Thursday, February 16, 2012

வைத்தமாநிதி 2

சங்கநிதி தொடர்ச்சி
3. தன்வந்திரி அவதாரம்
 
    கிடந்த அமுதாகிய வேதப்பிரான் தானே அமுதுஎழ கடல் கடைந்து நோய்தீர் மருந்து ஆக அமுதினை, நான்முகனார் பெற்ற நாட்டுளே அளித்தான் நோய்கள் தீர்த்தான்.
    நெய்க்குடத்தைப்பற்றி ஏறும் எறும்புகள்போல் நிரந்து எங்கும் கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்! காலம் பெற உய்யப் போமின்! மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்! இங்கு புகேன்மின், புகேன்மின், எளிது அன்று கண்டீர்; புகேன்மின்! பாணிக்கவேண்டா நடமின், உற்ற உறுபிணி நோய்காள்! உமக்கு ஒன்று சொல்லுகேன்மின்! பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்பேணும் திருக்கோயில் கண்டீர்! அற்றம் உரைக்கின்றேன் இன்னம்; ஆழ்வினைகாள் உமக்கு இங்கு ஓர் பற்றில்லை கண்டீர், நடமின் பண்டு அன்று பட்டினம் காப்பே.
       அவர்அவர் தாம்தாம் அறிந்தவாறு ஏத்தி இவர் இவர் எம்பெருமான் என்று அலர்மிசைச்சார்த்தியும் வைத்தும் தொழுவர்.
 
4, வராகவதாரம் (பன்றியும் ஆகி)
 
            ஆதிஅம்காலத்து அரக்கனால் ஆழப்பெரும் புனல்தன்னுள் அழுந்திய நிலமடந்தை பொருட்டு, வளர்சேர்திண்மை விலங்கல் மாமேனி வெள்எயிற்று ஒள்எரித்தறுகண் பொருகோட்டு கேழலாகி, திக்கோட்டின வராகம்ஆகி அரண் ஆனான் தரணித்தலைவன். நீலவரை இரண்டுபிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப கோலவராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக்கொண்டான். அழியாத ஞானமும் வேள்வியும் நல்லறமும் இயல்வாய் நின்று ஏழ்உலகும் தானத்தேவைக்க எயிற்றினில் கொண்டபோது, நான்றிலவேழ் மண்ணும் தானத்தவே, பின்னும் நான்றிலவேழ்மலை தானத்தவே, பின்னும் நான்றிலவேழ் கடல் தானத்தவே, அப்பன் ஊன்றியிடந்து எயிற்றினில் கொண்ட நாளே, தீதுஅறுதிங்கள், பொங்குசுடர்மாதிரம் மண்சுமந்த வடகுன்றும், நின்றமலைஆறும், எழுகடலும், பாதமர் குளம்பின் அகமண்டலத்தின் ஓர்பால் ஒடுங்க, சிலம்பினிடைச் சிறுபரல்போல் பெரியமேரு திருக்குளம்பில் கணகணப்ப திருஆகாரம் குலுங்க, சிலம்புமுதல் கலன் அணிந்து ஓர் செங்கல் குன்றம் திகழ்ந்தது எனத்தோன்றி இமையவர் வணங்க நின்று, வலம்கொள்ள வானத்தில் அவர்முறையால் மகிழ்ந்து ஏத்தி வணங்க, பாரதம் தீண்டு மண் எல்லாம் இடந்து இலங்கு புவி மடந்தை தனைப்புல்கி வல் எயிற்றினிடை வைத்து அம்மடவரலை மணந்து உகந்தான். பாசி தூர்த்துக்கிடந்த பார்மகட்கு பண்டொரு நாள் மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாய் தேசுடை தேவர் பேசியிருப்பன்கள் பேர்க்கவும் பேராதே.
             செந்திறத்தத்தமிழ் ஓசைவட சொல்ஆகி, திசைநான்கும் ஆய், திங்கள் ஞாயிறு ஆகி, அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை, அந்தணர்மாட்டு அந்திவைத்த மந்திரத்தை, மந்திரத்தை மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் மடநெஞ்சமே.