Wednesday, November 21, 2012

மதுரகவி திருஅரங்கன் தத்தைவிடு தூது 3

மண்நாட்டிலும் விண்நாட்டிலும் மண்நாட்டில் யாரும் மதிக்கும்வணம் மேவுதலால்
விண்நாட்டில் வாழ்வோர் விரும்புதலால் – எண்ணாட்டும் .9.
பரீட்சித்து மன்னன் மேன்மை பெற பாரகலை எல்லாம் பரீட்சித்து மேன்மைபெற
ஆரமுதம் நாண அறைதலால் – நீரமையும்                         .10.
நாரியரும் நாணாமல் நண்ணுதலால் நாரியரும் நாணாமல் நண்ணுதலால் நன்மையிலாப்
பூரியர்பாற் செல்லாப் புலமையான் – ஆர்வமுடன்            .11.
வனக்காட்டிடை வாழ்ந்து களித்தல் நாட்டிடையே யன்றிஎந்த நாளும்இனி தாகவளக்
காட்டிடையே வாழ்ந்து களித்தலால் --- வேட்டுருகிக்       .12.
கூடுவிடுக்
கூடு பாயும்
கூடுவிட்டுக் கூடு குடிபுகும்அக் கொள்கையினால்
பாடுபெறும் அஞ்சிறையிற் பற்றுறலால் – நீடுதவ            .13.
மாசுக நல் ஞானம் மாசுகநல் ஞான வளம்பெருகு நாமமொடு
நீசுகனாய் வாழ்தல் நிசமன்றோ – தேசுபெறும்                 .14.
வாசம் சிறந்த வனம் வாசஞ் சிறந்தவனம் மன்னுதலால் மாதவத்தோர்
பேசுநய வாணி பிறங்கலால் – காசினியின்                        .15.
மன்னும் குரம்பை வளன் மன்னும் குரம்பை வளனமையத் தான்படைத்துத்
துன்னும்ஒரு நான்முகமுந் தோன்றலால் – முன்னியநற்    .16.
அருள் வாய்ந்த வேள்வி கேள்விமறை யோர்புகலுங் கீதமறை ஓதுதலால்
வேள்வியருள் வாய்ந்த விதிஒப்பாய் – நீள்ஒளிசேர்          .17.
வண்ணக் கனி வாய் மருவுதல் வண்ணக் கனிவாய் மருவுதலால் வான்உலகில்
நண்ணிப் பயில்வோரும் நட்புறலால் --- ஒள்நிறஞ்சேர்     .18.
அஞ்சுவண வன்னம் அமைதல் அஞ்சுவண வன்னம் அமைதலால் ஆங்கெதிர்வோர்
நெஞ்சுவந்து கோடல் நிகழ்த்தலால் – நஞ்சவிழி               .19.
விந்தை நிகர் ஆயிழையார் விந்தைநிக ராயிழையார் மேவிவிளை யாடலினால்
ஐந்தருவை நீநிகராம் அன்றோகாண் --- சுந்தரஞ்சேர்       .20

9. மண் நாட்டில் – நிலவுலகில், யாரும் – எவரும், மதிக்கும் வணம் – புகழும்படி, மேவுதலால் – விளங்கலால், விண் நாட்டில் வாழ்வோர் – வானவர்கள், விரும்புதலால் –நேசிப்பதால், எண்நாட்டும் – உளத்தில் பதித்த

10.பாரகலை எல்லாம் – பெருங் கலைகள் யாவும், பரீட்சித்து மேன்மை பெற – பரீட்சித்து மன்னன் உயர்வு பெற, ஆரமுதம் நாண—அரிய அமுத மும் நாணும்படி சுவை பெற, அறைதலால் – கூறுவதால், நீரமையும் –நீரில் பொருந்திய (நீராடிய)

11. நாரியரும் – பெண்களும், நாணாமல் – வெட்கமுறாமல், நண்ணுத லால் – அடைதலால், நன்மையிலா – நலமில்லாத, பூரியர் பாற் செல்லா – அற்பர்களிடம் சென்றடையாத, புலமையால் – ஞானத்தால், ஆர்வமுடன் – அன்புடன்.

12. நாட்டிடையே யன்றி – மக்கள் வாழும் நாடுகளில் அல்லாமல், எந்த நாளும் – எப்போதும், இனிதாக – இன்பமாக, வளக்காட்டிடையே – செழித்த கானகத்தில், வாழ்ந்து – வசித்து, களித்தலால் – மகிழ்வதால், வேட்டுருகி – விரும்பி உருகி.

13. கூடுவிட்டுக் கூடு குடி புகும் அக்கொள்கையினால் – அட்டசித்துக் களுள் ஒன்றாம் ஒரு உடலை விட்டு வேறுடல் செல்லும் (பரகாயப் பிரவேசம்) அத்தன்மையால், (சுகர்), கூடு விட்டுக் கூடு மாறும் தன்மையது (கிளி), பாடு பெறும் – துன்பமுறும், அஞ்சிறையில் – அழகிய சிறைச் சாலை யில், (சுகர்) அழகிய சிறகில் (கிளி), பற்றுறலால் – பற்றி இருத்தலால், நீடு தவ --- நீண்ட தவத்தால்.

14. மா சுக நல் ஞான வளம் பெருகும் – பேரின்ப ஞான வளம் பெருகிய, நாமமொடு – சுகர் என்ற பெயருடன், நீ சுகனாய் வாழ்தல் – நீ கிளியாக (சுக மகரிஷியாக) வாழ்தல், நிசமன்றோ – உண்மை அன்றோ, தேசு பெறும் – ஒளி பெறும்.

15. வாசம் சிறந்த அனம் மன்னுதலால் – சிறந்த அன்ன வாகனத்தில் விளங் குவதால் (பிரமன்), வாசனை மிக்க சோறு உண்பதால் (கிளி), மாதவத் தோர் – மகரிஷிகள், பேசும் – புகழும், நயவாணி – எழிலார் சரசுவதி, பிறங்கலால் – விளங்குவதால் (பிரமன்), மாது – தலைவி, அவத்து – துயரில், ஓர் – ஒரு, பேசுநய வாணி – நயமாகப் பேசும் பேச்சால், பிறங்கலால் – விளங்கலால்(கிளி), காசினியின் –உலகில்.

16. மன்னும் – பொருந்தும், குரம்பை – சரீரத்தை (பிரமன்), கூடு (கிளி), வளனமைய – சிறப்பாக, தான்படைத்து – தான் சிட்டித்து, துன்னும் – விளங்கும், ஒரு நான்முகமும் – ஒப்பற்ற சதுர் முகங்களும் (பிரமன்), நாற்புறமும் (கிளி), தோன்றலால் – உண்டாவதால், முன்னிய – நினைந்த, நல் –நல்ல

17. கேள்வி மறையோர் – கேள்வி ஞானமுள்ள வேதியர், புகலும் – பிரமன் அருளும் (பிரமன்), கூறும், (கிளி), கீதமறை – இசைசார்வேதம், ஓதுதலால் –கூறுதலால் (பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதும் ஓசை கேட்டு வேரிமலி பொழிற் கிள்ளை வேதங்கள் பொருட் சொல்லும் மிழலை யாமே  --சம்பந்தர் தேவாரம்) வேள்வி யருள் வாய்ந்த – யாக அனுக்கிரகம் பொலிந்து, விதி ஒப்பாய் – பிரமன் நிகராவாய், நீள் ஒளி சேர் – பெருஞ் சோதி சேரும்.

18 – 20. (கற்பகத்தரு – கிளி சிலேடை) வண்ணக் கனிவாய் மருவுதலால் – பல நிறப் பழங்கள் பொருந்துவதால் (ஐந்தரு) நல்ல நிறமுள்ள பழம் போன்ற வாய் உள்ளதால் (கிளி), வானுலகில் – தேவலோகத்தில், நண்ணி – அடைந்து, பயில்வோரும் – விளங்குபவர்களும், நட்புறலால் – நேயமுறலால், ஒள்நிறஞ்சேர் – ஒளிவண்ணம் சேரும், அஞ்சுவண வன்னம் – அழகிய பொன்நிறம் (கற்பகத்தரு) பஞ்சவர்ணம் (கிளி), அமைதலால் – பொருந்துவதால், ஆங்குஎதிர்வோர் – அங்கு எதிர்வருபவர், நெஞ்சுவந்து – மனம் பொருந்தி, கோடல் – கொள்ளுதல், நிகழ்த்தலால் – நடத்துவதால், நஞ்சவிழி – விஷத்தன்மை சேர் கண்களுடைய, விந்தை நிகர் – வீரலட்சுமி அனைய, ஆயிழையார் – மகளிர், மேவி – சார்ந்து, விளையாடலினால் – களியாடலால் (பொது) ஐந்தருவை – கற்பகச் சோலைக்கு, நீநிகராம் அன்றோ காண் – பார், நீ ஒப்பாவை அன்றோ, சுந்தரஞ் சேர் – எழில் பொருந்திய