ஞாயிறு, 18 நவம்பர், 2012

மதுரகவி திருஅரங்கர் தத்தைவிடு தூது

Untitled-11

நூல்

பூமகளும், புவிமகளும், நீளையும் போற்ற அரவணையில்
பள்ளிகொள்ளும் அரங்கன்

பூமகளும் செல்வப் புவிமகளும் நீளையெனும்
மாமகளும் பைந்தாள் மலர்வருடப் – பாமருவும்           .1.
வண்ண மணிக்கடிகை வாளரவப் பாயலின்மேல்
எண்ணுந் துயில்புரியும் எம்பிரான் – தண்ஒளிசேர்      .2.
சோலைக்கிளியே பச்சைமணி மேனிப் படிவம்எனப் பாய்ஒளியார்
இச்சையுறுஞ் சோலை இளங்கிளியே – உச்சிதஞ்சேர்                .3.
வண்டினங்கள் பாடும் சோலை கந்தாரம் பாடிக் களிவண் டினங்கஞலும்
மந்தாரச் சோலையகம் வைகலாற் – சந்தாரக்              .4.
கோதை நல்லார் கூறும் மொழிகள். கோங்குமுலை வாங்குமிடைக் கோதைநல்லார் கூறுமொழி
யாங்குருகக் கூவிநலம் ஆர்தலால் – ஓங்கெழிலார்      .5.
இந்த்ராணி இடும் முத்தம் தந்த்ராணி எல்லாம் தளர்ந்தழியத் தான் விளங்கும்
இந்த்ராணி முத்தம் இடுதலால் – நந்தாத                      .6.
கோட்டுமா ஏறிக் குலவுதலால் கோட்டுமா வேறிக் குலவுதலால் கோதையர்கை
நீட்டுமா நின்று நிலவலால்—வேட்டுருகும்                   .7.
ஆயிரம் கண் நாட்டம் அமைதல்

ஆயிரங்கண் நாட்டம் அமைதலால் அம்புவியில்
நீயமரர் வேந்தன் நிகரன்றோ—பாய்திரைசூழ்             .8.

(நம் அகத்துக் குழந்தையிடம் ஒரு சிறு வேலையைச் சொல்லும்போது கூட, “என் கண்ணே! நீ கட்டிச் சமர்த்தாச்சே! அப்பாவுக்கு ரொம்ப செல்லமாச்சே” என்று பலபடியாய் குளிரப் பேசினால்தான் வேலை நடக்கிறது. இங்கோ கவிஞர் ஆசைப்படுவதோ பெரிய காரியம்! கிளியை தூது அனுப்புகிறார். அதுவும் அரங்கனிடம்! கிளியே போய்ச் சொல்லு என்றால் கிளி கேட்குமோ கேட்காதோ! அதனால் கிளியைப் புகழ்ந்து பாட ஆரம்பிக்கிறார்.

கிளியின் வண்ணத்தைப் , பச்சைமாமலைபோல் மேனி கொண்டு அறிதுயில் கொள்ளும் திருமாலுடனும், இந்திரனுடனும் ஒப்பிட்டுப் புகழ்வது மேலே உள்ளது. திரு கம்பன் வழங்கும் குறிப்புரை கீழே)

1. பூமகளும் – மலர்மகள் திருவும், செல்வப் புவி மகளும் – திரு மிகு பூமிதேவியும், நீளை எனும் மாமகளும் – அழகிய நீளா தேவியும், பைம்தாள் மலர் வருட –பசுமையான திருவடி மலர்களைத் தடவிக் கொடுக்க , பாமருவும் – பிரபை வீசும்
2. வண்ணமணிக்கடிகை – பலநிற மணிகள் பதித்த தோள் வளையுடன், வாளரவப் பாயலின்மேல் – ஒளிசேர் அரவணையில், எண்ணும் துயில் புரியும் --- நோக நித்திரை புரியும், எம்பிரான் – எம் தலைவன், தண் ஒளி சேர்—குளிர்ந்த பிரகாசம் சேரும்.
3. பச்சை மணி மேனிப் படிவம் என – மரகத உருவம் போல, பாய் ஒளி ஆர்---பரவும் ஒளி சேர், இச்சை உறும் – விருப்பமுடைய, சோலை – பொழிலில் உள்ள, இளங்கிளியே – இளமை சேர் கிளியே, உச்சிதம் சேர் – தகுதி சேரும்
4. கந்தாரம் பாடி – காந்தாரப் பண் இசைத்து, களி வண்டினம் கஞலும் –மதுவுண்ட வண்டினங்கள் மிகுந்திருக்கும், மந்தாரச்சோலை – கற்பகக்கா, அகம் – உள்ளே, வைகலால் – இருத்தலால், சந்த ஆர – சந்தனம் பொருந்திய
5. கோங்கு முலை –கோங்கில வரும்பனைய தனங்கள், வாங்கும் இடை – தாங்கும் இடுப்புடைய, கோதை நல்லார் – பெண்கள், கூறுமொழி – சொல்லும் உரைகள், ஆங்கு – அங்கே, உருக – அவர்கள் உள்ளம் நெகிழ, கூவி – உரைத்து, நலம் ஆர்தலால் – நன்மை உறலால், ஓங்கெழிலார் – மிக அழகுள்ள மகளிர்.
6. தந்த்ராணி எல்லாம் – (தன் த்ராணி) தம் சக்தி யாவும், தளர்ந்து அழிய – சோர்வுற்று நீங்க, தான் விளங்கும் – ஒப்பற்றுப் பொலியும் , இந்த்ராணி – இந்திரன் மனைவி, முத்தம் இடுதலால் – முத்தம் கொடுப்பதால், நந்தாத – குறைவற்ற
7. கோட்டுமா ஏறி – கொம்புகளுடைய மாமரத்திலே ஏறி, குலவுதலால் – விளங்குதலால், கோதையர் கை நீட்டுமா – அரம்பையர்கள் கை நீட்டுமாறு, நின்று நிலவலால் – இருந்து விளங்குதலால், வேட்டுருகும் – அகம் விரும்பி உருகும்.
8. ஆயிரங்கண் நாட்டம் அமைதலால் – ஆயிரங் கண்ணுடையான் பார்வை படுதலால் (இந்திராணி), ஆயிரக்கணக்கானோர் பார்வையில் படுவதால் (கிளி), அம்புவியில் – உலகில், நீயமரர் வேந்தன் – இந்திரன், நிகரன்றோ – எப்பல்லவா, பாய்திரை சூழ் –பாய்ந்துவரும் அலைகடல் சூழும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக