Sunday, June 7, 2009

சென்ற நூற்றாண்டில் ஒரு அழைப்பிதழ்

நூல் வெளியீட்டிற்கு இப்போது அழைப்பிதழ்கள் எப்படி அடிக்கப் படுகின்றன என்பது நமக்குத் தெரிந்தது தான். ஆனால் சென்ற நூற்றாண்டு வரை நூல்கள் அரங்கேறித்தான் உள்ளன. வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமி இயற்றியுள்ள ஒரு அற்புதமான நூல் "திருவரங்கத் திருவாயிரம்" டெல்லி ஸ்ரீ அன்பில் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி மூலமாக அடியேனுக்குக் கிடைத்தது. திருவரங்கனைப் பற்றிய ஆயிரம் பாடல்கள். அத்துடன் திருமாமகளைப் பற்றி ஒரு திருமகள் அந்தாதியும். ( அதை இங்கே இடப் போவதில்லை. யாரும் பயப்பட வேண்டாம்) அந்த நூல் சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஸர்வதாரி ஆண்டிலே ஸ்ரீரங்கத்தில் அரங்கேறியுள்ளது. அதற்காக ஒரு அழைப்பிதழை தண்டபாணி சுவாமி அனுப்பியள்ளார். அதை மட்டும் இங்கே தருகிறேன்.

திருவரங்கத் திருவாயிரம் அரங்கேற்றிய
பிரசித்தப் பத்திரிகை.
நேரிசை வெண்பா
வேத வியாசன்முதன் மிக்கபொதுத் தேசிகர்வா
யோதன்முழு தேற்கு முணர்வுள்ளீர் -- சீதத்
திருவரங்க நாதனுக்கினியான் செப்பு துதியீண்
டொருவரங்க மென்றுகொள்ளீ ரோ.

வாசகம்.
பூலோக வைகுந்தமாகிய ஸ்ரீரங்க ஸ்தலத்தில் ஸ்ரீ அகிலாண்டகோடி பிரமாண்டநாயகரா யெழுந்தருளி யிராநின்ற ஸ்ரீரங்கநாதரது திவ்விய சந்நிதானத்தில் திருவரங்கத் திருவாயிர மென்றும் திருமக ளந்தாதி யென்றும் பெயர் பெற்ற தமிழ்ப் பிரபந்தங்களை நாளது ஸர்வதாரி வருஷம் ஆனி மாதம் மங்களவாரமுந் திருவோண நட்சத்திரமுங் கூடிய சுபதினத்திற் றுவக்கி யவை முற்றுப்பெறுகிற பரியந்த மரங்கேற்றுகிறபடியால் விஷ்டுணு பத்தியுந் தமிழ் விற்பத்தியும் பொருந்திய புண்ணியவான்க ளியாவரும் வந்திருந்து சிரவணானந்தஞ் செய்யும்படி ப்ரார்த்திக்கிறேன்.
தன்படை வேற்றுப்படை யறியாது சொற்ப பேதங்களைக் காரணமாகக் கொண்டு போராடு மிளம்பத்தர்களையுஞ் சொற்சுவை பொருட்சார முதலான நயங்களறியாது பொறாமை மேற்கொண் டோழுகு மிளம் புலவர்களையுங்கூட விகழாது தழுவும் பெருந்தன்மைக்குத் திருவருளே சாட்சியா யிருக்கும்.
ஊமை கண்ட கனவுபோன் மனச்சாட்சியான வநுபவமுள்ள மகான்களு மிவ்வுலகத்தி லிருப்பார்க ளென்றே நம்புகிறேன்.
எல்லாச் சமயங்களுக்கு மவ்வச் சமயத்துள்ள மெய்யடியார்களே வித்தாவார்களென்றுந் தெய்வம் பொதுப் பொருளே யென்று முள்ளபடி யுணர்ந்த ஞானவான்களது பாத தூளிக்கேதாவது மகத்துவ முண்டென்ற பட்சத்தி லுண்மை வெளிப்படுமென்றே நினைக்கிறேன்.
பாத்திரமும் விஷயமுமறிந் துதவி செய்யத்தக்க செல்வவான்களையும் விரும்புகிறேன்.
வண்ணக்கலி விருத்தம்
குறிப்பு -- தானந்தனாதனனா
நீலங்கொண் மால்வரைபோ னீவந்தெ னூடொருநா
ளோலஞ்செ யாமுனமே யோதுஞ்சொல் பாழ்படுமோ
ஞாலம்பல் சீர்பெறவே நாடன்பெ னாணவமோ
சீலங்கெ டார்பலர்வாழ் சீரங்க நாயகனே.
ஆழ்வார் திருவடிகளே சரணம்
இங்ஙனம்,
முருகதாசனென்றும் திருப்புகழ்க்காரனென்றும் விளங்குகின்ற,
தண்டபாணிப் பரதேசி.
தெய்வமே துணை.