செவ்வாய், 2 ஜூன், 2009

இராமாயண ஆசிரிய விருத்தம்

அடியேன்  ஏற்கனவே  மதுரகவி ஸ்ரீநிவாஸய்யங்கார் பற்றி இங்கு கூறியள்ளேன். சுமார் 100 வருடங்களுக்கு முன் மதுரை மாவட்டம் கம்பம் அறுமந்தன்பட்டியில் வாழ்ந்த ஒரு ஒப்பற்ற மேதை.ஒரு யாமத்தில் ஆயிரம் பொழிந்தவரை ஆசார்யனாகக் கொண்டு அவரைப் போற்றி வாழ்ந்த பெரும் தமிழ் சான்றோன். அதனாலேயோதானோ இவரும் ஏழு நாழிகைக்குள்  “ திருக்கடி நகர் நரசிங்கன் அந்தாதி” என 101 பாடல்களை அனாயாசமாகப் பாடி அனைவரையும் வியப்பிலாழ்த்தினவர். சுமார் 700 வெண்பாக்களால் நளனைப் பாடியதால் வெண்பாவில் புகழேந்தி என்று போற்றப் படுகிறார்.ஆனால் தமிழில் பாடுவதற்குக் கடினமான அந்த வெண்பாவால் இராமாயணத்தையும், பாரதத்தையும் முழுமையாகப் பாடியவர் --- இராமாயணம் 4000 வெண்பாக்களாலும், பாரதம் 11000 வெண்பாக்களாலும் பாடப் பெற்றுள்ளன.--- மிகச் சமீபத்தில் நம்மிடையே வாழ்ந்திருந்தார்  என்பது நம்மில் எத்தனை பேர் அறிந்தது?  இவைபோக பல தனிப் பாடல்களாக --- வைணவம், மருத்துவம், ஜோஸ்யம் என—இவர் பாடியது --- ரொம்ப ஜாஸ்தி இல்லை – ஒரு லக்ஷம் பாடல்களுக்கு மேலாக இருக்குமாம்.  அவைகளுள் பதிப்பைக் கண்டவை வெகு சிலவே. இராமாயண வெண்பா அவற்றுள் ஒன்று. பல வருடங்களுக்கு முன் திருவல் லிக்கேணித் தமிழ்ச் சங்கத்தார் இவருடைய பல தனிப் பாடல்களை வெளி யிட்டு மகிழ்ந்திருக்கிறார்கள். ப்ராஜக்ட் மதுரை இவரது இராமாயணத்தை மின் பதிப்பாக வெளியிட்டுள்ளது. வெளிச்சம் காணா பலவற்றை அறிந்தவர் தற்போது ஒருவர் மட்டுமே. தீரன் என்று பத்திரிக்கை வட்டாரங்களிலே ப்ரபலமாக அறியப்பட்ட அந்த திரு கோவிந்தராஜனும் இப்போது உணர்வுகள் அடங்கிய நிலையில் படுக்கையில். அடியேனுக்கு மதரகவி நூல் அறிமுகம் வழக்கம்போல் திருவல்லிக்கேணி நடைபாதை பழைய புத் தகக் கடையில்தான். அடியேனது அறியாமையால் பார்த்தும் வாங்கத் தவறியது  அவரது 108 திவ்ய தேசங்கள் பற்றிய “மதுரகவி திருப்புகழ்'”

4000 வெண்பாக்களால் இயற்றிய இராமாயணத்தை ஆசிரிய விருத்தமாக ஒரே வரியிலும்  சொல்ல முடியும் என அவர் எழுதிய இராமாயணம் பல முறை படித்துச் சுவைப்பதற்காக இங்கே;—

||ஸ்ரீ:||

அனுமந்தநகரம் ஸ்ரீ உ.வே. மதுரகவி

                               

ஸ்ரீநிவாஸய்யங்கார் ஸ்வாமி

இயற்றிய

இராமாயண ஆசிரிய விருத்தம்.

உலகமுழு துங்கவிகை யொருநீழ லரசுபுரி

      யுதயன்மர போங்க வந்தோன்

உண்மைநெறி தவறாத வள்ளல்தய ரதன்முனா
     ளுஞற்றுதவ மிதுவா மென
ஒண்டிரைப் பாற்கட லுறக்கம்விடுத் தமல
     முற்றகோ சலை வயிற் றில்
ஊனமறுகேகயன் மடந்தையுத வுங்குமர
      னொண்மதுக் கமழு மந்தார்
ஓதிமித் திரைகுமா ரனுசராய் வரவமர
      ருவகைபெற ராம னாகி
வுபநய முடித்துமறை யோதிவே தாந்தநிலை
      யுள்ளபடி கண்டு தேறி
யுணர்குசிக மாமுனி யுடன்சென்று தாடகைக்
      கோர்கணை விடுத்து மானாய்
உறுகநீ யென்றுமா ரீசனைப் போக்கிமற்

      றொருவனை வதைத் துவாச

மலரடித் துகளினாற் கல்லுருவ மங்கையாய்
      மாறவைத் தேகி மிதிலை
வந்துவளர் கன்னிகா மாடங் கடந்துபோய்
     விரிசிலை முறித் துயிரெலாம்
வாழ்த்துதிரு மாதினை மணந்துவரு நெறியினெதிர்
     மழுவாளி தனையும் வென்று
வன்றனு வணக்கியேழ் புரியினொன் றாகுநகர்
     வாழ்ந்துசிற் றவை வரத்தால்
மணிமுடி துறந்திலக் குவனொடுஞ் சீதைபின்
     வரவுமா நில மிரங்க
வனமருவி வேடர்குல மன்னோடு தோழமை
     வரித்துவெண் கங்கை யென்னு
வானதி கடந்துசித் திரகூட மலையின்முது
    மன்னவ னிறத்தல் தேறா
மாழ்கியுத் தரகரும நூன்முறை முடித்தடியின்
     மராடியை வணங்கு பரதன்


வலனுற வளித்தரிய மாதவர்க் கபயமும்
      வழங்கியத் திரிமுனி வனை
மாமுடி யிறைஞ்சிமுத் தமிழ்முனிவ னருண்முனியும்
      வாளியுங் கொண்டு நெறிவாய்
மண்ணிய விராதனை மடித்து வளமலிபஞ்ச
      வடித்துறை யடைந் துறையுநாள்
வடிவழகு கண்டுமயல் கொண்டசூர்ப் பனகைமுலை
       வார்காது நாசி கொய்து
மானாக வருமாய மாரீச னாவியொரு
      மானாக வாளி யேவி
வைதேகி தனையிரா வணன்வௌவ நொந்துசர
      வங்கருக் குதவி முத்தி
வாள்விழிச் சவரியுரை கொண்டுசுக் கிரிவனவ
     மாகமா லரசு நல்கி
வாலியை யெருக்கியனு மாற்காழி நல்கநெடு
    வாரியைத் தாவி லங்கைத்


தலநக ரடைந்தனை தனைக்கண்டு சாகைத்
     தருப்பொழி லழித் தரக்கர்ச்
சாய்த்தெரி படுத்திமீண் டுரைசெய்து வானரத்
    தானையொ டெழுந்து தென்பாற்
சலதியினில் வருணன்வழி தந்திடத் தனிச்சேது
    தட்டிவரும் வீட ணற்குச்
சரணல்கி வீரத் தசமுகன் கிளையினொடு
    சாகவில் வளைத் தனலிடைத்
தாய்முழுகி யேறவுயர் புட்பக விமானமேற்
   சகலரு மேற வினிதாய்த்
தானெழுந் தொருபரத் துவனமு தருந்திமெய்த்
    தம்பியர்க ளெதிர் கொண்டிடச்
சாகேத நகரெழுந் தருளிநவ ரத்னமய
    தடமுடி புனைந்து ராம
ஜயமெனப் புலவர்துதி சாற்றிடப் புவியரசு
    தாங்குநற் சரித மிதுவே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக