Sunday, May 24, 2009

"மார்கழித் திங்கள்"

ஆழ்வார்கள் அருளிச்செயல்களின் பெருமையே அவற்றிற்கு எத்தனை எத்தனை பேர்கள் எத்தனை எத்தனை விதமாக வ்யாக்யானமிட்டாலும்,அவற்றை எத்தனை முறை நாம் படித்தாலும், படிக்கும் ஒவ்வொரு தடவையும் அதுவரை நமக்குப் புலனாகாத புதிய விஷயங்களை நாம்அனுபவிக்க முடியும் என்பதுதான். அதிலும் கோவிந்தன் மேல் காதல் வயப்பட்டு ஆண்டாள் பாடியவைகள் அள்ள அள்ளக் குறையாமல்வளரும் அர்த்தக் களஞ்சியங்கள். எவ்வளவு ஞானவான்கள் எப்படியெல்லாம் அனுபவித்து அந்த அனுபவங்களை நமக்கும் சொல்லிப் போந்தார்கள் ! அவற்றை நம்மில் பலர் அலுக்காமல் சுவைப்பதும் வழக்கம்தானே! அந்த வகையில், இதோ மதுரை வழக்கறிஞர் "தார்மிகரத்நப்ரதீப " உ.வே. N.R.கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் "மார்கழித் திங்கள்" பாடலை மட்டும் விளக்கி யுள்ளதை நாமும் தினம் கொஞ்சமாக ரஸிப்போமா?

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் !
நீராடப் போதுவீர் ! போதுமினோ நேரிழையீர் !
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய் !

பதவுரை :--
மார்கழித் திங்கள் -- மார்கழி மாதத்தில் ;
மதி -- சந்திரன் நிறைந்த -- பூர்த்தியாயிருக்கின்ற
நன்னாள் -- நல்ல தினமாகிய (நல்--ஏற்றமிகுந்த)
ஆல் -- (ஆரல்) கார்த்திகை நக்ஷத்திரம் கூடிய தினத்தில்;
நீர் ஆட -- ஸ்நாநம் செய்ய, (ஒழுக்க முறையில் ஈடுபட பகவத்குணாநுபவம் செய்யப்)
போதுவீர் --விரும்பி வருபவர்கள்;
போதுமினோ -- வாருங்கள்;
நேர் -- தகுந்த, பொருந்திய; இழையீர் -- ஆபரணத்தையுடையவர்களே!
நேர் -- ஒழுங்கான சாஸ்த்ர விஹிதமான , இழையீர்-- செய்கை, நடத்தையுடை யவர்களே;
நேர்-- கிடைத்தவற்றைக் கொண்டு, இழையீர் --வாழ்க்கை நடத்துபவர்களே;
நேர் -தர்மத்திற்கு எதிர்த்தட்டில்; இழையீர் -- புகுரமாட்டாதவர்களே!;

நேர் ---எதிரிலே, பகவத் ஸந்நிதியிலே; இழையீர் --வாழ்க்கை நடத்துபவர்களே!;
சீர் -- சிறப்பு;மேன்மை; மல்கும் --பலமடங்காகப் பெருகுகின்ற
ஆய்ப்பாடி -- இடைச்சேரி, தாய்மார்கள் இருக்கும் ஊர்;
ஆய் -- தெரிந்தெடுத்த ;
பாடி --ஊர் (எம்பெருமாள் அவதாரத்துக்கு யாதுமறியாரிடையே விளையாடப் பொறுக்கித் தெரிந்த ஊர்)
(பகர வொற்று மிகை வினைத் தொகையாகக் கொள்ளில்);
செல்வ -- அருமையான;
சிறுமீர்காள் --குழந்தைகளே (அறிவினாலும், உணர்வினாலும், ஸம்ஸ்கார அநுஷ்டானங்களாலும் சிறியோர்களே!)
கூர் --கூரிய ,சிறப்புற்ற; வேல் -- வேலாயுதத்தையுடைய;
கொடும் -- தன் காத்தல் தொழிலினின்றும் வளைந்து நிற்பது போன்று காணப்படுகிற;

தொழிலன் -- செயலையுடையவன் (சம்ஹாரத்தையும் செய்பவன்)
நந்தகோபன் குமரன் -- நந்தகோபனுக்கு மகனாக இருப்பவன்;
ஏர் -- அழகு;

ஆர்ந்த -- ஒளிவிடுகிற, நிறைந்த,
கண்ணி-கண்ணையுடையவள், சிறந்த மாலையையுடையவள், பூர்வீகர்கள் செய்துள்ள பாக்களைச் சொல்லிக் கொண்டிருப்பவள்;
யசோதை -- யசோதைப் பிராட்டியார், புகழைத் தருபவள்;
இளஞ்சிங்கம் -- சிங்கக் குட்டி;
கார்மேனி -- உருவம் கருத்தும், மேகம் போன்ற மேனி அழகும், குளிர்ச்சியும் உள்ள மேனி;
மேனி -- உடல், உருவம்,அங்கம், மேகத்தின் மினுக்கு;

செங்கண் -- சிவப்பு நிறமுடைய கண், செம்மையான உருவாலும், நோக்காலும் உள்ளன்பின் வெளியீட்டாலும், திருந்திய கண்; கதிர்

மதியம்போல் -- சூரிய சந்திரர்கள் போல், ஒளிவிடு சந்திரன் போல்;
கதிர் -- விளையும், பயன்தரும் சந்திரன் என்றுமாம்;
போல்-- ஒத்திருக்கின்ற
முகத்தான் -- முகத்தினழகுடையவன், ப்ரவேசமுடையவன் (முகம்-- இடம், சந்தி, தொனி, புறம், முகப்பு, வதனம், வாய்,வாயில் வேதம், ஆரம்பம்,, உபாயம்) (இவ்வெல்லாப் பொருட்களும் கொள்ளத் தக்கன) இவைகளையெல்லாம் தனக்கு ஸ்வரூப ரூபகுணசேஷ்டிதங்களாக உடையவன்
நாராயணனே -- ஒப்பார் மிக்காரின்றி உயர்வற வுயர் நலமுடைய நாராயணனே (உயர்வு சிறப்பு)
நமக்கே -- எவ்விதத்திலும் அவனை அடைய முயற்சிக்கும் மார்க்கமொன்று அறியமாட்டா மனிசரிற் றுரிசனாய்,
பறை -- சொல், அபயம், என்றும்காத்தலைச் செய்யும் தீர்மானச் சொல், காத்தலுமாம்;
தருவான் -- நமக்கு ஸாரூப்ய நிலைமையை உண்டாக்கி, அளிப்பான்;
பாரோர் -- உலகத்திலுள்ளோர்கள்;
புகழ -- உவக்க, ஆச்சர்யப்பட, மெச்ச, ;
படிந்து -- இறங்கி, ஈடுபட்டு, அந்வயித்து, ஆழ்ந்து (அல்லது) உணர்ந்து;

எம்பாவாய் -- என் மனத்தில் நினைந்திருக்கும் ப்ரதிமா வடிவு உடைய ஹார்த்த ஸ்வரூபியான மூர்த்தியே! என்று விளி;
ஏல் -- ஏற்றுக்கொள்,அல்லது மேன்மையுற்ற, உயர்ந்த;
ஓர் -- உணர் அல்லது ஒப்பற்ற, தனித்த பெருமையுடைய ;
ஏல் -- உயர்ந்த; ஓர் --ஒப்பற்ற
எம்பாவாய் என்றும், எம்பாவாய்-- எம்பாவையே ஏற்றுக் கொள், உணர் என்றும் இருவகையாலும் பொருள் கொள்ளவும்