27. சர்க்கரைப் பொங்கல் பாட்டு.
விரதத்திற்கு உரிய சங்கு பறை முதலியவற்றையும் பல்லாண்டு இசைப்பாரையும் அருளவேண்டும் என்று கேட்ட ஆய்ச்சியரை நோக்கிக் கண்ணன், 'பெண்களே! இவ்வளவுதானா உங்கள் தேவை? தருகிறேன்' என்று சொன்னதாகக் கருதலாம். அதற்குப் பெண்கள் பதில் சொல்வதுபோல், விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து மேலும் தங்களுக்கு வேண்டியவற்றைக் குறிப்பிடுகிறார்கள்.
'எம்பெருமானே! மார்கழி நீராட்டத்தை ஒட்டி நோன்பு நோற்கத் தேவையான சாதனங்களை ஏற்கனவே குறிப்பிட்டோம். நோன்பு நோற்று முடிந்த பின் நாங்கள் உன்னிடத்தில் பெறவேண்டிய சம்மானங்களும் உண்டு. அவற்றையும் நாங்கள் பெற்று மகிழும்படி அருள் புரிய வேணும்' என்கிறார்கள் இந்தப் பாசுரத்திலே.
சம்மானத்தை வேண்டிக் கொள்ளும்போது, 'கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!' என்று கூப்பிடுகிறார்கள் கண்ணபிரானை. அடிபணியாதவர்களை – பகைவர்களை – வெல்லும் சிறப்பை உடையவன் கண்ணன் என்பது பொருள். கூடாதவர்களை (பகைவர்களை) வெல்லுகிறவன், கூடும் அவர்களுக்கு – அன்பர்களுக்கு – தோற்று நிற்கிறான் என்பது குறிப்பு.
தங்களுடைய அன்பையே, ஆசையையே, பேசி வந்தவர்கள் கண்ணனுக்குத் தங்கள் மீதுள்ள ஆசை தங்கள் ஆசையைக் காட்டிலும் எவ்வளவோ பெரிது என்று கண்டுபிடித்தார்கள் அல்லவா? அப்படியே இப்போதும் ஒரு புதுமையைக் கண்டுபிடிக்கிறார்கள். 'கண்ணனுடைய கலியாண குணங்களுக்கு நாங்கள் தோற்றோம், தோற்றோம்!' என்று இதுவரை நம்பியிருந்தார்கள்; சொல்லிவந்தார்கள். இப்போது 'கண்ணன் தோல்வி' என்ற ஒரு புதுமையைக் கண்டுபிடிக்கிறார்கள். அன்பர்கள் விஷயத்தில் கண்ணனுக்குத் தோல்வியே வெற்றி! – என்கிறார்கள். சிறுமியர்களாகிய தங்களுடைய மழலைச் சொற்களுக்குத் தோற்றுப் பறை முதலியவற்றையும் இவர்கள் வேண்டினபடியே தந்தருள இசைந்துவிட்டானல்லவா?
கூடாரை (எதிரிகளை) சக்தியாலே வெல்லும் பெருமான் சௌந்தர்யத்தாலே – ரூப சௌந்தர்யத்தாலும் குண சௌந்தர்யத்தாலும் – கூடும் அன்பர்களை வெல்லுகிறான் என்பது உண்மைதான். எனினும், அம்புக்குத் தோற்காத பெருமாள் அன்பிற்குத் தோற்கிறானாம். இந்தத் 'தோல்வி'யைப் புலப்படுத்தி இறைவனது சீலத்தையும் எளிமையையும் வெளியிடுவது 'கோவிந்தன்' என்னும் பெயர்.
இவர்கள் சம்மானம் கேட்கிறார்கள். இப்போது யாசகம் கேட்பது போல் கேட்கவில்லை. தோற்றவனிடம் வென்றவன் கப்பம் கேட்பது போலச் சம்மானம் கேட்கிறார்கள். 'யாம் பெறு சம்மானம்' என்று கம்பீரமாய்க் கூறுவதைக் கேளுங்கள்.
'நாடு புகழும்படி நாங்கள் சம்மானம் பெறவேண்டும்' என்கிறார்கள். அணிமணிகள் துறந்து, கண் மை துறக்கக் கூந்தல் மலர் மறக்க, நோன்பு நோற்றார்கள் அல்லவா? 'நோன்பு முடிந்தபின் அணிமணிகளை யெல்லாம் நாங்கள் பெற்றுக் கொள்வோம்' என்கிறார்கள். 'அனைவரும் கொண்டாடும்படி நீ எங்களுக்கு அவற்றையெல்லாம் சம்மானிக்க வேணும்' என்கிறார்கள்.
நகைகளின் பெயர்களை இவர்கள் 'பட்டியல்' செய்து பேசுவதே எவ்வளவு அழகாய் இருக்கிறது!
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றுஅனைய பல்கலனும் யாம்அணிவோம்
என்ற ஓசையின்பத்திலேயே இவர்களுடைய மகிழ்ச்சி இனிது புலனாகிறது.
இந்த நகைகளையும் வேறு நகைகளையும் கண்ணன் சம்மானித்தால் போதாது என்கிறார்கள். தலைவனும் இஷ்ட தெய்வமுமாகிய அவன் தன் கையால் தங்களுக்கு அணிய, தாங்கள் அணிந்து மகிழ வேணும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படியே ஆடை உடுப்போம் என்கிறார்கள்.
சம்மானங்களில் எல்லாவற்றுக்கும் மேலாகச் சர்க்கரைப் பொங்கலை எவ்வளவு ரசமாய்க் குறிப்பிடுகிறார்கள் பாருங்கள்! 'அதன் பின்னே பால் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார' வழங்கவேணும் என்கிறார்கள். 'நெய்யுண்ணோம், பாலுண்ணோம்' என்று விரதம் கிடந்தவர்கள் இப்போது ஆசை தீரச் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட வேணும் என்கிறார்கள்.
கூடியிருந்து சாப்பிட வேணும் என்கிறார்கள். கண்ணனும் தாங்களுமாகக் கூடியிருந்து சாப்பிட வேணுமாம். பசிதீரச் சாப்பிடவேணும் என்று சொல்லவில்லை; ஆசைதீரச் சாப்பிட வேணும் என்று சொல்லுகிறார்கள். ஆம்; கண்ணனைப் பிரிந்து இருந்ததால் அதிகரித்திருந்த ஆசைதீர உண்ணவேணுமாம்.
உண்பதுகூட முக்கியமில்லை. எல்லாரும் கூடிக் களிப்பதுதான் இந்த விருந்தில் முக்கியமான அம்சம் என்பதை வற்புறுத்தி, 'கூடியிருந்து குளிர்ந்து' என்கிறார்கள்.
'முழங்கை வழிவார' என்று சொல்லிப் பிறகு உண்பதைச் சொல்லாமல் 'கூடியிருந்து குளிர்ந்து' என்று முடிக்கிறார்கள். கண்ணனைக் கண்குளிரக் கண்டதுமே பசி தீர்ந்ததால் உண்ண வேண்டிய தேவைகூட இல்லை!
உண்ணவும் மறந்தனரோ!
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றுஅனைய பல்கலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவார
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்
'நீங்கள் நோன்பிற்கு வேண்டியதைக் கேட்கிறீர்கள்;தருவோம்; நோற்ற பின்பு பெறும் பேறு யாது?' என்று கண்ணன் கேட்கிறானாம். அந்தக் கேள்விக்கு இவர்கள் சொல்லும் பதில் இந்தப் பாசுரம்.
நெய்யுண்ணாமலும், மலரிட்டு முடித்துக் கொள்ளாமலும், அணிகளால் அலங்காரம் செய்து கொள்ளாமலும், கண்ணுக்கு மைதீட்டிக் கொள்ளாமலும் இருந்து நோன்பு நோற்றார்கள். விடியும் முன்பே எழுந்திருந்து பனி தலையில் வீழத் தெருவெல்லாம் நடந்து ஒருவரையொருவர் எழுப்பினார்கள். கண்ணனையும் துயில் எழுப்பினார்கள். பனி நீராடி விரதம் கொண்டாடத் துணிந்தார்கள். அத்தகைய வருத்தங்கள் எல்லாம் தீரத் தாங்கள் பெறும் சம்மானம் கண்ணனும் நப்பின்னைப் பிராட்டியும் அலங்கரிக்க, ஆடை ஆபரணங்களால் அலங்காரம் செய்து கொள்வதும், அவர்கள் உண்பிக்க உடன் இருந்து உண்பதுமே ஆகும் என்கிறார்கள். 'கூட இருந்து குளிர்ந்து' என்பதுதான் சம்மானத்தின் முக்கிய அம்சம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக