Friday, May 28, 2010

வைணவ ஆசாரியர்கள் --1
நாதமுனிகள்

மாதவனால் மதிநலம் பெற்ற ஆழ்வார்கள் அருளிய தமிழ்மறை, காலமாகிய கடலிலே ஆழ, அதனை வெளிப்படுத்திப் பாக்களைத் தொகுத்துப் பண்ணில் அமைத்து, ஆலயங்களிலே ஓதுமாறு ஆணைவிடுத்துப் பரப்பிய நாதமுனிகளின் வரலாற்றை இசைக்கும் இப்பகுதி.

1. முனிவரர்தங்குறை

சீர ணைமரைச் செல்வி யிந்திரை
வார மோடணை மாயன் மன்னவன்
வீர நாரண புரத்து மேயவன்
கார ணன்கழல் காக்கு நம்மையே. .1.

நாதமுனிகள் அவதாரஞ் செய்த வீரநாராயணபுரத்து மன்னனாரை வாழ்த்துவது இப்பா. மரை – தாமரை. இந்திரை – இலக்குமி. வாரம் – அன்பு. இந்திரை அணைகின்ற, இந்திரையை அணைக்கின்ற என்று இரு வகைகளும் நோக்கு. காரணன் -- இப்பெருமானது ஆணையால் அருளிச்செயல் பரவியது கொண்டு, இச்சொல் ஏற்றதாம். காரணன் கழல் நம்மைக் காக்கும் என்றியைக்க.

மண்டி ரண்டெழு மறம ழிந்துயர்
விண்டி றந்திடு ஞான மேலெழத்
தண்டு ழாயின னன்பு சார்தலால்
மண்டு நன்மதி வாய்ந்த மானவர். .2.

பொய்கை மேயனும் பூதன் பேயனும்
செய்ய மழிசையன் மாறன் சேரலர்
ஐய னாய்ந்தவன் பட்ட நாதனும்
மெய்யர் சீரடிப் பொடியும் மேலதாம். .3.

உறந்தை நன்னக ருற்ற பாணனும்
சிறந்த நாற்கவி பாடு செல்வனும்
செறிந்த வன்பினில் தேவ னேற்றிடப்
பரிந்து வாசிகை நல்கு பாவையும் .4.


அருளு மின்தமிழ் நிதிய டங்கலும்
இருள டர்ந்திழி கால மென்பதொர்
வருபு னல்லிடை மறைய நன்னெறி
உருவ ழிந்ததால் உயவு பெய்யவே. .5.

2- 5 ஆழ்வார்கள் அருளிச் செய்தவை மறைந்தன. மண் திரண்டு எழு மறம் – மண்ணில் திரண்டு எழுந்த தீமை. உயர் விண் திறந்திடு ஞானம் – உயர்ந்ததான பரம பதத்தை அளிக்கக் கூடிய மெய்யறிவு. தண் துழாயினன் – திருமால். மானவர் – மதிப்புடையவர் சேரலர் ஐயன் – குலசேகரன். ஆய்ந்தவன் பட்டநாதன் – பெரியாழ்வார். மெய்யர் சீரடிப் பொடி – தொண்டரடிப் பொடியாழ்வார். உறந்தை – உறையூர். நாற்கவி பாடு செல்வன் – திருமங்கையாழ்வார். வாசிகை – மாலை. பாவை – ஆண்டாள். இன் தமிழ் நிதி –இனிய தமிழ் மறையாகிய செல்வம். அடங்கலும் – முற்றும், முழுவதும். உயவு – வருத்தம்.

மலைய முற்றவர் மாத வத்தினர்
அலைவி லாற்றலன் அகத்தி யன்முதல்
தலைவ ரும்புகர்த் தலைவர் நன்னெறி
நிலைபெ றும்வகை நீடு நாடினர். .6.

அகத்தியர் முதலாகிய முனிவர்களது விருப்பம். மலையம் – மலய பர்வதம். பொதிய மலை. மாதவத்தினர் – தவ முனிவர். அலைவு இல் ஆற்றலன் – நிலையான ஆற்றல் வாய்ந்தவன். தலை வரும் புகர் – மிகச் சிறந்த (மேனி) ஒளி. தலைவர் நல்நெறி நிலைபெறும் வகை நீடு நாடினர் என்றியைக்க.

மாக மீமிசை வளரு மாலவன்
போக மோங்கிடப் பொலியு மோங்கலில்
மேக வண்ணனை மேவி யேதமது
ஆக முற்றது மொழிந்த னர்மனோ. .7.

இவர்கள் திருவேங்கட மலைக்குச் சென்று இறைவனிடம் தமது கருத்தை ஓதினர். ஓங்கல் – மலை. மாகம் –ஆகாயம். மாகமீமிசை வளரும் ஓங்கல் – போகம் ஓங்கிட மாலவன் பொலியும் ஓங்கல் ---. ஆகம் உற்றது – மனத்தில் உள்ளதை. மன், ஓ அசைகள்.

அம்பு யக்கணன் அருளி னோக்கினன்
"கும்ப சம்பவ! குலையு நின்குறை
உம்பர் வானென ஓங்கு மிப்புவி
செம்மை யாநெறி யாளர் சேர்குவர். .8.

இறைவன் மொழிந்தது. கும்பசம்பவன் – அகத்தியன். குலையும் – நீங்கும். இ புவி, உம்பர் வான் என ஓங்கும் ---. செம்மை ஆம் நெறி ஆளர் சேர்குவர் – மறைநெறியில் நிற்பவர் தோன்றுவர்.

"வீர நாரண புரத்து மேதையன்
ஆரி யன்வரன் நாம னீச்சுரன்
சீரி யன்றனக் கெம்ம தமிசமாய்
நேரி லாப்புகர் மைந்து நேருமால். .9.

"வீரநாராயணபுரத்தில் ஈசுவர பட்டனுக்கு எனது அமிசமாய் ஒரு மைந்தன் தோன்றுவான்" என்றான் இறைவன். ஆரியன் – சான்றோன். வரன் – மிகச் சிறந்தோன். நேர் இலாப் புகர் – ஒப்பில்லாத சோதி வாய்ந்த

"அன்னவன் வன்மதி நலர்மு னருளிய
இன்ன மிழ்தினைத் தமிழை யிப்புவி
நன்னர் நாட்டிடும்" என்றி யம்பலும்
"முன்ன! வாழ்"கென முனிவ ரேத்தினர். .10.

"இவன் ஆழ்வார்களது அருளிச்செயல்களை உலகில் பரப்புவான்" என்று இறைவன் மொழிந்தான். மதிநலர் – ஆழ்வார்கள். முன் – முன்பு. இப்புவி – இப்புவியில்.

குறுமுனிவன் முதலாய குலமுனிவ ரின்புற்றார்
சிறுவரையுட் செந்தமிழ்நா டறம்பொங்கிச் செழித்திடுமால்
மறுவிரவா மதிநலர்தந் தமிழ்மீண்டும் வளர்தருமே
உறுமெவணும் நலனென்றே தம்முள்ளே யுகந்தனரே. .11.

முனிவர்களது களிப்பு. சிறுவரையுள் – சிறிது காலத்தில். மறு விரவா – மாசு கலவாத. எவணும் நலன் உறும் என்றியைக்க.
.