ஞாயிறு, 3 அக்டோபர், 2010

தேசிகப்ரபந்தம் --- ஸ்ரீ ஆர். கேசவய்யங்கார் முன்னுரை

வேதாந்த உதயநர்: கடாம்பி ஆச்சான்: ஸம்ப்ரதாயம்:

கடாம்பி ஆச்சான் என்பவர் வேதாந்த உதயநர் என்னும் ப்ரஸித்தி வாய்ந்தவர்.  இவர் ராமாநுஜருடைய சிஷ்யர்.  வேதாந்தத்துக்கு (ராமாநுஜ ஸித்தாந்தத்துக்கு) உதயநர் போல் விளங்குதலால் இவர் வேதாந்த உதயநர் என்னும் புகழ்பெற்றார்.  ந்யாயதரிசனத்தார் உதயநரை ஆசார்யர் என்பர்.  அதுபோல் கடாம்பி ஆச்சானை வேதாந்த தரிசனத்தார் ஆசார்யர் என்பர்.  ஆதலால் இவர் ஆச்சான் என்னப்பெறுவர்.  ஆச்சான் என்றதற்கு ஆசாரியன் என்று பொருள்.  விசேடணங்களும் முன்தொடர்ச்சியும் இல்லாமல் தனித்து நின்றே ஆசார்யர் என்ற சொல் ந்யாய தரிசனத்தார்க்கு உதயநரை உணர்த்தும் சக்தி உடையது.  அதுபோல் வேதாந்த தரிசனத்தார்க்கு (ராமாநுஜ தரிசனத்தார்க்கு) விசேடணங்களும் முன்தொடர்ச்சியும் இல்லாமல் தனித்து நின்றே ஆசார்யர் (ஆச்சான்) என்ற சொல் ப்ரணதார்த்தி ஹரர் என்னும் கடாம்பி ஆச்சானை உணர்த்தும் சக்தி உடையது.  அம்மட்டோடு நில்லாமல் ஆச்சான் என்ற சொல் அவர்க்கு ஸம்ஞை (பெயர்) ஆயிற்று.  வேதாந்ததரிசனத்துக்கு (எம்பெருமானார் தரிசனத்துக்கு) கடாம்பி ஆச்சான் ஆசாரியர் என்றது அதன் பொருள்.  ராமாநுஜரை (எம்பெருமானாரை) நோக்கக் கடாம்பி ஆச்சான் சிஷ்யர். ராமாநுஜருடைய சிஷ்ய பரம்பரையை நோக்கக் கடாம்பி ஆச்சான் ஆசாரியர்.  ஆதலால் இவர் ஆச்சான் என்றும் வேதாந்த உதயநர் என்றும் பெரும்புகழ்வாய்ந்த ஞானப் பெருந்தகவோராய் விளங்கினார்.  கூரத்தாழ்வானையும் எம்பாரையும் போல் இவர் ராமாநுஜரை ஒத்த வயதினர்.  ராமாநுஜருடைய ப்ரஸித்த சிஷ்யர்கள்:- கூரத்தாழ்வான், ஆச்சான், எம்பார், பிள்ளான், நடாதூராழ்வான், முதலியாண்டான், திருவரங்கத்தமுதனார் முதலிய மஹாப்ராஞ்ஞர்கள்..ஆச்சானுடைய ராமாநுஜ பக்திக்கு உகந்து ராமாநுஜரைக் காக்கும் மடைப்பள்ளிப் பணியில் திருக்கோட்டியூர் நம்பி ஆச்சானை அமர்த்தி அருளினார். வேதாந்தப் பொருளைக் காக்க ராமாநுஜர் திருக்கோட்டியூர் நம்பியைத் தேடி அடைந்தார், ராமாநுஜரைக் காக்கத் திருக்கோட்டியூர் நம்பி ஆச்சானைத் தேடிப் பெற்றார்.  இது ஸம்ப்ரதாயம் கூறும் பொருள்.  இந்த ஸம்ப்ரதாயப் பொருளை உட்கொண்டுள்ள குருபரம்பரைச் சொற்றொடர் வருமாறு:- “பெரிய நம்பியும் பரபரப்புடனே நம்பியையும் (திருக்கோட்டியூர் நம்பியையும்) கூட்டிக்கொண்டு எழுந்தருளச் செய்தே மத்யாந்ஹகாலத்தில் திருக்காவேரியில் எழுந்தருள எம்பெருமானாரும் (ராமாநுஜரும்) முதலிகளோடே எதிர்கொண்டுபோய்ப் பெரியநம்பியை தண்டன் ஸமர்ப்பிக்க, நம்பியும் முடிபிடித்தெடுத்துக் குளிரக் கடாக்ஷித்தருள, திருக்கோட்டியூர் நம்பி பக்கல் தண்டன் ஸமர்ப்பித்துக் கொண்டிருக்க, நம்பியும் அமையும் எழுந்திரும் என்று சொல்லாமலிருக்க, கடாம்பி ஆச்சானும், இதென்ன ஆசாரிய சிஷ்யக்ரமம் தான், உயிர் முடியுமளவும் பரீக்ஷை பண்ண அடுக்குமோ என்று எம்பெருமானாரை வாரி எடுத்துக் கொண்டு கண்ணீர் மல்க நிற்க, ‘திருக்கோட்டியூர் நம்பியும் `உம்மையன்றோ தேடுகின்றோம்’, இவர் திருமேனிக்குப் பரிவரான நீரே மாதுகரத்தை சோதித்து ஸமாபநம் பண்ணுவிக்கக் கடவீர்” என்று நியமித்தருள கடாம்பி ஆச்சானும் அப்படியே பண்ணிக்கொண்டு வர எம்பெருமானாரும் திருவுள்ளம் பற்றி எழுந்தருளி இருந்தார்.”1  இவ்வாறு திருக்கோட்டியூர் நம்பி திருவருளுக்கும் எம்பெருமானார் திருவருளுக்கும் பரிபூரண இலக்காய் “எதிவரனார் மடைப்பள்ளி ஆச்சான்” என்ற பெருங்கீர்த்தி பெற்ற இவர் எம்பெருமானார் சம்பிரதாய ரஹஸ்யத்துக்கு ஆசார்யன் என்ற திருநாமம் பெற்றார். வேதாந்த தேசிகர் அருளிச்செய்த ரஹஸ்யத்ரயஸாரத்துக்கு குருபரம்பையை அநுசந்திக்குங்கால் ‘கமப்யாத்யம்’ என்னும் இம்மஹாதேசிகரது யதிராஜஸப்ததி முதல் சுலோகம் தொடங்கி, ‘தயாநிக்நம்யதீந்த்ரஸ்ய’ என்னும் பெரிய நம்பியைப் போற்றும் சுலோகமளவாக அநுஸந்தானம் செய்து திருக்கோட்டியூர் நம்பி,எம்பெருமானர், கடாம்பி ஆச்சான் இவர்களை முறையே அநுசந்தித்து, பின்னர் ஆச்சான் திருக்குமாரராகிய இராமாநுஜர், அவர் திருக்குமாரராகிய ஸ்ரீரங்கராஜர், அவர்திருக்குமாரராகிய இராமாநுஜர் (கடாம்பி அப்புள்ளார்) இவர்களை முறையே அநுசந்தித்து, பின்னர் கடாம்பி அப்புள்ளார் சிஷ்யராகிய இம்மஹாதேசிகரது தனியன் ஸ்ரீஅழகியசிங்கர் அஹோபிலத்திருமடத்தில் அநுசந்திக்கப்பெற்று வருதல் இவ்வுண்மையை நன்கு யாப்புறுத்தும்.  ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸார பரம்பரைக்குத் திருக்கோட்டியூர் நம்பி தனியனும் கடாம்பி ஆச்சான் தனியனும் சிறப்பித்து ஓதப்பெற்று வருதல் நன்கு நோக்கத்தக்கது.  இவ்வாறு கடாம்பி ஆச்சான் ஸம்ப்ரதாயம் என்பது எம்பெருமானார் தரிசன ரஹஸ்யஸம்ப்ரதாயம், எதிவரனார் மடைப்பள்ளி ஸம்ப்ரதாயம் (யதிராஜமஹாநஸஸம்ப்ரதாயம்) என்றது கூறிற்றாயிற்று.  ராமாநுஜருடைய திருவுள்ளக் கருத்தை அவருடைய சிஷ்யவர்க்கங்கள் கடாம்பி ஆச்சானிடம் கேட்டுத் தெளிவார்கள் என்பது ஸம்ப்ரதாயம் “அஞ்சுவன்2 என்று தொடங்கும் பெரியதிருமொழிக்கு வ்யாக்யாநம் அருளிச்செய்யுமிடத்து:- பட்டர் இப்பாட்டை அருளிச் செய்து ஒருஸ்த்ரீயை விரூபையாக்கினவனுடைய திறம் கேட்கில் அஞ்சுவன் என்கையால் இத்தலைக்கு குணஹாநியாய்த் தோற்றாநின்றது, இது ஆழ்வார் அருளிச்செய்யக் கூடாது, இது எங்ஙனே சேரும்படி? என்று ஆச்சானைக் கேட்க “துடுப்பிருக்கக் கைவேக வேணுமோ? எம்பெருமானார் தாமே (ராமாநுஜர்தாமே) அருளிச் செய்துவைத்தாரிறே” என்ன ‘அருளிச்செய்தபடி எங்ஙனே’ என்று கேட்க ‘முன்பொருபுணர்ந்துடன் போக்கிலே பிறந்த ப்ரமாதத்தைக் கேட்டு அத்தை நினைத்து இப்போது பயப்படுகிறாள்’ என்று அருளிச் செய்தார் என்று இவ்வரலாற்றை பெரியவாச்சான் பிள்ளை எடுத்துக் காட்டியிருத்தல் காண்க.  அருளிச் செயல்களின் நுண்பொருள்களை உடையவர் மடைப் பள்ளிவார்த்தை கொண்டு இனிது சேரும்படி சமைத்தருளுதல் எத்துணை மணம்கமழா நிற்கும் என்றதற்கு ஈதொன்றே தக்கசான்றாகும்.  “துடுப்பு இருக்கக் கைவேக வேணுமோ?” என்ற எதிராசர்மடைப்பள்ளி ஸம்ப்ரதாய பரிபாஷையின் ரஸத்தை நன்கு சுவைக்க.  எதிவரனார் மடைப்பள்ளி ஆச்சான் கொடுக்கும் துடுப்பு இல்லையேல் கைதான் வேகும் எம்பெருமானர் திருவுள்ளக்கருத்து காணற்கு ஏலாது என்ற நுண்பொருள் தெளிக.  ஈதே எதிவரனார் மடைப்பள்ளி வந்த மணத்தின் நறுமை.  அருளிச்செயல்களில் பட்டர் தமக்கும் ஓர் ஐயம் எழுந்திருக்க வேண்டுமென்றால் அது எத்துணை வலிமையுடைத்தாயிருந்திருத்தல் வேண்டும் என்றும், அந்த ஐயத்தைத் தீர்த்து மெய்ப்பொருளை இசைத்து அருளும் ஸம்ப்ரதாயஞானம் ஆச்சானிடத்தில் விளங்கிற்றென்றால் அந்த ஞானம் எத்துணை மாட்சித்தாயிருந்திருத்தல் வேண்டும் என்றும் இதனால் ஓர்க.  ஆதலால் இம்மஹாதேசிகர் ஆச்சான் சம்பிரதாயத்தை “ஞானப்பெருந்தகவோர் சம்பிரதாயம்” என்று விளம்பியது உற்றது கூறியதே என்றது காண்க.



1 த்ருதீய ப்ரஹ்மதந்த்ரஸ்வதந்த்ரர் மூவாயிரப்படி குருபரம்பரை பக்கம் 71 (1913 பதிப்பு)
2 பெரிய திருமொழி 3-7-3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக