புதன், 13 ஜனவரி, 2010

வங்கக் கடல் கடைந்தானே! மாதவனே!

30. பாசுரம் கற்பவர் அடையும் பயன்.

முந்திய பாட்டுடன் திருப்பாவை முற்றுப் பெற்றது என்றே சொல்லலாம். பாவனை முதிர்ச்சியால் நோன்பு நோற்றவள்தானே ஆண்டாள்? எனவே இந்தப் பாசுரங்களைக் கற்பவர்களும் தங்கள் மனோபாவத்தின் விளைவாக நோன்பு நோற்றவர்களைப் போல் பயன் பெறுவார்கள் என்று இந்த முப்பதாவது பாசுரம் தெரிவிக்கிறது.

நோன்பு நோற்றவர்களின் அடிப்படைக் கருத்து இறைவனோடு உறவு கொண்டு அவனுக்கே பணி செய்வதுதான்; என்றென்றும் பணி செய்வது; மற்றைக் காமங்களை யெல்லாம் இறைவன் அருளால் ஒரே காமமாக மாற்றிக் கொண்டு ஒரு முகமாய்ப் பணி புரிவது. இந்தப் பாசுரங்களை ஓதி ஓதி இன்புறுவோர் உள்ளங்களிலும் இந்தப் பாவைப் பாட்டின் பரம தாத்பரியம் – உயிர்நிலைக் கொள்கை –ஊறிக் கிடக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, இந்தப் பிரபந்தம் கற்பவர்கள் எல்லாம் – அவர்கள் எக் குலத்தினராயினும் எந்த நாட்டினராயினும் – எங்கும் எப்போதும் திருவருள் பெற்றவர்களாய் நல்லின்ப வாழ்க்கை வாழ்வார்கள் என்று பலன் சொல்லுகிறது இந்தப் பாசுரம்.

கண்ணனைக் கோபியர்கள் சென்று இறைஞ்சி அவர்கள் விரும்பிய பறை – அதாவது கைங்கரியச் செல்வத்தை –கொண்டார்கள் என்று முதல் மூன்று அடிகளில் தெரிவிக்கிறது இப் பாசுரம். கண்ணனை ‘வங்கக் கடல் கடைந்த மாதவன்’ என்றும், ‘கேசவன்’ என்றும் தெரிவிக்கிறது. தேவர்களுக்குத் தன் திருமேனி நோகப் பாடுபட்டு, காரியசித்தி விளைத்தவன் கண்ணன் என்பது கருத்து. அவர்கள், கடைந்த அமுதத்தை விரும்பினார்கள். கடலில் கிடந்த அமுதமாகிய பெருமாளை விரும்பவில்லை. எனினும் விரும்புவார் விரும்புவனவற்றை யெல்லாம் கொடுக்கும் கற்பகம்போல் விண்ணவர் விரும்பிய அந்தப் பயனையும் அவர்களுக்குக் கொடுத்தான் ஆண்டவன். இந்தக் கோபியரோ ‘நாங்கள் விரும்பும் அமுதம் கண்ணன்தான்’ என்ற மன நிலையுடன் நோன்பு நோற்க விரும்பிய பாக்கியசாலிகள். விண்ணவர்கள் தன்னலத்தை முடித்துக் கொடுத்தவன் இவர்களுடைய கைங்கரிய விருப்பத்தை முடித்துக் கொடுத்ததில் அதிசயம் ஒன்றும் இல்லை என்பதை இப் பாசுரத்தின் முதல் அடியே சுட்டிக் காட்டுகிறது.

கண்ணனைப் பாடிவரும் பெண்களை இப் பாசுரத்தின் இரண்டாவது அடி ‘திங்கள் திருமுகத்துச் சேயிழையார்’ என்று குறிப்பிடுகிறது. குளிர்ந்த அழகிய முகத்தை உடையவர்கள் என்பதால் இவர்களுடைய இயற்கையழகு சோபிக்கும் விதம் குறிக்கப் படுகிறது. அழகனைப் பாடும் அழகியர் அல்லவா? கண்ணனைப் பார்த்துப் பார்த்துக் கண்ணழகு பெற்ற யசோதைபோல் அவனை நினைத்து நினைத்துச் சித்தத்தின் அழகு பெற்றுக் கொண்டவர்கள் இவர்கள். அந்த அகத்தின் அழகு முகத்திலே வீசுகிறது சந்திரிகை போல; இத்தகைய அழகைத் தங்களுக்கு இசைந்த ஆபரணங்களாலும் அதிகரிக்கச் செய்து கொண்டவர்கள் இந்தப் பெண்கள் என்பது தோன்ற இவர்களை, திங்கள் திருமுகத்துச் சேயிழையார் என்கிறது பாசுரம்.

இந்தப் பாசுரத்திலே பிரஸ்தாபிக்கப்படும் ஆபரணங்கள் இவர்கள் விரும்பியவாறே கண்ணனும் நப்பின்னைப் பிராட்டியும் கூட இருந்து பூட்டியவை என்பது குறிப்பு. அதனால் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியும் இவர்களது ‘திங்கள் திருமுகத்’திலே ஜொலிக்கக் காணலாம். மேனியழகும் உள்ளத்தின் அழகும் போட்டியிடச் சென்று இவர்கள் கண்ணனை இறைஞ்சுகிறார்கள்; நப்பின்னையை முன்னிட்டு வணங்குகிறார்கள்.

இவர்கள் விரும்பியதைப் பெற்றார்கள் என்பதை ‘அங்கு அப்பறை கொண்ட ஆறு’ என்ற சொற்றொடர் வெளியிடுகிறது. ‘அங்கு’ என்றால், கிருஷ்ண சந்நிதியில் – ஆய்ப்பாடியில் நந்தகோபன் மாளிகையில், சிங்காசனத்தில் யசோதை இளஞ்சிங்கம் கம்பீரமாக இருந்த இருப்பிலே, ஊராருக்காகச் சொன்ன வார்த்தைதான் பறை என்பது. வாய் ‘பறை’ என்று சொல்ல, உள்ளம் ‘உனக்கே நாம் ஆட்செய்வோம்’ என்று பாடிக்கொண்டே இருந்தது. ‘இது இவர்கள் பறை கொண்ட விதம்!’ என்கிறது இப்பாசுரம்.

இப்படிப் பாவைப் பிரபந்தம் பிறந்த கதையைச் சுருங்க உணர்த்திவிட்டு, இன்னார் செய்தது இந்தப் பிரபந்தம் என்பதைத் தெரிவிக்கிறது இப்பாட்டு. கோதை தன்னை இன்னார் மகள் என்று தெரிவித்துக் கொள்கிறாள். ‘என் தந்தை பட்டர்பிரான்’ என்கிறாள். தாமரை மாலை அணிந்திருக்கும் பட்டர்பிரான் என்கிறாள். அழகிய ஸ்ரீவில்லிபுத்தூர்ப் பட்டர்பிரான் என்கிறாள். தன்னைப் ‘பட்டர்பிரான் கோதை’ என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறாள்.

இந்தப்’பட்டர்பிரான் கோதை’ கோபியர் கண்ணனை அடைந்து பேறுபெற்ற கதையைத்தானா சொல்லுகிறாள்? அந்தத் ‘திருமுகத்துச் சேயிழையார்’ கூட்டத்தில் தானும் ஒருத்தியாகக் கலந்துகொண்டு கைங்கரியப் பிரார்த்தனை செய்த கதையைத்தான் இந்தப் பிரபந்தத்தில் சொல்லுகிறாள். கோபிமாருடைய அவஸ்தையை இவள் அடைந்து பாடும் கதைதான் இது. கோதை தான் அடைந்த பாட்டைப் பாடும் பாட்டு இது.

இந்தப் பிரபந்தத்தைச் ‘சங்கத் தமிழ்மாலை’ என்று குறிப்பிடுகிறது இப்பாசுரம். சங்ககாலம் தொட்டு வளர்ந்து வந்த தமிழிலே செய்த பாமாலை என்று சாதாரணமாகப் பொருள் சொல்லத் தோன்றும். இந்தப் பொருள் தவறன்று எனினும், இங்கே சங்கமாகக் கூடி – அதாவது கூட்டமாயிருந்து – அன்பர்கள் பாடிப் பேறு பெற வேண்டிய பிரபந்தம் இது என்று பொருள் கொள்வதுதான் சிறப்பாகும். கோபியர்கள் திரள் திரளாக அனுபவித்த பக்தி அனுபவத்தைச் சொல்லும் பாசுரங்களை ஓதுவோரும் கூட்டமாகக் கூடி அனுபவிப்பதே முறையாகும். கூடிப் பாடி ஆடிப் பரவசமாய் அனுபவிக்க வேண்டிய பிரபந்தம்.

இப்பிரபந்தத்தின் முப்பது பாட்டில் ஒரு பாட்டையும் நழுவ விடாமல் அனுபவிக்க வேண்டும் என்ற கருத்தைச் சுட்டுக் காட்டுகிறது ‘முப்பதும் தப்பாமே’ என்ற சொற்றொடர்.

‘எங்கும் திருவருள் பெற்று இன்புற’ச் செய்வது இது என்கிறாள். சயாம் முதலான வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழர்களும் இதை அங்கும் பாடி அனுபவித்தனர் என்பது உண்மைதானே!

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவார்

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றுஇறைஞ்சி
அங்குஅப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுஉரைப்பார் ஈர்இரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
  எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

விளக்கம்

இப் பிரபந்தம் கற்பவர் பிராட்டியாலும் எம்பெருமானாலும் எங்கும் எப்போதும் அருள் செய்யப்பெற்று மகிழ்ந்து இருப்பர் என்று இப்பாசுரம் பயனைத் தெரிவிக்கிறது. இதைப் ‘பலச்ருதி’ என்பர். ஆண்டாள் செய்தது இப்பிரபந்தம் என்பதைத் தெரிவிப்பதால் இதைத் திருநாமப் பாட்டு என்றும் கூறுவர்.

முப்பது மலர்களால் ஒரு பாமாலை

முதலாவது பாட்டு ‘விருப்பம் உள்ளவர்கள் எல்லாம் வந்து சேருங்கள்!’ என்று கூவியழைக்கிறது. ‘சேரவாரும் செகத்தீரே!’ என்ற முறையில் வரம்பு இன்றி அனைவரும் கிருஷ்ண பக்திச் செல்வத்தைப் பொதுவாக அனுபவிக்கலாம் என்பது உட்பொருள்.

இரண்டாவது பாசுரத்தில் நோன்பிற்கு உறுப்பான நியமங்கள் பிரஸ்தாபிக்கப்படுகின்றன. நியமம் இல்லாமல் எந்தப் பெரிய காரியத்தைத்தான் சாதிக்கமுடியும்?

நாம் வாழ, நாடு வாழவேணும் என்ற குறிப்பைப் புலப்படுத்துகிறது மூன்றாம் பாசுரம். நாடு செழிக்க மழை பெய்யவேணும் என்கிறது நாலாம் பாசுரம். நமது நாகரிகம் ஆற்றங்கரை நாகரிகம்தானே? வானம் பார்த்து வாழ்வு நடத்துகிறோம் – சரீர வாழ்வும்தான்., ஆன்ம வாழ்வும்தான். பக்தி வாழ்விலே கிடைக்கும் சக்தி, இயற்கைச் சக்திகளையும் ஏவிக் கூவிப் பணி கொள்ளும் பேராற்றல் வாய்ந்தது என்பது உட்பொருள்.

எந்தப் பெருங் காரியத்திற்கும் இடையூறு வருமே என்றால், இடையூற்றுக்கு இடையூறாக உதவுகிறது பகவந் நாம சங்கீர்த்தனம் என்ற கருத்தை வெளியிடுகிறது ஐந்தாம் பாட்டு.

ஆறாம் பாசுரம் முதல் பதினைந்தாம் பாசுரம் வரை ஒருவரை ஒருவர் எழுப்பிக்கொண்டு எல்லாரும் திரண்டு நந்தகோபன் மாளிகையை நோக்கிப் போவதைக் காண்கிறோம். இப்பாசுரங்களில், பக்தியால் ஒன்றுபட்டவர்கள் பல்வேறு மனநிலைகளும் குணாதிசயங்களும் உடையவராக நம் கண்முன் வருகிறார்கள்.

பதினாறாம் பாசுரத்தில் கோயில் காப்பானையும் தோரண வாசல் காப்பானையும் உணர்த்துகிறார்கள். அனுமதி பெற்று உள்ளே போகிறார்கள். பதினேழாம் பாசுரத்தில் நந்தகோப தம்பதியையும் சகோதரர்களான கிருஷ்ண பலராமர்களையும் துயில் உணர்த்துகிறார்கள். அடுத்த பாசுரத்தில் நப்பின்னையை முன்னிட்டுக் காரியசித்தி பெற வேணுமென்று இப்பிராட்டியைத் துயில் உணர்த்துகிறார்கள்.

பத்தொன்பதாம் பாட்டிலும் இதற்கு அடுத்த பாட்டிலும் ‘நான் முன்னே! நான் முன்னே!’ என்று போட்டியிட்டு இவர்களுக்கு அருள் புரிய முற்படும் நப்பின்னைப் பிராட்டியும் கண்ணபிரானும் துயில் உணர்த்தப் பெறுகின்றார். இருபத்தொன்றாம் பாசுரமும் இருபத்திரண்டாம் பாசுரமும் இவர்கள் கண்ணனின் குணங்களுக்குத் தோற்று வந்ததையும், அபிமான துரபிமானங்கள் குலைந்து கடாட்சமே குறிக்கோளாகக் கொண்டு வந்ததையும் குறிப்பிடுகின்றன. இருபத்து மூன்றாம் பாட்டில் வீர சிங்காசனத்தில் வீற்றிருந்து வந்த காரியத்தைக் கண்ணன் ஆராயவேணும் என்கிறார்கள். பிறகு யாசித்து வந்ததாகச் சொல்லி அப்பால் நோன்பின் உபகரணங்களை அபேட்சிக்கிறார்கள். இருபத்தேழில் சம்மானம் வேண்டுகிறார்கள். கடைசியாக உறவு சொல்லி, உள்ளத்தைத் திறந்து காட்டுகிறார்கள். முடிவில் வருகிறது பலச்ருதி.

கோதை பிறந்தஊர் கோவிந்தன் வாழும்ஊர்
சோதி மணிமாடம் தோன்றும்ஊர் – நீதியால்
நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதும்ஊர்
வில்லிபுத்தூர் வேதக்கோன் ஊர்.

பாதங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் --- கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.

திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூ தூர்மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுஉரைத்தாள் வாழியே
உயர்அரங்கற் கேகண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
  வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

IMG

இந்த முப்பது நாள்களும் இங்கே படித்தது திரு பி. ஸ்ரீ. அவர்கள் எழுதிய திருப்பாவை விளக்கம் என்னும் நூல். அன்பர்கள் அனைவருக்கும் ஸ்ரீ ஆண்டாள் திருவருள் நல்க வேணுமாய்ப் பிரார்த்திக்கிறேன். எல்லார்க்கும் அடியேனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக