Monday, June 20, 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

அன்று இராமன் காடேகிய பிறகு அயோத்தி வந்தடைந்த பரதனை சந்தேகப்பட்ட கௌசல்யையிடம் பரதன் தான் குற்றமுள்ளவனாயின் என்னென்ன பாவங்களை அடைவேன் என்று சொல்கிறான். அதை மிக விரிவாக இதே தளத்தில் வரும் பாதுகா பட்டாபிஷேகத்திலும் பின்வருமாறு சொல்லப்படப்போகிறது.

அம்மா! இராமபிராற்கு இம்மியளவும் அபராதம் இழைத்திருப்பேனாயின், சிசுஹத்தி, ஸ்திரீஹத்தி, பிரமஹத்தி, கோஹத்தி முதலிய கொடுஞ் செயல்களைச் செய்தார் அடையும் அருநரகை அடைந்து அவதியுறக் கடவேன். அம்மா, இராமபிராற்குச் சிறிதும் நான் தீங்கு நினைத்திருப்பேனேல் உற்ற விருந்திருக்க உணவுண்ணச் செல்வானும், பக்தி வேற்றுமை பாராட்டும் பாதகனும், பசித்து வந்தார்க்குப் பசி தீர்க்காப் பாவியும், புசிப்பதன்முன் பரமனைப் பூஜியாப் புல்லனும், நல்லோர் மனத்தை நடுங்கச் செய்வானும், வலிய வழக்கிட்டு மானங் கெடுப்பானும், தானங் கொடுப்பாரைத் தடுத்து நிற்பானும், கலந்த சினேகிதரைக் கலகஞ் செய்வானும், மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்வானும், குடிவரியுயர்த்திக் கொள்ளை கொள்வானும், ஏழைகள் வயிறு எரியச் செய்வானும், மண்ணோரம் பேசி வாழ்வழிப்பானும், உயிர்க்கொலை செய்வார்க்கு உபகாரஞ் செய்வானும், களவு செய்வார்க்கு உளவு சொல்வானும், பொருளை இச்சித்துப் பொய் சொல்வானும், ஆசைகாட்டி மோசஞ் செய்வானும், வரவு போக்கொழிய வழியடைப்பானும், வேலையிட்டுக் கூலி குறைப்பானும், கோள் சொல்லிக் குடும்பம் கலைப்பானும், நட்டாற்றிற் கைநழுவ விடுவானும், கலங்கி ஒளித்தோரைக் காட்டிக் கொடுப்பானும், குருவை வணங்கக் கூசி நிற்பானும், குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பானும், கற்றவர் தம்மைக் கடுகடுப்பானும், பெரியோர் பாட்டில் பிழை சொல்வானும், பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைப்பானும், கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைப்பானும், கல்லும் நெல்லும் கலந்து விற்பானும், அங்காடிக் கூடையை அதிரவிலை கூறுவானும், அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்வானும், குடிக்கின்ற நீருள்ள குளம் தூர்ப்பானும், வெய்யிலுக்கொதுங்கும் விருக்ஷமழிப்பானும், பொது மண்டபத்தைப் போயிடிப்பானும், ஆலயக் கதவை அடைத்து வைப்பானும், சிவனடியாரைச் சீறிவைவானும், அரிதாசரைப் பரிகாசஞ் செய்வானும், தவஞ்செய்வோரைத் தாழ்வு சொல்வானும், தந்தைதாய் மொழியைத் தள்ளி நடப்பானும், தெய்வமிகழ்ந்து செருக்கடைவானும் செல்லும் கதியிற் செல்லக் கடவேன்.

அம்மணீ! இன்னமுங்கேளுங்கள். கற்றறிந்தும் கூடாவொழுக்கமுடையானும், அடைக்கலப் பொருளை அபகரிக்கும் அபராதியும், இரவில் வந்து அண்டுவார்க்கு இடம் கொடாத ஈனனும், போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிவானும், செழுங்கிளை தாங்காத செல்வனும், பிறர்க்குத் துன்பமியற்றும் துஷ்டனும் ,கற்பிலா மனைவியோடு கலந்து வாழ்பவனும், பரதாரப் பற்றுடைய பாதகனும், ஆலயாதிகளை அசுத்தஞ் செய்பவனும், விலைமொழி பொய்த்து விற்கும் வாணிகனும், அபலைகளை ஆபத்திற் கைவிடும் பேடியும், மித்திரன் மர்மங்களை முரண்பட்ட பொழுது வெளியிடுபவனும், பிறர் குற்றங்களையே பிறரோடு பேசுவோனும், முனிந்தபொழுது முறைகடந்த வார்த்தைகளை மொழிவோனும், மூடமனைவி சொற்கேட்கும் மூடனும், நூலில் இல்லாத பொருளை உள்ளதாகக் கூறுவோனும், பிறர் நலங்களைப் பழிப்பவனும், பிறர் பொருளாற் புண்ணியம் தேடுபவனும், சிறியவரிடத்து மிக்க சினங் கொள்பவனும், சிற்றின்பத்தில் ஆழ்ந்து பேரின்பத்தை மறந்த பேதையும் அடையும் கதியை நான் அடையக் கடவேன்

இப்படியும் மேலும் மேலும் அவன் கதறி அழுது சத்தியம் செய்த இடத்தை  இன்று நடத்திய தனது 41ஆவது “சொல்லாமல் சொன்ன இராமாயணம்” டெலி உபந்யாஸத்தில் நாட்டேரி ஸ்ரீ ராஜகோபாலாசாரியார் மிக அழகாக எடுத்துச் சொல்கிறார்.

கேட்டு மகிழ

https://1drv.ms/u/s!AhaOONCkz1YkkXJOenkXW2GPoxNm

OR

http://www.mediafire.com/download/94b1zh0vly4l21e/041_SSR_%2820-06-2016%29%7E1%282%29.mp3