திருப்புல்லாணி ஆச்ரமத்தில் ஸ்வாமி தேசிகனின் 744வது திருநக்ஷத்ர உத்ஸவம் இன்று திருக்குடந்தை தேசிகனின் அவதார தினத்தில் தொடங்கியது. ஸ்வாமி தேசிகனுக்கு விசேஷ திருமஞ்சனமும், மாலையில் திருக்குடந்தை தேசிகன் செய்த “தேசிக சஹஸ்ரநாம”த்தைக் கொண்டு ஸ்வாமி தேசிகனுக்கு சஹஸ்ரநாம அர்ச்சனையும் நடந்தது. காலையில் திருமஞ்சனத்துக்குப் பின் நடந்த சாற்றுமுறை கோஷ்டியில் ஸ்ரீ ஆதி ஜகன்னாதப் பெருமாள் ஆலய அர்ச்சகர்கள், ஸ்தானிகர், கைங்கர்யபரர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மூன்று நாள் உத்ஸவமாக ஆரம்பித்த பிறகு, தேசிக சஹஸ்ரநாம அர்ச்சனை, தொடர்ந்து நடந்து வருகிறது.
அது சரி! 743லிலும் இதைத்தான் எழுதினாய். 742ல் போய்ப்பார்த்தால் அதிலும் மாற்றமில்லை. என்ன ஆசை? எப்படி நிறைவேறியது? அதைச் சொல்லாமல் ……
உத்ஸவத்தை சிறப்பிக்க வந்திருக்கும் திரு J.S. வாசன் ஸ்வாமி, காலை திருமஞ்சனம் நடக்கும்போது, , மாலையில் தேசிகனுக்கு ஊஞ்சல் போடலாமே என்றார். தாத்தா நாளில் நடந்திருக்கிறது. அதன்பின் நின்று விட்டது. அடியேனுக்கும் ஆசைதான். ஆனால் தேசிகன் ஆடுமளவுக்கு ஊஞ்சல் இல்லையே என்று நான் சொன்னதும், சரி அடுத்த வருடமாவது தயார் செய்யலாம் என்று அவர் சொன்னார். ஆனால், தேசிகனே திருவுளப் பட்டதால்தான் அப்படி அவர் சொன்னால் என்பது அடியேனுக்கு அப்போது புரியவில்லை. ததீயாராதனத்துக்குப் பின் மாலையில் அடியேன் மர மண்டையில் திடீரென்று ஒரு பல்ப் எரிந்தது. அதை எங்கள் ஆராதகர் ஸ்ரீதரனிடமும், சென்னை நங்கநல்லூர் ரங்கராஜன் ஸ்வாமியிடமும் தெரிவித்தேன். அந்த யோசனையை ஏற்று, சில நிமிடங்களில், தேசிகன் புறப்பாடு கண்டருளும் விமான மண்டபத்தை மாற்றி அமைத்து ஊஞ்சலையும் ரெடி பண்ணி ஸ்வாமி தேசிகனை ஏளப் பண்ணி அவரை மகிழ்வித்து விட்டார்கள். ஆக, தாத்தா நாளுக்குப் பின், அதாவது சுமார் 75 ஆண்டுகளுக்குப் பின்
“திருவாழத் திருவாழு மார்பர்வாழத்
திருமார்பர் திருவடியே வாழவன்னார்
திருவடிப்பூப் போத சடகோபர்வாழத்
தெள்ளியசீ ரெதிராசர் செங்கோல்வாழ
வருணநெறிச் செவ்விவளம் செழித்துவாழ
வைணவர்கள் குடிகுடியாய் வாழவாழச்
சுருதிமுடிக் குருப்புனித ராடிரூசல்
சீர்தூப்புல் வேங்கடவ ராடிரூசல்”
என்று கூடியிருந்தோரெல்லாம் உவந்து பரவ, எங்கள் தேசிகன் இன்று ஊஞ்சலில் ஆடிய வண்ணம், திருக்குடந்தை தேசிகன் அருளிய தன்னுடைய சஹஸ்ரநாமத்தையும் கேட்டு மகிழ்ந்திருந்தார்.
இப்போதைக்கு சில படங்கள் மட்டும்.
ஏனோ வீடியோக்கள் upload ஆவதில் மிகவும் தாமதம் ஆகிறது. இரவு 10 மணி முதல் இப்போது ஒரு மணி வரை முயன்று கொண்டிருக்கிறேன். 50% கூட ஏறவில்லை. அதனால் வீடியோ நாளை வரும். (அப்பாடி ……. என்று சந்தோஷப்படுவது யார்? )
மாலையில் ஊஞ்சலில், ஸ்ரீ ரங்கராஜனின் அருமையான சாத்துப் படியில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக