்தான் சகிக்குமா? இந்த நிலையில் காரியங்கள் இருக்க, நீங்கள் சந்தோஷம் மிகுந்து எனக்கு முத்தாரம் பரிசளிக்கின்றீர்கள்! தாங்கள் அரசர்க்குக் காதற்கிழத்தியாயிருந்து என்ன பயன் கண்டீர்கள்? தங்களைப்போல கோசலையும் ஒரு பெண்தானே? அவளுடைய கெட்டிக்காரத்தனத்தைப் பார்த்தீர்களா?

மறந்திலள் கோசலை யுறுதி மைந்தனும்
சிறந்தநற் றிருவினிற் றிருவு மெய்தினான்
இறந்தில னிருந்தன னென்செய் தாற்றுவான்
பிறந்திலன் பரதனீ பெற்றதா லம்மா!

அவள் தனக்கும் தன் மகனுக்கும் உறுதி தேடத் தங்களைப்போல மறந்திருந்து விடவில்லை. அவள் மகனுக்கு இராச்சியம் கிட்டிவிட்டது. தங்கள் மகன் பரதன்தான் ஒன்றும் பெறாது தவிக்கப் போகின்றவன்; உயிரோடிருக்கிறானே அது ஒன்று தவிர அவனுக்கு வேறு என்ன பயன் உள்ளது? இப்படி அவன் எவ்வளவு காலம் சகித்திருப்பான்? அம்மா! தங்கள் வயிற்றில் பிறந்ததால் பரதன் பிறந்தும் பிறவாதவனாகவே இருக்கின்றான். அவன் நிலைமையை நினைத்தால் என் நெஞ்சம் நெருப்பிற்பட்ட புழுப்போல் துடிக்கிறதே.

சரதமிப் புவியெலாந் தம்பி யோடுமிவ்
வரதனே காக்குமேல் வரம்பில் காலமும்
பரதனு மிளவலும் பதியி னீங்கிப்போய்
விரதமா தவஞ்செய விடுத னன்றன்றோ?

இராமன் இலக்ஷ்மணனோடு இராச்சியத்தை ஆள்வது என்று ஏற்பட்டுவிட்டால் அப்புறம் பரதனுக்கும் சத்ருக்னனுக்கும் நாட்டி லென்னம்மா வேலை? அவர்களிருவரையும் நீரே காட்டிற்கு அனுப்பி, அங்கே தவஞ்செய்து கொண்டிருக்க விட்டு விடுவது நல்லதாகும். என் கண்மணி பரதா! நீயேன் இவ்வுலகிற் பிறந்தாய்? பிறந்தென்ன பயனைப் பெற்றாய்? நீ இறந்து போனாலும் எனக்கு இவ்வளவு துக்கமிராதே. ஐயோ!

கல்வியு மிளமையும் கணக்கி லாற்றலும்
வில்வினை யுரிமையு மழகும் வீரமும்
எல்லையில் குணங்களும் பரதற் கேயது
புல்லிடை யுகுத்தமு தேயும்போ லந்தோ!

நிறைந்த கல்வியும், சிறந்த இளமையும், அளவற்ற பராக்கிரமும், வில்வளைக்கும் உரிமையும், கண்கவரும் அழகும், எதற்குமஞ்சா வீரமும் ஆகிய அளவிறந்த அற்புத உத்தம குணங்களனைத்தும் என் செல்வன் பரதனிடத்துத்தானே அமைந்துள்ளன? அந்தோ! அக்குணங்களெல்லாம் பாம்பின் புற்றை மூடியுள்ள புல்லிற் கொட்டிய அமுதம் போல் வீணாகவன்றோ போய்விட்டன! அம்மா, உமக்கும் உமது மகனுக்கும் பொல்லாங்கியற்றுபவன் அந்த நயவஞ்சகன் இராமனன்றோ? அவனுக்கல்லவோ நாளைக்கு மகுடாபிஷேகம்? கேகயராஜன் அருந்தவச் செல்வப்புதல்வியே! இராமன் யார் தெரியுமா? உம் சக்களத்தி புத்திரன்.

கைகேயி:-- மந்தரை! நீ வீணே உன் மனத்தைப் புண்படுத்திக் கொள்ளுகிறாய். இராமன் மாற்றவள் மகனாயிருந்தால் என்ன? அது அவன் குற்றமல்லவே! பரதன் நற்குணங்கள் நிறைந்தவன் என்பது உண்மை. அதனால் இராமன் கெட்டவனாவானோ? கொஞ்சமேனும் யோசனையின்றிப் பேசுகிறாயே! இராமன் சக்கரவர்த்தியின் மூத்த குமாரன்; அவனுக்குப் பட்டமாவதுதான் நீதி; அப்படிப் பட்டமாவதால், நீ சொல்லுவது போல எனக்கேனும் என் மகன் பரதனுக்கேனும் ஒரு கெடுதலு முண்டாகப் போகிறதில்லை. அவன் பரதனைக் காட்டிலும் குணவான்; தன் தாயினும் மேலாக என்னிடத்தில் அன்பு பாராட்டுபவன். ஆதலால் காரணமின்றி நீ கொண்ட அச்சங்களை விட்டொழி.

மந்தரை:-- அம்மா! காரணமின்றி நான் ஒரு அச்சமுங் கொள்ளவில்லை. தாங்கள் நான் சொல்வதைத் தயவுசெய்து கவனித்துக் கேளுங்கள். இராமன் மகா குணவான் என்கிறீர்கள். அது உண்மையே. அவன் தந்திரசாலி; தன் நடத்தை செவ்வையாயிராவிட்டால் தனக்குப் பட்டமாகாதென்பதை நன்றா யுணர்ந்தவன். அதனால்தான் அப்படி நடந்து கொள்ளுகிறான். தங்களிடத்து அவன் பரதனிலும் அதிகப் பிரியம் வைத்துள்ளானென்று கூறுகிறீர்கள். அதிலேயே அவன் தந்திரம் விளங்கவில்லையா? தன் தாயைப் பார்க்கிலும் மாற்றான் தாயிடத்துப் பிரியம் வைப்பவனெங்கேனும் உண்டா? தங்கை பிள்ளை தன் பிள்ளையானால் தவத்துக்குப் போவானேன்? என்ற பழமொழியைத் தாங்கள் கேட்டதில்லையா? தங்களிடத்துப் பரதனுக்கில்லாத அன்பு இராமனுக்கு எங்கிருந்து வரும்? எல்லாம் வெளி வேஷம். தாங்கள் சக்கரவர்த்திக்குத் தன்தாயினும் மிகவும் உரிமையுடையவர்கள் என்பதை அவன் நன்றா யறிந்துள்ளான். தங்களுக்கு அதிருப்தியாய் நடந்துகொண்டால் தனக்குப் பட்டம் கிடைப்பதைத் தாங்கள் தடுத்துவிடக் கூடியவர்கள் என்பது அவனுக்குத் தெரியும். ஆதலால் முன்ஜாக்கிரதையாக இருக்கின்றானே யொழிய வேறில்லை. இதைக்கண்டு களங்கமற்ற நீங்கள் அவன் உண்மையாகத் தங்களிடத்து மிகவும் அன்புடையவனென்று எண்ணி ஏமாந்திருக்கிறீர்கள்.

உள்ளபடி அவன் தங்களிடத்துப் பிரியமுள்ளவனாயினும், எப்பொழுதும் அப்படியே இருப்பானென்பது என்ன நிச்சயம்? மனிதர் குணம் பல காரணங்களாலும் மாறுதலடையக் கூடியது. அந்தஸ்து உயர்ந்தால் மாறும்; பலம் அதிகரித்தால் மாறும்; படை அதிகரித்தால் மாறும்; பிறர் போதனையாலும் மாறும்; ஆதலால் இராமன் எப்பொழுதும் இதே குணத்தோடிருப்பான் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள். உத்தமமான ரிஷிகளுக்கும் குணம் சில சமயங்களில் மாறிவிடுதலைத் தாங்கள் கண்டதில்லையோ? மேலும் குறைந்தது முப்பது வயதிற்கு மேற்பட்டால்தான் ஒருவருடைய குணம் சிறிது ஸ்திரப்படும். இராமன் சிறுவன்; அவன் தற்கால குணங்கள் எப்பொழுதும் ஸ்திரமாயிருக்குமா?

இது ஒருபுறமிருக்க இராமனுக்குப் பட்டமென்றால் அதன் அர்த்தமென்ன? பரதன் பட்டத்திற்குரியவனல்ல என்பதுதானே! இராமனுக்குப்பின் அவன் மகன்; அவனுக்குப்பின் அவன் மகன், இப்படியேதானே போய்க்கொண்டிருக்கும். அப்புறம் பரதனுடைய சந்ததி தலைகாட்டமுடியுமா? அம்மா, பரதன் யார்? தங்கள் குமாரனல்லவோ! தாங்கள் யார்? கோசலையைப்போல அரசர்க்குச் சுதந்திரமான பட்டஸ்திரீ. இன்னும் சொல்லப்போனால் கோசலையைவிட உங்களுக்கு சுதந்திரம் அதிகம். எவ்வாறென்றால் தாங்கள் சக்கரவர்த்திக்குப் பட்டஸ்திரீயாவதோடு அவருக்கு ஆசைநாயகி யாகவும் இருக்கின்றீர்கள். இப்படியிருக்கத் தங்கள் பாத்யதையெல்லாம் மண்ணுண்டுபோக அந்த கோசலைக்கே முழு உரிமையும் போவானேன்? அவன் மகன் நாளைக்குப் பட்டத்துக்கு வந்துவிட்டால் அப்புறம் உங்களுக்கு இங்கே என்ன சுதந்திரம் இருக்கும்? இப்பொழுது உங்களுக்கு வேண்டியவர்களுக்குப் பணத்தைப் பிடிபிடியாக அள்ளிக் கொடுக்கிறீர்கள். நாளைமுதல் அப்படி முடியுமா? சிலநாளைக்குத் தங்களிஷ்டப்படி விட்டிருந்தாலும் என்றைக்கும் அப்படி விட்டிருக்கக் கோசலை சம்மதிப்பாளா? ஒருகாலும் சம்மதியாள். பிறகு நீங்கள் என்ன செய்வீர்கள்? எது வேண்டியிருந்தாலும் ஒரு தாதி சேடியைப்போல் அவளைப்போய் இரந்து கேட்பீர்களா? அல்லது தங்களை எதிர்பார்க்கிறவர்ளைச் சீறியடிப்பீர்களா?

இன்னொன்று பாருங்கள், தங்கள் தந்தை வந்தார், தங்கள் பந்துக்கள் வந்தார்கள், கேகய நாட்டிலிருந்து வேறு யாரேனும் வந்தார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவர்கள் யார் வாழ்வை வந்து பார்ப்பது? தங்கள் வாழ்வையா, தங்கள் சக்களத்தி வாழ்வையா?

இதுவும் ஒருபுறமிருக்க, தாங்கள் சக்கரவர்த்தியின் சலுகையால் அரண்மனை அந்தப்புரத்திற் செலுத்திவந்த அதிகாரங்கள் ஒவ்வொன்றாய் கோசலையின் ஞாபகத்துக்கு வரும்; வரவே அவள் அந்தப் பொறாமையினால் மகனுக்கு ஏதும் சொல்லத் தொடங்குவாள்; இராமனா தாய் சொல்லைத் தட்டி நடப்பவன்? ஒருநாளுமில்லை. அவன் நேரே தங்களுக்கு ஏதும் தீங்கு செய்யப் பின்வாங்கினாலும் வேறு வகையால் தங்கள் மனம் தயங்கும்படி செய்வான். அப்பொழுது உங்கள் மனம் என்ன பாடுபடும்? உங்கள் புத்திரன் பரதனுக்கு அது தெரிந்தால் அவன் மனம் என்ன பாடுபடும்?

மற்றொரு முக்கியமான விஷயம் கூறுகின்றேன் கேளுங்கள். உங்கள் தந்தைக்கும் ஜனகனுக்கும் ஜன்மப்பகை. தங்கள் கணவருக்கு அஞ்சியே இதுவரையில் ஜனகன் உங்கள் தந்தையை எதிர்க்காமலிருக்கிறான். நாளையதினம் அவன் மருமகன் இராமன் பட்டத்துக்கு வந்துவிடுவான். சக்கரவர்த்தி தவஞ்செய்யச் சென்றுவிடுவார். பிறகு தங்கள் தந்தையின் கதி என்னாகும்? தாங்கள் மகன் வாழ்வுக்கு இடையூறாய் இருப்பதோடு, தந்தைக்கும் பழிகாரி யாகவன்றோ ஆய் விடுகிறீர்கள்? தங்கள் கணவரின் வஞ்சகத்தைப் பாருங்கள். பரதன் நாட்டிலில்லாத சமயத்தில் இராமனுக்குப் பட்டம் கட்டத் தீர்மானித்திருக்கிறார். இதில் ஏதோ சூதிருக்கிறதென்பதைத் தாங்கள் கவனிக்கவில்லையா? இராமன் மகா குணவான் என்கின்றீர்களே! தம்பி இல்லாதபோது அவன் பட்டங்கட்டிக்கொள்ள எப்படிச் சம்மதித்தான்? நீங்களே எல்லாவற்றையும் தீர்க்காலோசனை செய்து பாருங்கள். அம்மா! தாங்கள் என்னைப்போல் சாமானிய பதவியிலுள்ளவர்களா?

அரைசரிற் பிறந்துபின் னரச ரில்வளர்ந்
தரைசரிற் புகுந்துபே ரரசி யானநீ
கரைசெயற் கருந்துயர்க் கடலில் வீழ்கின்றாய்
உரைசெயக் கேட்கிலை யுணர்தியோ வம்மா!

தாங்கள் இராஜ குடும்பத்திற் பிறந்து, இராஜ குடும்பத்தில் வளர்ந்து இராஜ குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டவர்கள். சக்கரவர்த்தியின் பட்டஸ்திரீயானவர்கள். இருந்தும், அளவற்ற துக்க சமுத்திரத்தில் விழுந்து தவிக்கின்றீர்களே. நான் ஏதாவது யோசனை கூறினாலும் கேட்கமாட்டே னென்கிறீர்களே. தங்களுக்கு இன்னமும் தங்கள் நிலைமை புரியவில்லையா?

கைகேயி (சற்று யோசித்துவிட்டு):-- மந்தரை! நீ சொல்வன யுக்தமாகவே தோற்றுகின்றன. நீ என் க்ஷேமத்தை இவ்வளவு கருதியிருக்கின்றாய் என்பது எனக்கு இதுவரையில் தெரியாது. என் சேடியர்கள் பலருள்ளும் நீதான் என் நன்மையிற் கண்ணாயிருப்பவள். உன்னுடைய சாமர்த்தியம் இப்பொழுதுதான் எனக்குத் தெரிந்தது. நீ சொல்லாவிட்டால் இவ்வளவு முன்யோசனைகள் எனக்கு வருமோ? சக்கரவர்த்தியின் வஞ்சம் எனக்கு இப்பொழுதுதான் தெரிகிறது. அதை நினைக்க நினைக்க என் மனதில் அடங்காத கோபம் மூளுகிறது. எனக்கொன்றுந் தோன்றவில்லை. மந்தரை! நோயை அறிவித்த நீயே மருந்தையும் தெரிவி; மேல்நடத்த வேண்டியதென்ன?

மந்தரை:-- மேல் நடத்தவேண்டிய விஷயமென்ன? இந்தப் பட்டாபிஷேகத்தைத் தடுத்துவிட வேண்டியதுதான்.

கைகேயி:-- அது எனக்கும் தெரிகிறது. அதை எப்படித் தடுப்பதென்பதல்லவோ யோசனை?

மந்தரை:-- அம்மா, என் யோசனையைப் பெரிதாக மதித்துக் கேட்க ஒருப்பட்டீர்களே, இதுவே போதும். இனித் தங்களுக்கு ஆபத்தொன்றும் வராது. கவலைப்படவேண்டாம். தங்கள் கணவர் தாமாக, பரதனுக்குப் பட்டங்கட்டத் தவறினால், அவனுக்கு எப்படிப் பட்டங்கட்டுவதென்பதைப் பற்றி, இப்பொழுதல்ல, பரதன் பிறந்தது முதல் நான் யோசித்து வைத்திருக்கிறேன். அந்த யோசனை இப்பொழுது பயன்பட்டது.

கைகேயி:-- என்னடி அது?

(மனம் கலங்கி மாறிய கைகேயியை இன்னும் எப்படியெல்லாம் மந்தரை மற்றினாள்?
23.06.2016 தொடர்வோம்)