Wednesday, February 15, 2012

வைத்தமாநிதி

சில நேரங்களில் கையில் கிடைக்கும் நூல்கள் படிக்கப் படிக்கத் தேனாக தெள்ளமுதாய் இனிக்கின்ற அதே நேரத்திலே அடியேனை சிறு வயதுமுதல் ஏதொன்றும் கற்காமல் வாழ்வின் பெரும்போதை வீணாக்கினோமே என்று மன வருத்தப்பட வைக்கவும் செய்யும். அதிலும் பிரபந்தம் தொடர்பான நூல்களைப் படிக்கும்போதெல்லாம், சொந்த அத்திம்பேர் ஒரு பெரிய ப்ரபந்த அதிகாரியாயிருந்தும், பல முறை கற்றுத் தர அழைத்தும் வாய்ப்புகளை வீணடித்தோமே என்று மனமெல்லாம் ரணமாகும். இப்படி மகிழவைத்து வருத்தமும் படவைத்த ஒரு சிறு நூல் இன்று கையில் கிடைத்தது. அந்நூலை முழுமையாக  எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள நினைத்தாலும், அதன் கட்டு (Binding) scan /Xerox செய்ய வசதியாக இல்லை. எனவே வழக்கம்போல் சிறிது சிறிதாகத் தட்டச்சிட்டு பகிர்ந்து கொள்கிறேன். நாலாயிரம் வல்லோருக்கு இந்நூல் பெரு விருந்தாக இருக்கும்.  ஆழ்வார்கள் அருளிச் செயல்களில் ஆழ்ந்து அனுபவிக்க மற்றவர்களுக்கு ஒரு தூண்டுகோலாகவும் இருக்கும். தொடர்ந்து படியுங்கள்.
சொல்ல மறந்து விட்டேன். இந்நூலை எழுதியவரும் சரி, இதை இலவச வெளியீடாகப் பதிப்பித்த வள்ளலும் சரி பிறப்பால் வைணவர்கள் இல்லை.  நூலை தொகுத்தவர் கௌஸ்துபமணி என்று அறியப்பட்ட பரமபூஜ்ய ஸ்ரீஆதிசங்கரர் அடிப்பொடி ஸ்ரீ ப்ரஹ்மானந்த தீர்த்த சுவாமிகள். வெளியிட்டவர் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் வேம்புவய்யர்.
.

வைத்தமாநிதி
அ- சங்கநிதி

(கௌஸ்துபமணி என்ற பிரும்மானந்த தீர்த்த சுவாமி தொகுத்தது)

1. மச்சாவதாரம்  (ஒரு மீன் உரு ஆகி)
         நிலையிடம் எங்கும் இன்றி முன்னீர் வளர்ந்து உம்பர் வளநாடு மூட, உலகம் எல்லாம் நெடுவெள்ளம் கொண்ட காலம், வானமும் நிலனும் மலைகளும் அலைகடல் குளிப்ப, மற்றும் எமக்கு ஓர் சரண் இல்லை அரண் ஆவான் என்று இமையோர் சரண் புக, திருமகள் கேள்வன்தான் ஒரு கொழுங்கயல் ஆய், வலி உருவின் மீனாய் வந்து, நீர் குழம்ப உலாவி, குலவரையின்மீது ஓடி, அகல்வான் உரிஞ்ச அகடு ஆட ஓடி, முதுகில் மலைகளை மீது கொண்டு அண்டத்து அப்பால் எழுந்து, இனிது விளையாடி, வியந்து உயிர் அளித்து, உய்யக்கொண்ட ஈசன், அருமறை தந்து கலைகளும் வேதமும் நீதிநூலும் கற்பமும் சொற்பொருள்தானும் மற்ற நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால்  அருள் செய்தான் அமலன் ஆதிப் பிரான்.
       ஆறும் ஓர் பற்று இலாத பாவனை அதனைக்கூடில் அவனையும் கூடலாமே. பரம்! நின் அடி இணை பணிவன் வரும் இடர்அகல.
2. கூர்மாவதாரம் (ஓர் ஆமையும் ஆகி)
          அமரர்கள் ஆழ்கடல்   தன்னை மிடைந்திட்டு, நெடுவரை மந்தரம் மத்தாக நாட்டி, நீள் நாகம் வாள் எயிற்று அரவு வாசுகி வன்கயிறாக வடம் சுற்றி, கடல் மறுகக் கடைந்த காலம், திசை மண்ணும் விண்ணும் உடனே வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப, பொங்கு நீள்முடி அமரர்கள் தொழுது எழ, அமுதம்எய்தும் அளவும், அமுதினைக் கொடுத்தளிப்பான் அங்கு தடங்கடலுள், ஓர் ஆமையாய், பருவரை முதுஇல் சுழலத் தாங்கி, தலைமுகத்தான் ஒருகைப்பற்றிபா இரும் பௌவம் பகடு விண்டு அலற,படுதிரை விசும்பிடை படர, செய்இரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாம் உடன் திசைப்ப, மாநிலங்குலுங்க, குன்றுசூழ் மரங்கள் தேய, மாசுணைமசுலாய ஆயிரம் தோளால் நெருங்க, வெள்ளை வெள்ளம் நீலக்கடல் ஆகி, முழுதும் குழம்பி அலற, கடல்வண்ணன் தானே இலங்குசோதி ஆர்அமுது எழ, வங்கக்கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தான், ஆறுமலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி, அரவு ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி, கடல்மாறு சுழன்று அழைக்கும் ஒலி, அப்பன் சாறுபட அமுதம் கொண்டநான்று,
          குரைகடல் கடைந்து அமுதம் எழுமுன் சலம் கலந்த செஞ்சடை சிவன், தன்கூறு கொண்ட கழல்நிறவண்ணன் கண்ணுதல் மாகடல் நஞ்சுஉண்ணச்செய்தான் நிமலன், நான்முகன் தான்முகமாய்ப் படைத்திட்ட சங்கரனும் நஞ்சுண்டு கறுத்த கண்டனானான்.
         தீமை செய்யும் வல்அசுரரை அஞ்சி, விஞ்சைவானவர், சாரணர், சித்தர் வியந்துதி செய்ய,மாயப்பிரான் காமரூபம் கொண்டு தானே ஒரு பெண் ஆகி, நண்ணாதவாள் அவுணர் இடைப்புக்கு வஞ்சித்து, இன்அமுதம் உள்ள நோய்தீர் மருந்தாக அமுதினை வானவரை ஊட்டி அவருடைய மன்னுதுயர் கடிந்தான் மாமாயன்.
      வரைச்சந்தனக் குழம்பும், வான்கலனும் பட்டும், விரைப்பொலிந்த வெண்மல்லிகையும், நிரைத்துக்கொண்டு நின்ற மணவாளன், கடைந்த அமுதை விண்ணவர் உண்ண, அமுதினில் வந்த மின்ஒத்தபெண் அமுதத்தைத்தன் தடங்கொள் தாள்மார்பில் மன்னவைத்து, கொங்குஆர்இலைப்புண்டரீகத்தவன், இன்பம் அன்போடு அணைத்திட்டான்,பின் காமனைத் தந்தான் பயந்து நூற்று இதழ் அரவிந்த மலர்ப் பாவைக்கு அருள் செய்தான் கறைதங்கு வேல்த்தடங்கண் திருவை மார்பில் கலந்த மணாளன்.
        இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே, எப்போதும் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான் மொய்கழலே ஏத்த முயல்.
                                தன்வந்திரி அவதாரம் , வராகாவதாரம் நாளை …….