சனி, 2 அக்டோபர், 2010

தேசிகப்ரபந்தம்–ஆர்.கேசவ அய்யங்கார் முன்னுரை

தேசிகமாலை: சிறப்புமறை: முத்தமிழ்சேர்ந்த மொழித்திரு

    திருமாலடியார்க்குச் சிறப்புமறையாய்த் திகழும் இம்மாலையில் கௌத்துவம் போல் விளங்கும் அதிகார ஸங்க்ரஹத்தில் “திருவுடன் வந்த” என்று தொடங்கும் பாடல்முதலாக “செப்பச்செவிக்கமுதம்... முப்பத்திரண்டிவை முத்தமிழ் சேர்ந்தமொழித்திருவே” என்ற பாடலளவாக உள்ள பாக்கள் முப்பத்திரண்டையும் ‘முத்தமிழ் சேர்ந்த மொழித்திரு’ என்று ஓதினார். அவை முப்பத்திரண்டு அதிகாரங்கள் கொண்டுள்ள ரஹஸ்யத்ரயஸாரம் என்னும் இம்மஹாதேசிகர் அருளிய உத்தமரகசிய நூலாகிய திருமந்திரஸார நூலின் ஒவ்வோரதிகாரப் பொருளின் சுருக்காகும். ரஹஸ்யத்ரயஸாரத்தை ‘முத்தமிழ்சேர்ந்த மொழித்திரு’  என்று “தேற இயம்பினர்”. இது இம்மாலைப்ரபந்தங்களுக்கெல்லாம் உபலக்ஷணம்.  ஆதலால் ரஹஸ்யத்ரயஸாரத்தை ஆன்றோர் ஸாரசாஸ்த்ரம் என்பர்.  ஸாரசாஸ்த்ரச்சுருக்காகிய இம்முப்பத்திரண்டு பாடல்களும் ஸாரசாஸ்த்ரத்தின் ஸாரமாகும். `ப்ரபந்தஸாரம்  என்றதும் இம்மாலையின் மற்றோர் ஸாரநூல். திருமாறன் கருணை1 என்றதே ஸாரசாஸ்த்ரஸாரம், ப்ரபந்தஸாரம்.  அஃதே உபயவேதாந்தஸாரம், திருவாய்மொழியாகிய திருமந்த்ரஸாரம்.  அந்தஸாரப்ரபந்தமே தேசிகப்ரபந்தம்.  ஆதலால் உயர்வறஉயர்நல ஸாரநூலாகிய (ஸாரதமம் சாஸ்த்ரம்2 என்ற) இம்மாலை முற்றுமே முத்தமிழ்சேர்ந்த மொழித்திருமாலையாகும்.  மேற்கூறிய முப்பத்திரண்டு பாடல்களும் முறையே முப்பத்திரண்டு அதிகாரங்களின் ஸாரமாகும்.  ஒவ்வொரு அதிகாரத்திலும் விரித்து விளக்கித் தெளிய உரைத்த நுண்பொருளின் ஸாரமாய் ஒவ்வொரு பாடலும் அமைந்துள்ளது. “திரு'”  என்று தோற்றுவாயதிகாரத்தில் தொடங்கி “திருவே” என்று தலைக்கட்டதிகாரத்தில் முற்றித் திருவந்தாதியாய் மறைமுடி மங்கலம் மல்கும் திருநூலே ஸாரநூல், திருமந்திரநூல்.  “தமிழ்த்தலைவராகிய” பேயாழ்வார்3 அருளிய மூன்றாம் திருவந்தாதி “திரு” என்று தொடங்கி, “திரு” என்று அந்தாதியாய்  முற்றுகின்றது.  முத்தமிழ்த் தேவராகிய சடகோபர் “உயர்வற”  என்று தொடங்கி “உயர்ந்தே”  என்று திருமந்திரமறையாகிய திருவாய் மொழியை அந்தாதியாய்த் தலைக்கட்டினார்.  உகரம் திருச்சுட்டு.  அவ்வாறே இம்முத்தமிழ்த் தேசிகரும் “திரு” என்று தொடங்கி “திருவே” என்று அந்தாதியாய்த் திருமந்திரநூலைத் தகைகட்டினார்.  முத்தமிழ் சேர்ந்த மொழித்திரு என்றதின் நயமும் நலமும் காண்க.  “ரஹஸ்யத்ரயஸாரம்4 என்று இம்மஹாதேசிகர் இட்டருளிய தமது திருமந்திரநூலின் திருநாமத்துக்கு “முத்தமிழ் சேர்ந்தமொழித்திரு” என்று தமிழிட்டருளிய சீர்மை ஓர்க.  முத்தமிழ்ப் பொருளைக் காட்டித்தரும் தருமவரும்பயனாகிய இந்த ஸாரசாஸ்த்ரத்திருக்காண்டலே உபயவேதாந்தத் திருக்காண்டலாகும்.  “தேற இயம்பினர் சித்துமசித்து மிறையுமென, வேறுபடும் வியன் தத்துவமூன்றும் ........... அருளால் மறைநூல் தந்த ஆதியரே”.  என்று இந்த ஸாரநூலில் ஐந்தாவது அதிகாரமாகிய தத்துவமும்மையதிகாரத்தில், உணர்தற்கு அரிதாகிய உபநிடதப் பொருளாகும் சித்து அசித்து இறை என்னும் முத்தத்துவங்களின் உண்மையை அருளால் மறைநூல் என்னும் திருவாய்மொழியை நல்கிய ஆதிகுலபதியாகிய சடகோபரே தேற இயம்பினர் என்று காட்டினார்.  முப்பத்திரண்டாவதாகிய தலைக்கட்டதிகாரத்தில்:- “ஒப்பற்ற நான்மறையுள்ளக் கருத்திலுரைத்துரைத்த, முப்பத்திரண்டிவை முத்தமிழ்சேர்ந்த மொழித்திருவே”  என்றார்.  இதன் பொருள்:-  உபநிடத உள்ளக்கருத்தாகிய சித்து அசித்து இறை என்னும் அற்புதமான முத்தத்துவ உண்மையை விளக்கும் திருமந்திரத்தமிழே முத்தமிழ் என்னும் மறைநூல்: அது ஆதியராகிய சடகோபர் திருவாய்மொழி: அது சேர்ந்த மொழித்திருவே ரஹஸ்யத்ரயஸாரம் என்னும் திருமந்திரநூல் என்றபடி.  ஐந்தாம் அதிகாரத்தில் முத்தமிழ் அருளிய ஆதியரைப் போற்றினார்.  முப்பத்திரண்டாம் அதிகாரத்தில் ஆதியர் அருளிய முத்தமிழைப் போற்றினார்.  இங்கு முத்தமிழை அங்கு மறைநூல் என்றார்.  அங்கு மறைநூலை இங்கு முத்தமிழ் என்றார்.  “மிக்கவேதியர் வேதத்தினுட்பொருள் நிற்கப்பாடி”5  யருளிய திருமந்திரமறை ஆதலால், சித்தசித்திறைப் பொருளுண்மையை விளக்கும் பாட்டென்னும் வேதப்பசுந்தமிழே திருவாய்மொழி என்று உபநிடத உள்ளக்கருத்தில் உரைத்துரைத்த இம்மாலை “எழிற்குருகை வருமாறன்6 அருளிய முத்தமிழ்ச் சேர்த்தியில் பேரெழில் காட்டும் அருமையை நோக்கிக் காண்க.  உபநிடதமும் திருவாய்மொழியும் ஒன்றெனக்காட்டும் கட்டழகு திகழும் திருமந்திரஸாரநூலை “ரஹஸ்யத்ரயஸாரம்”7 என்றார்.  அதன் தமிழாக “முத்தமிழ் சேர்ந்த மொழித்திரு” என்றார்.  அதனையே “யதிராஜ மஹாநஸ பரிமள பரீவாஹ வாஸநா”8 என்றார்.  அதன் தமிழாக “எதிவரனார் மடைப்பள்ளிவந்த மணமெங்கள் வார்த்தையுள் மன்னியதே”9. என்றார்.  “வேதாந்த உதயநர் (கடாம்பி ஆச்சான் என்னும் பெரும்புகழ்ப்புனிதராகிய ப்ரணதார்த்திஹர ஆசார்யர்) சம்பிரதாய அமுதம்”10 என்றும் “ஞானப் பெருந்தகவோர் சம்பிரதாய மொன்றிச் சதிர்க்கும் நிலைசார்ந்தனமே”11 என்றும், ஞானப் பெருந்தகவோராகிய கடாம்பி ஆச்சான் திருமரபில் பரிமளம் பொதிந்து வெள்ளமெடுத்துப் பெருகிவரும் “எதிவரனார் மடைப்பள்ளி” முத்தமிழமுதமொழியே தமது திருமந்திர நூலாம் “ரஹஸ்யத்ரயஸாரம்” என்று விளக்கினார்.  “இப்படி ரஹஸ்யத்ரயத்தைப் பற்றின கீழும் மேலுமுள்ள பாசுரங்களெல்லாம், வேதாந்தோதயநஸம்ப்ரதாயமான (கடாம்பி ஆச்சான் சம்பிரதாயமான) மடைப்பள்ளி வார்த்தையை ஆசார்யன் பக்கலிலேதாம் கேட்டருளினபடியே, கடாம்பி அப்புள்ளார் அடியேனைக் கிளியைப் பழக்குவிக்குமாற்போலே பழக்குவிக்க, அவர் திருவுள்ளத்தில் இரக்கமடியாகப் பெருமாள் தெளிய ப்ரகாசிப்பித்து (விளங்கவைத்து) மறவாமற்பண்ணிச் சேர்த்துப் பிழையறப் பேசுவித்த பாசுரங்கள்”12 என்று பின்னும் ஆதரம் பெருக இப்பொருளை விளக்கினார்.  “வெள்ளைப்பரிமுகர் தேசிகராய்”13 என்ற பாடற்கு இது விளக்கமாதல் காண்க.  “காவலரெங்கள் கடாம்பிக்குலபதி அப்புளார்தம், தேமலர்ச்சேவடி சேர்ந்து பணிந்தவர் தம்மருளால், நாவலரும் தென்வடமொழி நற்பொருள் பெற்ற நம்பி! காவல! தூப்புற்குலத்தரசே! எம்மைக் காத்தருளே”14 என்று பிள்ளையந்தாதி இப்பொருளைப் பின்னும் விளக்கிற்று. இதனால், சித்தசித்தீச்வர தத்துவமும்மையை விளக்கும் முத்தமிழ்த் திருத்திகழும் மொழித்திருவே ரஹஸ்யத்ரயஸாரம் என்னும், ஞானப்பெருந்தகவோர் சம்பிரதாயம் நல்கிய திருமந்திரநூல் என்ற உண்மை காண்க.  உபநிடத உட்பொருளாகிய சித்து, அசித்து, இறை என்னும் முத்தத்துவங்களை விளக்கும் தமிழாதலால் சடகோபர் திருவாய்மொழிக்கு முத்தமிழ் என்றது பெயர் என்ற உண்மையை விளங்கக்காட்டும் இம்மொழித்திருவே முத்தமிழ் சேர்ந்த மொழித்திருவாய்த் திகழாநின்றது. “நம்பண்ணமரும் தமிழ்வேதம் அறிந்த பகவர்களே”15 என்று இம்மஹாதேசிகர், திருவாய்மொழியை “நம் தமிழ்வேதம்” என்று விளம்பிய அருமைப்பாட்டையும் உரிமைப்பாட்டையும் உற்றுநோக்குக.  இவ்வாறே “சந்தமிகுதமிழ்மறையோன் தூப்புல்தோன்றும் வேதாந்தகுரு”16 என்ற இம்மஹாதேசிகருடைய ப்ரபந்தஸாரப் பாடலின் நறுமை காண்க.  “சந்தமிகுதமிழ்மறையோன்” என்றதற்கு முத்தமிழ் மரபினன், அதாவது திருவாய்மொழி மரபினன், என்றது பொருள்.  ப்ரபந்தஸார உரையில் இப்பொருள் விரித்து விளக்கப்பெறும்.


1.ப்ரபந்தஸாரம், 18;  2. ரஹஸ்யத்ரயஸாரம் 2;  3.இராமாநுச நூற்றந்தாதி 10; 4. ரஹஸ்யத்ரயஸாரம் 32;
5. கண்ணிநுண். 9; 6. ப்ரபந்தஸாரம் 6; 7.ரஹஸ்யத்ரயஸாரம் 32. 8. ௸ ௸; 9. பரமபதஸோபாநம் 1;
10. ரஹஸ்யத்ரயஸாரம் 32 (தமிழ் செய்தது); 11. அமிர்தரஞ்சனி 1; 12. ரஹஸ்யத்ரயஸாரம் 30;
13. அதிகாரஸங்க்ரஹம் 56; 14. பிள்ளையந்தாதி 17; 15. அதிகார.22; 16. ப்ரபந்தஸாரம் 18;.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக