ஸ்ரீ ஆர்.கேசவ அய்யங்கார் பதிப்பித்த “தேசிகப்ரபந்தம்” நூலுக்கு அவர் எழுதிய முன்னுரை இங்கு தினமும் பகுதி பகுதியாக வெளிவரும். அதன் முதல் பகுதியான தேசிக மாலை இங்கே.
( ஒரு முக்கிய வேண்டுகோள். இதைத் தொடர்ந்து வரும் பாக்களின் கடின நடையைப் பார்த்து பயந்து படிப்பதைத் தவிர்த்து விடாதீர்கள்.அடியேனுக்கு முற்றும் புரிந்து இதை இங்கு எழுதுவதாகவும் நினைத்து விடாதீர்கள். தமிழில் ஆழங்கால் பட்டவர்கள் சிலர் ---- கடல் கடந்து வாழ்பவர்கள் --- கண்டிப்பாய் இதற்கு எளிய நடையில் விளக்கம் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு. தவிர, இந்த 21 பாட்டுக்களைத் தொடர்ந்து எளிய தமிழிலே தொடரும் ஸ்ரீ ஆர்.கே. ஸ்வாமியின் பார்வை பிரமிக்க வைக்கிறது. இந்த “தேசிகப்ரபந்தம்” வைணவர்களுக்கு மட்டும் உரியதன்று. இது ஒரு பொது மறை என அவர் நிலை நாட்டியுள்ளதை அறிஞர்கள் மட்டுமல்லாது அனைவரும் படித்து இன்புற்று ரஸிக்க வேண்டும். இதனாலேயே, அடியேன் குமாரன் திருமண வேலைகளுக்கு இடையிலும் கிடைக்கும் அவகாசத்தில் அந்த அற்புதமான முன்னுரையை இங்கு இட ஆரம்பித்திருக்கிறேன். மாறன் தாள் போற்றும் தேசிகனின் ப்ரபந்தமிதை மாறன் பெயருடையார் அனைவருக்கும் புரியும் வண்ணம் ஆங்கிலத்தில் எழுதிடுவார் என்ற திடமான நம்பிக்கையுடன் தொடர்கிறேன்)
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
தேசிகப்ரபந்தம்.
பேரிரும் புகழி னாமம் பெரியநம் பெருமாள் பாதம்
சீரிரும் புகலி னாமஞ் சீரிய சடகோ பன்தாள்
சேரிரும் புனித மூர்த்தஞ் செறிந்ததொல் செல்வப் பேறே
தேரிரும் புரிவொ லித்த தேசிக நாமம் போற்றி. .1.
மறையேறு மெய்ய மதியேறு செய்ய மகிழேறு துய்ய மொழியி
னிறையேறு நீதி நிறையேறு நீடு நிலையேறு வீடு நிகழ
அறையேறு மார்வ முறைமங்கை யண்ண லடியாறு தேறு மறைமா
விறையேறு கந்த முமிழ்சந்த முந்த விரிமாலை வீறு பொலிக. .2.
ஓணப்பர னேறத்திரி கோணப்பெரு மாயன்
காணப்பர னேரிப்புவி காணக்கவி வாதித்
தூணப்பர னேரொப்புயர் தூப்புற்பர னெண்ணின்
மாணப்பர னாறுந்தமிழ் மாலைப்பரி யோர்வாம். .3.
வடமலையம் பதியனருள் வரதனடை வடமறையுஞ்
சடமுனியுந் தமிழினடைச் சடகோப முனிமறையுந்
திடமுடைய தனதருளெண் திகழடியி னொருநடையென்
றிடமறிய நிகமமுடி யிறைநடையில் விளங்கினனே. .4.
சேமமதாந் திருமாறன் கருணையெனுந் திருக்கண்டு
பூமகளா ருறைமார்பன் பூங்கழலே தாங்குமுடி
நாமமதே சூடிமறை நாறியசெந் நாப்பகவர்
தோமறுதூ மாதவர்க ளோதுதமி ழோங்குகவே. .5.
சாலுநால் வேத வுச்சிச் சாரமாய்ச் சமய நீதி
நூலுமாய் நிமல னோது நுடங்கிசைச் சுருதி யாகி
மூலமா மனுவு மாகி முத்தமிழ்ச் சித்தி யாகி
சீலமால் மல்கு செல்வத் தேசிக மாலை வாழி. .6.
பண்புடைப் புனித வேதப் பயன்கொணா லாயி ரப்பே
ரெண்புகழ்ப் புனித னாறெண் ணிறுவிவண் திருவி னின்ப
னெண்பெருக் கந்ந லத்தா ளிறையரு ணிலையி லோங்கித்
தெண்புனற் பள்ளி நாறுந் தேசிக மாலை போற்றி. .7.
கூவுபூங் குயிலின் கீதங் குலவுபூங் கலையி னாதம்
பாவுபூங் கவிக ணாறிப் பழமறை புதுமை பூக்கத்
தாவுபூங் கழலின் வண்ணத் தண்ணல்தாள் மருவி நாறு
மூவரோங் கொருவ ராகு முத்தமிழ்த் தலைவர் போற்றி. .8.
கூட்டிய மறையி னுள்ளங் கூர்மதி யொளியிற் காட்டி
நாட்டிய நலங்கள் யாவும் நயந்தரு நடைகொ ணல்ல
பாட்டெனும் பழைய வேதப் பசுந்தமிழ் பயந்த வள்ளல்
ஊட்டிய நறுமை யூறு முத்தம மாலை காண்பாம். .9.
சித்தசித் தீச்சுரச் சீர்தரும் பேருடைப்
பத்துருப் பெற்றசம் பத்தெனுஞ் சித்தினேர்
முத்தமிழ் நித்தமும் புத்தெழில் பூத்தெழு
மித்தமிழ் நாறுநா வீறுநாந் தேறுவாம். .10.
வேய்ங்குழ லூதிய வேதிய னோது
பூங்கழ லாயிரம் பூத்தபி ரானா
யாங்கரு ளாயிர நான்கும லர்ந்த
பாங்கிர தப்பிர பந்தம்பு ரந்தான். .11.
பேசிரு மாமறைத் தேசிக ராயே
தேசுய ராரணத் தேவது தானே
காசினி யோரிறை காணிறை நீதி
வாசக மாமொழி வாய்மொழி தந்தான். .12.
ஆரரு ளேபொழி யாரற மென்னுந்
தேரரு ளூர்ந்துயர் தேவிது வென்றும்
பாரிரு ணீக்கொரு பாற்கர னென்றுஞ்
சீரியர் போற்றொரு தேசிகர் வாழி. .13.
வித்தெனும் வேங்கட வித்தகன் தானே
யத்தனு யர்த்தத னத்தக வோக்கத்
தொத்தனெ னத்தன தொண்சர ணீதிச்
சித்தியி னத்திரு முத்திசி றந்தான். .14.
எந்தைதிரு வரங்கநக ரப்பன் தானே
எண்ணியொரு பேருருவ மிவற்கே யாகத்
தந்துபய வேதாந்த குருவா மத்தன்
தனியிறைமைப் பேரதனை மகிழ்ந்து புந்தி
”முந்தைமறை மொய்யவழி மொழிநீ” யென்று
முத்தமிழு முதுமறையுஞ் செறிய நல்குஞ்
சந்தமிகு தமிழ்மறையோன் தூப்பு லண்ணல்
சகமகிழும் பசுந்தமிழா நந்தந் தந்தான். .15.
முற்குரவர் சென்றவழி தான்பின் செல்லு
முத்தமனாய் மறைவகுக்கு முரிமை சான்ற
நற்குருவெண் ணலந்திகழ்மா லுகந்த தீர்த்தர்
நாவலர்செந் தமிழ்மறைநா லாயி ரந்தான்
பிற்குரவர் கடைப்பிடித்துப் பிறங்கு பண்பிற்
பிறழ்வறவின் றளவுமதே யோது நீதி
சிற்குணர்கள் கொண்டுதொழு மாறு கண்டு
சிந்தாதவ் வகைதொகையெண் சேமிப்பாரே. .16.
ஆதிமுத லாழ்வார்கள் மூவ ரோடும்
அலகிலிறை மழிசைவருஞ் சோதி யோடும்
ஓதுபுகழ் வேதமகிழ் மாற னோடும்
ஒண்மதுர கவியொடுகோ ழியர்கோ னோடும்
சோதிதிகழ் விட்டுசித்தன் கோதை யோடும்
தொண்டரடிப் பொடியொடுபாண் பெருமா ளோடும்
வேதவொலிக் கலியனொடு முத்தி நல்கும்
எதிராச ரென்றிவர்தா ளெண்ணு வாமே. .17.
நலத்திரு வேதவி யாதபதம்
செலுத்தொரு கிழமைத் தலைமைதிகழ்
குலத்திரு கிளத்தோர் குருத்திருவாய்
நிலத்தொரு தூப்பு லிறைநிலைத்தான். .18.
நண்ணிய மறைமுடி யண்ணலவன்
எண்ணொடு வகைதொகை யெண்ணுமுறைக்
கண்ணிய மதனிற் கருதமிகு
புண்ணிய வாய்மொழி பூத்தனவே. .19.
மாமலர் மங்கைம ணாளன்பரன்
ஆமவ னற்சர ணாறுபயன்
தோமறு தொண்டதி னோயறுவார்
தூமதி யோர்களி தோர்வர்களே. .20.
ஓர்ந்திவை யுண்மையொ ழுக்கமுறத்
தேர்ந்தரி திண்சரண் சேர்தவமே
கூர்ந்தவ னங்கிரி கூடிரதம்
மாந்துந லந்தரு மாலையிதாம். .21.
………………………தொடர்வது………….. தேசிகப்ரபந்தம் : தேசிகமாலை …..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக