Sunday, January 30, 2011

வைணவ ஆசாரியர்கள்

11.அடியார்க்கு ஆணை

வெய்யவர்பல் லாயிரவர் விழைந்துமிழுங் கதிரதுவும்
நையுமெனப் புகர்பரவும் வானாட்டின் நாதன்றன்
செய்யவடி சேர்வதுதா னணித்தெனவே தெளிவுற்று
மெய்யவனிவ னிளையாழ்வார் தனைக்காண விரும்பினனே
.      102.

தாம் வான் சேரும் காலம் அணித்தென்று, ஆளவந்தார் இளையாழ்வாரைக் காண விரும்பியமை. வெய்யவர்…. புகர் – சூரியன் பல்லாயிரம் சேர்ந்து ஒளிரும் ஒளி. வானாடு – ஸ்ரீவைகுண்டம்.

பேரருளா ளன்கழலிற் பணிசெய்யும் பேறுடையார்
வாரமுடை வைணவரோ ரிருவரிவன் னடிவணங்கிச்,
”சாரமெழ இளையாழ்வார் மறைப்பொருளைச் சாற்றுவதால்
ஆரமுனி வுற்றவனாய் யாதவனு மகற்றிடலால்
,                            .108.

வைணவர் இருவர் இளையாழ்வாரைப் பற்றி ஆளவந்தாரிடம் கூறியது. ஆர முனிவு – மிகுந்த கோபம்; மறைப் பொருளை இளையாழ்வார் சுவைபட விரித்தலால், யாதவப்ரகாசன் தன் மதம் ஓங்காது எனச் சினந்தான்.

வரதனடிக் காந்தொண்டில் மண்டு”மென யாமுனனும்
அரதனமாய் துதியொன்றை யமைத்ததனை யோலையுடன்
வரதனடிக் கெனப்பெரிய நம்பியிட மளித்” தன்ப!
விரதனிளை யாழ்வாரென் பால்படர விரை”கென்றான்
.                .109.

ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்நம் என்று புகழ் பெறும் துதியைப் பெரிய நம்பியிடம் அளித்து, இளையாழ்வாரைக் கண்டுவர ஆணையிட்டார். அரதனம் – ரத்தினம்; இந்த ஸ்துதிக்கு ஸ்தோத்ர ரத்நம் எனப் பெயர். விரதன் இளையாழ்வார் – வரதனடியில் தொண்டே விரதமாகக் கொண்ட இளையாழ்வார்.

திருவடியிற் பரவிவருந் திருவுடையார் தமையீட்டிப்
பொருவிலனா மிளையாழ்வா ரவதார புருடனெனக்
குரவரனாம் நாதமுனி யருளியவம் மூர்த்திதனைத்
தெருளொளிருந் திருக்கோட்டி யூர்நம்பிக் களித்தனனே.
           105.

விரியமறைப் பொருள்பகரும் மிகவல்லோ னிளையாழ்வார்க்
குரியவரு சமாச்ரயணம் பெரியநம்பி யருளவெனப்
பரிதிவனை முனிவனவன் பணித்தருளிக் கீதைதனிற்
தெரிவரிய சரமச்லோ கப்பொருளைத் தெளிவுறவே
,                   106.

திருக்கோட்டி யூர்நம்பி திருவாய்மொ ழிப்பொருளைச்
செருக்கோட்டுந் திருமாலை யாண்டானுந் தவங்கொண்ட
பெருக்கோடப் புற்றிருந்தான் பெய்தசுவை யிதிகாசப்
பொருட்கோடா வகையருளப் பெரியதிரு மலைநம்பி,
                 107.

திருவரங்கப் பெருமான்றன் சேவடியின் பெருமைதனைத்
திருவரங்கப் பெருமாள ரையரிவர் அருள்செய்யல்
பெருவரங்க ளெனவோதி யெண்ணமெலாம் பெருமான்பால்
கருவரங்கங் காய்ந்ததனிக் கலைவலவன் றானுய்ந்தான்
.              .108.

இளையாழ்வாருக்கு உபதேசம் செய்வது பற்றி ஆளவந்தாரது ஆணை. திருக்கோட்டியூர் நம்பியிடம் தாம் மணக்கால் நம்பி மூலமாகப் பெற்ற திருவுருவை அளித்து, இளையாழ்வார் அவதார புருடனெனக் கூறினார். பெரிய நம்பி இளையாழ்வாருக்கு சமாச்ரயணம் செய்விக்க வேண்டும் என்றும், சரமச்லோகப் பொருளைத் திருக்கோட்டியூர் நம்பி உபதேசம் செய்யவேண்டும் என்றும், திருவாய்மொழிப் பொருளைத் திருமாலையாண்டானும், ஸ்ரீராமாயணத்தின் பொருளைப் பெரிய திருமலை நம்பியும், திருவரங்கன் திருவடியின் பெருமையைத் திருவரங்கப் பெருமாளரையரும் அருளவேண்டும் என்று ஆணையிட்டார், ஆளவந்தார். செருக்கு ஓட்டும் – அகங்காரத்தை அறவே ஒழித்த. கொண்ட தவம் பெருக்கு ஓட புற்றில் இருந்தான் – தவத்தால் சுடர் எங்கும் பெருகுமாறு புற்றிலே இருந்த வான்மீகி முனிவன். இதிகாசம் – இராமாயணம். கோடா வகை – பிழையில்லாதவாறு. பெரு வரங்கள் – தாம் மிகவும் விரும்புவன. கரு அரங்கம் காய்ந்த – கருவாகிய இடத்தை அகற்றிய, பிறவி மறுபடியும் நேராத.

படநாகத் தணையின்பாற் படர்தருமவ் வொளிதன்னைத்
திடமாகக் கண்ணிணையில் தேக்கியிவன் பெரும்பத்திக்
கடலாகுந் திருப்பாணன் பொழிதந்த கவியமுதை
மிடறேற்றி மெய்ம்மறந்து தன்மடமே மேவினனே.
                       109.

திருவரங்கப் பெருமாளைத் தொழுது அமலனாதிபிரான் என்னும் பிரபந்தத்தை அநுஸந்தித்துத் தமது மடத்திற்கு ஏகினார், ஆளவந்தார். மிடறு – தொண்டை. ஏற்றுதல் --- ஒலி செய்தல்.

சொல்லரிதாம் வையாசித் திருவோண நண்பகலில்
நல்லடியார் மறையோடும் தமிழோதி நற்றவன்றன்
எல்லடரு மிணையிடியைத் தாந்தொழவே அன்னவனும்,
”அல்லழிய அரங்கற்காம் பணிசெய்வி ரவன்புகழை,
                     .110.

சாற்றுதமிழ் தன்னோடுந் துயமொடு மெட்டெழுத்தும்
ஏற்றமுடை யாசானும் இறைவன்பா லன்புய்க்குந்
தேற்றமுடை யடியாரும் புகலாகத் தெளிவி”ரெனச்
சாற்றியரு நிட்டையிலே சார்ந்தனனால் நன்மலனே
.                    .111.

அடியார்க்கு ஆளவந்தார் ஆணை. எல் – ஒளி. அல் அழிய – அறிவின்மையாகிய இருள் மாள. அடியார்க்குப் புகல் தமிழ்மறை, த்வயம், திருவஷ்டாக்ஷரம், ஆசிரியன், இறைவனடியார் என்று அருளினார், ஆளவந்தார்.

பதுமா சனந்தனி லார்ந்தனன் படிவனும்
இதமே யருள்மணக் கால்வரு நம்பிதன்
பதமே தன்மனம் படிதர மகிழ்ந்தனன்
இதுவே விருப்பெனக் கவிந்தன இமைகளே.
                              .112.

ஆளவந்தார் பதுமாசனத்தில் அமர்ந்து மணக்கால் நம்பியின் திருவடிகளைக் கண்களில் தேக்கிக் கொண்டு பரமபதமடைந்தார். இமைகள் இதுவே (எமது) விருப்பு என கவிந்தன --- மற்றொன்றையுங் காண விரும்பாதனவாகிக் குவிந்தன.