Thursday, June 5, 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 8

     18. ராமாநுஜ என்கிற பதம் திவ்யதம்பதிகளுக்குப் பிறகு மயர்வறமதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்களைக் குறிக்கிறது. ஆழ்வார்கள் நித்ய ஸூரிகளின் மறு அவதாரங்களாகப் பேசப்படுகிறார்கள். மேலும் பகவான் ஸாதுக்களை ரக்ஷிப்பதற்காக தஶாவதாரங்களை எடுத்தான். பின்பு மஹாப்ரளயம் முடிந்தபிறகு புதிதாக அண்டங்களை ஸ்ருஷ்டித்து அதில் ஸ்ருஷ்டிகர்த்தாவாக சதுர்முக ப்ரம்மனைப் படைத்தான். அதுமட்டுமின்றி அவனுக்கு ஸம்ஸ்க்ருத வேதங்களையெல்லாம் உபதேஶித்தான். அந்த பகவான் கலியுகத்தில் ஶரணாகதி தத்துவத்தை உலகெங்கும் பரவச் செய்யவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு தன்னுடைய அம்ஶமாக தன்னுடைய ஸங்கல்ப விஶேஷத்தாலே பத்து ஆழ்வார்களை அவதாரம் செய்வித்து த்ராவிட வேதத்தை (திவ்யப்ரபந்தம்) வெளிப்படுத்தி மற்றுமோர் அபிநவ தஶாவதாரத்தை நிகழ்த்திக் காட்டினான். ஆழ்வார்கள் வாயிலாக வந்த அவை நித்யமானது என்பதை ஸ்வாமி தேஶிகன் ஸம்ஸ்க்ருத வேதத்தில் புரியாத அர்த்தங்களை திராவிட வேதமான திவ்யப்ரபந்தத்தை ஓதி தெளியாத மறைநிலங்களை தெளிகின்றோமே என்று அருளிச் செய்துள்ளபடி.

          மேலும் திராவிட வேதம் என்று சொல்லக்கூடிய திவ்யப்ரபந்தங்கள் ஶ்ராவ்ய வேதங்களாகவும், ஸ்வாது ஸுவ்யாஹ்ருதங்கள் என்றும் போற்றப்படுகின்றன. காரணம் ஶோகத்தின் காரணமாக உருவானது ஶ்ரீமத் ராமாயண காவ்யம். கருணையின் மிகுதியால் உருவானது ஶ்ரீமத் பகவத் கீதை. இவற்றைக் காட்டிலும் மேலானது த்ராவிட வேதம். எத்தனை வேதங்கள் எம்பெருமானைப் பின்தொடர்ந்து வந்தாலும் ‘தேடியோடும் செல்வன்’ என்றபடியும் “மெய் நின்று கேட்டருள்வாய்” என்றபடியும் எம்பெருமான் பின்தொடர்ந்து செவிசாய்ப்பதால் ஆழ்வார்களின் திவ்ய ஸூக்திகளின் உயர்வைக் காட்டுகிறது. மேலும் ஸ்வாமி, இப்பிரபந்தங்களின் ப்ரபாவத்தை ஸ்ரீகுருபரம்பராஸாரம், ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம், ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளி முதலிய க்ரந்தங்களில் அநுக்ரஹித்தருளியபடி.

       19. ராமாநுஜ என்ற பதம் முதலாழ்வார் மூவரைக் குறிப்பிடுகின்றது. பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் இவர்கள் மூவரும் மூன்று திருவந்தாதிகளால் எம்பெருமானை ஸாக்ஷாத்கரித்து (நேரில் பார்த்து) அநுபவித்தவர்கள். ஆகையால் இவர்களை இன்கவி பாடும் பரம கவிகளால் (திருவாய்மொழி) என்றும் செந்தமிழ் பாடுவார் (பெரிய திருமொழி) என்றும் கொண்டாடப் படுகிறார்கள். இவ்வாழ்வார்களுடைய ப்ரபாவத்தை ப்ரபந்தஸாரத்தில் பொதுவாக நிரூபித்துள்ளார். பாட்டுக்குரிய பழையவர் (அதிகாரஸங்க்ரஹம்) என்ற பாசுரத்தில் தமிழ்ப்பல்லாண்டு இசையுடன் பாடும் ஸூரிகளின் அவதாரம் என்றும், “நாட்டுக்கு இருள்செக, நான்மறையந்தி நடைவிளங்க, வீட்டுக்கு இடைகழிக்கே வெளிகாட்டும் மெய்விளக்கு” என்னும்படியான தீபத்தை ஏற்றி பகவானுடைய கல்யாண குணங்களை அனுபவித்தார்கள். இதில் பகவானுடைய “ஸௌலப்யம்” என்கிற கல்யாண குணமானது ப்ராப்தமாயிற்று. அதையே ஆழ்வார்கள் மூன்று திருவந்தாதிகளாக வெளியிட்டார்கள். ‘திருக்கண்டேன்’ என்று ஆரம்பித்து அநுபவித்தது ப்ரமாண தமமானது என்பதை ஸ்வாமி “ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸார”த்திலும், ஶ்ரீதேஹளீஶ ஸ்துதியிலும் “ஶ்ரீஸச்சரித்ர ரக்ஷை”முதலியவைகளிலும் அருளிச் செய்துள்ளார்.

           20. ராமாநுஜ என்கிற பதம் திருமழிசை ஆழ்வாரையும் குறிக்கிறது. இவர் சக்கரத்தாழ்வானுடைய அவதாரம் என்பதை “மழிசை வந்த சோதி” (ஶ்ரீகுருபரம்பரா ஸாரம்) என்று காண்பித்துள்ளார். நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவேகொள் ஞாலநாதனே (திருச்சந்தவிருத்தம்) ப்ரபந்நன் பாபம் செய்தால் அதற்காக அபராத க்ஷமாபணம் செய்ய வேண்டியதில்லை என்று அவர் மனதைக் காயப்படுத்தினவர்களுக்கு ஸமாதானமாக ஸ்வாமி, “தாத்பர்யத்தைப் பார்த்தால் க்ஷமிக்கவேணுமென்று அபேக்ஷித்தபடியாகையாலே ப்ரபந்நனுக்கும் அபராதம் புகுந்தால் க்ஷமைகொள்ள ப்ராப்தம்” என்றும் அருளிச் செய்துள்ளார்.