Saturday, May 29, 2010

வைணவ ஆசாரியர்கள்


2. அவதாரம்.

மன்ன னார்புரம் மகிழ்வுடன் மேவினர் முனிவர்
முன்ன வன்கழல் தம்முடை முடிதனில் வனைந்து
பின்ன ரீச்சுர பட்டனை நாடினர், "பெரும!
நின்ன தாம்பெரும் பாக்கியம் நேரில தறிவாய். .12.

முனிவர்கள் வீரநாராயணபுரம் சென்றனர். முன்னவன் – வேங்கடநாதன். நேர் இலது – ஒப்பில்லாதது. அறிவாய் – அறிவாயாக.

"வேங்க டத்தவன் விரைமல ரடியிணை யிறைஞ்சி
யாங்க ளிவ்விட மணுகினம் அவனரு ளிதுவாம்
ஓங்க நின்குலம் நிலனிடை நல்லற முயரத்
தேங்கு தேசுடைச் செல்வனை விரைவினிற் பெறுவாய் .13.

முனிவர்கள் ஈச்சுவர பட்டனிடம் கூறியது.

என்று நீங்கினர் ஈச்சுர பட்டனு முவந்து
நன்று நன்றென நாரண னருடனை நவின்றே
என்று தன்குல மேற்றிடும் புத்திர னெனவே
கன்று மேய்த்தவன் கருணையை நோக்குவன் களித்தே. .14.

ஈச்சுர பட்டர் தமக்கு மகப் பேற்றை எதிர்நோக்கி மகிழ்ச்சியுற்றார். கன்று மேய்த்தவன் – கண்ணபிரான்; திருமால்

சோப கிருத்தெனு மாண்டினில் ஆனியி லனுடம்
சோப முற்றிடு சுக்கில த்ரயோதசி நன்னாள்
சோப னம்பெயத் தோன்றினன் பாலக னொருவன்
தீப மேயென இத்தகைச் சீலனின் குடிக்கே. .15.

நாதமுனியின் அவதாரம். இ தகை சீலனின் குடிக்கு தீபமே என ஒருவன் தோன்றினான்.

கும்ப நன்முனி குறுகினன் குழவியைப் பரிவில்
செம்பொ னேயெனத் தேசெறி வடிவினைக் கண்டான்
உம்பர் முன்னவ னருளினி லுதித்தவ னென்றான்
நம்பன் நாதனா மிவனென நாமமும் நவின்றான். .16.

அகத்திய முனிவன் குழந்தையைக் கண்டு நாதன் என்ற பெயரை அளித்தான். தேசு எறி – சோதி பரப்புகின்ற. உம்பர் முன்னன் -- நித்யசூரிகளுக்கு இறைவனாகிய நாராயணன்.

நான்ம றையொடு நற்கலை நூல்களும் நெறியும்
வான்பு கழ்தரு மெண்வகைச் சித்தியு முயோகும்
தேன்செ றிந்தறை தென்மலைச் சேர்வின னருளத்
தான்ம தர்ப்புட னேற்றன னியாவையு மிளைஞன். .17.

இச்சிறுவன் கல்வியோடு அஷ்டாங்க யோகத்தையும் பெற்றான். வான் – வானவர். எண் வகை சித்தி – எட்டு வகைச் சித்தி. எட்டு வகை யோகம். தேன் செறிந்து அறை – வண்டுகள் அடர்ந்து பண் இசைக்கின்ற. தென்மலை – அழகிய திருவேங்கடமாமலை. சேர்வினன் – இருப்பிடமாகக் கொண்டவன். ஏற்றனன்+ யாவையும் == ஏற்றனனியாவையும். தன்னொழி மெய்த்துன் இகரம் வந்தது.

வண்ட மிழ்முனி இன்னவன் வளமதை யுணர்ந்தே
அண்டி யிவன்றனை யன்பினில் தனிமையில் முன்னங்
கொண்ட லணிதிரு வேங்கடக் குன்றினன் தன்பால்
மண்டு பரிவினில் வரைந்தது பகர்ந்தும றைந்தான். .18.

அகத்திய முனிவன் இவனைத் தனிமையில் அணுகி, வேங்கடநாதன் தன்பால் முன்பு கூறியதை மொழிந்து மறைந்தான்.

வேத மோடருங் கலைகளும் வேள்வியும் வல்லான்
நாதன் நம்பியும் நண்ணரு முயோகுனி லூன்றி
மாத வன்றனை மனந்தனில் மடுத்துபு மண்டும்
கோத றத்திரு நாரணன் கோயிலில் தொண்டில். .19.

அத்தலத்து எம்பெருமானது தொண்டில் நாதமுனி தோய்ந்தமை. நண்ணரும் உயோகினில் – இயக்குதற்கரிய யோகத்தில். மடுத்துபு – மடுத்துக் கொண்டு, நிறைத்துக் கொண்டு. திருநாரணன் கோயிலில் தொண்டில் கோது அற மண்டும் ----

ஆர ணந்தமி லாழ்ந்தவ ரிவன்புக ழார்த்தார்
சீர ருங்கலைச் செல்வருங் கலைக்கட லென்றார்
ஆர நன்னெறி நின்றவ ரரும்பெற லென்றார்
பூர ணன்றமர் புந்தியன் வானவ னென்றார். .20.

நாதமுனியைப் பெரியோர் புகழ்ந்த வகை. ஆரணம் – வேதம். புகழ் ஆர்த்தார் – பிறரறியப் புகழ்ந்தார். கலைச்செல்வர், "இவன் கலைக்கடல்" என்றார். நல் நெறி ஆர நின்றவர் – நல்ல நெறியில் நன்கு தோய்ந்தவர்; "இவன் அரும்பெறல்" என்றார். பூரணன் தமர் – குணங்கள் யாவும் மல்கிய இறைவனது அடியார்கள், "இவன் புந்தியன்......." என்றார். வானவன் – நித்ய சூரிகளுள் ஒருவன்.

வானவர் கோனவ னருடனில் வந்தவன் நாதனிவன்
ஊனமில் நெறியினன் உற்றவ ரந்தணர் தம்முடனே
ஆனட ரடவியில் மேய்த்தவன் மகிழ்தர வாம்பணிகள்
வானவர் சூரியர் தம்மினும் வளமுற வனைந்தனனே. .21.

மன்னனாருக்குத் தொண்டு ஆற்றிய வகை. வானவர் .........நாதன் இவன் --- இறைவனது அருளாலே பிறந்த நாதமுனியாகிய இவன். ஊனம் இல் நெறியினன் – மறை நெறியில் நின்றவன். ஆனடரடவி – ஆன் அடர் அடவி – அடர் அடவியில் ஆன் மேய்த்தவன் – அடர்ந்த காடுகளிலே ஆனினம் மேய்த்த இறைவன்; மன்னனார். ஆம் பணிகள் – ஆகும் தொண்டுகள்.